வெள்ளி, மார்ச் 23, 2012

யுகாதி 
இது ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள்.

யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். இப்பொழுது நடப்பது கலியுகம். அப்படியானால்  இது கலியுகம் ஆரம்பித்த தினத்தின் வருட ஆரம்பத்தைக் குறிக்கிறதா?

கலியுகம் கிருஷ்ண அவதாரம் முடிந்ததிலிருந்து துவங்கியதாகக் கருதப்படுகிறது.  இது, ஆங்கில வருடம் (சரியாகச் சொன்னால்  ரோம வருடங்கள்) கி.மு.3102-ல் – க்ரெகேரிய நாட்காட்டியில் ஜனவரி 23-ம் தேதியிலும், ஜூலியன் நாட்காட்டியில் (தற்போது நடைமுறையில் உள்ளது) ஃபெப்ரவரி 18-ம் தேதியிலும் - துவங்கியதாகக் கூறுவர். யுக ஆரம்பத்தில் அணைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் ஆரம்பம் ஆவதாகக் கொண்டு கணக்கிடுவர். இதை கருத்தில் கொண்டு ஆர்யபட்டர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கணக்கிட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த தேதியைக் கூறுவர். பின்னர், பல்வேறு வானியல் நிபுணர்கள் கெப்லரின் முறையைக் கையாண்டும் தற்போதைய கருவிகளைக் கொண்டும் ஆர்யபட்டரின்  இந்தக் கணக்கை உறுதிப் படு்த்தியுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 20.02.2012 அன்று கலி பிறந்த 5113-ஆண்டு  தினம் வந்து சென்று விட்டது.

பின் இப்பொழுது இன்று யுகாதி என்று ஏன் கொண்டாடுகிறார்கள்?

வட மொழியில் யுக்மம் என்றால் இரண்டு; இந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த்து தான் யோகம் என்ற சொல். யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது. அதே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது தான் யுகம்.  இதற்கும் சதுர் யுகம் என்பதற்கும் ‘யுகம்’ என்ற வார்த்தையைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் இங்கு ‘யுகம்’ என்று குறிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியை பயன்படுத்துபவர்கள்  முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.

பொதுவாக நாட்காட்டிகள் மூன்று வகைப்படும். அவை,

1.  சௌர (அ) சூரிய நாட்காட்டிகள் (Solar calendars);
2.  சந்திர நாட்காட்டிகள் (Lunar calendars) ;
3.  சந்த்ர-சௌர நாட்காட்டிகள் (luni-solar calendars)

சூரிய ஆண்டு என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் ஆண்டு. இதில் சந்திரன் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. உதாரணம்: க்ரெகாரிய ஜூலியன் நாட்காட்டிகள்; இந்தியாவில் தமிழக கேரள நாட்காட்டிகள் – இவை, சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதை (வடமொழியில் சங்கராந்தி என்பர்) மாதமாகக் கொள்வர்.  இந்தியாவில் இந்த சௌர மாதத்தில் நான்கு வெவ்வேறு வகைகள் உள்ளன. (அவற்றைப் பற்றி வெறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்).

சந்திர ஆண்டு என்பது புதுச் சந்திரன் வளர்ந்து பின் தேய்ந்து மறைந்து பின் புதுச் சந்திரனாக ஆரம்பிக்கும் காலத்தை (அல்லது) பௌர்ணமி சந்திரன் தேய்ந்து பின் வளர்ந்து பின் பௌர்ணமியாக மாறும் காலமான, சுமார் 30 நாட்களை (மாதாமாதம் இது 29.45 முதல் 31.45 நாட்கள் வரை வேறுபடும்) ஒரு மாதமாகக் கணக்கிட்டு 12 மாதங்களை ஒரு ஆண்டாக (30 X 12 = சுமார் 360 நாட்கள்) கணக்கிடப்படும் நாட்காட்டி. இதில் சூரியனை பூமி சுற்றுவது கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 12 மாதங்கள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு துவங்கிவிடும். உதாரணம் : இஸ்லாமிய நாட்காட்டி; இதில் அமாவாசை முடிந்து அடுத்து பிறைத் தெரியும் நாளிலிருந்து மாதம் ஆரம்பிக்கும். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சந்திர மாதம் சராசரியாக 30 நாட்களைக் கொண்டது (சராசரி என்பதை கவனிக்கவும் அதாவது சில மாதங்கள் 30 தினத்திற்குக் குறைவாகவும் சில மாதங்களில் 30 தினத்திற்கு அதிகமாகவும் இருக்கலாம்).

