வெள்ளி, டிசம்பர் 28, 2012

திருவாதிரைஇன்று ஆருத்ரா (திருவாதிரை) தரிசனம்; இதற்கு முதல் நாள் மாலை ஆருத்ரா அபிஷேகம் என சிவாலயங்களில் சிவபெருமானுக்கு நீராட்டுதல் நடைபெறும். இது மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்றுக் கொண்டாடப் படுகிறது

நட்சத்திரங்களில் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாகக் கூறப்படுவது ஆர்த்ரா என்ற ஆதிரை நட்சத்திரம். அதனால் தான் இது திரு என்ற அடைமொழியுடன் வழங்கப்படுகிறது.

சாதாரணமாக இரவில் மிகுந்த ஜொலிப்புடம் ஒளிரும் நட்சத்திரங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை இந்த ஆதிரை நட்சத்திரம் பெறுகிறது. [27 நட்சத்திரங்களில் ஸ்வாதி நட்சத்திரம் மட்டுமே இதைவிட அதிக ஒளிரும் தன்மைக் கொண்டது].

இது சிவப்பான நிறத்தில் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் முக்கிய நட்சத்திரக் கூட்டங்களாகக் குறிப்பிடப்படுவதில் ’ஓரியன்’ என்ற நட்சத்திரக் கூட்டத்தின் தோள் பகுதியில் இந்த ஆதிரை நட்சத்திரம் இருப்பதாகக் குறிக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் பீட்டல்க்யூஸ் (Betelgeuse). பெயரைப் போலவே வெற்றிலைச் சிவப்பு நிறத்தில் இருக்கும் நட்சத்திரம். [ஓரியன் நட்சத்திரக் கூட்டம் ரிஷபத்திற்கும் மிதுனத்திற்கும் இடையில் இருக்கும் கூட்டம். இதன் முக்கிய நட்சத்திரங்கள் ரிஷபத்திலும் மிதுனத்திலும் விரவி இருப்பதால் இது தனி ராசியாகக் குறிக்கப்படுவதில்லை.]

க்ரேக்கத் தொன்மங்களில் இந்த ஓரியன் ஒரு வேட்டைக்காரன். அவன் தோள் பகுதியாகக் கூறப்படுவது இந்த பீட்டல்க்யூஸ். [போர் கடவுளாகச் செவ்வாய் கூறப்படுவதால் அதற்கு நிகரான வேட்டுவனாக இந்த ஓரியன் கூறப்பட்டது என்று கூறுகின்றனர்].

இந்திய ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஆதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை / ஆட்சி தெய்வம் ‘ருத்ரன்’; தேவகணங்களில், இவர் புயல் தேவதையாகக் கருதப்படுபவர். சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயரும் உண்டு.

மேற்கத்தியக் கணக்கில் டிசம்பர்-23 ஆம் தேதியின் இரவுதான் வருடத்தின்  நீண்ட இரவாகக் குறிக்கப்படும். ஆனால் நம் இந்தியக் கணக்குகளில் மார்க்ழி மாதம் திருவாதிரை நட்சத்திர இரவுதான் வருடத்தின் நீண்ட இரவாகக் கூறப்படுகிறது.

திருவாதிரை தரிசனம் என்றவுடன் அனைவரும் அறிந்தது தில்லையில் இறைவன் நடத்திய ஆனந்த நடனம்.

ஒருமுறை விஷ்ணு, சேஷ சயனத்தில் (பாம்பணையில் துயிலும்) இருக்கும் பொழுது திடீரென அவரைத் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு அவர் எடையைத் தாங்க முடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென அவர் பகவான் விஷ்ணுவை வினவ, விஷ்ணு தன் மனதில் சிவபெருமானை எண்ணியதையும் அவர் விஷ்ணுவின் மனதையே மேடையாக்கி அதில் நடனம் புரிந்ததாகவும் (இதற்கு அஜபா நடனம் என்று பெயர்) கூறினார். சேஷனோ தான் அக்காட்சியைக் காணவில்லையே என்று வருந்தினார். விஷ்ணு அவருக்கு சிவ நடனத்தைக் காண்பித்து அருள விரும்பினார்.

அதே நேரத்தில் பூவுலகில் ’கோனிகா’ என்ற யோகினி கல்வி கேள்விகளில் சிறந்த மகனைப் பெற விரும்பி நீர்நிலையில் நின்று தவமிருந்தாள். அவள், தன் உள்ளங்கைகளில் நீரெடுத்து இறைவனை எண்ணி நீரை அர்ப்பணிக்க விழையும் பொழுது அவள் கரங்களில் சேஷன் குழந்தையாக விழுந்தார். ’பத்’ என்றால் விழுதல்; ‘அஞ்சலி என்றால் சமர்பித்தல். நீரைச் சமர்பிக்கும் பொழுது கைகளில் விழுந்ததால் அதையே (பதஞ்சலி) அக்குழந்தைக்குப் பெயராகச் சூட்டினாள். பின்னாளில் இலக்கண, யோக நூல்கள் பலவற்றை இயற்றிய பதஞ்சலி முனிவர்தான் அவர்.

