வெள்ளி, நவம்பர் 30, 2012

பதிமூன்றாவது ராசி (தொடர்ச்சி…)சென்ற பதிவில் 13-ஆவதாக ஒரு ராசி இருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்டு, ஆஃபியூகஸ்-இன் கதையைக் கொடுத்திருந்தேன். அதற்கும் பதிமூன்றாவது ராசிக்கும் என்ன சம்பந்தம்? பதிமூன்றாவதாக ஒரு ராசி இருக்கிறதா? என்ற கேள்விகள் உங்களுக்குத் தோன்றக் கூடும்.
கெப்லர் நட்சத்திரக் கூட்டத்தைக் கொண்டு வரைந்த ஆஃபியூகஸ்-இன் படம்

ஒரு சிலரைப் பொறுத்தவரை பதிமூன்றாவதாக ஒரு ராசி இருக்கிறது. [ஏன், பதினான்காவதாகவும் ஒரு ராசி இருக்கிறது அதைப்பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்]. இப்பொழுது பதிமூன்றாவது ராசியைப் பார்ப்போம்…

நம் இந்திய ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒருவரின் ராசி என்பது அவர் பிறந்த நட்சத்திரம் எந்த ராசியில் அமைந்திருக்கிறதோ அதைப் பொறுத்தது. வான்வெளியில் பல்வேறு நட்சத்திரங்கள் (நட்சத்திரம் என்பதைவிட நட்சத்திரக் கூட்டம் என்று கூறலாம்) இருந்தாலும் சில நட்சத்திரக் கூட்டங்கள் நேராக சூரியன் மற்றும் மற்றக் கோள்கள் தென்படும் பாதையில் அமைந்துள்ளன.   பூமியின் சுழற்சிப்பாதையில் சூரியன், சந்திரன் மற்றும் மற்ற கோள்கள் வான்வெளியில் தெரியும் பாதையில் அமைந்துள்ளவையே அந்த 27 நட்சத்திரங்கள். இந்த 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளாகப் பிரித்து ஒவ்வொரு ராசியிலும் 2¼ நட்சத்திரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அமைந்த ராசிகளுக்கு அந்த கால மக்கள் அவற்றில் கற்பனையாக உருவம் அமைத்து அவற்றை அப்பெயரினாலேயே அழைத்து வந்தனர். அவை தான் ஆடு போல தென்பட்ட Aries என்கிற மேஷம், காளை போல தென்பட்ட Taurus என்கிற ரிஷபம், இரட்டையராகத் தென்பட்ட Gemini என்கிற மிதுனம், நண்டு போல் தென்பட்ட Cancer என்கிற கடகம், சிங்கம் போல் தென்பட்ட Leo என்கிற சிம்மம், பெண் படுத்திருப்பது போல் தென்பட்ட Virgo என்கிற கன்னி, தராசு போல் தென்பட்ட Libra என்கிற துலாம், தேள் போல் தென்பட்ட Scorpius என்கிற விருச்சிகம், வில் வீரன் போல் தென்பட்ட Sagittarius என்கிற தனுசு, மான் அல்லது நீர்யானை போல் தென்பட்ட Capricorns என்கிற மகரம், குடம் போல் தென்பட்ட Aquarius என்கிற கும்பம், மீன் போல் தென்பட்ட Pisces என்கிற மீனம் ஆகியவை.

இந்திய ஜோதிடத்தில் பிறந்த தினத்தில் (நேரத்தில்) சந்திரனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமே  ஒருவரின் பிறந்த நட்சத்திரமாகவும் அந்த நட்சத்திரம் இருக்கும் ராசி சின்னமே அவரது ராசியாகவும் குறிக்கப் படுகின்றன.

ஆனால், மேற்கத்திய ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒருவரின் ராசி பருவ நிலையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வருடத்தின் 365/366 நாட்களும் 12-மாதங்களாகப் பிரிக்கப்படுகின்றன. Vernal equinox என்று அழைக்கப்படும் மார்ச் 22-ஆம் தேதியிலிருந்து ராசிகள் துவங்குகின்றன. மார்ச் 22 முதல் ஏப்ரல் 21 வரை பிறந்தவர்களின் ராசி Pisces எனப்படும் மீனத்திலிருந்து ராசிச் சக்கரம் துவங்குகிறது.

பொதுவாக பூமியின் சுழற்சியில் வான்வெளியில் மொத்தமாக 360 டிகிரியில்  தெரியும் இந்த 12 ராசிகளும் ஜோதிடத்தைப் பொறுத்தவரை சரிசமமாக 30 டிகிரிகளில் கணக்கிடப்பட்டாலும் உண்மையில் அப்படி இருப்பதில்லை. சில சற்று பெரிதாக அதிக டிகிரி கோணமும் சில சற்று குறைவாகவும் இருக்கின்றன. உதாரணமாக கடக, துலா ராசியின் கோணம் மிகவும் குறைவாக இருக்கிறது (கடக ராசியில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 9 வரை, 19 நாட்கள் தான் இருக்கும்) மீனம், சிம்மம் போன்றவற்றின் கோணம் அதிகம் (மீனராசியில் சூரியன் இருப்பது மார்ச் 12 முதல் ஏப்ரல் 18 வரை). இதற்கு பூமியின் சுழல் பாதை வட்டமாக இல்லாமல் நீள்வட்டமாக இருப்பதும் ஒரு காரணம்.

அதே நேரத்தில் பூமியில் இந்த கிரகங்களும், சூரியனும் சந்திரனும் கடக்கும் பாதையில் மேற்கூறிய 12 ராசி சின்னங்களைத் தவிர வேறு சில நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கின்றன.