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட சந்தர-சௌர நாட்காட்டி என்பது, சந்திர ஆண்டுபடி மாதங்களைக் கொண்டிருந்தாலும் சூரியனைச் சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் 365.2564 நாட்களின் மீதமுள்ள சுமார் 5/6 நாட்களைச் சேர்த்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ”அதிக” மாதமாக கொள்வது ஆகும். இந்த  முறை இந்தியாவில் ஆரம்பி்க்கப்பட்டது (தற்போது நேபால், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது). சீன நாட்காட்டியும் சந்திர-சௌர நாட்காட்டியே.

இந்த சந்தர-சௌர நாட்காட்டிக் கணக்கிடுவதில் பலவித வழிமுறைகளும் பலவித நாட்காட்டிகளும் வழக்கத்தில் உள்ளன. பொதுவாக வழக்கத்தில் உள்ள முக்கிய இரண்டு வகைகளைப் பார்க்கலாம். அவை,

1.          அமந்த நாட்காட்டி (அ) முக்ய மன முறை;
2.          பூர்ணிமந்த நாட்காட்டி (அ) கௌன மன முறை

அமந்த நாட்காட்டி என்பது, அமாவாசைக்கு அடுத்து புது நிலவு வளரத் துவங்கி வளர்ந்து பின் முழுவதுமாகத் தேய்வதை ஒரு மாதமாகக் கொள்வது. யுகாதி என்று இன்று கொண்டாடப்படும் வருடமும் இந்த அமந்த நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்த ஆண்டின் துவக்கமே. இந்த வகை நாட்காட்டியில்  மாதங்களின் பெயர்கள் நடுவில் வரும் சூரியமாதங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். உதாரணத்திற்கு 23.3.2012-ல் துவங்கும் இந்த மாதம் அடுத்த அமாவாசை அதாவது 21.04.2012 வரை இருக்கும். இதன் நடுவில் 14.04.2012 அன்று துவங்கும் சூரியமாதம்  (தமிழ் புத்தாண்டு) சித்திரை மாதம். எனவே, இந்த அமந்த மாதமும் சித்திரை  என்றே அழைக்கப்படும். ஆனால், சில வேளைகளில் இது மாறவும் செய்யும். உதாரணத்திற்கு, இந்த வருட தமிழ் மாதமான புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள் (1, 30 தேதிகளில்) வருகின்றன. 1-ம் தேதி முடியும் மாதம் பாத்ரபாதம் (இதன் தமிழ் மரூஉ தான் புரட்டாசி) என்றும் 30-தேதி முடியும் மாதம் ஆச்வினம் (அஸ்வினி அல்லது ஐப்பசி) என்றும் குறிப்பிடப்படுகின்றன. 

சில சந்திர மாதங்களி்ன் நடு்வில் சங்கராந்தி எதுவும் வராமல் இருந்துவிடும். அச்சமயங்களில்  முதலில் வரும் மாதம் பின் வரும்  மாதத்தின் ‘அதிக’ மாதமாகக் கொள்ளப்படும்; பின்னால் வரும் மாதம் அந்த மாதத்தின் ‘நிஜ’ மாதம் என்று அழைக்கப்படும். பண்டிகைகள் ‘நிஜ’ மாதங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படும்.

இதைத் தவிர ‘க்ஷய’ (அதாவது குறை) மாதம் என்று ஒன்று உண்டு. இதில், ஒரு சந்திர மாதத்தில் இரண்டு சங்கராந்தி வரும். க்ஷய ஆண்டுகள் 19, 46, 65, 76, 122, 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு விதங்களில் வரும்.

 ‘குறை’ மாதமும் ‘அதிக’ மாதமும் அடுத்தடுது வருவது  மிகமிக அபூர்வம். இது கடைசியாக 1315-ல் அக்டோபர் 18 – நவம்பர் 15 வரை ‘அதிக’ கார்த்திகை மாதமாகவும்  நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை (விருச்சிக-தனுர் சங்கராந்திகள் நிகழ்ந்ததால்) கார்த்திகை-மார்கசீர்ஷ ‘குறை’ மாதமாகவும் இருந்தன. டிசம்பர் 16 இலிருந்து (அடுத்த ஜனவரி 15க்குள் மகர சங்கராந்தி வந்துவிடுவதால்) புஷ்ய மாதம் ஆரம்பித்தது.

மற்ற நாட்காட்டிகளைப் பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்ப்போம்...