சிவபெருமானை த்யானித்து அவரிடம் நாட்டியக் கலையைக் கற்க தில்லையம்பதி வந்தடைந்தார் பதஞ்சலி. அங்கு மற்றொரு சிவபக்தரும் இருந்தார்; அவர் வ்யக்ரபாதர். இறைவனுக்குப் பூக்கள் பறிக்க பூந்தோட்டங்களுக்கு வேகமாகச் சென்று வர புலிகள் போல பாதமும், தேனிக்கள் தேனெடுக்காதப் பூக்களை கண்டுபிடிக்க வண்டுகளைப் போன்ற கண்களும் வேண்டிப் பெற்றவர் அவர். அதனாலேயே அவர் வ்யக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) என்றழைக்கப்பட்டார். தில்லையை அடுத்த அனந்தீஸ்வரத்தில் பதஞ்சலியும் திருப்புலீஸ்வரத்தில் வ்யக்ரபாதரும் தங்கியிருந்து இடையிலிருந்தக் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தை வழிபட்டுவந்தனர். ஆனால், அவர்களுக்குச் சோதனையாக அவ்வனத்தின் காவல் தேவதை காளிகா தேவி சிவபெருமான் அவர்களுக்கு அருளுவதைத் தடுத்தாள். பின்னர், அவளுக்கும் சிவபெருமானுக்கும் நடனப்போட்டி நடத்தில் அதில் வெற்றி பெருபவரின் முடிவை ஏற்கத் தீர்மானிக்கப்பட்டது. [அப்பொழுது சிவபெருமான் ஆடிய நடம் ஊர்த்வத் தாண்டவம் எனப்படும்]. போட்டியின் இடையில் சிவபெருமானின் காதணி கீழே விழ அதை அவர் காலால் நடனமாடிக் கொண்டே எடுத்துத் தன் காதில் அணிந்தார். பெண்ணான காளி தேவியோ அது போல் செய்ய நாணம் கொண்டு நடனத்தை நிறுத்தி சிவபெருமான் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொண்டாள். தான் சிவனின் பாகம் என்பதையும் உணர்ந்து அவருடன் சிவகாம சுந்தரியாகக் கலந்தாள். உமையொருபாகனாக சிவபெருமான் இருவருக்கும் தன் ஆனந்த நடனத்தைக் காட்சி தந்தருளினார். பதஞ்சலி பரத சூத்திரத்தை சிவபெருமானிடமிருந்துப் பெற்றார். இந்த நாளே திருவாதிரை தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது

ஆனந்தம் என்றால் களி; சிவபெருமானுடன் அன்னையும் கூடியதால் திருவாதிரை தினத்தன்று சிவபெருமானுக்குக் களியும் கூட்டும்  படைக்கும் வழக்கம் உண்டாகியிருக்கக் கூடும்.

வியாழன், டிசம்பர் 27, 2012

2012-இல் இந்திய அரசியல்


வீடுதிரும்பல்’ மோகன்குமார் அவர்கள் தன் வலைப்பூவிற்காக 2012-இன் முக்கிய அரசியல் நிகழ்வுகளை எழுத எனக்கு ஒரு வாய்ப்பை அளித்தார். அதற்கு நான் எழுதியதை இன்று வெளியிட்டுள்ளார்.

அது….


2012….

ஒரு தேசத்தின் அரசியலை ஒரு ஆண்டின் நிகழ்வுகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதே நேரம், ஒவ்வொரு நிகழ்விலும் சில அரசியலும்  - குறைந்த பட்சம் சில அரசியல் சங்கேதங்களும் - அவற்றால் அரசியலில் சில மாற்றங்களும் நிகழ்வதும் அது அந்த தேசத்தின் அரசியல் போக்கை மாற்றுவதும் உண்டு.

முதலில் சென்ற ஆண்டில் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களை அலங்கரித்த முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் பார்ப்போம்...

1. குடியரசுத் தலைவராக திரு.பிரணாப் முகர்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட குடியரசுத் துணைத் தலைவர் (மாநிலங்கள் அவையின் தலைவரும் இவரே) திரு.ஹமித் அன்சாரி மீண்டும் அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;

2. ஏழு மாநிலங்களில் (பிப்ரவரியில் 5 மாநிலங்களிலும் டிசம்பரில் இரண்டிலும்) சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டில் காங்கிரஸும் இரண்டில் பாஜக-வும் வென்றன. ஒரு மாநிலத்தில் இரண்டும் சம அளவு உறுப்பினர்களும் ஒரு மாநிலத்தில் இரண்டுக்கும் மூன்றாவது நான்காவது இடமும், ஒரு மாநிலத்தில் மாநில கட்சியும் வெற்றி பெற்றன.

3. த்ரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் த்ரிவேதி கட்சித் தலைமையின் விருப்பத்திற்கு மாறான இரயில்வே நிதிநிலையறிக்கையை வெளியிட்டதால் கட்சியால் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.