மேற்கத்திய கணக்குகளைப் பொறுத்தவரை, சூரியன் நவம்பர் 23 ஆம் தேதி துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நேராக வருகிறது. இதற்கு அடுத்த ராசி தனுசு; இதற்கு சூரியன் வரும் டிசம்பர் 18ஆம் தேதியன்று வரும் [இந்த வருடம் லீப் வருடம் என்பதால் ஒரு நாள் முன்னதாகவே வந்துவிடும்; சாதாரண வருடங்களில் இந்தக் கணக்குகள் ஒரு நாள் பின்னர் வரும்].

எனவே நவம்பர் 23-இலிருந்து டிசம்பர்-18 வரை விருச்சிக ராசியாகவும் இதில் பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்காரர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

ஆனால் உண்மையில் சூரியன் இந்த விருச்சிக ராசியில் நவம்பர் 29-ஆம் தேதி வரைதான் இருக்கும். நவம்பர்-30 முதல் டிசம்பர்-18 வரை சூரியன் ஆஃபியூகஸ் என்ற பாம்புப்பிடாரனில் இருக்கும். இந்த ஆஃபியூகஸ் நட்சத்திரக் கூட்டம் விருச்சிகத்திற்கும் தனுசுக்கும் இடையில் இருக்கிறது.

இதையும் ராசிச் சக்கரத்தில் சேர்க்க வேண்டும் என்று சிலர் கூறிவந்தனர்/கூறிவருகின்றனர். நீல் டிக்ரேஸ் டைசன் என்பவர் 'Universe Down to earth' என்ற புத்தகத்தில் இதைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்.

ஆனால் ஜோதிடர்களைப் பொறுத்தவரை ஆஸ்க்லிபியஸ் விருச்சிக ராசியின் ஒரு நீட்சியாகவே கருதுகின்றனர். [ஆஸ்க்லிபியஸ் கதையில் அவர் தேளை மிதித்து அடக்கியதாகப் படித்தோம் அந்த தேள் தான் விருச்சிக ராசி.] மேலும், இந்த ராசிக்கென்றுத் தனியாக செயற்பாடுகளும் இல்லை எனவே இவற்றை ஏற்க முடியாது என்று மறுப்புத் தெரிவிக்கிறார்கள்.
இன்று நவம்பர் 30 ஆம் தேதி சூரியன் ஆஃபியூகஸ் ராசியில் நுழைகிறது. அதாவது, பூமியிலிருந்து ஆஃபியூகஸ் நட்சத்திரக் கூட்டம் தெரியும் பாதையில் சூரியன் வருகிறது.

வியாழன், நவம்பர் 29, 2012

பதிமூன்றாவது ராசி


ஜோதிடம் அறிந்தவர்கள் மட்டுமல்ல சாதாரணமாக யாரைக் கேட்டாலும் மொத்தம் எத்தனை ராசிகள் என்ற கேள்வியைக் கேட்டால் உடனே பன்னிரண்டு என்று பதில் கூறுவர்.

மொத்தம் 12 ராசிகள் தானே! பதிமூன்றாவதாக ஒரு ராசி இருக்கிறதா என்ன?

முதலில் ஒரு கதையைப் பார்ப்போம்…

க்ரேக்கர்களின் மருத்துவக் கட்வுளின் பெயர் ஆஸ்கிலிபியஸ். ஆஸ்கிலிபியஸ்-இன் தந்தை க்ரேக்கக் கடவுள் அப்பல்லோ; தாய் கோரோனிஸ் (சிலர் அர்சினோய் என்று குறிப்பிடுவர்). க்ரேக்கப் புராணத்தின் படி, கோரோனிஸ், அப்பல்லோ மூலம் கருவுற்றிருந்த பொழுது, அப்பல்லோவை ஏமாற்றி இஸ்சிஸ் என்ற மனிதனுடன் கள்ளத் தொடர்பு கொண்டாள். அப்பல்லோ-விடம் நற்பெயர் எடுக்க நினைத்த காக்கை இந்தச் செய்தியை அவருக்குத் தெரியப் படுத்தியது. கோபத்தில் அப்பல்லோ கோரோனிஸ் மேல் அம்பு எய்தினார். ஆனால், அவளுடன் குழந்தை அழியாமல் இருக்க அவள் சிதையிலிருந்து அக்குழந்தையைப் பிரித்தெடுத்து அதை சிரான் என்ற குதிரைமனிதனிடம் (centaur) கொடுத்தார்.

[அப்பல்லோ-விடம் அவர் மனைவி பற்றி தகவல் சொன்னால் பரிசு கிடைக்கும் என்று என்னிய காகத்திற்கு, கோள் சொன்னதற்காக, அதுவரை வெள்ளை நிறத்திலிருந்த அதை கருப்பாக மாறும்படி சபித்தது தனி கதை].

சிரான் ஆஸ்கிலிபியஸ்-ஐ தன் மகனாக வளர்த்து அவனுக்கு வேட்டையையும் மருத்துவத்தையும் கற்பித்தாள். ஆஸ்கிலிபியஸ் மருத்துவத்தின் மூலம் அனைவரின் நோயையும் தீர்த்து வைத்து வந்தார். மேலும், இறந்தவர்களை உயிர்பிப்பதற்காக பல ஆராய்ச்சிகலையும் செய்து வந்தார்.

ஒரு நாள் க்ரேடே என்ற இடத்தில் மைனோஸ் மன்னனின் மகன் க்ளூகஸ் ஒரு தேன் ஜாடியில் விழுந்து மூழ்கினான். [இனிப்புத் தன்மைக்குக் காரணமான க்ளூகோஸ்-இன் பெயர் காரணம் இதுதான்]. மூர்ச்சையான க்ளூகஸ்-இன் உடலைச் சோதித்துக் கொண்டிருக்கும் பொழுது, இரண்டு பாம்புகள் அவ்வுடலைத் தீண்ட வந்தன. ஒரு பாம்பைத் தன் கைத்தடியால் கொன்ற ஆஸ்கிலிபியஸ், அடுத்த பாம்பு அதன் வாயில் இருந்த மூலிகையை க்ளூகஸின் வாயில் வைக்க, க்ளூகஸ் உயிர் பிழைத்தான். அந்தப் பாம்பை பிடித்து அதன் வாயிலிருந்து ஆஸ்கிலிபியஸ் மூலிகையை எடுத்துக் கொண்டான்.

[சிலர், ஆஸ்கிலிபியஸ் க்ரேக்க பெண் கடவுள் ஏதென்ஸ் மூலம் பெண் அரக்கி மெதூஸாவின் (மெதூஸாவைப் பற்றி அரக்க நட்சத்திரம் பதிவில் எழுதியுள்ளேன்) ரத்தத்தைப் பெற்றதாகவும் அதிலிருந்து இந்த மூலிகையைத் தயாரித்ததாகவும் கூறுவர். மெதுஸா-வின் இடது பக்க நரம்பில் பாயும் இரத்தம் விஷம்; வலது பக்கத்தில் பாயும் இரத்தம் அமுதம் என்று நம்பப் படுகிறது]

ஒரு முறை தீஸஸ்-இன் மகன் ஹிப்பொலிடஸ் அவன் தேரோட்டி ஔரிகா-வினால் தள்ளிக் கொல்லப்பட்டான். ஆஸ்கிலிபியஸ் தன் கையில் இருந்த மூலிகையால் ஹிப்போலிடஸின் மார்பில் மூன்று முறைத் தொட்டு அவனை உயிர்பித்தார்.  இது போல் தினம் தினம் தன்னிடம் வரும் இறந்தவர்களைத் தொடர்ந்து உயிர்பித்து வந்தார்.

அதேபோல், பூமித்தாயான ஜியா ஆரியனைக் கொல்ல தேளை அனுப்பினார். தேள் ஆரியனைக் கொட்ட, ஆரியனை ஆஸ்கிலிபியஸ் உயிர்ப்பித்தார். மீண்டும் கொட்டும் எண்ணத்தில் வந்த தேளை தன் காலால் ஆஸ்கிலிபியஸ் மிதித்தார்.

நிலமை இப்படியே இருக்கவில்லை. பாதாள உலகைச் சேர்ந்த இறப்புக் கடவுளுக்கு (எமன்!!!) தன்னிடம் வரும் இறந்தவர்களின் எண்ணிக்கைத் தினம் தினம் குறைவதைக் கண்டு கவலை ஆரம்பமாகத் துவங்கியது. இதற்குக் காரணம் ஆஸ்கிலிபியஸ் இறந்தவர்களை உயிர்பிப்பது தான் என்பது புரிந்தது. இப்படியே இருந்தால் தன்னிடம் வருபவர்கள் குறைந்து தனக்கு வேலை இல்லாமல் யாரும் தன்னை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தான். இதற்குத் தீர்வு காண அவன் தன் சகோதரனான ஜீயஸ்-ஐ அனுகினான். ஜீயஸ் தன் வஜ்ராயுதத்தால் (ஜீயஸ் நம் இந்திரனுக்கு இணையானவன்; ஜீயஸின் ஆயுதம் இந்திரனின் ஆயுதத்தைப் போலவே இடியும் மின்னலும் தான்) ஆஸ்கிலிபியஸை தாக்கினான்.

தன் மகன் மேல் ஜீயஸ் வஜ்ராயுதத்தைப் பிரயோகித்ததை அறிந்த அப்பல்லோ ஜீயஸின் மகன்களான மூன்று சைக்லோப்ஸ்-களைக் கொன்றார். அப்பல்லோ-வின் கோபத்தைத் தணிக்க ஜீயஸ், ஆஸ்கிலிபியஸை என்றும் நிலையாக இருக்கும் வகையில் வானத்தில் நட்சத்திரக் கூட்டங்களில் அவன் பாம்பைப் பிடித்துத் தேளை மிதிக்கும் உருவத்தை வடிவமைத்து அதற்கு ஆஃபியூகஸ் (பாம்புப் பிடாரன்) என்று பெயரிட்டார்.

இந்தக் கதைக்கும் பதிமூன்றாவது ராசிக்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

செவ்வாய், நவம்பர் 27, 2012

சீனாவின் வினோத முயற்சி


சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டுமே எல்லைப் பிரச்சனை இல்லை.

ஜப்பான், தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பூடான், தென்கொரியா, மலேசியா, ப்ருனாய், வடகொரியா ஆகிய நாட்டின் பகுதிகளிலும் உரிமை கோரிவருகிறது. தென் சீனக்கடலில் ஸ்பார்ட்லீ தீவுகள் என்ற தீவுக் கூட்டம் இருக்கிறது. கிட்டத்தட்ட 30000 தீவுகளை உள்ளடக்கிய மூன்று பகுதிகளாக இது உள்ளது. இவற்றுக்கு சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, ப்ருனாய் ஆகியவை உரிமைக் கொண்டாடுகின்றன. இத்தீவுகளின் உரிமையைக் கொண்டே இக்கடலின் சர்வதேச எல்லைத் தீர்மானிக்கப் படும் என்பதால் இவற்றின் உரிமையை எந்த நாடும் விட்டுக் கொடுக்க முடியாது.

சமீபத்தில் இதற்கு எளிதாக ஒரு தீர்வுகாண சீனா ஒரு குறுக்கு வழியைக் கையாண்டது. அது என்னவென்றால் சீனப் பாஸ்போர்ட்டில் சீன தேசத்தின் வரைபடத்தை அச்சிட்டது. இதனால் சீனப் பாஸ்போர்ட்டில் தன் நாட்டு விசாவிற்காக மற்ற நாடுகள் இடும் கையொப்பமும் அச்சும் இந்த வரைபடத்தை அங்கீரித்தது போல் இருக்க வேண்டும் என்பதே.

இதைக் கண்ட ஜப்பான், இந்தியா, பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. வியட்நாம் சீனாவின் நேச நாடு என்றாலும் அதுவும் தன் நாட்டுத் தூதர் மூலம் இதைக் கண்டித்து குறிப்பு அனுப்பியுள்ளது.

பிலிப்பைன்ஸ் இதற்கு எதிர்வினையாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு நில்லாமல் தன் நாட்டுப் பகுதியை மற்ற நாட்டின் பகுதியாகக் காட்டும் பாஸ்போர்ட் தன் நாட்டின் மீதான உரிமை மீறலாகக் கருதப்பட்டு அதை வைத்திருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவும் சீனாவை இவ்விஷத்தில் கண்டித்துள்ளது. சர்வதேச ரீதியில் புதிதாக பிரச்சனை கிளப்ப வேண்டாம் என்று சீனாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், இதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத் துறை இந்த படங்கள் புதிதாக உரிமையைக் கோரவோ அல்லது எந்தத் தனிப்பட்ட தேசத்திற்கோ எதிரானதல்ல என்றும் எனவே சம்பந்தப்பட்ட நாடுகள் அறிவு பூர்வமான  முடிவையே எடுக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

சீனா தன்னிச்சையாக எந்த படம் வேண்டுமானாலும் போடுமாம் மற்ற நாடுகள் அறிவு பூர்வமான முடிவை எடுக்க வேண்டுமாம்….

இந்தப் பிரச்சனையை கையாள தற்போது இந்தியா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இந்த பாஸ்போர்ட்-களில் விசா கொடுக்கும் பொழுது அச்சில் இந்தியப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தை இடுவது என்பது தான்.

சீனாவும் இந்தியா இடும் இந்த அச்சை ஏற்கவும் முடியாது; புறக்கணிகவும் முடியாது என்பதால், சீனாவின் தன்னிச்சையானப் போக்கிற்கு வெறும் பெயரளவு எதிர்ப்பு என்பதை விட, இது சரியானத் தீர்வு என்றேத் தோன்றுகிறது. 
 

வெள்ளி, நவம்பர் 23, 2012

கேகயம்56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.கேகயம் அல்லது கைகேயம் என்பது வடமேற்கு பஞ்சாபில் காந்தார தேசத்திற்கும் பியஸ் நதிக்கும் இடையில் உள்ள பகுதி.

கைகேயத்தைப் பற்றிப் பல புராண இதிகாசங்களில் குறிப்புகள் உள்ளன.

ரிக் வேதத்தில் கைகேயர்கள் பருஸ்னி (தற்போதைய ராவி நதி) நதிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்களாகக் குறிக்கப் படுகின்றனர். விதேகத்தைச் சேர்ந்த ஜனகரின் சமகாலத்தவராகக் குறிப்பிடப்படுவர் கைகேய மன்னர் அஸ்வபதி. சதபத ப்ரமானத்திலும் சாண்டோகிய உபநிஷத்திலும் கூட கைகேய மன்னர் அஸ்வபதி குறிப்பிடப்படுகிறார். ஜனகரைப் போலவே அஸ்வபதியும் அரசராக இருந்தாலும் யோகியாகவும் கருதப்படுகிறார். ப்ரமாணங்களில் இவர் அர்ஜுன ஔபவேசி, கௌதமர், சத்யாக்ஞ பௌலௌஷி, மஹாசல ஜாபாலா, புதிலா அஸ்வதரஷ்வி, இந்த்ரத்யும்ன பல்லவேயர், ஞான சர்கரக்‌ஷ்யர், ப்ராசின்ஷலா, அவுபமன்யவர், அருணி உத்தாலகர் ஆகியோருடன் நடந்த உரையாடல்களால் குறிப்பிடப்படுவதன் மூலம் அவர்களின் சமகாலத்தவராக தெரிகிறது.

ராமாயணத்தின் தசரதனின் மனைவியும் பரதனின் தாயுமான கைகேயி நாம் அனைவரும் ஏற்கனவே அறிவோம். பெயரிலிருந்தே அவர் கைகேய நாட்டைச் சேர்ந்தவர் என்று அறியமுடியும். அந்யந்தண ராமாயணத்தில் கைகேயி அஸ்வபதியின் மகளாகக் குறிப்பிடப்படுகிறார். ஜனகரின் சமகாலத்தவர் என்பதால் இதற்குச் சாத்தியம் உண்டு. வால்மீகி ராமாயணத்தில் கைகேய ராஜ்ஜியம் சௌதாமா (தற்போதைய சரேஞ்ஜஸ்) நதியைத் தாண்டி, ராஜக்ரஹம் அல்லது கிரிவ்ரஜ நகரத்தைத் தலைநகராகக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இது ஜீலம் நதிக்கரையில் அமைந்த கிரிஜக் என்ற ஜலால்பூராக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் (குறிப்பக கன்னிங்ஹாமின் Ancient Geography of India- என்ற புத்தகத்தில்) கருதுகின்றனர்.

பாகவதத்தைப் பொறுத்தவரை கைகேயர்கள் யயாதி-யின் நான்காவது மகன் அனு-வின் வம்சத்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மத்ர தேசத்தைப் பற்றி எழுதும் பொழுது அனுவின் வம்ச வழியைக் குறிப்பிட்டிருந்தேன். அதை மீண்டும் பார்ப்போம்..

யயாதியின் நான்காவது மகன் அனு; இந்த அனுவின் வம்சம் பின் வருமாறு:

அனு
சுபநரன்
காலநரன்
ச்ருஞ்ஜயன்
ஜனமேஜயன் (பரீக்ஷித்-இன் மகன் ஜனமேஜயன் வேறொருவன்)

இந்த ஜனமேஜயன்-இன் பேரன் மஹாமன்னின் (மஹாசலனின் மகன்) மகன் உசிநரன்.

