நாட்காட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்காட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 01, 2015

லீப் நொடி

லீப் நொடி


ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம். ஆனால், பூமி எப்பொழுதும் ஒரே வேகத்தில் சுற்றுவதில்லை. அதன் சுழற்சி புவியின் ஈர்ப்பு விசை, சந்திரனின் ஈர்ப்பு விசை, காற்று சீதோஷணநிலை, புவிமையத்தின் தன்மை, புவித்தட்டின் (tectonic plates) நகர்வு என்று பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நாள் என்பது சராசரியாக 24 மணி நேரத்தைக் கொண்டது. அதன் அடிப்படையில், ஒரு நொடி என்பது ஒரு நாளின் 1/86400 (60 X 60 X 24) பகுதியைக் கொண்டது. ஆனால், தற்போது சர்வதேச நேரம் என்பது சீசியம் அணு கடிகாரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் சீசியம் அணு மாறுபடாத வெப்பநிலையில் (0 டிகிரி கெப்லர்-இல்) 9192631770 நுண்ணலைகளை(radiations)ப் பரப்பும் கால அளவு ஒரு நொடியாகக் குறிக்கப்படுகிறது.

அணு கடிகாரத்தின் அடிப்படையில் பூமி தன்னைத் தானேச் சுற்றிக் கொள்ள 86400.025 நொடிகளை எடுத்துக் கொள்கிறது. (சில ஆய்வுகள்,  86400.0031 நொடிகள் என்றும் குறிப்பிடுகின்றன. மேலும், பூமியின் சுழற்சி வேகம் மேலும் மேலும் குறைவதாகவும் கூறப்படுகிறது.) அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரத்திற்கு மேலாக ஆயிரத்தில் இரண்டு அல்லது மூன்று பங்கு நொடிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

இதன் அடிப்படையில் 1972-ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட சில நாட்களில் (ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ஆம் தேதி இரவு) 12.00 மணிக்கு ஒரு நொடி நீட்டிக்கப்படுகிறது. அதாவது சாதாரணமாக 11.59.59 நொடிக்குப் பின் அடுத்த நாளின் 00.00.00 நொடியாக மாறுவதற்கு மாறாக ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் 11.59.59 க்குப் பின் 11.59.60 என்றும் அதன் பின் அடுத்த நாளின் 00.00.00 நொடியாகவும் குறிக்கப்படுகிறது.  சர்வதேசநேரத்திற்கும் இந்திய நேரத்திற்கும் 5.30 மணி நேர வேறுபாடு உள்ளதால், இந்த லீப் நொடி ஜூலை 1-ஆம் தேதி காலை 5.29.59க்குப் பிறகு 5.29.60 என்றும் அதன் பிறகு 5.30.00 என்றும் குறிப்பிடப்படும்.

1972-ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 முறை இந்த லீப் நொடி ஏற்கப்பட்டுள்ளது. இது 25-ஆவது முறை. இதன் விவரங்களை ’நின்றஒரு நொடி’ என்ற தலைப்பில் பக்கத்தில்  ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.

ஒரு நொடி வேறுபாடு என்றாலும் கணிணி மயப்படுத்தப்பட்ட இந்த நாட்களில் இது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை 2012-ஆம் ஆண்டு ஜூன் 30இல் நடந்த லீப் நொடி மாற்றம் reddit, Mozilla, foursquare ஆகிய தளங்களை வெகுவாக பாதித்தது. Amedeus மென்பொருள் பாதிப்பால் ஆஸ்த்ரேலியாவின் க்வாண்டாஸ் விமானம் தன் 50-க்கும் மேற்பட்ட விமானங்களைத் தாமதப்படுத்த/ரத்து செய்ய நேர்ந்தது.


இந்த முறை google தன் கடிகாரத்தில் லீப்  நொடிகளைப் பயன் படுத்தாமல்  கடைசி சில நொடிகளை நீட்டித்து சர்வதேச நேரத்திற்கு சமனாக்க முடிவெடுத்துள்ளது. அமேசான்-உம் லீப் நொடி இல்லாமல் வேறு ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறியுள்ளது.

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

கொல்லம் ஆண்டு



கொல்லம் ஆண்டு!

இதன் மற்றொரு பெயர் மலபார் ஆண்டு.  இது கேரளத்தின் மலபார் பகுதியில் வழக்கத்தில் இருக்கும் ஆண்டுக் கணக்காகும்.