4. ஒரிஸாவில் பிஜு ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினரும் சுக்மா மாவட்ட ஆட்சியாளரும் மாவோயிஸ்டுகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

5. 2ஜி விவகாரத்தில் 122 உரிமங்கள் உச்ச நீதிமன்றத்தால் மறுக்கப்பட முதலில் அதை எதிர்த்து மனு செய்த மத்திய அரசு பின்னர் அந்த மனுவைத் திரும்பப் பெற்றது. மறு ஏலத்தில் ஊழலில் கணிக்கப்பட்ட அளவு ஏலத்தொகை கிடைக்கவில்லை.

6. அஸ்ஸாமில் மத/இனக்கலவரங்கள் வெடித்து பல குடும்பங்கள் வீடு, உடமைகளை இழந்தன. நாட்டின் பிற பாகங்களில் வசித்து வந்த வடகிழக்கு பகுதி மக்களுக்கு எதிராக வதந்திகளால் பரவ பதட்டமடைய நேரிட்டது.

7. ஐநா-வில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீரல்களை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

8. மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

9. (பிறந்த தேதி விவகாரத்தில்) அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை தரைப்படைத் தளபதி திரும்பப் பெற்றார்.

10. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு அதன் காரணமாக கூட்டணியிலிருந்து த்ரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியது. ஆனாலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஒன்றுக்கொன்று எதிர்நிலை எடுக்கும் முலாயம் சிங்-இன் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸுக்கு உதவின.

******************

இவற்றைத் தவிர தெலுங்கானா, கூடங்குளம் அணுமின் உலை எதிர்ப்பு, கேரளக்கடலில் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் இரு மீனவர்கள் கொல்லப்பட்டது, மம்தா பானர்ஜி ஊடகங்களையும் எதிர்கருத்துக்களை கையாண்ட விதமும், ஏர்-இந்திய விமானிகளின் வேலை நிறுத்தமும், கிங்-பிஷர் நிறுவணத்தின் நிதி நிலைமையும், ராகுல் காந்தி கட்சிப் பொறுப்பை ஏற்பது (அல்லது பொறுப்பேற்பதில் காட்டும் தயக்கம் என்று கூற வேண்டுமோ?), ’டைம்பத்திரிகை பிரதமரின் கையாளாகாதத்தனத்தை விமர்சித்தமையும் முக்கியச் செய்திகளாக இடம் பெற்றன.

முக்கிய 10 நிகழ்வுகளில் சில குறித்து இன்னும் சற்று விரிவாக பேசுவோம்.

சுதந்திர இந்தியா-வின் மக்களாட்சி என்கிற தேரை இழுத்துச் செல்லும் அரசுக் குதிரையின் கடிவாளமாக விளங்கும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்தத் தேர்தல் தான் முதல் முக்கிய நிகழ்வு. கடிவாளத்தின் பிடி என்னவோ பிரதமரிடம் தான் இருக்கிறது.

[அந்த பிரதமர் என்கிற இயந்திர மனிதரைக் கட்டுப் படுத்தும் ரிமோட் தற்போது யாரிடம் இருக்கிறது? என்று கேள்விக் கேட்கக் கூடாது]

குடியரசுத் தலைவராக திரு. பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறுத் தலைவரகளின் பெயர்கள் யூகமாக வெளியிடப்பட்டுக் கொண்டே வர அதிலும் குறிப்பாக ஐ.மு.முன்னணிக்கு அப்போது ஆதரவளித்து வந்த த்ரிணாமுல் காங்கிரஸ் முன்னால் குடியரசுத் தலைவர் கலாமின் பெயரைப் பரிந்துரைக்க முயல, நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த காங்கிரஸ் ஒரே நாளில் முகர்ஜியின் பெயரை சிபாரிசு செய்து சுதாரித்துக் கொண்டது. அதற்கு, முன்னரே மற்றொரு ஆதரவுக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் சங்மா (தே.கா. அவரை வெளியேற்றிவிட்டது தனிகதை) தன்னை முன்னிலைப் படுத்தி எதிர் கூட்டணியின் (தே.ஜ. கூட்டணி) பிஜு ஜனதாதளம், அதிமுக ஆகியவற்றின் ஆதரவுடன் நிற்க அக்கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜக-விற்கு என்ன முடிவெடுப்பது என்பதே புரியாத நிலையில், காங்கிரஸின் அறிவிப்புக்குப் பின்னர் கலாம் தான் போட்டி-யிட விரும்பாததை அறிவித்த நிலையில் வேறு வழியின்றி சங்மா-வை ஆதரித்தது.

கட்சி அடிப்படையில் முகர்ஜி ஆதரவாளர்கள் அதிகம் இருந்தாலும், இந்திரா ஆட்சியில் கட்சி மாறிப் போட்ட ஓட்டுகளில் திரு. சஞ்சீவ ரெட்டிக்கு வெற்றி கிட்டியது போல் தனக்கும் கிடைக்குமோ என்ற சங்மா-வின் எண்ணம் நிறைவேறவில்லை. முகர்ஜி-யே பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆரம்பத்தில் அடிபட்ட பெயர்களில் முக்கியமான குடியரசுத் துணைத் தலைவர் திரு.அன்சாரி மீண்டும் அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆண்டு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. முதல் பாதியில் (பிப்ரவரி-மார்ச் மாதம்) கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்திரபிரதேசம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் பிற்பாதியில் (டிசம்பர்) குஜராத், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மணிப்பூர், ஹிமாசல மாநிலங்களில் காங்கிரஸும், கோவா, குஜராத் ஆகியவற்றில் பாஜக-வும், உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும், பஞ்சாபில் அகாலிதளமும் வெற்றி பெற்றன. உத்ராஞ்சலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.