இந்த அமந்த நாட்காட்டிகளை ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநில மக்கள் பின்பற்றுகின்றனர். அதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இன்று இந்த நாளை ‘யுகாதி’யாக அதாவது வருடப் பிறப்பாக்க் கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

வெள்ளி, மார்ச் 16, 2012

இளைய முதல்வர்


நேற்று, உத்திரப் பிரதேச் முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றார். 38-வயதில் முதல்வராகப் பதவியேற்கும் அகிலேஷ், இந்தியாவின் மிக இளைய வயது முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருடன் முலாயம் சிங்-இன் சகோதரர் சிவபால் சிங் யாதவ்-உம், கட்சியின் மூத்த தலைவர் முஹமத் அஸம் கான்-உம் பதவியேற்றனர். முலாயம், [இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தியே தன் மகன் அகிலேஷ் பதவியேற்க வழி செய்தார்.]

ஆனால், அவருடன் பதவியேற்ற நாற்பத்தி ஏழு அமைச்சர்களில், நான்கு பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகளும் குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதிலும், குறிப்பாக “ராஜூ பையாஎன்று அழைக்கப்படும் ராஜா ரகுராஜ் ப்ரதாப் சிங்; இவர் மீது ஆள் கடத்தல், கொள்ளை என்று பல்வேறு கிரிமினல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில், உள்ளன.

உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சென்ற ஆட்சியின் (2003-07) மேலுள்ள முக்கியக் குற்றச்சாட்டே அவர்கள் ஆட்சியில் நடைபெற்றக் கிரிமினல் குற்றங்களே; அதிலும் குறிப்பாக அதில் அரசியல்வாதிகளின் பங்கும் அதற்கு ஆளும் கட்சி கொடுத்த ஆதரவும் அரசின் செயல்கள் (அல்லது செயலற்ற நிலை) தான்  வெகுவாக விமர்சிக்கப் பட்டது.

இந்நிலையில், இம்முறை முந்தய ஆட்சியின் தவறுகள் திரும்ப நடக்காது என்ற நம்பிக்கை, இம்முறை கிரிமினல் வழக்குகள் உள்ள முன்னாள் கட்சித் தலைவர்களுக்கு (குறிப்பாக டி.பி.யாதவ் போன்றவர்கள்) தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, தோன்றியது. அதிலும், இம்முறை முலாயம் சிங்-கும் அவர் மகன் அகிலேஷ் யாதவ்-உம் மேற்கொண்ட பிரசாரங்களும் அந்நம்பிக்கையை வலு செய்தன.

ஆனால் தற்போது ராஜு பையா-வை அமைச்சர் ஆக்கியதன் சமாஜ்வாதி கட்சி எதிரான பழைய கவலைகள் மீண்டும் தலைத் தூக்கியுள்ளன. இத்தனைக்கும் ராஜா பையா சமாஜ்வாதி கட்சி சார்பில்  போட்டியிட்டு வென்ற உறுப்பினர் இல்லை; சுயேச்சை உறுப்பினர்தான். சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மை  பெற்று ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அவரை அமைச்சரவையில் சேர்த்துள்ளது தவிர்த்திருக்க முடிந்த ஒரு நிலை தான். ஒருவேளை, அவர் முதல்வர் ஆவதற்குக்காகக் கொடுத்திருக்கும் விலையாகக் கூட இருக்கலாம்.

தவிரவும் அவரது பதவியேற்பின் போது அவரது கட்சியினர் மேடையிலேயே செய்த ரகளையும் போலிஸ் அதைத் தடுக்கக் கூட இயலாத நிலையில் இருப்பது மேலும் கவலைத் தருகின்றன.

பதவியேற்று ஒரு நாள் தானே ஆகியுள்ளது; போகப்போக ஆட்சியையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்று நம்புவோம்!

இதுதான் இன்றைய நிலையில் அவருக்கு முக்கிய சவால்!

புதன், மார்ச் 07, 2012

வண்ணத் திருவிழாஹோலிப் பண்டிகை என்று வட இந்தியாவில் கொண்டாடப் படுவது வண்ணத் திருவிழா. இது வட இந்தியர்களின் பங்குனி மாதப் பூர்த்தியில் பௌர்ணமியன்றுக் கொண்டாடப் படுகிறது. சில இடங்களில், ஹோலிக்கான ஏற்பாடுகள் வசந்த பஞ்சமியன்றேத் துவங்கி ஒரு மண்டலம் (40 நாட்கள்) நடைபெற்று முடிவில் ஹோலியாகக் கொண்டாடப் படுகிறது. குறிப்பாக வங்காளத்தில் வசந்தோஸ்தவமாகவே கொண்டாடப் படுகிறது.