இந்த உசிநரனின் முதல் மகன் சிபி; சிபியின் மகன்கள் நால்வர். அவர்கள் (1)வ்ரஸ்த்ரபன் (2) சுதிரன் (3) மத்ரன். சிபியின் நான்காவது மகன் ஆத்ம-தத்வ கேகயன் என்று பாகவதம் கூறுகிறது.

ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் அன்வர்கள் என்பது யயாதியின் மகனான இந்த அனு-வின் வம்சமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இவர்கள் இரானிய வம்சமாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.

விஷ்ணு புராணம், கைகேயர்கள் விதிஸா நதியைத் (தற்போதைய ஜீலம் நதி) தாண்டி கைகேயம் அமைந்ததாகக் குறிப்பிடுகிறது. பெரும்பாலான் வரலாற்று ஆசிரியர்கள் கைகேயம் பாகிஸ்தானின் ஜீலம், ஷாபூர், குஜரத் பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மஹாபாரதத்தில் கைகேயர்கள் இருபிரிவினராக கௌரவர், பாண்டவர் சார்பில் போரிட்டனர். வ்ரிஹத்க்ஷத்ரன் தலைமையில் ஐந்து சகோதரர்கள் பாண்டவர் சார்பில் போரிட்டனர் (வேறு சில புராணங்களில் இவர் பெயர் த்ருஷ்டகேது என்றும் குறிப்பிடப்படுகிறது). இவர்கள், பாண்டவர்களைப் போலவே பங்காளி சகோதரர்களால் நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். பாண்டவர்கள் கௌரவர்களுக்கு எதிராக யாரையெல்லாம் தங்களுடன் சேர்க்கலாம் என்று யோசிக்கும் பொழுது க்ருஷ்ணர் முதலில் குறிப்பிட்டது இந்த ஐவரையே. இவர்களை நாட்டைவிட்டுத் துரத்திய பங்காளி சகோதரர்கள் துரியோதனனை ஆதரித்தனர். இவர்கள் கர்ணன் படைத்தலைமை வகித்தபோது அவனுக்கு உதவியதாகவும் அப்பொழுது அர்ஜுனனால் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மஹாபாரதத்தில் குரு வம்சத்தில் பல அரசர்களின் மனைவியராகவும் கைகேயப் பெண்கள் குறிப்பிடப்படுகின்றனர். குறிப்பாக புரு-வின் மகன் ஜனமேஜயனின் கொள்ளுப்பேரன் ஸர்வபௌமன் கைகேய இளவரசி சுந்தா-வைக் கவர்ந்து வந்துத் திருமணம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ப்ரதீபனின் தாத்தா பீமசேனனின் மனைவி குமாரி-யும் கைகேயத்தைச் சேர்ந்தவரே.

தவிர, பாண்டவர்கள் வனவாசம் செய்த விராட தேசத்தின் மஹாராணி சுதேஷனா-உம், அவளுடைய அண்ணன் கீசகனும் மற்ற 105 சகோதரர்கள் உபகீசகர்களும் கைகேயர்களே. (கீசகன் கொல்லப்பட்டதும் அவன் உடலுடன் சைரிந்திரியை (த்ரௌபதி) ’சதி’யாக எரிக்க வேண்டும் என்று வற்புறுத்திய 105 உபகீசகர்களையும் பீமன் கொன்றதாகக் குறிப்பிடப்படுகிறது). ஆனால், இவர்களைக் குறிப்பிடும் பொழுது சூத கைகேய மன்னரின் புதல்வர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களின் தாய் மால்வி (மால்வ தேசத்தைச் சேர்ந்தவர்).

அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின் பொழுது காந்தாரத்தின் அம்பி குமாரன் அலெக்ஸாண்டருடன் பணிந்ததாகப் படித்துள்ளோம். அதற்குக் காரணமாகக் கூறப்படுவது அலெக்ஸாண்டர் கைகேயத்தை வென்று அதைக் காந்தாரத்துடன் இணைத்து அதை அம்பி-யின் பொறுப்பில் விடுவார் என்று கூறுகின்றனர். அப்பொழுது கைகேய நாட்டை ஆண்டவர் மன்னர் பர்வதேஸ்வரர்; இவரது மற்றொரு பெயர் போரஸ். இவருக்கும் அம்பிக்கும் இருந்த பகையை அலெக்ஸாண்டர் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. [போரஸ்-ஐ த்ரிகர்தத்தின் கடோச் வம்சமும் சொந்தம் கொண்டாடுகிறது.] பின்னர், போரஸ் சாணக்கியரின் ஆலோசனையின் பேரில் சந்த்ரகுப்தருக்கு உதவி அவர் நந்தர்களை அகற்றி மௌரிய வம்சம் உருவாக உதவினார். நந்தர்களின் மந்திரிகளில் ஒருவரான ராக்ஷசனால் போரஸ் (சந்திரகுப்தருக்கு பதிலாக தவறுதலாகக்) கொல்லப்பட்டதாகக் கூறுவர். போரஸ்-இன் மகன் பெயர் மலையகேது என்று கூறுவர்.

கொங்கணப் பகுதிகளிலும் கைகேயர்கள் இருந்ததாக சில குறிப்புகள் உள்ளன. முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலைக் கோயிலின் தலவரலாறு அக்கோவில் கைகேய மன்னன் ’கார்த்தவீர்யாஜுன’னால் புணருத்தாரணம் செய்யப்பட்டதாகக் கூறுகிறது. கார்த்தவீர்யார்ஜுனன் கொங்கணம் பகுதியைச் சேர்ந்தவன். அவன் பரசுராமரால் கொல்லப்பட்ட்தை நாம் புராணங்களில் படித்திருப்போம்.

வியாழன், நவம்பர் 22, 2012

இந்திய-சீனப் போர் (தொடர்ச்சி…)


இதன் முதல் பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்திய-சீனப் போருக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. எல்லைப் பிரச்சனை முக்கிய காரணமாகக் கூறப்பட்டாலும் வேறு சில காரணிகளும் இதற்குக் காரணமாக இருந்தன.