இந்தத் தேர்தல்களில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டவை குஜராத் மற்றும் உத்திரபிரதேசத் தேர்தல்கள் தான். குஜராத்தில் மோதி தொடர்ந்து வெல்வதைத் தொடர்ந்து 2014-இல் மத்திய பொதுத் தேர்தலில் மத்திய அரசை நேக்கி நகர முயற்சிப்பது தான் இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம். ஆனால், காங்கிரஸோ கடந்த ஆண்டுகளில் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தாமல் கடைசி நேரத்தில் மத்திய தலைமையின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையிலேயே இருக்கிறது (கிட்டத்தட்ட தமிழக காங்கிரஸின் நிலைதான். ஆனால், தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. குஜராத்தில் அது இல்லாததால் மோதிக்கு எதிரான வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைப்பதால் ஓரளவு இருப்பைக் காட்டிக் கொள்ள முடிகிறது).

கடந்த ஆறு மாதங்களாக ஊடகங்களாலும் மத்திய காங்கிரஸ் தலைமையாலும் மோதிக்கு எதிராகக் கூறப்படும் எந்தக் குற்றச்சாட்டையும் மாநில காங்கிரஸ் சுட்டிக் காட்டவில்லை என்பதிலிருந்தே அந்த மாநில கட்சி நடக்கும் விதம் புரிபடும். எனவே, தேர்தலுக்கு முன்னரே மோதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. சோனியாவும், ராகுலும் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்தது அவர்களின் கையறு நிலையைக் காட்டிவிட்டது. ஆனால், இந்த வெற்றி மோதியின் பிரதமர் கனவை நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. காரணம், முதலில் பாஜகவிலேயே அவரை முன்னிறுத்த ஒத்த கருத்து இல்லை; அடுத்து, சங்பரிவாரம் அவரை இன்னமும் முழுமையாக ஏற்கவில்லை; மூன்றாவதாக, கூட்டணிகள் (அதிமுக, அகாலிதளம், சிவசேனா தவிர பெரும்பாலானவை, முக்கியமாக ஜனதாதளம்) அவரை ஏற்பதில் காட்டும் தயக்கம் ஆகியவையே. இவையனைத்தையும் விட முக்கிய காரணமாக ஒன்றைக் கூற வேண்டுமானால் அது சமீப காலமாக பாஜக கண்டு வரும் சரிவும் அக்கட்சியின் உட்கட்சிப் பூசல்களும் தான்.

கட்கரி, எதியூரப்பா விஷயத்தில் பாஜக-வின் ஊழல் எதிர்ப்பும் கட்சிக் கட்டுப்பாடும் ஆட்டம் கண்டு அது காங்கிரஸின் நகலாகவேத் தோற்றம் காணுகிறது. காங்கிரஸிலாவது நேரு குடும்பம் என்ற பசை கட்சியை இணைக்க இருக்கிறது. பாஜக-வில் சங்பரிவாரம் (குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்) தான் அந்த வேலையைச் செய்து வருகிறது. ஆனால் சங்பரிவாரத்தின் நடவடிக்கைகளே கட்சியை மக்களிடமிருந்து தள்ளி வைக்கிறதோ என்ற எண்ணம் அவர்களிடம் எழுந்துள்ளதால் எந்தப் பக்கம் செல்வது என்று புரியாமல் இருக்கின்றனர்.

மாநிலங்களின் தேர்தலில் குஜராத்திற்கு அடுத்த நிலையில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது உத்திரபிரதேச தேர்தல் தான். காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தினரால் ஒரு குடும்பத்தினருக்காக ஒரு குடும்பத்தின் மூலம் நடத்தப் பட்டதுஎன்பது தான். தேர்தல் பிரசாரத்தில் அக்குடும்பத்தின் நண்டு சிண்டுகள் கூட மேடையேற்றப்பட்டன. ஆனாலும், காங்கிரஸால் ஏற்கனவே இருந்த இடங்களைக் கூடத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைதான் ஏற்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுலால் கூட கட்சியின் தோல்வியை தடுக்க முடியவில்லை. முலாயம் சிங் தனிப்பெரும் முன்னிலை பெற்றுத் தன் மகனை முதல்வராகவும் ஆக்கியது தான் நடந்தது.

இந்தத் தேர்தல்களைப் பொறுத்தவரை இவை முறைப்படி நடத்தப்பட்டு உரிய நேரத்தில் சரியான முறையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றங்கள் இயல்பாகவும் நேர்மையான முறையிலும் வெளியிடப்பட்ட விதம் இந்திய மக்களுக்கு ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை மேலும் வளர்க்கும் விதத்தில் இருந்தது என்றே கூறவேண்டும். தேர்தல்கள் பொதுவாக நேர்மையான முறையில் பாரபட்சமில்லாமல் முறைகேடுகள் இன்றியே நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தை இவ்விஷயத்தில் பாராட்ட வேண்டும்.