வட இந்தியாவில் ஹோலிக்கு முன் தினம் பொது இடத்தில் கட்டைகளை எரியூட்டி அதைச் சுற்றி அனைவரும் இசைத்துப் பாடி மகிழ்வர். இவ்வாறு எரியூட்டுவதைப் பற்றியப் புராணக்கதைகளில் இரண்டு மிகவும் பிரபலமானவை. 
முதலாகவதாகக் கூறப்படுவது ஹோலிகா தகனம். ஹிரண்ய கஷ்யப் (கஷ்யப் என்பது அவனது குலப் பெயர்; அவன் கஷ்யப முனிவருக்கும் தக்ஷனின் மகள் திதிக்கும் பிறந்தவன்) தன் மகன் ப்ரஹ்லாதனைக் கொல்ல ஆணையிட அவனுடையப் படை அதை முடிக்க முடியாமல் தவித்ததால் அவனுடையத் தங்கை ஹோலிகா ப்ரஹ்லாதனை தன்னுடன் வைத்து எரியூட்டும்படியும், தான் பெற்ற சிறப்புப் போர்வையால் போர்த்திக் கொண்டுத் தான் எரியாமல் ப்ரஹ்லாதனைப் பிடித்துக் கொண்டு அவனை அழித்துவிடலாம் என்று யோசனைக் கூற, ஹிரண்யனும் அவ்வாறேச் சிதை மூட்டினான். ஆனால், விஷ்ணுவின் அருளால் போர்வை நழுவி, ப்ரஹ்லாதன் மேல் விழுந்து அவனை மூடிக் கொள்ள, ஹோலிகா எரிந்து சாம்பலானாள். அதுதான் ஹோலிகா தகனம். 
இரண்டாவதாகக் கூறப்படுவது காம தகனம். சதிதேவியின் இறப்பிற்குப் பின் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடக்க, ஆழ்ந்த தவத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி காமதேவன் மலர்கணைத் தொடுக்க, அவர் கோபம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறக்க, அதன்  வெப்பம் தாங்காமல் காமதேவன் எரிந்தது தான் காம தகனம். 

ஆனால் மூன்றாவதாக அவ்வளவாகப் பிரபலமாகாத  ஒரு கதை பாகவதத்தில் இருக்கிறது அதுதான் துந்தியின் கதை.....

உலகின் முதல் மனிதன் ஸ்வயம்புவ மனு; அவன் மனைவி சதரூபா.

அவர்களின் முதல் மகன் உத்தனபாதன், இரண்டாவது மகன் ப்ரியவ்ரதன்

உத்தனபாதனுக்கு இரண்டு மகன்கள் துருவன் (சுநிதியின் மகன்); உத்தமன் (சுருசியின் மகன்).

துருவனின் வம்சத்தில் பின்னர் தோன்றியவன் ப்ரிது. அவன் நல்ல அரசன் தான். ஆனாலும் அவனுடைய ஆட்சியில் பல பகுதிகளில் திடீரென்று உணவுப் பொருட்கள் காணாமல் போய் மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்தனர். ப்ரிது, அதற்கு என்ன செய்வது என்று எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது,  ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாட சென்றிருந்த பொழுது, மிகவும் பசியுடன் இருந்தான். திடீரென்று, அவன் முன் ஒரு கிழப்பசுத் தோன்றியது. அதை வேட்டையாட அவன் துரத்திச் சென்றான்; அது அவனை அலைக்கழித்து இழுத்துச் சென்றது.  

மிகவும் கலைத்துப் போன அவன் ஒரு இடத்தில் தன் வில்லைக் கூடத் தூக்க முடியாமல் நிற்க, அந்த பசு  ஒரு சிறு பெண்ணாக மாறியது.
உடனே மன்னன் அச்சிறுமியை நோக்கி,  “மகளே! நீ யார்” என்று கேட்டான். 

அச்சிறுமி, “நான் ஒரு தேவபசு! கேட்டவர்களுக்கு அனைத்தையும் தரும் காமதேனுவைப் போன்றவள். ஆனால்,  இப்பொழுது எதுவும் அளிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டேன். அதனால் என்னை ஆதரிப்பார் யாருமில்லாமல் நான் அநாதை ஆகிவிட்டேன்” என்று கூறினாள். 