முதலில் எல்லைப் பிரச்சனையைப் பார்ப்போம்…

இந்திய சீன எல்லையின் மூன்று பகுதிகளைச் சென்ற பகுதியில் பார்த்தோம், இதில் மேற்குப் பகுதி எல்லை 1834-இல் ரஞ்சித் சிங் தலைமியிலான சீக்கிய கூட்டமைப்பு லடாக் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் உருவானது. 1846-ஆம் ஆண்டு சீக்கியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளைக் கைப்பற்றினர். தொடர்ந்து, ஆங்கிலேயர்கள் சீனாவுடன் எல்லைகளை வரையறுக்கப் பேச்சு வார்த்தை நடத்தினர். காரகோரம் கணவாயும் பாங்-ஆங் ஏரியும் இதன் இரு எல்லைகளாக வரையறுக்கப்பட்டன. ஆனாலும், அக்சய் சீனா பகுதி எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதில் உடன்படிக்கை எட்டவில்லை (இன்றளவிலும் இந்தப் பகுதியை இரு நாடுகளுக்கும் சொந்தம் கொண்டாடுகின்றன). 1865-ஆம் ஆண்டு ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் மன்னர், ஆங்கில ஆய்வாளர் ஜான்சன் தலைமையில் ஒரு குழுவை எல்லைப் பகுதியை வரையறுக்க நியமித்தார். ஜான்சன், அக்சய் சீனா பகுதியை காஷ்மீரத்துடன் இணைத்து ஜான்சன் கோடு என்னும் எல்லையை வரையறுத்தார். சீனா இந்த ஜான்சன் கோட்டை நிராகரித்தது. ஆங்கில அரசும் ஜான்சனின் இந்தக் கோட்டை அதிகாரபூர்வமாக ஏற்கவில்லை. 1892-ஆம் ஆண்டு சீனா, காரகோரம் கணவாய் பகுதியில் லடாகுக்கும் சீனாவின் ஸிங்சியாங்-க்கும் இடையில் இருந்த சர்வதேச பட்டு வழி என்று கூறப்படும் வழியில் எல்லை-கற்களை நட்டது. ஆனால், இதை ஆங்கில அரசு ஏற்கவில்லை.

ஆனால், 19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் அச்சுறுத்தலால் அக்சய் சீனா பகுதியைச் சீனாவிற்குச் சொந்தமாகக் காட்ட புதிய எல்லையைத் தீர்மாணித்தது. இந்தக் கோட்டிற்கு மெக்கார்ட்டி-மெக்டொனால்ட் கோடு என்று பெயர்.

ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலைமை மாறியது. 1911-ஆம் ஆண்டு சின்காய் புரட்சியைத் தொடர்ந்து சீனாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேலும், 1918-இல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து அக்சய் சீனா பகுதி சீனாவிடம் இருப்பது தனக்கு எந்தப் பயனையும் தராது என்றுணர்ந்த பிரிட்டிஷ்  அரசு மீண்டும் ஜான்சன் கோட்டைத் தூசி தட்டி எடுத்து அதை அதிகாரபூர்வமான எல்லையாக நிர்ணயித்தது. சீனா இதை ஏற்கவும் இல்லை; அதே நேரம் இதை மறுத்து அறிக்கை எதுவும் தரவும் இல்லை. பிரிட்டிஷ் அரசியல் நிலைக்கேற்ப இந்த எல்லையை 10-12 முறை மாற்றிவந்துள்ளது.

1954-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு ஜான்சன் எல்லைக் கோடே அதிகாரபூர்வமான எல்லை என்று உறுதிபடக் கூறினார். சீனா எப்பொழுதும் போல் இதை உறுதி செய்தோ, மறுத்தோ எதுவும் கூறவில்லை. மேலும், சீனப் பிரதமர் பஞ்சசீல ஒப்பந்தம் செய்து இந்தியாவுடன் எந்த எல்லைப் பிரச்சனையும் இல்லை என்றும் இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள எந்தப் பகுதியையும் சீனா உரிமைக் கொண்டாடாது என்றும்  அறிவித்தார். ஆனால், 1956-57 இல் அக்சய் சீனா வழியாக ஸிங்ஸியாங்-ஐயும் திபெத்தையும் இணைக்கும் சாலையைக் கட்டியது. இதில், இந்திய அரசின் உளவுத் துறைக்கு வெட்கக் கேடான விஷயம் என்னவென்றால், இந்த சாலை சீன வரைபடத்தில், 1957-ஆம் ஆண்டு, வெளியிடப்படும் வரை இந்தியாவிற்கு சீனா கட்டிய இந்தச் சாலைப் பற்றி எதுவும் தெரியாது என்பது தான்.

அடுத்து கிழக்குப் பகுதி எல்லை. 1826-இல் நடைபெற்ற முதல் பர்மிய போரில் மணிப்பூர், அஸாம் பகுதிகளை ஆங்கில அரசாங்கம் கைப்பற்றியது. வடகிழக்கு எல்லைப்பகுதியின் முகவராகச் செயல்பட்ட தளபதி ஜெங்கின்ஸ், 1847-இல் தவாங்-ஐ திபெத்தைச் சேர்ந்ததாக அறிவித்தார். அதேபோல், 1872-இல் திபெத்துடன் பிரிட்டிஷ் தளபதி செய்து கொண்ட உடன்படிக்கையின் படியும் தவாங் திபெத்தைச் சேர்ந்ததாகக் குறிக்கப்பட்டது. ஆனால், 1912-ஆம் ஆண்டு பிரிட்டனின் இந்திய அதிகாரி மெக்மோகன் தற்போதைய எல்லை தவாங்-இற்கு தெற்கிலிருந்து மேற்கு நோக்கி பூடானின் உகல்குரி மலை எல்லை வரை உள்ளதாக வரையறுத்தார். சிம்லா-வில் 1913-இல் நடந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சீனா பின்னர் இந்த எல்லைக்கு மறுப்பு தெரிவித்தது. இந்தியா-வின் கருத்துபடி, இமயமலை பன்னெடுங்காலமாக இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லையாக இருப்பதால் அதுவே இந்தியாவின் தற்போதைய எல்லை என்பதாகும். ஆனால், சீனாவின் கருத்துப்படி இந்தப் பிரச்சனைக்குரிய பகுதிகள் பண்பாட்டு அடிப்படையில் திபெத்துடன் இணைந்தவை என்பதே ஆகும். ஆனால், திபெத்தைப் பொறுத்தவரை அது ஆரம்பத்திலிருந்தே அது மெக்மோஹன் எல்லையை ஏற்றுக் கொண்டுள்ளது.