பெரும்பாலான இந்திய வருடங்கள் இது கீழ் காணும் வழிமுறைகளில் வேறுபடுகிறது…

1.            பெரும்பாலான இந்திய ஆண்டுகள் சந்திரமான முறையையோ சந்திர-சௌர முறையையோ அடிப்படையாகக் கொண்டவை;
2.            பெரும்பாலும் அவை மேஷாதி (மேஷ ராசியை ஆரம்பமாகக்)  கொண்டவை.
3.            இந்திய ஆண்டுகளின் எண்ணிக்கை நிறைவடைந்தவற்றைக் குறிப்பவை (உதாரணமாக தற்போது சக ஆண்டு 1935 என்பது 1935 ஆண்டுகள் முடிந்து 1936-ஆவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கும்.

ஆனால், கொல்லம் ஆண்டு என்பது முழுக்க முழுக்க சௌரமானத்தை (சூரியனை) அடிப்படையாகக் கொண்டது. இதன் ஆரம்பம் சிம்ம ராசியில் இருந்துத் துவங்கும். இதன் ஆண்டு எண்ணிக்கை நடப்பு ஆண்டின் எண்ணிக்கையைக் குறிக்கும். அதாவது, ஆண்டு எண்ணிக்கையை பூஜ்ஜியத்திலிருந்துத் துவக்காமல் ஒன்றிலிருந்துத் துவக்குவர். அதாவது, ஆங்கில முறைப்படி 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் என்றால் 2012 ஆண்டுகள் முடிந்து 2013ஆவது ஆண்டு தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று கணக்கிடுவது போல் தற்போது நடக்கும் ஆண்டின் எண்ணிக்கையையே கொல்லம் ஆண்டிலும் கூறுவர்.

’கடபயாதி’ முறை என்றழைக்கப்படும் இந்த முறையின் ஆரம்பம் தொன்மங்களில் பல்வேறு வழிகளில் கூறப்பட்டாலும் வரலாற்று ரீதியாக மேற்குக் கேரளக் கரையோர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் முன்னிலையில் அவரது தலைநகரான கொல்லத்தில் வானவியல் நிபுணர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகார பூர்வமாக ஏற்கப்பட்டது.

இம்முறை கி.பி. 824-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாளிலிருந்து துவங்கியது. ஆனால், வட கேரளத்தில் இது சிம்ம மாதத்தில் துவங்காமல் கன்னி மாதத்தில், அதாவது செப்டம்பர் 25 ஆம் நாளிலிருந்து துவங்கியது. பின்னர், ஜூலியன் ஆண்டிற்கும் க்ரெகேரியன் ஆண்டிற்கும் சமநிலை ஏற்படுத்த 10 நாட்கள் கணக்கிலெடுக்கப்படாமல் விட்ட பொழுது இந்த ஆண்டின் துவக்கம் ஆகஸ்ட் 15/செப்டம்பர் 15 ஆம் நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டது. சூரியனை அடிப்படையாகக் கொண்டதால் இதன் மாதங்கள் நம் தமிழ் மாதங்களைப் போலவே சங்கராந்தியை (அதாவது சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுவதைக்) கொண்டு கணக்கிடப்படும்.

’கடபயாதி’ முறை என்றால் என்னவென்பதைப் பார்ப்போம்…

வடமொழியைப் போலவே மலயாளத்திலும் க்ரந்தத்திலிலும் க, ச, ட, த, ப ஆகிய வல்லின எழுத்துக்கள் நான்கு விதமாக ஒலிக்கப்படும். அந்த எழுத்துக்களை தசம எண்களுக்கு மாற்றாகக் கொண்டு எண்ணும் பொழுது அவை கீழ்கண்டவாறு அமையும்

1        2          3        4          5         6        7            8          9        0
க       க்க     க      க்க     ங       ச        ச்ச       ஜ       ஜ்ஜ   ஞ 

ட       ட்ட    ட      ட்ட   ண      த       த்த        த      த்த    

ப       ப்ப      ப      ப்ப     

ய       ர        ல       வ       ஸ      ஷ    ஷ்ஷ  ஹ     ழ

இதில் நாட்களைக் குறிக்க இந்த எழுத்து முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
            
தொன்மத்தின்படி சங்கராச்சாரியாரால் கொல்லம் ஆண்டு கன்னி மாதத்தைத் துவக்கமாகக் கொள்ள வேண்டும் என்றுகூறியதாகவும் அதையே தெய்வ வாக்காகக் கொண்டுத் துவக்கப்பட்டதாகக் கூறுவர்.