அடுத்த முக்கிய நிகழ்வு,ஆண்டு துவங்கும் முன்னரே அரசுக்கு எதிராகத் தரைப்படைத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தில் (பிறந்த தின சர்ச்சையில்) வழக்குத் தொடுத்திருந்தார். இது அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான பிணக்காக மாறிவிடும் அச்சம் தொடர்ந்தது. ஆனால், பிப்ரவரி மத்தியில் சிங் தன் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த அண்டை நாடுகளின் ஜனநாயகம் பெரும்பாலும் அரசுக்கும் ராணுவத்திற்குமானப் பிணக்குகளினாலேயே அதிகம் பாதிப்படைந்தன என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது இதன் முக்கியத்துவம் புரிபடும்.

ஊழல்களைப் பொறுத்தவரை இதுவரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பெரிய ஊழலை நாம் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். 85-90களில் போபர்ஸ், 90-95களில் பங்குச் சந்தை (ஹர்ஷத் மேத்தா) ஊழல், 95-2000-இல் முத்திரைத் தாள் ஊழல், 2000-2005இல் 2ஜி ஒளிக்கற்றை 2005-10இல் நிலக்கரி ஊழல் ஆகியவை. ஆனால், இவை எதிலும் எந்த அரசியல்வாதியும் இதுவரைத் தண்டிக்கப் படவில்லை என்பது தான் நிலைமை. அரசியல்வாதிகள் தண்டிக்கப்படும் வரை இது போன்ற ஊழல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நீதிமன்றங்கள் தண்டிக்காவிட்டாலும் மக்களாவது இவர்களைத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.

என்னதான் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் இந்திய ஜனநாயகம் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்று பெரும்பாலான ஊடகங்கள் விமர்சிக்கின்றன. குறிப்பாக, மத்தியில் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சியில் (கடந்த இரு தசாப்தங்களாக) மாநிலக் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து வருவதாக வட மாநில ஊடகங்கள் கருதுகின்றன. ஆனால், மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி என்ற (திராவிட கட்சிகளின் ஆரம்ப கால கோஷமாக இருந்தாலும்) நிலைதான் சரியென்று தோன்றுகிறது. வலுவான மத்திய அரசு இருந்த போது அது சிறு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பெரிய மாநிலங்களில் தங்கள் வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏற்ற முடிவுகளையே எடுத்துவந்துள்ளன/வருகின்றன. உதாரணமாக, காவிரி, மீனவர்கள் கொல்லப்படுவது, அணுமின் உலை விவகாரங்களில் மத்திய அரசுகள் எடுத்துவரும் நிலையைக் கூறலாம். சில மாநிலக் கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மத்திய அரசை மிரட்டுவதைக் கொண்டு இந்தக் கூட்டாட்சி முறையே தவறென்று கூற முடியாது. இதற்கு மக்கள் சரியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் தீர்வாக இருக்க முடியும்.

வரும் ஆண்டுகளிலாவது இந்த முதிர்ச்சியை நாம் அடைய வேண்டும்…!

திரு.மோகன் குமார் அவர்களுக்கு என் நன்றிகள்!

செவ்வாய், டிசம்பர் 18, 2012

ஸிந்து தேசம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.


ஸிந்து நதியைப் பற்றிப் புராணங்களிலும் இதிகாசத்திலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. அதேபோல் மேற்கத்திய தேசக் குறிப்புகளும் சிந்துவைப் பற்றிப் பல குறிப்புகள் கூறுகின்றன.

இந்த சிந்து நதியின் மையப்பகுதியில் ஐந்து நதிகள் கூடுமிடத்தில் இருந்தது தான் இந்த சிந்து தேசம். இது இன்றைய பாகிஸ்தானில் குறிப்பாக வடக்கு முல்தான் பகுதியில் ஆஃப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியாகும். அக்னிபுராணத்தில் பாரத வர்ஷத்தைக் குறிப்பிடும் பொழுது கடலுக்கு வடக்கில் ஹிமாலத்தின் தெற்கே 9000 யோஜனைகள் கொண்டதாகக் குறிப்பிடுகிறது. இதன் முக்கிய மலைத் தொடர்களை குலபர்வதம் என்று குறிப்பிட்டு 7 மலைத் தொடர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் பாரியாத்ரம் என்பது ஆரவல்லி மலைத் தொடரைக் குறிப்பதாகும். இந்த ஆரவல்லித் தொடர் பகுதியில் ஸிந்து தேசம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. உலக நாகரிகத் தொடக்கப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விடத்தில் சிறப்பாக ஒரு நாடு இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

ராமாயணத்தைப் பொறுத்தவரை, ராமருக்கு ராகவன் என்ற பெயர் உண்டு. இதன் பொருள் ரகு வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதாகும். காளிதாசரின் ரகுவம்சத்தில் ரகு மஹாராஜர், படலாவதி நதியைக் கடந்து பாரியாத்ரதின் அபராந்த மலை வழியாக பஹாலிக தேசத்தை அடைய சிந்து தேசத்தை கடந்ததாகக் குறிப்பிடுகிறது.