நேருவை பொறுத்தவரை அவர் சீனாவைத் தன் எதிரி நாடாக நினைக்கவில்லை. நேரு-வின் இடதுசாரி சார்பு நிலை அனைவரும் அறிந்ததே. என்னதான் கூட்டு சேரா கொள்கையைக் கொண்டிருந்தாலும் ரஷ்யாவுடன் நல்ல உறவு கொள்வதையே விரும்பினார். மேலும், அமெரிக்கா ரஷ்யாவையும் அதன் ஆதரவு ஆஃப்கானையும்  எதிர்க்க பாகிஸ்தான் சார்பு நிலையை எடுத்தது நேரு-வை ஆசியாவின் மற்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை நம்பும் நிலைக்குத் தள்ளியது. சீனா-வில் கம்யூனிஸ்ட் அரசு இருப்பதால் அமெரிக்கா-விற்கு எதிர்நிலையை எடுத்து இந்திய சார்பு நிலையை எடுக்கும் என்று நம்பினார். இதன் விளைவு தான் ‘இந்தி-சீனி பாய் பாய் (இந்திய சீன சகோதரத்துவம்)’ என்ற கோஷம்.

1954-ஆம் ஆண்டு பெய்ஜிங்-இல் நடந்த இந்திய-சீன வியாபார மற்றும் நல்லுறவு ஒப்பந்த மாநாட்டில் கலந்து கொண்ட நேரு எல்லைப் பிரச்சனையை எழுப்பவில்லை. காரணம், இந்தியா முதலில் இந்தப் பிரச்சனையை எழுப்பினால் சீனா பேச்சு வார்த்தைக்கு அழைக்கும்; அதனால், இந்தியா சில பகுதிகளை விட்டுக் கொடுக்க நேரிடும். அதே நேரம், சீனா இந்த பிரச்சனையை ஆரம்பித்தால் இது ஏற்கனவே முடிந்த பிரச்சனை என்று கூறிவிடலாம் என்று எண்ணியதே.

சீனா 1951-இல் திபெத்தில் நுழைந்து அதை ஆக்ரமித்தது. தொடர்ந்து, 1959 ல் லாசா-வில் நுழைந்து தலாய்லாமாவை கைது செய்ய முனைய அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். சீனா திபெத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வரை அது தனி நாடாகவே இருந்து வந்துள்ளது. இப்பொழுதும், ஹிமாசலத்தில் தரம்ஷாலா-விற்கு அருகிலுள்ள மெக்னால்ட் கஞ்ச் பகுதியில் தலாய்லாமா தலைமையில் ‘வெளியில் அமைந்த அரசு’(Government in exile) -ஆகச் செயல்பட இந்தியா அனுமதித்துள்ளது. இதுவும் சீனா இந்தியா மீது கோபம் கொள்ள ஒரு காரணம்.

அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்தாலும் நேருவும் சரி, பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனனும் சீனா இந்தியாவைத் தாக்கும் அளவிற்கு வளிமை மிகுந்ததாக நினைக்கவில்லை. காரணம், அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியாவை ஆதரிக்கும் என்று அவர்கள் எண்ணியதே. இதன், காரணமாக சீனா எல்லையில் படைகளைக் குவித்தபோது இவர்கள் ‘முன்னோக்கிய கொள்கை’ என்று இந்தியப் படைகளை அவற்றுக்கு எதிராகக் குவித்ததே. ஆரம்பத்தில், சீனாவும் தான் குவித்தப் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிப்ரவரி, 1962 இல் கூட இந்தியா சீனத் தாக்குதலை உணரவில்லை. இந்திய உள்துறை அமைச்சராக இருந்த சாஸ்த்ரி, சீனா இந்தியப் பகுதிகளிலிருந்து வெளியேறவில்லை என்றால் கோவாவில் நடந்தது போன்ற ராணுவ நடவடிக்கையை நடத்த வேண்டியிருக்கும் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்.

1959-60 ஆம் ஆண்டு கிழக்குப்பகுதியின் தளபதியாக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.பி.பி.தோர்ட் சீனா தாக்குதலை உணர்ந்து ஒரு அறிக்கையை அரசிடம் சமர்பித்தார். ஆனால், மேனன் அந்த அறிக்கையை பிரதமரின் அலுவலகத்திற்குத் தகவலாகக் கூட அனுப்பவில்லை. அதற்கு நேர்மாறாக சீனத் தாக்குதலைக் கூறிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மேலும், சீனாவின் பொருளாதார நிலையும் ரஷ்யாவுடன் அதற்கு ஏற்பட்ட பிணக்கும் தைவானின் சீனத் தாக்குதலும், இந்திய அரசை சீனா தன்னைத் தாக்காது என்றே எண்ண வைத்தன. மேலும், இந்தியா பாகிஸ்தான் தாக்குதலைச் சமாளித்தது போல் இதையும் சமாளிக்கலாம் என்ற எண்ணமும் இருந்தது.