‘ஆசார்ய வாகா பேதயா’ என்ற பிரபலமான வாக்கியம் உண்டு.

சாதாரணமாக இந்த வாக்கியத்தின் பொருள் ’ஆசாரியரின் (சங்கரரின்) வாக்கே சட்டம்’ என்பதாகும். இதையே ‘கடபயாதி’ முறையில் எண்களாக மாற்ற அது கீழ்காணும் எண்ணைக் குறிக்கும்.

0           6          1          4        3          4                 1
ஆ      சார்    ய       வா     கா      ப்பேத         யா

’கடபயாதி’ முறையில் மற்றொரு விதியும் உண்டு. அது என்னவெனில் வாக்கியமாக மாற்றிய எண்களை அப்படியே எழுதாமல் பின் வரிசையில் எழுத வேண்டும் என்பதே. அதன்படி இந்த வார்த்தை 1434160 என்ற எண்ணைக் குறிக்கும். கலியுகத்தின் 1434160-ஆவது நாளைக் கணக்கிட்டால், அது கி.பி. 824, செப்டம்பர் 25ஐக் குறிக்கும். இந்த நாளே வட மலபார் பகுதியின் கொல்லம் ஆண்டுத் துவக்க நாளான கன்னி மாதத்தின் முதல் நாள்.

இன்று இந்த கன்னி சங்கராந்தி நாள்.


புதன், ஆகஸ்ட் 21, 2013

ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?


வட மாநிலங்களில் ரக்ஷாபந்தனம் என்ற பண்டிகைக் கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே!

பெண்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரர்களுக்கு கையில் ‘ராக்கி’ என்ற கயிற்றைக் கட்டி தங்கள் அன்பைத் தெரிவிப்பார்கள்.

இந்தப் பண்டிகை வட இந்தியர்களின் ‘ச்ரவண’ மாதத்தின் பௌர்ணமியன்றுக் கொண்டாடப்படும். இந்த வருடம் பொதுவாக நாட்காட்டிகளில் 20.08.2013 அன்று ரக்ஷாபந்தனம் என்று போட்டிருந்தாலும் சிலர் 21.08.2013 அன்று கொண்டாடுகிறார்கள். [என் மகள் பள்ளியில் நேற்று விடுமுறை விட்டிருந்தார்கள்; ஆனால் என் மகனின் பள்ளியில் இன்றுதான் விடுமுறை].

காரணம் என்ன? ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?

இந்த வருடம் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருக்கிறது. பௌர்ணமியின் முதல் பாகம் பத்ர கரணம் ஆகும் (கரணத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களை இந்த இடுகையில் எழுதியுள்ளேன்).

பொதுவாக பத்ர கரணத்தில் திருமணம், முடிகாணிக்கை, ரக்ஷாபந்தனம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவர்.

ரக்ஷாபந்தனத்தைப் பொறுத்தவரை அதற்கு ஏற்ற நேரமாக ப்ரதோஷ காலத்தைக் குறிப்பிடுகிறார்கள். பிரதோஷம் சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய முந்தைய பிந்தைய 10 நாழிகைகளைக் குறிக்கும். இந்த ஆடி மாதத்தில் பொதுவாக சூரிய அஸ்தமனம் மாலை 7 மணியளவில் இருக்கும். ஆகவே பிரதோஷ நேரமாக மாலை சுமார் 5 மணியிலிருந்து சுமார் 9 மணிவரை குறிப்பிடுவர்.

இந்த மாதப் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் மாலை 8.15 / 8.20 மணிவரையான முதல் பாதி (மொத்த பௌர்ணமி நேரமான சுமார் 22 1/2 மணி நேரத்தில் பாதியான 11 1/4 மணிநேரத்தை காலை 10 மணியுடன் கூட்டினால் வரும் நேரம்) பத்ர கரணம்.

இந்த பத்ர கரணத்திற்குப் பின்னர் வரும் பௌர்ணமியின் பின்பாதி (பவ கரணத்தில்) ரக்ஷாபந்தனம் கொண்டாடலாம். பத்ர கரணம் முடிந்து 8.20 முதல் பிரதோஷம் முடியும் சுமார் 9 மணி வரையிலான நேரம்  மிகச் சிறந்த நேரமாகக் கருதப்பட்டு நாட்காட்டிகளில் நேற்றைய தினம் ரக்ஷாபந்தனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேற்கூறிய நேரங்கள் அனைத்தும் திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், மற்ற சில சித்தாந்தைங்களை (சூரிய சித்தாந்தம், வாக்கிய பஞ்சாங்கங்கள் மற்றும் மற்றைய இடங்களில் பயன் படுத்தும் பஞ்சாங்கங்கள் போன்றவை) அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கங்கங்களில் இந்த நேரக் கணிப்புகள் வேறுபட்டுள்ளன. மேலும், சில ஜோதிடர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ரக்ஷாபந்தனம் செய்யக்கூடாது என்றும் கூறுகிறார்கள். அதனால் சிலரால் ரக்ஷாபந்தனம் இன்று (21.08.2013) கொண்டாடப் படுகிறது.

வியாழன், ஏப்ரல் 11, 2013

யுகாதி


ன்று யுகாதி ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள்.

வட மொழியின் யுக்மம்” (இணை/ஜோடி) என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவை யோகம், யுகம் ஆகியச் சொற்கள். யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது. யுகம் என்றால் இரண்டின் சந்திப்பு அல்லது இணைப்பு என்று பொருள்.

ராசிகள் அல்லது நக்ஷத்திரங்கள் இணைவதும் யுகம். இந்த இணைப்பு ஆதிராசியான மேஷத்தில் நிகழும் பொழுது அது யுகாதி எனப்படும். யுகாதியில் வரும் ’யுகம்’ என்ற வார்த்தைக்கும் சதுர்யுகம் என்பதில் வரும் ‘யுகம்’ என்ற வார்த்தைக்கும் இணைப்பு என்பதைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

வேறு சில கால சந்தி(இணைப்பு)களில் இந்த யுகம், யுகாதி என்ற வார்த்தைகள்  பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம்….

1.           சந்திரமான, சௌரமான யுகம் :  சந்திர, சூரிய ஆண்டுகள்.
2.           ப்ரஹஸ்பதி யுகம் :   இது 12 ஆண்டுகளைக் கொண்டது. சூரியன், சந்திரன், புஷ்ய (பூசம்) நக்ஷத்திரம், குரு ஆகியவை ஒரே ராசியில் இணையும். இதைக் கொண்டு தான் கும்பமேளா கணிக்கப்படுகிறது. சில இடங்களில் இது சற்று வேறுபாட்டுடன் 60 வருடங்கள் கொண்டதாகக் கூறப்படுவதுண்டு (சூரியன், சந்திரன், பூசம், குரு ஆகியவற்றுடன் சனியும் இணையும்)
3.           சஹஸ்ர சதுர் யுகம்  :         ஒரு பருவ ஆண்டு (tropical year based on vernal equinox) நகர்ந்து ஒரு நக்ஷத்திரத்தைக் கடக்க ஆகும் 1000 ஆண்டுகள் நான்கு யுகங்களாக பகுக்கப்பட்டு (400 க்ருத யுகம்; 300 த்ரேதா யுகம்; 200 த்வாபர யுகம்; 100 கலியுகம்) இருப்பது. [விளக்கங்களை பிரிதொரு சமயத்தில் தனி பதி்வாக முயற்சிக்கிறேன்].
4.           கவம் அயனம் :        இது நான்கு ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் ஒவ்வொரு ஆண்டும் 365¼ நாட்களைக் கொண்டவை. முதல் ஆண்டு 365 நாளுடன் ஒரு கால் (பாதம் என்று கூறுவர்) நாள் இணைத்து அதைக் கலியுகம் என்றும், அடுத்த ஆண்டுகளில் 365 நாளுடன் மற்றொரு பாதங்கள்  இணைத்து அதை த்வாபர, த்ரேதா யுகங்கள் என்றும், கடைசி ஆண்டை க்ருத ஆண்டு என்றும் அழைப்பர். கடைசி ஆண்டின் கால் பகுதி முடிந்தவுடன் நாளின் மீதி பகுதி எதுவும் மீறாமல் இருப்பதால் அதை ஸத்ய அல்லது ரித யுகம் என்றும் கூறுவர்.
5.           ஸப்தரிஷி யுகம்        :         இது 2700 ஆண்டுகள் கொண்டது. ஸப்தரிஷி மண்டலம் ஒரு நக்ஷத்திரத்திலிருந்து அடுத்த நக்ஷத்திரத்திற்கு செல்ல 1000 வருடங்கள் ஆகும். பூமி தன்னைத் தானேச் சுற்றி, சூரியனையும் சுற்றுவதை அறிவோம். அதே போல் அதன் 23.5 டிகிரி சாய்வும் தலையாட்டி பொம்மைப் போல சுழலும். அப்பொழுது வான்மையத்தில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலமும் சுழலும். இதற்கான காலம் 2700 ஆண்டுகள் என வராஹமிஹ்ரர் கூறுகிறார். பாகவத, விஷ்ணு புராணங்கள் ஸப்த ரிஷிகள் மகத்திலிருந்து பூராட நக்ஷத்திரம் செல்லும் சமயத்தில் மகத வம்சாவளியைத் தொகுத்து பரிக்ஷிதிலிருந்து நந்த வம்சம் வரை விவரித்துள்ளது. இது 1015 ஆண்டுகளைக் கொண்ட வம்சாவளியுடன் ஒத்துப் போவதாகக் கூறுகிறார்கள்.

