திங்கள், மார்ச் 05, 2012

நதிநீர் இணைப்பும் நாளிதழ்களும்

நதிநீர் இணைப்பு என்ற சொற்பதத்தை நாம் நம் தமிழகத்தில் கடந்த 20-30 ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு வந்தாலும், மத்திய அரசும் சரி மற்ற மாநிலங்களும் இதில் சரிவர அக்கரைக் காட்டாமலேயே இருந்து வந்துள்ளன / இருந்து வருகின்றன.

இந்நிலையில், 2002-ஆம் ஆண்டு இறுதியில் திரு.கலாம் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதி கிர்பால் அவர்கள் மத்திய அரசுக்கு இதன் சாத்தியக் கூறுகளை ஆராயும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டார். அப்பொழுது, இதற்கு ஒரு சாத்தியம் இருப்பது போன்ற ஒரு நிலை இருந்தது. [ஓய்வு பெற்ற பின் அவரே இது ஒரு வழிகாட்டல் மட்டுமே ஆணையல்ல என்று குறிப்பிட்டது வேறு விஷயம்].

ஆனால், இந்த நதிநீர் இணைப்பு என்பது அவ்வப்போது காவிரி நீர் பங்கீட்டில் கருத்து வேறுபாடு வரும் பொழுது மட்டுமே தமிழக அரசியல் வாதிகளுக்கு நினைவுக்கு வரும். மற்ற சமயங்களில் கிடப்பில் போடப்பட்டு இருக்கும்.

முதலில் இந்த நதிகள் இணைப்பு என்பது என்ன என்று பார்ப்போம்…

இந்திய நதிகளை 29 (அல்லது) 30 கால்வாய்கள் (அவற்றின் அளவையும் நீளத்தையும் வைத்து அவற்றைச் செயற்கை நதிகள் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்) மூலம் இணைக்க வேண்டும்.

இதில் 14 இமயமலை நதிகளையும், மீதி 16 தென்னிந்திய நதிகளின் இணைப்பது ஆகும்.


வடஇந்தியப்  பகுதி
1.    மானஸா – ஸங்கோஷ் – திஸ்தா – கங்கை
2.    கோஸி – காக்ரா
3.    கண்டகி – கங்கா
4.    காக்ரா – யமுனா
5.    சாரதா – யமுனா
6.    யமுனா – ராஜஸ்தான்
7.    ராஜஸ்தான் – சபர்மதி
8.    சுனார் – சோனே குறுக்கு அணை
9.    சோனே அணை – கங்கையின் தென் பகுதித் துணையாறுகள்
10. கங்கை – தாமோதர் – ஸ்வர்ணரேகா
11. ஸ்வர்ணரேகா – மஹாநதி
12. கோசி – மேசி
13. ஃபராக்கா – சுந்தர்வனப் பகுதி
14. ஜோகிகோபா – திஸ்தா – ஃபராக்கா (முதல் இணைப்புக்கு மாற்று)
தென் இந்தியப் பகுதி
15. மஹாநதி (மணிபத்ரா) – கோதாவரி (தௌலேஸ்வரம்)
16. கோதாவரி (இஞ்சம்பள்ளி) – கிருஷ்ணா (புலிசிந்தலா)
17. கோதாவரி (இஞ்சம்பள்ளி) – கிருஷ்ணா (நாகார்ஜுனசாகர்)
18. கோதாவரி (பொல்லாவரம்) – கிருஷ்ணா (விஜயவாடா)
19. கிருஷ்ணா (அல்மாடி) – பென்னாறு
20. கிருஷ்ணா (ஸ்ரீசைலம்) – பென்னாறு
21. கிருஷ்ணா (நாகார்ஜுன சாகர்) – பென்னாறு (சோமசிலா)
22. பென்னாறு (சோமசிலா) – காவேரி (பெரிய அணைகட்டு)
23. காவேரி (கட்டளை) – வைகை – குண்டாறு
24. கென் – பேத்வா
25. பர்பதி – கலிசிந்து – சம்பல்
26. பர் – தபி – நர்மதா
27. தமன் கங்கா – பிஞ்சல்
28. பேட்தி – வார்தா
29. நேத்ராவதி – ஹேமாவதி
30. பம்பை – அச்சன்கோவில் - வைப்பாறு

 
கடந்த வாரம், ஃபெப்ரவரி 27-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குநதிநீர் இணைப்பு திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாதுஎன்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லியில் சென்ற 2-ஆம் தேதி பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் பி.கே.பன்சால், ‘நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது; எனினும், இது மிகவும் சிக்கலான பிரச்னை. நீர் ஆதாரம் மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது. எனவே, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது. நதிகளை இணைப்பது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சி கடினமானது; மாநில அரசுகள் மீது மத்திய அரசு தனது முடிவை திணிக்க முடியாது. எனினும் நதிநீர் இணைப்புக்கு சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்.

தமிழகம் தவிர வேறு மாநிலங்கள் இது பற்றி பேசாதிருக்கும் நிலையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் ஒரு சிறிய குறிப்பைத் தவிர வேறு கருத்துகள் காணக் கிடைக்கவில்லை. ஆங்கில நாளிதழ்களைப் பொறுத்தவரை ஹிந்து நாளிதழ் தவிர வேறு எந்த பத்திரிகையிலும் இது பெரிதாகக் குறிப்பிடப் படவில்லை.