பொதுவாக, இந்தியத் தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுவது சீனா ஏமாற்றியது என்பதே. ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. இந்திய அரசும் நிலைமையைச் சரியாக கணிக்காமல் அலட்சியமாக இருந்தது. ஆனால், சீனா போருக்கு ஆரம்பத்திலேயேத் தயாராக இருந்தது. மலைப்பகுதிகளில் போரிடத் தேவையானப் பொருட்களை அது ஏற்கனவேத் தயாராக வைத்திருந்தது. ஆனால், இந்தியப் படையோ தரைப்பகுதியில் நீண்ட அனுபவம் பெற்றிருந்தாலும் மலைப்பகுதிகளில் போரிடத் தயார் நிலையில் இல்லை. அவர்களுக்குத் தேவையான உடைகளும் தகவல் தோடர்பு சாதனங்களும் கூட கிட்டவில்லை. மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்படுவது இந்திய விமானப்படை இதில் உபயோகப்படுத்தப்படவில்லை என்பதே. அதற்குக் காரணம், இந்திய உளவுத் துறை இந்தியா விமானப்படையை பிரயோகித்திருந்தால் சீனா இந்திய நகரங்களைத் தாக்கும் என்று கூறியதே.

சீனா போரை ஆரம்பிக்கவும் முடிவுக்குக் கொண்டுவரவும் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டதும் அதன் வெற்றிக்குக் காரணம். அக்டோபர், 1961 இலேயேப் படைகளை எல்லையில் குவித்திருந்தாலும், அமெரிக்காவும் ரஷ்யாவும் ’க்யூபா ஏவுகணைப் பிரச்சனை’யில் மோதும் நிலைமை வரும் வரைக் காத்திருந்தது. 1962-அக்டோபர் முதல் வாரத்தில் க்யூபா-வில் ரஷ்யாவின் ஏவுகணை இருந்ததாக சிஐஏ குறிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களுக்குள் கொண்டிருந்த பனிப்போர் முற்றி உலகப் போராக வெடிக்குமோ என்று அனைத்து நாடுகளும் பயந்து கொண்டிருந்த நேரத்தைச் சரியாகத் தேர்ந்தெடுத்தது. இதனால், வேறு எந்த நாடும் இந்தியாவிற்கு உதவ முன்வரவில்லை.       

அதேபோல் சீனா போர் நிறுத்தத்தை அறிவித்த நேரமும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. நேரு-வின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் நவம்பர் 15 தேதிகளில் இரண்டு கடிதங்கள் கென்னடிக்கு எழுதியதைக் குறிப்பிடுகிறார். [இந்த இரண்டு கடிதங்களும் வகைப்படுத்தப்பட்டவை  (classified) என்பதால் வெளியிடப்படவில்லை]. இதில் நேரு அமெரிக்காவிடமிருந்து 12 சூப்பர் சானிக் சீதோஷண போர் விமானமும், இரண்டு பி-47 குண்டு விமானங்களைக் கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேதியும் வெற்றி பெற்று 200 கி.மீ. இந்தியாவில் நுழைந்த சீனா திடீரென நவம்பர் 20-ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவித்து 21-ஆம்   படைகளை புதிய எல்லையின் 20 கி.மீ. திரும்பப் பெற்றதும் கவனிக்கத் தக்கது.
19.11.1962 அன்று சீனாவின் வசம் இருந்த பகுதிகள் (மஞ்சள் நிறத்தில்)

போர் தோல்வியைத் தொடர்ந்து அரசு லெஃப்டினெண்ட் ஜெனரல்  ஹெண்ட்ரஸன் ப்ரூக்ஸ், பிரிகேடியர் பி.பகத் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்து இதன் காரணங்களை அலசியது. ஆனால், அந்த அறிக்கை-யும் வெளியிடப்படவில்லை/வகைபாடற்றதாக மாற்றப்படவில்லை [Not yet declassified]. 2007-08 இல் நாடாளுமன்றத்தில் தேசிய நலன் கருதி இதை வெளியிட எழுப்பப்பட்டக் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மறுத்துள்ளார். சென்ற மாதம் அக்டோபர் 21-ஆம் தேதி பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் மீண்டும் இவ்வறிக்கையை வகைப்பாடற்றதாக மாற்றக் கோரிக்கை விடுத்தார். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்றாலும் மக்களுக்கு இந்தத் தோல்விக்கானக் காரணங்கள் இன்னமும் தெரியப்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை.

போரில் தோல்வியடைந்ததும் 1963-ஆம் ஆண்டு மாநிலங்கள் அவையில் உரையாற்றிய நேரு, ‘படைத் தலைவர்கள் தங்கள் தேவைக்காக பல முறை எங்களிடம் வந்ததையும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எழுதியதையும் நினைத்துப் பார்க்கிறேன்… என்ன நடக்கும் என்பதை அறிய முடிந்திருந்தால், நாங்கள் வேறு ஏதாவது செய்திருப்போம்… சீன ஆக்ரமிப்பிலிருந்து இந்தியா கற்றது என்னவெனில் இன்றைய உலகில் பலமில்லா நாடுகளுக்கு இடமில்லை என்பது தான்… நாம் நாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்று உணர்ச்சிகரமாக சோகத்துடன் கூறினார்.

தற்போது, நாட்டின் பகுதிகளைப் பிடிப்பதை விட சந்தைகளைக் குறி வைத்துப் பல நாடுகளும் முனைந்துள்ளன. ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களும் இப்படித்தான் வந்தனர். நாடும் முறையும் மாறியிருந்தாலும் அவர்களின் நோக்கம் மாறியிருக்குமா என்பதும் அதற்கு முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது முக்கியம்.
                
நேரு கூறியது போல் நாம் இன்னமும் கற்பனை உலகில் தான் இருக்கிறோமா அல்லது யதார்த்தம் புரிந்திருக்கிறதா என்பது பெரிய கேள்வி தான்…