மேலும் தொடர்ந்து, “மன்னா! எனக்கு தற்போது உன் மக்களுக்கு உணவு கிடைகாததன் காரணம் தெரியும். என்னிடம் எல்லா உணவுப் பொருட்களின் விதைகளும் பயிர்களும் இருந்தன. அவை, மேலேயே இருந்ததால் ‘டுண்டி’ என்ற பெரிய அரக்கி அவற்றைத் தானே உண்டு மக்களுக்குத் தராமல் தின்று விடுகிறாள். அதனால், நான் அவற்றை என் உள்ளுக்குள் யாருக்கும் தெரியாதபடி புதைத்துக் கொண்டு விட்டேன்.  என்னுள் புதைந்துள்ள அப்பொருட்களை எடுக்க மனிதன் முயற்சி செய்தால் மட்டுமே, அவன் தேவைக்கு ஏற்ப வெளியிடுவேன்” என்று கூறினாள். 

உடனே மன்னன் டுண்டி-யை அழிப்பது எப்படி என்று வினவினான்.

அதற்குப் பசு, “அது யாருடைய கண்ணுக்கும் தெரியாது. அதைக் கொல்ல முதலில் அதை வெளிக் கொண்டு வர வேண்டும். அதற்கு, என்னைத் தோண்டி என் உள்ளில் இருக்கும் உணவை அணைவருக்கும் அளி! ‘டுண்டி’ என்றால் மகிழ்ச்சியொலி; மக்களின் மகிழ்ச்சி சத்தத்தில் தான் அந்த  அரக்கியும் அழிவாள். அதனால் தான் அவள் பெயர் ‘டுண்டி’  ” என்று கூறியது.

அனைத்தையும் கேட்ட மன்னன், “மகளே, உன்னை ஆதரிப்பார் யாருமில்லை என்ற கவலை வேண்டாம். இனி நீ என் மகள்” என்று அச்சிறுமியை ஆரத் தழுவினான். உடனே அப்பெண்ணின் உடல் பச்சை நிறமாக மாற அவள் அங்கிருந்து மாயமாக மறைந்தாள்.


மன்னனுக்கு வந்தது பூமித் தாய் என்று புரிந்தது. பூமியில்  இதுவரைத் தானாகத் தோன்றி வரும் உணவுப் பொருட்கள் இனிமேல் கிடைக்க வேண்டுமென்றால் பூமியைச் சீர் செய்து அதைச் சமன் படுத்தி விதையிட்டு பயிர் செய்ய வேண்டுமென்று புரிந்து கொண்டான். அவ்வாறேச் செய்து பூமியில் முதல் முதலாகப் பயிர்த் தொழிலைத் துவங்கி வைத்தான். ஆம்! பூமியின் முதல் விவசாயி ‘ப்ரிது’. பூமித் தாயும் அன்று முதல் ‘ப்ரித்வி’ (ப்ரிது-வின் மகள்) என்று அழைக்கப்பட்டாள்.

பயிரை அறுவடைச் செய்து அன்றிரவு அதில் உணவுப் பொருட்களை தன் மக்களுடன் பகிர்ந்து கொண்டான். அணைவரும், அக்கால வழக்கப்படி பொது இடத்தில் நடுவில் எரியூட்டிப் பாடி மகிழ, டுண்டி என்ற அந்த பட்டினி அரக்கி அழிந்து போனாள். அதுவே ஹோலியன்று முதல் நாள் நடக்கும் விழா என்ற தொன்மமும் உண்டு.


ப்ரிதுவின் கதை என்பது மனிதன் வேட்டுவத் தொழிலிலிருந்து உழவுத் தொழிலுக்கு மாறியதைக் குறிக்கும் கதையாகக் கொள்ளப் படுகிறது. 

அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துகள்...

திங்கள், மார்ச் 05, 2012

நதிநீர் இணைப்பும் நாளிதழ்களும்

நதிநீர் இணைப்பு என்ற சொற்பதத்தை நாம் நம் தமிழகத்தில் கடந்த 20-30 ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு வந்தாலும், மத்திய அரசும் சரி மற்ற மாநிலங்களும் இதில் சரிவர அக்கரைக் காட்டாமலேயே இருந்து வந்துள்ளன / இருந்து வருகின்றன.