இவற்றைத் தவிர ரோமக சித்தாந்தம், சூர்ய சித்தாந்தத்திற்கு முந்தைய சித்தாந்தங்கள், சூரிய சித்தாந்தம், மார்கண்டேய யுகம், சஞ்சய யுகம், ஆர்யபட்டர் சித்தாந்தம், ப்ரஹ்ம ஸ்புடிக சித்தாந்தம் ஆகியவை வெவ்வேறு ஆண்டுக் கணக்குக்களைக் கொண்டுள்ளன.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்!

வெள்ளி, மார்ச் 29, 2013

புனித வெள்ளி



இன்று புனித வெள்ளி.  பஸ்சல் மாதப் பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் ஞாயிறு ஈஸ்டர் (உயிர்த்தெழுந்த ஞாயிறு) தினமாகவும் அதற்கு முந்தைய வெள்ளி புனித வெள்ளியாகவும் கொண்டாடப்படும்.

பொதுவாக, பங்குனி உத்திரத்தை ஒட்டிய பௌர்ணமிதான் யூதர்களின் பஸ்சல் பௌர்ணமி (சில நேரங்களில் அரிதாக சித்திரா பௌர்ணமியை ஒட்டியும் வர வாய்ப்புள்ளது).

இதைப் பற்றி ஏற்கனவே புனித வெள்ளியும் உயிர்த்தெழுந்த ஞாயிறும் என்ற முந்தைய பதிவில் எழுதியுள்ளேன். அப்பதிவில் க்ரிகேரியன் நாட்காட்டியைப் பற்றி எழுதியிருந்தேன்.

க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் ஜீலியன் நாட்காட்டிக்கும் இருந்த முக்கிய வேறுபாடே லீப் நாள் சம்பந்தப்பட்டதே. இதைப்பற்றி புத்தாண்டு அன்று எழுதியிருந்தேன்.

அதைப் பற்றி மேலும் சில தகவல்கள்...

ஈக்வினாக்ஸ் என்றால் சூரியன் பூமியின் ஒரு அட்ச ரேகையில் இருந்து மீண்டும் அதே அட்ச ரேகைக்கு வர எடுக்கும் நேரத்தைக் குறிக்கும். உலகின் பருவ மாற்றங்கள் இதைக் கொண்டே தீர்மாணிக்க முடியும்.  நாட்காட்டிகள் குறிக்கப்பட்ட முக்கிய காரணமே பருவ நிலையைக் கணித்து அதை விவசாயத்திற்கு உபயோகித்துக் கொள்ள எண்ணியதே. ஒரு ஈக்வினாக்ஸ் ஆண்டு 365.24237 நாட்களைக் கொண்டது. சராசரியாக, ஒரு ஜூலியன் வருடம் என்பது 365.25 நாட்களைக் கொண்டது. அதே நேரம், ஒரு சராசரி க்ரிகேரியன் ஆண்டு 365.2425 நாட்களைக் கொண்டது. அதாவது, ஜூலியன் ஆண்டிற்கும் பருவ ஆண்டிற்கும் 128 ஆண்டுகளில் ஒருநாள் வித்யாசம் உண்டாகும். ஆனால், க்ரிகேரியன் ஆண்டிற்கும் பருவ ஆண்டிற்கும் இந்த வித்யாசம் 7700 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஏற்படும்.