சிந்து தேசம் சில இடங்களில் சிவி(பி) தேசம் என்று சிபிச் சக்ரவர்த்தியின் பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஸிந்து தேசத்தவர்களுக்கு சைந்தவர் (சிபி வம்சத்தவர்) என்ற பெயரும் உண்டு. சிந்து தேசத்தைத் தோற்றுவித்தவன் சிபி-யின் மகன் வ்ருசத்ரபன் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் தலைநகரம் வ்ருசத்ரபுரம்; இது இன்றைய பஞ்சாப் (பாகிஸ்தான்) மாநிலத்தின் மிதான்கோட் நகரம்.

மஹாபாரதத்தில் ஸிந்து தேசம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ஸிந்து மன்னன் ஜயத்ரதன், துரியோதனனின் சகோதரி துஸ்சலையை மணந்தவன். துஸ்சலையைத் தவிர இவனுக்கு காந்தார காம்போஜ இளவரசிகளும் மனைவியர். பாஞ்சலியை மணக்கப் சுயவரப் போட்டியில் தோற்றவர்களில் இவனும் ஒருவன். அப்பொழுது, பாஞ்சாலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மிகவும் அவமானப் பட்டவன். தொடர்ந்த பகையில் பாஞ்சாலர்கள் மீதும் பாஞ்சாலியை மணந்த பாண்டவர்கள் மீதும் கடும் வன்மம் கொண்டிருந்தான். சக்ர வியூகத்தைப் பிளந்து அதில் நுழைந்த அபிமன்யுவைக் காக்க விழைந்த பாண்டவர்களைத் தான் பெற்ற வரத்தின் உதவியால் தடுத்து, சக்ரவியூகத்தை மூடியவன். மறுநாள், சூரிய அஸ்த்மனத்திற்குள் அவனைக் கொல்ல அர்ஜுனன் சபதம் செய்து அவனைக் கொன்றான்.  ஜயத்ரதனின் தந்தையின் பெயர் வ்ருத்தக்ஷ்ரதன். அவன், தன் மகனின் தலை மண்மீது விழக் காரணமாக இருந்தவன் தலை வெடித்துச் சிதற வேண்டுமென வரம் பெற்றிருந்தான். அர்ஜுனனின் அம்பு ஜயத்ரதனின் தலையைக் கொய்து வ்ருத்தக்ஷ்ரதன் மடியில் விழ, அதிர்ச்சியில் எழுந்த அவன் மடியிலிருந்து ஜயத்ரதனின் தலை மண்ணில் விழ, அவனும் மடிந்ததாக பாரதம் கூறுகிறது. ஜயத்ரதன் சிந்து தேசத்தின் மன்னனாக இருந்தாலும் அவன் கட்டுப்பாட்டில் 10 தேசங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக சிவி வம்சத்தவர் சிவ வழிபாடு செய்பவர்களாக மஹாபாரதமும் மற்றக் குறிப்புகளும் தெரிவிக்கின்றன. மஹாபாரதத்தில் உபமன்யு என்ற முனிவரைச் சைவ சமயத்தைக் கடைபிடிப்பவர் அதிலும் குறிப்பாக ’முண்டகர்’ (தலையை முழுங்க மழித்தவர்கள்) என்று குறிப்பிடப்படுகிறது. உபமன்யுவின் மகன் அல்லது வம்சத்தவர் தான் சாமவேதத்தில் குறிப்பிடப்படும் ஔபமன்யர் என்று காந்தார தேசத்தின் குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தேன். மஹாபாரதத்தில் ஜயத்ரதனும் அவன் தந்தையும் சிவனிடம் வரம் பெற்றதாகவே குறிப்பிடப்படுகிறது. அலெக்ஸாண்டரின் குறிப்புகளிலும் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்களையும் காம்போஜர்களையும் ‘தலை மழித்தவர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறது.

அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பின் போரஸ் மன்னனின் மகன் கட்டுப்பாட்டில் இருந்த சிந்து தேசம், பின் மௌரியர்களால் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்குப் பின் சுங்க  வம்சத்தின் சுங்க மித்ரன் மற்றும் அவன் மகன் புஷ்யமித்ரன் ஆகியோர் வசம் இருந்ததாக புத்த மத நூல்கள் குறிக்கின்றன.

புத்தமதத்தினரின் ஜாதகக் கதைகளில் சிபி மன்னனின் தலைநகரம் அரிஷ்டபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீன யாத்ரிகர்கள் பாஹியான், க்ஷுவன்சான், யுவான்சுவாங், சாங்யுன் ஆகியோரின் குறிப்புகளில் சிவி வம்சத்தவரை ஒட்ட்யானா பகுதி (ஸ்வாட் பள்ளத்தாக்கிற்குத் தெற்குப் பகுதியைக் குறிக்கும்) என்றுக் குறிப்பிடுகிறார்கள். அரிஷ்டபுரம் க்ரேக்கர்களால் (டால்மி) அரிஸ்டொபொத்ரோ என்று குறிப்பிடுகிறது.

மத்ஸ்ய புராணம் சிந்து நதி சிவபுரம் (சிவிகளின் நகரம்) வழியாகப் பாய்வதாகக் குறிப்பிடுகிறது.

