வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும்

[வல்லமை இதழின் 271-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



ஒருபக்கம்…
மற்றோரின் வாழ்வு கண்டு
ஆற்றாமை கோபம் கொண்டு
விழுமியங்கள்யாவும் கெட்டு
அழுக்காறு முள்ளாய் வளரும்!

மறுபக்கம்…
எளியோரின் இன்னல் கண்டு – அவர்
துயர் நீக்கி வாழவைத்துக்
களிப்பூட்டி உய்விக்கும்
உயர் எண்ணம் பூவாய் மலரும்…

ஒரு நேரம்….
காலமதை வீணடித்துக்
களிப்பொன்றே வாழ்வென்று
முயற்சியென்ற சொல்கூட
முள்ளாய்க் குத்தும்….

மறு நேரம்….
புதுமுயற்சி பலசெய்து
பழமைகளைக் களைந்து
புத்துலகம் படைப்பதற்கு
உத்வேகம் பூவாய் மலரும்…


வாழ்க்கையென்ற செடியினிலே
வளர்வது முள்ளா? மலரா?
வளர்கையில் எதுவும் விளங்குவதில்லை!

சில நேரங்களில் ….
முள் கொடுத்த சுகானுபவமும்
மலர் கொடுத்த காயங்களின் வடுக்களும்
அனுபவ வானில் மின்னலாய்க் கீற்றுவிடும்!

திங்கள், ஆகஸ்ட் 24, 2020

மேன்மக்கள்

மேன்மக்கள்

[வல்லமை இதழின் 270-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


தங்க வீடு கட்ட வசதியில்லை – உலை
பொங்க அடுப்பைக் கட்டி வைத்திருப்பார்
உடுத்திடும் கந்தை ஆடையிலே
உறைபனி வெக்கைத் தாங்கிடுவார்….

புழுதிப் புயலாய்ப் போர்த்தினாலும்
அழுது புலம்பி வாடிடாமல்
இருக்கும் இடத்த்தைச் சீர்செய்து
வசிக்கும் கலைகள் தானறிவார்…

கொட்டும் இடிமழை பெய்தாலும்
கட்டிவெல்லமெனக் கரைந்திடாமல்
கூடி அனைவரும் சேர்ந்து நின்று – தம்
வாட்டம் தாமே தீர்த்துக்கொள்வார்….

கொடுமையில் பெரிது வறுமையென
வெறுமையில் வீணாய்ப் போக்கிடாமல்
இயற்கையோடியைந்து வாழ்ந்திருந்து
இன்பம் துய்த்து மகிழ்ந்திடுவார்…

ஏழ்மை ஏறி மிதித்தாலும்
கீழே கிடந்தது உழலாமல்
மீண்டு எழுந்து வாழ்வதனால்
இவரே இந்நாட்டின் மேன்மக்கள்!


[இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

சனி, ஆகஸ்ட் 15, 2020

ஏமாற்றம்

ஏமாற்றம்
[வல்லமை இதழின் 269-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


உப்பளத்தின் வெப்பத்திலே
கொப்பளம் கொண்ட கால்கள்!
அப்பளமாய்க் காய்ந்துவிட்டப்
பொத்தலான தேகம்…

சொத்துபத்து ஏதுமில்லை
உழைப்பு ஒன்றே சொந்தம்
ஓயாமல் உழைத்த போதும்
மழையில் கரைந்த உப்பாய்
ஊதியமும் கரைந்து போகும்
விலைவாசியெனும் முகிலால்...

கூடைக்கூடையாகத் திட்டம்
கூவிக்கூவிச் சொன்னார்
ஏழைக் கூடை ஏறவில்லை
ஏமாற்றம் மட்டும் மிச்சம்…

சனி, ஆகஸ்ட் 08, 2020

வளைவி சொல்லும் சரிதம்

வளைவி சொல்லும் சரிதம்
[வல்லமை இதழின் 268-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


கடைவீதி மாடத்திலே
குலுங்கிச் சிரிக்கும் வளைவி
சொல்லிடுமே வளையோசை
சிறப்பதனின் சரிதம்!

கருவினிலே வளர்கையிலே
தாயின் தியாகம் சொல்லும் – தூளி
தொட்டிலிலே உறங்குகையில் – அவள்
அண்மைக் காட்டிக் காக்கும்…

கைக்குழவிக் கைகளிலே
கருவளையாய்க் காக்கும்
சின்னஞ்சிறு சிறுமிகளின்
குறும்பில் துள்ளி நகைபுரியும்…

பெண் பூவாய் மலர்கையில் – அவள்
கைகளில் பூத்துக் குலுங்கும்
கன்னிப் பெண்ணின் கரங்களிலே
கணீரென்று ஒலிக்கும்…

மணமேடை மங்கைக் கையில்
மங்களமாய் முழங்கும்
மணவாளன் தொடுகையிலே
நாணம் கொண்டுச் சிணுங்கும்…

கட்டில் விளையாடலிலேக்
கைகொட்டிச் சிரிக்கும்
இடைஞ்சல் ஏதும் செய்திடாமல்
உடைந்து உயிர் நீக்கும்…

புதுபிறப்பு எடுத்து மீண்டுமவர்
பூங்கரங்கள் ஏறும்
இல்வாழ்க்கை இன்னிசையின்
இன்பமதைக் கூட்டும்…

உயிரற்றப் பொருளென்ற
உதாசீனம் வேண்டாம்
உணர்வுகளின் உரைகல்லாய்
உலவி நிற்கும் வளைவி….

திங்கள், ஆகஸ்ட் 03, 2020

கழு மேலமர்ந்த குரங்கு


கழு மேலமர்ந்த குரங்கு
[வல்லமை இதழின் 267-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 
 


 

ஜாதிமத அபிமானதாலும்
கையூட்டுப் பணத்திற்கும்
மதுப்போதை மோகத்திற்கும்
வெற்று விளம்பரத்திற்கும்
சிற்றின்பக் கவர்ச்சிக்கும்
கற்றகல்வித் தனைமறந்து
பட்டறிவும் தானிழந்து
மக்களாட்சித் தந்துவைத்த
வாக்குரிமையை விற்றுவிட்டு
பாடுப்பட்டுக் கிட்டிய கனியமுதை
எட்டி தூரம் எறிந்துவிட்டு
தோலைமட்டும் வைத்துக்கொண்டு
செய்வதறியாதுத் திகைத்து நின்று
கூழ்முனைக் கழுமரம்
மேலமர்ந்த குரங்கெனக்
கலங்கிநின்று உழலுகின்றோம்.