400 க்ரிகேரியன் ஆண்டுகளைக் கொண்ட ஒரு சுற்று 146097 நாட்களை / 20871 வாரங்களைக் கொண்டிருக்கும். அதாவது, க்ரிகேரியன் முறையில் 1613 ஆம் ஆண்டின் தேதிகளின் கிழமைகளும் நடப்பு 2013 ஆம் ஆண்டின் கிழமைகளும் ஒரே மாதிரி இருக்கும். 2413 ஆண்டின் தேதிகளின் கிழமைகளும் இந்த வருடக் கிழமைகள் போலவே இருக்கும்.

1576-ஆம் ஆண்டு ஆலோசியஸ் லிலுஸ் என்பவரின் வழிமுறையை ஆதாரமாகக் கொண்டு கிரிஸ்டோபர் க்லாவியாஸ் என்பவர் பஸ்சல் பௌர்ணமியை குறிக்கும் ஒரு அட்டவணையைத் தாயாரித்தார். க்ரிகேரியன் தன் நாட்காட்டிக்கு இதையே ஆதாரமாகக் காட்டினார். அதனால் தான் ஈஸ்டர் அட்டவணையே க்லாவியஸ் அட்டவணை என்று அழைக்கப்படுகிறது.

க்லாவியஸ் அட்டவணைப்படி, மார்ச் 21 முதல் ஏப்ரல் 18 வரை ’பஸ்சல்’ மாதமாக வரையறுக்கப்பட்டு அதில் வரும் முழுநிலவு நாள் ‘பஸ்சல் பௌர்ணமி’ ஆகக் கூறப்பட்டுள்ளது. எனவே, ஈஸ்டர் பண்டிகை மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு இடையில் அமையும்.

யூதர்கள் பயன்படுத்துவது நம் ஆந்திர-கர்நாடக மாநிலங்களைப் போல ஒரு சந்திர-சூர்ய நாட்காட்டி, அதாவது சந்திரனின் சுற்றுகளின் படி மாதங்களும் பின்  சூரியனின் சுற்றோடு வருடங்களைச் சமன்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது. அமாவாசைக்கு அடுத்த தினத்தை ஆரம்பமாகக் கொண்டு மாதங்கள் ஆரம்பமாகும்.  பின் 19 வருடச் சுற்றுகளைக் கொண்டு அதில் 3,6,8,11,14,17, 19 ஆகிய வருடங்கள் லீப் வருடங்களாகக் கொண்டு அதில் ஒரு மாதம் அதிகரிக்கப்படும். அதாவது ஒவ்வொரு 19 வருடச் சுற்றிலும் 235 சந்திர மாதங்கள் இருக்கும். ஒரு சாதாரண வருடத்தில் 353-355 நாட்களும் ஒரு லீப் வருடத்தில் 383-385 நாட்களும் இருக்கும்.

யூதர்களின் மாதங்களின் பெயர்கள்…

1.           திஸ்ரி              -        30 நாட்கள்
2.           ஹேஷ்வன்     -        29/30 நாட்கள்
3.           கிஸ்லெவ்       -        29/30 நாட்கள்
4.           தெவெட்                   -        29 நாட்கள்
5.           ஷெவெட்        -        30 நாட்கள்
6.           அதர்                -        29 நாட்கள்
[லீப் வருடங்களில் இது அதர்-1 (30 நாட்கள்), அதர்-2 (29 நாட்கள்) என்று இரண்டு மாதங்களாகக் கணிக்கப்படும்]
7.           நிஸான்           -        30 நாட்கள்
[இந்த மாதப் பௌர்ணமி தான் பஸ்சல் பௌர்ணமி]
8.           இயர்               -        29 நாட்கள்
9.           சிவான்            -        30 நாட்கள்
10.       தும்முஸ்          -        29 நாட்கள்
11.       அவ்                 -        30 நாட்கள்
12.       எலுல்              -        29 நாட்கள்

இந்த  க்ரிகேரியன் நாட்காட்டிச் சீரமைப்பின் 400-ஆவது  ஆண்டு நிறைவையொட்டி 1983-ஆம் ஆண்டு வாட்டிகன் ஒரு மாநாட்டையும் நடத்தியுள்ளது.

அனைத்து கிருத்துவ நண்பர்களுக்கும் புனித வெள்ளி, உயிர்த்தெழுந்த தின நல்வாழ்த்துகள்...