யுவான் சுவாங்-இன் குறிப்புகளில் வசுந்தரன் என்ற போதிச்சத்துவரின் கதைக் குறிப்பிடப்படுகிறது.  ஆனால், அல்-பிருனி இந்த மன்னனை ராஜஸ்தானின் சித்தூரைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுகிறார்.

புத்த ஜாதகக் கதைகளில் சிபிக்களின் தலைநகரமாக மற்றொரு நகரமும் குறிப்பிடப்படுகிறது. அது ரோர்கா என்று தற்போது அழைக்கப்படும் ரோரி. பல்லதிய ஜாதகக் கதைகளில் இந்த ரோரியின் அரசனாக ரூரக் என்ற ருத்ராயனன் குறிப்பிடப்படுகிறான். இவன் இஷ்வாகு-வின் வம்சத்தைச் சேர்ந்தவனாகக் குறிப்பிடப்படுகிறான். இந்த ரூரக்-இன் மகன் சிகண்டி-யின் (மகாபாரத சிகண்டி அல்ல) காலத்தில் கடும் புயல் அடித்து இந்த நகரம் அழிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சுங்க வம்ச ஆட்சிக்குப் பின்னர் ரோர் (ரூரக்-இன் திரிபு) வம்சத்தவர்களால் இது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

அராபியர்கள் ரோர்-களை ’அரோர்’ என்று அழைத்தனர். அரேபியப் படையெடுப்பிற்குப் பின்னர் அரோர் என்ற பெயரே நிலைத்தது. பஞ்சாபின் அரோரா-க்கள் இவர்கள் வம்சத்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் அரேபியப் படையெடுப்பின் போதே சிந்தி-க்கள் இராஜஸ்தான் ஹரியானா பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். ஹரியானாவின் ஜஜ்ஜர்-களும் சிந்து (சிபி-யின்) வம்சத்தவர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

அன்றும் இன்றும், இந்திய பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக பல சிந்தி-க்கள் இருந்து வந்துள்ளனர்/இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்களாக ஜின்னா, பூட்டோ, கிலானி, ஜியா-உல்-ஹக், க்ருபாளினி, அத்வானி, ஜெத்மெலானி என்று பலரையும் குறிப்பிடலாம்.

ஞாயிறு, டிசம்பர் 16, 2012

மார்கழி வழிபாடுசமூதாயத்திற்கு நன்மைத் தரும் விஷயங்களை மதத்தில் பிணைத்து மதச் சடங்குகளாகவும் பண்டிகைகளாகவும் கூறுவது நம் நாட்டு வழக்கம். முன்பனிக்காலத்தின் குளிருக்கு முடங்கிவிடாமல் அவர்கள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாய் இருக்கவும் தை மாதத்தின் அறுவடைக்காக விதைத்த நெல்லைப் பாதுகாக்கவும் ஆநிரைகளைப் பராமரிக்கவும் அவர்கள் விடியலில் எழுவது முக்கியம். எனவே அவர்களை விடியலில் எழ வைக்க செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் மார்கழி பாவை நோன்பு.

இதனால் இரண்டு நன்மைகள் ஒன்று லௌகீமான அல்லது புற வாழ்க்கையில் நன்மை. நோயற்ற வாழ்வும் செல்வமும் கிட்டும். மற்றொன்று கடவுள் வழிபாடு; இது அகத்தூய்மைக்கான ஏற்பாடு. மார்கழியில் அதிகாலைத் துயில் நீக்கி, நீராடித் தூய்மையாய் கடவுளை நினைத்து பாடுவது மரபு.

மார்கழிப் பாவை நோன்பு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பாவை. ஆண்டாள் தான் மட்டும் தனியே இறைவனை நாடாமல் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் முழுவதும் கிட்ட வேண்டும் என்று எண்ணி எழுதியதுதான் இந்தத் திருப்பாவை. இது, முதல் பாடலிலேயே ஆண்டாள் ‘நீராடப் போதுமீர் போதுமின்’ என்று விருப்பமுள்ளவர்களை வரச் சொல்லிக் கூப்பிடுவது வெறும் சாதாரண நீராட்டத்திற்கு மட்டுமன்றி பக்திக் கடலில் அனைவரையும் மூழ்க வைக்கவும் தான் என்பதிலிருந்தே புரிபடும்.

ஆண்டால், ஏன் பாவை நோன்பிருந்தாள்? அதனால் அவளுக்குக் கிட்டியது என்ன? அதை எப்படி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று எழுதியதே ‘திருப்பாவை’. இதில், ஆண்டாள் கூறியதைச் சற்றுப் பார்ப்போம்....

