புதன், செப்டம்பர் 30, 2020

மிதிவண்டியும் தென்னையும்

 மிதிவண்டியும் தென்னையும்


ஆட்டும் திசையில் ஆடும்
காட்டும் திசையில் ஏகும்
நேர்ப்பாதையில் நிமிர்ந்து செல்லும்
மிதிவண்டியும் தென்னையைப் போலே…
முதலில் கீழே சறுக்கும்
மிதித்து ஏறக் கீழ் தள்ளும்
பழகப்பழகக் கைக்கொள்ளும்
சீராய் ஏற்றம் கொள்ளும்…
க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்
நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்
வீண் ஆட்டம் போடாது வாழ – வெற்றிக்
கனியும் கையில் கிட்டும்!


ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

சுற்றம்

 சுற்றம்

தளிரா?மரமா?
தனி மனிதனா? சமூகமா?
விதை வீழ்ந்து
சிறு முளை விட்டு
நாற்றாகி, தளிராகி,
சேற்றில் கால் பரப்பிச் செடியாகி,
கிளை விரிந்துப் பெரு மரமாகி நின்றாலும்
தளிர் இல்லா மரத்தை யாரும் கண்டதுண்டோ?
ஆகையின்…
தளிரே மரத்தின் ஆதாரமோ?
எனில்…
பற்றும் கிளையின்றி தண்டின்றி
உணவளிக்கும் வேரின்றி
மரத்தின் துணையின்றி
தளிருக்கு வாழ்வு ஏது?
ஆகையின்…
மரமே தளிருக்கு ஆதாரமோ?
மரமின்றித் தளிரில்லை
தளிரின்றி மரமில்லை
அதுபோன்று
பிறப்பு முதல் இறுதிவரை
உருத்து காட்டும் உறவு வேண்டும்
பொறுப்பு கொண்டு காத்து நிற்கும்
சிறப்புக் கொண்ட சுற்றம் வேண்டும்
மனிதம் வாழ நற்சமுகம் வேண்டும்
சமூகத்தில் நல்ல மனிதன் வேண்டும்
ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதில்லை
சுயநலத்தால் சுற்றம் என்றும் வாழ்வதில்லை

வெள்ளி, செப்டம்பர் 18, 2020

சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி

சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி


காலை எழுந்து கடமையைச் செய்ய
மாடத்தில் தினமும் கூவிடுவாய்
மாலை நேரமாய் வீடுவந்து
சொந்தம் கூடி வாழச் சொல்லிடுவாய்

சோம்பித் திரிந்து வாடிடாமல்
உழைப்பைக் கொண்டே உலகைச் சுற்றி
உண்மைக் களிப்பைப் பெற்று வாழும்
சிறப்பை தினமும் காட்டிடுவாய்

படைப்பின் நியதிகள் மீறிடாமல்
அடைந்துக் கிடந்துத் தேங்கிடாமல்
சிறகை விரித்துப் பறந்து செல்லும்
விடுதலை வேட்கை விதைத்திடுவாய்

ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும்
வாட்டம் முகத்தில் காட்டி வைத்து
அழுது பொழுதைப் போக்காமல்
நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்

சின்னச்சின்ன குருவி நீயும்
சொல்லும் சேதிகள் ஏராளம்
எண்ணத்தில் அவற்றை நிலையிருத்தி
முன்னேற்றம் நாங்களும் கண்டிடுவோம்


வெள்ளி, செப்டம்பர் 04, 2020

பிள்ளைப்பருவம்

பிள்ளைப்பருவம்

பட்டிதொட்டி அனைத்திலுமே
பகைமை கொண்ட அனைவரையும்
முட்டிமோதி வெற்றி கொண்டு
பட்டம் சூடும் சூழ்ச்சியில்லை…
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
ஒட்டி கட்டி முடித்து வைத்து
கவலைக் கடலில் தத்தளித்துத்
துன்பம் கொள்ளும் நிலைமையில்லை...
தோல்விக்கு அஞ்சும் வீரமில்லை
வெற்றிக்கு வாடும் வாட்டமில்லை
அச்சம் நாணம் இச்சை இல்லை
எதம் இல்லையென்ற வாட்டமில்லை...
சென்றதை எண்ணி வருத்தமில்லை
வருவதை நாடி ஏக்கமில்லை
இன்றைய பொழுதின் இன்பமதை
இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை...
கள்ளம் கபடம் சூதுமின்றி
வெள்ளை உள்ளம் கொண்டு
பிள்ளைகள் வாழும் வாழ்க்கையைப்போல்
இன்பம் ஏதும் உலகிலில்லை!