திங்கள், ஆகஸ்ட் 24, 2020

மேன்மக்கள்

மேன்மக்கள்

[வல்லமை இதழின் 270-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


தங்க வீடு கட்ட வசதியில்லை – உலை
பொங்க அடுப்பைக் கட்டி வைத்திருப்பார்
உடுத்திடும் கந்தை ஆடையிலே
உறைபனி வெக்கைத் தாங்கிடுவார்….

புழுதிப் புயலாய்ப் போர்த்தினாலும்
அழுது புலம்பி வாடிடாமல்
இருக்கும் இடத்த்தைச் சீர்செய்து
வசிக்கும் கலைகள் தானறிவார்…

கொட்டும் இடிமழை பெய்தாலும்
கட்டிவெல்லமெனக் கரைந்திடாமல்
கூடி அனைவரும் சேர்ந்து நின்று – தம்
வாட்டம் தாமே தீர்த்துக்கொள்வார்….

கொடுமையில் பெரிது வறுமையென
வெறுமையில் வீணாய்ப் போக்கிடாமல்
இயற்கையோடியைந்து வாழ்ந்திருந்து
இன்பம் துய்த்து மகிழ்ந்திடுவார்…

ஏழ்மை ஏறி மிதித்தாலும்
கீழே கிடந்தது உழலாமல்
மீண்டு எழுந்து வாழ்வதனால்
இவரே இந்நாட்டின் மேன்மக்கள்!


[இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

2 கருத்துகள்: