புதன், நவம்பர் 07, 2012

புகைப்பனி

தில்லியில் அக்டோபர்-நவம்பர் மாதங்கள் வந்தாலே குளிர்காலம் துவங்கிவிடும். வெயில் காலத்திலிருந்து குளிர்காலம் மாறும் சமயத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்து பின் பருவநிலை மாறுவது இயல்பாக நடக்கும். ஆனால் மழை பெய்யாமல் இருந்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். காரணம் புழுதி தான். மழைப் பெய்தால் இந்த புழுதி அடங்குவதோடு காற்றும் வீசும் இது புழுதி காற்றுவெளியில் நிலையாக நிற்க வைக்காமல் அடித்துச் சென்றுவிடும்.

இந்த வருடம் இதுவரை மழைப் பொழியவில்லை. இதன் காரணமாக சென்ற இரண்டு வாரங்களாக மூடுபனி மூடியது போல் பனியும் புழுதியும் சேர்ந்த புகைப்பனி (ஆங்கிலத்தில் smog என்று அழைக்கிறார்கள்) மூடியுள்ளது.

இந்த புகைப்பனி மூடுபனி, புழுதி, மாசி இவற்றுடன் வாகனங்கள் வெளியிடும் புகையும் கலந்ததாகும். சென்ற வருடங்களை விட இந்த வருடம் இது அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வானிலை மையம் கூறும் காரணம் நீலம் புயல். புயல் மையம் கொண்ட இடம் நோக்கி மழை மேகங்கள் சென்றுவிட்டதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு மழைப் பொழியவில்லை என்றும் குளிர் ஆரம்பித்து விட்டதால்  தட்பவெப்பம் கனமாகி புழுதி காற்றுவெளியிலேயே சுற்றுவதாகத் தெரிவித்துள்ளது. விழாயன் அல்லது வெள்ளியன்று காற்று அடிக்கத் துவங்கும் வரை இது நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், தொடர்ந்து தீபாவளி வருவதால் புழுதியும் மாசும் மேலும் நீடிக்கும் என்று தான் தோன்றுகிறது.

இதற்கு தில்லியின் கட்டுப்பாடற்ற மாசும் ஒரு காரணம் ஆகும். தில்லியில் பதியப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 72 லட்சத்திற்கும் மேல். அவற்றில் CNG-இல் இயங்குபவை வெறும் 4.5 லட்சம் மட்டுமே. இதைத் தவிர மேலும் 1300 வாகன்ங்கள் தினமும் புதிதாக சேர்கின்றன. இதைத் தவிர 15000 வெளி மாநில டீசல் வண்டிகள் தில்லியைக் கடக்கின்றன. இவற்றைத் தவிர தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் வெளியேற்றும் மாசும் அடக்கம். இவை வெளியிடும் புகையில் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, க்லோரொஃப்லோரோ கார்பன் (ஏசி, குளிர்சாதன பெட்டிகள் வெளியிடுபவை), ஈயம், நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு (வெப்ப சக்தி நிலையங்கள் வெளியிடுபவை) ஆகியவை அடங்கும்.

ரயில்வே துறையும் இந்த பனிமூட்டத்தால் ரயில்களை இயக்க முடியாமலும் அதே நேரத்தில் பண்டிகைக் காலம் என்பதால் ரயில்களை ரத்து செய்ய முடியாமை என்பதை விட புதிய ரயில்களும் இயக்க வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதால் இருதலைக் கொள்ளியாக விழிக்கிறது.

இந்தப் புகைப்பனி மக்களின் ஆராக்கியத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக கண் எரிச்சல், இருமல், தொண்டைப்புண், தலைவலி, வாந்தி, கண் வலி, காது வலி, சளி, தோல் அரிப்பு, அலர்ஜி ஆகியவற்றை அதிகமாக்கியுள்ளது. இருந்தாலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் என்று பார்த்தால் ஆஸ்த்துமா நோயாளிகள் தான். காற்று சுழற்சி மிகவும் குறைவாகவும் காற்றில் தூசியும் புகையும் கலந்திருப்பதால் அவர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஃபோர்டிஸ் மருத்துவமனை மற்றும் மற்ற பிற மருத்துவமனைகளில் ஆப்தமாலிஜி (கண் மருத்துவம்) துறையில் நோயாளிகளின் வருகை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். எங்கள் வீட்டிலும் என் மகளுக்குக் கண் எரிச்சல், எனக்குத் தொண்டை எரிச்சல் வந்துள்ளது.

மருத்துவர்கள் இதற்குத் தீர்வாக நீர் அதிக அருந்தவும், நார்சத்து அதிகமுள்ள காய்-பழங்களை உண்ணவும் பரிந்துரைக்கின்றனர்.

இதற்கிடையில் நேற்று உச்ச நீதிமன்றம் தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை மாசுக்கட்டுப்பாட்டில் தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ இயற்கை மனது வைத்து காற்றோ மழையோ வந்தால் தான் நிலைமை ஓரளவாவது சீரடையும் என்றுத் தோன்றுகிறது.

11 கருத்துகள்:

 1. ஹய்யோ.. சென்னையிலயும் நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகிட்டுத் தான் வருது. இங்கயும் இப்படி ஒரு விளைவு வந்துடுமோன்னு லேசான பயம் வரத்தான் செய்யுது. இயற்கை மனது வைத்து மழை அல்லது காற்று வந்து நிலைமையை சீராக்கட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லியின் நிலைமைச் சீர்கேட்டிற்கு தட்பவெப்பத்தைக் காரணமாகக் கூறுவது ஒரு திசைத் திருப்பல் தான் என்றும் சுற்றச்சூழல் சீர்கேடே முக்கிய காரணம் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறுகிறது.

   ஆனால் மழை அல்லது காற்று நிலைமையை ஓரளவாது சீர்செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

   சென்னையில் சாலைப் பராமரிப்பு முக்கிய பிரச்சனை என்றால் இங்கு இது போன்ற பிரச்சனைகள்...

   வருகைக்கு நன்றிகள்.

   நீக்கு
 2. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  பதிலளிநீக்கு
 3. மாசுக்களினால்தான் காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
  தீபாவளிக்கு பட்டாசுகளையும் நன்கு கொளுத்துவோம்.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீபாவளியில் விளக்குகள் ஏற்றுவதை விட பட்டாசே முன்னிலை படுத்தப்பட்டுவிட்டது.

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

   நீக்கு
 4. ஒரே முறை டில்லி வந்தோம். மே மாதம் ! ஹும் :((

  எனக்கு அக்டோபர், நவம்பரில் தான் அங்கே வர மிக விருப்பம்,. உங்க பதிவை படிச்சால் இந்த பீரியடில் வரவும் பயமா இருக்கு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதாரணமாக அக்டோபர் நவம்பர் நன்றாகத்தான் இருந்து வந்தது. ஆனாலும், தில்லிக்கென்று தனியாக சீதோஷண நிலைக் கிடையாது என்று கூறுவர். அக்கம்பக்கத்தில் இருக்கும் மாநிலங்களின் தட்பவெப்பத்தைப் பொறுத்தே மாறும்.

   தில்லி வர சரியான காலம் என்றால் பிப்ரவரி-மார்ச் தான். ஆனால் அப்பொழுது குழந்தைகளுக்குத் தேர்வுக்குத் தயார் செய்யும் நேரமாக இருக்கும். குளிர்தாக்குப் பிடிக்கக் கூடியவர்கள் டிசம்பரில் வரலாம். ஜனவரியில் குளிரும்/பனியும் அதிகமாக இருக்கும்.

   வருகைக்கு நனறிகள் மோகன்

   நீக்கு
 5. இயற்கையை நாம் அழிக்காது பாதுகாத்தாலே நல்ல பலன் நமக்கு கிடைக்கும் என்பதே என் கருத்து.
  தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் கூறியது மிகவும் சரி!

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்!

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

   நீக்கு
 6. //அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ இயற்கை மனது வைத்து காற்றோ மழையோ வந்தால் தான் நிலைமை ஓரளவாவது சீரடையும் என்றுத் தோன்றுகிறது.//

  இயற்கை அன்னை நமக்கு சீக்கிரம் விடிவு காலம் வரச் செய்யட்டும்...

  கண் எரிச்சலோடு தான் இதையும் எழுதுகிறேன்! :)

  பதிலளிநீக்கு