சனி, ஜூன் 24, 2017

துளிர்துளிர்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வழுவல என்பதால்
பழையதை ழித்தோம்
பழமையைக் களையவில்லை
புதியனக் கொண்டுவந்தோம்
புதுமையைப் புகுத்தவில்லை

விலை போன மனிதர்களால்
கலை குலைந்து தலை தாழ்ந்து
சுயம் இழந்து பாழ்பட்டு நின்றோம்
உயர் தொழில் விடுத்து
செயற்திறம் மறந்து
உயிர் மட்டும் கொண்டு வாழ்கின்றோம்

வீண்ஜம்ப வார்த்தை வீசும் வித்தகனில்
கூன்போட்டு கால்பிடிக்கும் அடிமைகளில்
வெள்ளித்திரை வலம்வந்த நாயகனில்
கொள்கையற்று குழுமாறும் வஞ்சகனில்
தலைவர்களைத் தேடுகின்றோம் - அவர்
தகுதிகளைப் பார்க்கவில்லை - வெற்று
கூட்டத்தைப் பார்த்திருந்தோம்
கொள்கைகளைப் பார்க்கவில்லை

வெள்ளி பல அள்ளித்தரும்
வெளிநாட்டு வேலை,
எட்டடுக்கு மாடிதன்னில்
குடியமர்த்த வழிசெய்யும் குலமகள்,
சுற்றிபலர் அடிபணியும் ஆடம்பரம்
பெற்றிங்குத் தந்திடவே வழிசெய்யும்
பட்டமதைப் படித்திடவே
பாடசாலை தேடுகின்றோம்
சகமனிதன் தனைக் காத்து
சமுதாயம் உயர்த்துமொரு
வாழ்க்கைக்கல்வி கற்பதற்கு 
ஒரு நாளும் விழையவில்லை


சக மனித உணர்வுகளை
சமுதாய விழுப்பங்களை
இழைந்தளிக்கும் கல்விதனை
இளைய சமுதாயம் பெற
இன்றேனும் முயன்றிடுவோம்

அவர் மனதில்
அதிகார போதை நீக்கி
எதிர்கால அச்சம் தவிர்த்து
கதிர்நெல் போல் பலனளிக்கும்
மதியூகத் தலமைதனைத் 
துளிர்விடச் செய்திடுவோம்.