இந்நிலையில், 2002-ஆம் ஆண்டு இறுதியில் திரு.கலாம் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதி கிர்பால் அவர்கள் மத்திய அரசுக்கு இதன் சாத்தியக் கூறுகளை ஆராயும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டார். அப்பொழுது, இதற்கு ஒரு சாத்தியம் இருப்பது போன்ற ஒரு நிலை இருந்தது. [ஓய்வு பெற்ற பின் அவரே இது ஒரு வழிகாட்டல் மட்டுமே ஆணையல்ல என்று குறிப்பிட்டது வேறு விஷயம்].

ஆனால், இந்த நதிநீர் இணைப்பு என்பது அவ்வப்போது காவிரி நீர் பங்கீட்டில் கருத்து வேறுபாடு வரும் பொழுது மட்டுமே தமிழக அரசியல் வாதிகளுக்கு நினைவுக்கு வரும். மற்ற சமயங்களில் கிடப்பில் போடப்பட்டு இருக்கும்.

முதலில் இந்த நதிகள் இணைப்பு என்பது என்ன என்று பார்ப்போம்…

இந்திய நதிகளை 29 (அல்லது) 30 கால்வாய்கள் (அவற்றின் அளவையும் நீளத்தையும் வைத்து அவற்றைச் செயற்கை நதிகள் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்) மூலம் இணைக்க வேண்டும்.

இதில் 14 இமயமலை நதிகளையும், மீதி 16 தென்னிந்திய நதிகளின் இணைப்பது ஆகும்.


வடஇந்தியப்  பகுதி
1.    மானஸா – ஸங்கோஷ் – திஸ்தா – கங்கை
2.    கோஸி – காக்ரா
3.    கண்டகி – கங்கா
4.    காக்ரா – யமுனா
5.    சாரதா – யமுனா
6.    யமுனா – ராஜஸ்தான்
7.    ராஜஸ்தான் – சபர்மதி
8.    சுனார் – சோனே குறுக்கு அணை
9.    சோனே அணை – கங்கையின் தென் பகுதித் துணையாறுகள்
10. கங்கை – தாமோதர் – ஸ்வர்ணரேகா
11. ஸ்வர்ணரேகா – மஹாநதி
12. கோசி – மேசி
13. ஃபராக்கா – சுந்தர்வனப் பகுதி
14. ஜோகிகோபா – திஸ்தா – ஃபராக்கா (முதல் இணைப்புக்கு மாற்று)
தென் இந்தியப் பகுதி
15. மஹாநதி (மணிபத்ரா) – கோதாவரி (தௌலேஸ்வரம்)
16. கோதாவரி (இஞ்சம்பள்ளி) – கிருஷ்ணா (புலிசிந்தலா)
17. கோதாவரி (இஞ்சம்பள்ளி) – கிருஷ்ணா (நாகார்ஜுனசாகர்)
18. கோதாவரி (பொல்லாவரம்) – கிருஷ்ணா (விஜயவாடா)
19. கிருஷ்ணா (அல்மாடி) – பென்னாறு
20. கிருஷ்ணா (ஸ்ரீசைலம்) – பென்னாறு
21. கிருஷ்ணா (நாகார்ஜுன சாகர்) – பென்னாறு (சோமசிலா)
22. பென்னாறு (சோமசிலா) – காவேரி (பெரிய அணைகட்டு)
23. காவேரி (கட்டளை) – வைகை – குண்டாறு
24. கென் – பேத்வா
25. பர்பதி – கலிசிந்து – சம்பல்
26. பர் – தபி – நர்மதா
27. தமன் கங்கா – பிஞ்சல்
28. பேட்தி – வார்தா
29. நேத்ராவதி – ஹேமாவதி
30. பம்பை – அச்சன்கோவில் - வைப்பாறு

 
கடந்த வாரம், ஃபெப்ரவரி 27-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குநதிநீர் இணைப்பு திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாதுஎன்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லியில் சென்ற 2-ஆம் தேதி பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், ‘நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது; எனினும், இது மிகவும் சிக்கலான பிரச்னை. நீர் ஆதாரம் மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது. எனவே, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது. நதிகளை இணைப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சி கடினமானது; மாநில அரசுகள் மீது மத்திய அரசு தனது முடிவை திணிக்க முடியாது. எனினும் நதிநீர் இணைப்புக்கு சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்.

தமிழகம் தவிர வேறு மாநிலங்கள் இது பற்றி பேசாதிருக்கும் நிலையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் ஒரு சிறிய குறிப்பைத் தவிர வேறு கருத்துகள் காணக் கிடைக்கவில்லை. ஆங்கில நாளிதழ்களைப் பொறுத்தவரை ஹிந்து நாளிதழ் தவிர வேறு எந்த பத்திரிகையிலும் இது பெரிதாகக் குறிப்பிடப் படவில்லை.