ஹிந்து நாளிதழைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே, இதற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். பொதுவாக, அவர்கள் நர்மதை அணை விவகாரத்திலும் பெரிய அணைகள், கால்வாய்கள் பேன்றவற்றிர்ல் எதிர் கருத்து கொண்ட மேதாபட்கர் போன்றவர்களையே ஆதரித்து வந்துள்ளார்கள். 2002-ல் மேதாபட்கரோ அல்லது அவரது ஆதரவாளர் ஒருவரோ நதிநீர் இணைப்பை எதிர்த்து திரு.கலாமை (விஞ்ஞானியில் அரசியல் அறிக்கையா அல்லது அரசியல்வாதியின் விஞ்ஞான அறிக்கையா என்று) விமர்சித்து எழுதியதை ஹிந்து நாளிதழில் படித்தது நினைவுக்கு வருகிறது.

இம்முறையும் உச்சநீதிமன்றத்தின் ஆணை வந்த மறு தினமே அதை விமர்சித்து தலையங்கமே வெளிவந்துள்ளது. மேலும், வல்லுநர்களின் (இரண்டோ மூன்றோ) விமர்சனக் கட்டுரைகளும் (நேஷனல் பொருளாதார ஆராய்ச்சி கழகம் இது பொருளாதார அடிப்படையில் தேவையற்ற முதலீடு என்று கூறியுள்ளதைக் காட்டியும், இயற்கைக்கு எதிரான செயல்பாடுட்டால் இயற்கைப் பேரிடர் ஏற்பட்க்கூடும்  என்றும்)  வந்துள்ளன. தவிர வாசகர் கடிதங்களிலும் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை நதிநீர் இணைப்பிற்கு எதிரானதாகவே இருக்கின்றன.  சில வருடங்களுக்கு முன் வரை NLC-யிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு பெறியியலாளர்  (திரு.விஸ்வநாதன் என்பது அவர் பெயர் என்று நினைக்கிறேன்) இணைப்பிற்கு ஆதரவாகத் தொடர்ந்து பல்வேறு தகவல்களுடனும் ஆய்வு நோக்கிலும் வாசகர் கடிதம் எழுதிவந்துள்ளார். இப்போது அது போன்ற கடிதங்களும் காண முடியவில்லை. இந்த மட்டிலும் ஹிந்து பத்திரிகை தன் நிலைப்பாட்டையாவது (அதாவது எதிர் நிலையை)  வெளியிட்டுள்ளது.

ஆனால், தமிழ் பத்திரிகைகள் இதைச் சாதாரண ஒரு செய்தி போல அன்று மட்டும் வெளியிட்டு மௌணமாக இருக்கின்றன.  தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் இது பற்றி  கருத்து எதுவும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்களும் அவர்களிடம் இதுபற்றி கருத்துகளை அறிய முற்படவில்லை. சில வருடங்களுக்கு முன் இந்த கோரிக்கையை தமிழ்நாட்டு மக்களும், சில அரசியல்வாதிகளும்  தீவிரமாகக் கோரிவந்துள்ள நிலைமையில் (ரஜினிகாந்த் இதற்கு ஒருகோடி ரூபாய் பணம் தருவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்), இப்போது இந்த நதிநீர் இணைப்பிற்கு ஆதரவாக  அதிலும் உச்ச நீதி மன்றத்தின் இந்த சாதகமான ஆணை வந்துள்ள வேளையில் தமிழ் நாளிதழ்களும் அரசியல்வாதிகளும் தற்போது  இது பற்றி மௌனமாக இருப்பதன் காரணம் புரியவில்லை.

ஒருவேளை இது தற்போது பரபரப்பான விஷயமில்லைஎன்று பத்திரிகையாளர்களும், ‘இதனால் அரசியல் லாபமில்லைஎன்று அரசியல்வாதிகளும் நினைக்கிறார்களோ?

7 கருத்துகள்:

 1. நல்ல நினைவூட்டல்.. இந்த பத்திரிக்கைகளுக்கு பரபரப்பு செய்திகள்தான் தேவை. இதை வைத்து யாராவது அரசியல் செய்ய முன்வந்தால்தான் இது பரபரப்பு செய்தியாகும். பத்திரிக்கைகளில் வரும். ஏற்கனவே, கேரள முதல்வர் இதை எதிர்ப்பதாக பேட்டி கொடுத்தது விரிவாக வந்திருந்தது இதற்கு சாட்சி.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  பதிலளிநீக்கு
 2. நண்பரே தங்களது பதிவுகள் சிலவற்றை நேரம் கிடைக்கையில் படித்து வருகிறேன்..எப்போதும் போல இதுவும் அருமையான பகிர்வு.மிக்க நன்றி.
  Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

  பதிலளிநீக்கு
 3. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சங்கர் குருசாமி.

  லாபமில்லாமல் அரசியல்வாதிகள் இயங்கமாட்டார்கள் என்பது நாம் அறிந்தது தான். ஆனால் ஊடகங்கள் கூட இது போன்ற மக்கள் பிரச்சனைகளைப் புறக்கணிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு சீனு. ஆதாயம் இல்லாமல் இவர்கள் இதில் ஈடுபடமாட்டார்கள் சீனு...

  சும்மா பேசியே பொழுத போக்குவாங்க!

  பதிலளிநீக்கு
 5. நதியை இணைக்கும் திட்டத்தை MGNRGA திட்டத்தோட முதல்ல இணைக்கணும். சும்மா ஊருக்கு ஒதுக்குபுறமா வெறும் தரையை நோண்டிகிட்டு இருக்குறதுக்கு பதிலா நதியை இணைக்கும் தடங்களை நோண்டச்சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 6. வெங்கட்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

  பத்து, நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் நல்ல கருத்து. ஆனால் MNREGA பெயரில் நடக்கும் ஊழலைப் பற்றி தனி பதிவே எழுதலாம்.

  பதிலளிநீக்கு