கடலில் மூழ்கினால் முத்து கிடைக்கும். நாராயணனின் பக்தியில் என்ன கிடைக்கும்? இதற்கான பதிலை ஆண்டாளே தருகிறாள்; அது தான் ‘பறை’

அதை யார் தருவார்? ’நாராயணனே நமக்கே பறைத் தருவான்’. (முதல் பாடல்)

எப்பொழுது?         ’நம்மால் போற்றப் பறைத் தரும் புண்ணியன்’ (10-ஆவது பாடல்)

இதை சொன்னது யார்?   ’உமக்கு அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்’ [உங்களுக்குப் பறை தருவேன் என்று கண்ணன் நேற்றே (முன்னரே) வாக்களித்துள்ளான்]. (16-ஆம் பாடல்)

எப்படித் தருவான்? ’என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்’. (24-ஆம் பாடல்)

எவ்வாறு கேட்க வேண்டும்?      ’உன் தன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி’. (25-ஆம் பாடல்)

முதல் 25 பாடல்கள் வரை ‘பறை’யையும் அதை நாரணனிடமிருந்துப் பெறுவதையுமே எழுது வந்துள்ளாள். ‘பறை’ என்றால் அறிவித்தல். எதை அறிவிப்பார்கள்? அங்கீகாரம் பெற்றதை அறிவிப்பார்கள். இங்கு நாராயணிடம் பக்தர்களுக்கு வேண்டியது அவன் அங்கீகாரம் மட்டுமே என்பதையே குறிக்கிறாள் ஆண்டாள். 26 ஆவது பாடலில்  ‘சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே’ பறையின் சுகானுபவத்தையும் 27-ஆம் பாடலில் அப்பறைக் கிட்டியதின் கொண்டாட்டத்தையும் காட்டுகிறாள்.

ஆனால் 29-ஆம் பாடலில் ‘பறை’யையும் தாண்டி ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம் உமக்கே யாமாட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று’ என்று அடுத்த நிலையையும் காட்டுகிறாள்.

30-ஆவது பாடல் திருப்பாவையில் பலச்ருதி!

பொதுவாக கிருத்துவரகள் 25-ஆம் தேதி கிருஸ்மஸ் கொண்டாட முன்னேற்பாடாக 11-ஆம் தேதியிலிருந்து கிருஸ்மஸ் மரம் அலங்கரித்து வைப்பர். அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் முன்னேற்பாடுகள் தான் இந்த மார்கழிக் கொண்டாடங்களாக இருந்திருக்கலாம்.

செவ்வாய், டிசம்பர் 11, 2012

பாரதி! நீ மீண்டும் வா!


பாரதி…
எங்கு நீ சென்றாய் பாரதி…
இன்னும் உன் தேவை இருந்திடும் போதும்
எங்கு நீ சென்றாய் பாரதி…

பாட்டினில் பல்பொருளுரைத்தாய் – அதைக்
கேட்டிங்கு நடக்க யாருமில்லை!
நாட்டின் நிலைமையைச் சொல்வேன் – இதைக்
கேட்டு நீ ஆவனச் செய்வாய்…

பாருக்குள்ளே நல்ல நாடென்றாய் – மது
ஆறுக்குள்ளே தினம் மூழ்க வைத்தார்…

சாதிகள் இல்லையடி யென்றாய்
வீதிகள் தேறும் சங்கம் வைத்துச்
சாதிக்கொரு கொடி ஏற்றி வைத்தார்…

தனியொரு மனிதனுக்குணவில்லையேல்
ஜகத்தினையே நீ அழித்திடச் சொன்னாய் – ஆயின்
தாலியை விற்றும் உணவின்றி
பட்டினியால் தினம் உழவனைச் சாகவைத்தார்
தானியம் விளைவிக்கும் விளை நிலத்தைக்
காலி மனையெனக் கூறி விற்றுவிட்டார்…

மாமுனியோர் பலர் வாழ்ந்த நாடென்றாய்
காமுறுவோர் எலாம் சாமியாய் மாறி – அவர்
பேயென மாறிப் பொல்லாங்கு செய்துப்
பிணந்தின்னிச் சாத்திரம் ஓதுகின்றார்…

பஞ்சை மகளிரவர் தஞ்சமின்றி
மிஞ்சவிட மாட்டோமென்றாய் – அவர்
பிஞ்சென்றுப் பூமியில் பிறக்குமுன்பே
நஞ்சைக் கருவினில் வைத்துவிடும் – கடும்
நெஞ்சைக் கொண்டிங்கு வாழ்ந்து நின்றார்…

செந்தமிழ் நாட்டைச் சொல்கையிலே
செவிதனிலின்பம் பாயுமென்றாய் – இங்கோ
பைந்தமிழ் உயிரெனப் பொய்யுரைத்துப்
பள்ளிப் பாடத்திலேத் தமிழ் நீக்கிவிட்டார்….

மன்னும் இமயமென் மலையென்றாய் – நதி
மண்ணையும் விற்றுப் பொருள் – வெளி
மண்ணிலே அதைத் தேக்கி வைத்தார்…

சொந்த நாட்டிலேப் பரர்க்கடிமைச்
செய்திடமாட்டோமென்றே சூளுரைத்தாய் – இவர்
அந்நிய நிறுவனம் வளர்த்திடவேத் தினம்
அடிமை சாசனம் தந்து நிற்பார்…

காட்டும் இந்நிலை மாற்றிடவே
பாட்டுச் சாட்டையைத் தான் சுழற்றி
நாட்டைத் திருத்துமோர் சாரதி
மீண்டும் நீ வருவாய்! பாரதி!!!