ஹிந்து நாளிதழைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே, இதற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். பொதுவாக, அவர்கள் நர்மதை அணை விவகாரத்திலும் பெரிய அணைகள், கால்வாய்கள் பேன்றவற்றிர்ல் எதிர் கருத்து கொண்ட மேதாபட்கர் போன்றவர்களையே ஆதரித்து வந்துள்ளார்கள். 2002-ல் மேதாபட்கரோ அல்லது அவரது ஆதரவாளர் ஒருவரோ நதிநீர் இணைப்பை எதிர்த்து திரு.கலாமை (விஞ்ஞானியில் அரசியல் அறிக்கையா அல்லது அரசியல்வாதியின் விஞ்ஞான அறிக்கையா என்று) விமர்சித்து எழுதியதை ஹிந்து நாளிதழில் படித்தது நினைவுக்கு வருகிறது.

இம்முறையும் உச்சநீதிமன்றத்தின் ஆணை வந்த மறு தினமே அதை விமர்சித்து தலையங்கமே வெளிவந்துள்ளது. மேலும், வல்லுநர்களின் (இரண்டோ மூன்றோ) விமர்சனக் கட்டுரைகளும் (நேஷனல் பொருளாதார ஆராய்ச்சி கழகம் இது பொருளாதார அடிப்படையில் தேவையற்ற முதலீடு என்று கூறியுள்ளதைக் காட்டியும், இயற்கைக்கு எதிரான செயல்பாடுட்டால் இயற்கைப் பேரிடர் ஏற்பட்க்கூடும்  என்றும்)  வந்துள்ளன. தவிர வாசகர் கடிதங்களிலும் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை நதிநீர் இணைப்பிற்கு எதிரானதாகவே இருக்கின்றன.  சில வருடங்களுக்கு முன் வரை NLC-யிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு பெறியியலாளர்  (திரு.விஸ்வநாதன் என்பது அவர் பெயர் என்று நினைக்கிறேன்) இணைப்பிற்கு ஆதரவாகத் தொடர்ந்து பல்வேறு தகவல்களுடனும் ஆய்வு நோக்கிலும் வாசகர் கடிதம் எழுதிவந்துள்ளார். இப்போது அது போன்ற கடிதங்களும் காண முடியவில்லை. இந்த மட்டிலும் ஹிந்து பத்திரிகை தன் நிலைப்பாட்டையாவது (அதாவது எதிர் நிலையை)  வெளியிட்டுள்ளது.

ஆனால், தமிழ் பத்திரிகைகள் இதைச் சாதாரண ஒரு செய்தி போல அன்று மட்டும் வெளியிட்டு மௌணமாக இருக்கின்றன.  தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் இது பற்றி  கருத்து எதுவும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்களும் அவர்களிடம் இதுபற்றி கருத்துகளை அறிய முற்படவில்லை. சில வருடங்களுக்கு முன் இந்த கோரிக்கையை தமிழ்நாட்டு மக்களும், சில அரசியல்வாதிகளும்  தீவிரமாகக் கோரிவந்துள்ள நிலைமையில் (ரஜினிகாந்த் இதற்கு ஒருகோடி ரூபாய் பணம் தருவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்), இப்போது இந்த நதிநீர் இணைப்பிற்கு ஆதரவாக  அதிலும் உச்ச நீதி மன்றத்தின் இந்த சாதகமான ஆணை வந்துள்ள வேளையில் தமிழ் நாளிதழ்களும் அரசியல்வாதிகளும் தற்போது  இது பற்றி மௌனமாக இருப்பதன் காரணம் புரியவில்லை.

ஒருவேளை இது தற்போது பரபரப்பான விஷயமில்லைஎன்று பத்திரிகையாளர்களும், ‘இதனால் அரசியல் லாபமில்லைஎன்று அரசியல்வாதிகளும் நினைக்கிறார்களோ?

வெள்ளி, மார்ச் 02, 2012

உங்கள் தலை (விதி) உங்கள் கையில்


'ஜான் ஏறினால் முழம் சறுக்குவது' என்று கூறுவதைக் கேள்வி பட்டிருக்கிறோம். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

நேற்று தில்லி அமைச்சரவை சாலைப் போக்குவரத்து விதிகளை திருத்தி விதி மீறுபவர்களுக்கு விதிக்கப் படும் அபராதத் தொகையையும் தண்டனையையும் அதிகரிக்க ஒப்புதல் தந்துள்ளது.

அவ்வாறு திறுத்தப் பட இருக்கும் அபராதத் தொகையும் தண்டனையும் –

குடி போதையில் ஓட்டுதல்
`.2000 மற்றும்/ அல்லது 6 மாதச் சிறை என்பதிலிருந்து  `.2000 - 5000 மற்றும்/ அல்லது 6 மாதம் – 2 ஆண்டுகள்  சிறை (முதல் முறைக்கும்); `.10000 மற்றும்/ அல்லது 4 வருடச் சிறை (தொடர்ந்த தவறுகளுக்கும்)

அதி வேகம்
            `.400(முதல் முறை) `.1000 (தொடர்ந்த தவறுகளுக்கும்) என்பதிலிருந்து  `.1000 (முதல் முறை) `.2000-5000 (தொடர்ந்த தவறுகளுக்கும்)

கைபேசி உபயோகம்
`.500 என்பதிலிருந்து  `.500 (முதல் முறைக்கும்); `.5000 (தொடர்ந்த தவறுகளுக்கும்)

அபாயகரமாக ஓட்டுதல்
`.1000 மற்றும்/ அல்லது 6 மாதச் சிறை என்பதிலிருந்து  `.1000 மற்றும்/ அல்லது  6 மாதச் சிறை (முதல் முறைக்கும்); `.2000-5000 மற்றும்/ அல்லது 6 வருடச் சிறை (தொடர்ந்த தவறுகளுக்கும்)

போக்குவரத்து விளக்குகளை மதியாமை, தலைக்கவசம்-இருக்கைப் பட்டைகள் அணியாமை,
            `.100(முதல் முறை) `.300 (தொடர்ந்த தவறுகளுக்கும்) என்பதிலிருந்து  `.500 (முதல் முறை) `.1000-1500 (தொடர்ந்த தவறுகளுக்கும்)

தில்லி-யில் வசிப்பவர்களுக்கு இங்குள்ள போக்குவரத்து விதி மீறல்களும் அதனால் ஏற்படும் இன்னல்களும் புரிந்திருக்கும். காவலர்கள் (சில இடங்களில் சற்று மீறப்பட்டாலும்)  விதிகளை ஒழுங்காகச் செயல் படுத்துவதால் நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது.

[தில்லியே ஓரளவு பரவாயில்லை என்று உத்திரபிரதேசத்தின் போக்குவரத்து சீரற்ற நிலைமை உணர்த்தும். தில்லியில் போக்குவரத்து விதிகளின் படி நடக்கும் அதே வாகன ஓட்டுனர், உத்திரப் பிரதேசத்தைத் தொட்டவுடன் அவ்விதிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்.]

எனவே, இந்த விதிகளைச் சற்று கடுமைப் படுத்துவது இன்றைய நிலையில் தேவையான ஒன்றே.

இது மட்டுமே நடந்திருந்தால் இந்த பதிவே இருந்திருக்காது வேறு ஒரு நிகழ்வும் நடந்தது தான் இதை எழுதக் காரணம்.

அது தான் அந்த ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விஷயம்…

உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில், பெண்கள் அமைப்புகள் கொடுத்தல் அழுத்தத்தில், பெண்கள் தலையில் எதுவும் (தப்பா நினைச்சுக்காதீங்க, தலைக்கவசம் தான்) இருக்கத் தேவையில்லை என்று தில்லி அரசு கூறியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் தலைக்காயத்தினால் மரணங்கள் ஏற்படுவதாகவும் அதில் 70 சதவிகிதம் இருசக்கர வாகன்ங்களில் பயணிப்பவர்கள் என்று ஒருத் தகவல் கூறுகிறது. சென்ற ஜனவரி 29-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் திருமதி.ஷீலா தீக்ஷித் அவர்கள் தலைக்கவசம் அணியாமையே பெரும்பாலான சாலை விபத்து மரணங்களுக்கும் காரணம் என்று பேசியுள்ளார். ஆனால், அவரது அரசோ பெண்களைப் பாதிக்கும் இது போன்ற ஒரு கருத்தைக் கூறியுள்ளது. ஏற்கனவே சீக்கியர்களுக்குத் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இப்போது, பெண்களுக்கும் விலக்களிக்கப்படும் போலிருக்கிறது.

ஆகப் பெண்களிடம், “உங்கள் தலைவிதி உங்கள் கைகளில் தான்” என்று அரசு சொல்லாமல் சொல்கிறதோ?