புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 18, 2013

மெல்ல நடக்கும் இந்தியா



மார்க் துல்லி – கல்கத்தாவில் பிறந்து இங்கிலாந்தில் கல்வி பயின்ற ஆங்கிலேயர். பி.பி.சி.யின் தெற்காசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர். தற்போது புது தில்லியில் பத்திரிகையாளராக இருப்பவர்.

ஜில்லியன் ரைட் – இவர் துல்லியின் தோழி. இந்திய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர்.

இந்த இருவரும் இணைந்து பல புத்தகங்களை எழுதியுள்ளனர். ‘No Full Stops in India’, ‘The Heart of India’ ஆகிய புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை.

2002-ஆம் ஆண்டு பென்குவின் புத்தக நிறுவனம் இவர்கள் எழுதிய ‘India in Slow Motion’ என்ற புத்தகத்தை வெளியிட்டது.

புத்தகத்தின் முன்னுரையில் இந்திய அதிகார வர்கம் இந்திய மக்களுக்காக எதுவும் செய்யாமல் பிரிட்டிஷ் அரசின் அதிகார இடத்தைப் பிடித்துக் கொண்டது என்பதை புந்தேல்கண்ட் பகுதியில் ஊர்சா கிராமத்தில் நடந்த சம்பவத்தை வைத்து ஆரம்பிக்கிறார். உலக வங்கியின் அறிக்கைபடி 1980-ஆம் ஆண்டிலிருந்து வெகு வேகமாக முன்னேறிவரும் நாடாகக் குறிக்கப்படும் அதே நேரத்தில் தனி மனித வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்றாகக் குறிக்கப்படுவதைக் சுட்டுகிறார். இந்த மெதுவான வளர்ச்சி வேகத்திற்கான காரணத்தைக் கூறுகையில் - பல்வேறு தரப்பினர் இந்தியாவின் இந்த மந்த வேக வளர்ச்சிக்குக் காரணமாக மதம், கலாச்சாரம், தட்பவெட்பம், அந்நிய ஆட்சி, போட்டி-பொறாமை போன்றவற்றைக் கூறினாலும் – மோசமான அரசாட்சி என்பதையே குறிப்பிடுகிறார். 1999-ஆம் ஆண்டு தேசிய முன்னேற்ற கவுன்சிலில் பிரதமர் வாஜ்பாயின் உரையில் ‘மக்கள் அதிகார வர்கத்தை சேவை செய்பவர்களாக் எண்ணாமல் சுரண்டல்காரர்களின் கைக்கூலிகளாகவே காண்கின்றனர்; ஊழல் ஒரு குறைவான் அபாயத்தில் அதிக வருவாய் கொடுக்கும் நடவடிக்கை ஆகிவிட்டது. அதிகாரிகள் அடிக்கடி ஒரு வரைமுறையன்றி மாற்றப்படுவது வேலை நெறிமுறைகளைக் குலைப்பதுடன் நேர்மையான அதிகாரிகளின் ஆர்வத்தையும் குலைக்கிறது. அதிகாரிகளிடம் நேர்மையும் நிறைவும் எதிர்பார்க்கும் வேளையில் அரசியல் அதிகாரம் தன்னையும் சுயசோதனைச் செய்ய வேண்டியதும் உள்ளது’ என்று கூறினார். ஆனால், மூன்று ஆண்டுகளில் மாயாவதியுடன் கூட்டு சேர்ந்து ஆறாறு மாத ஆட்சி ஒப்பந்தம் செய்ததையும் அவர் முதல் பத்து நாட்களிலேயே 200 அதிகாரிகளை மாற்றல் செய்து முரண்பட்டதைக் குறிப்பிட்டு புத்தகத்தில் மோசமான அரசாட்சி சம்பவங்களைக் கூறுவதைவிட அதன் பின்னணியை விளக்க முற்படுவதாகசும் கூறுகிறார்.

இதில் அவர் 10 அதிகாரங்களில் வெவ்வேறு சம்பவங்களைக் காட்டுகிறார். அவை..
1.     ராமர் மீட்டெடுப்பு (Reinvention of Rama)
இதில் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பும் அப்பகுதியிலேயே வசிக்கும் மக்களின் மனநிலையையும் பற்றி விவரிக்கிறார்.
2.     தவறானத் தொண்டு (Misplaced Charity)
இது குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றியது. ’ருக்மார்க்’  சேனல்-4 இல் வெளியிட்ட விளம்பரத்தில் ஆசிய நிறுவனங்கள்  (குறிப்பாக இந்திய நிறுவனங்கள்)  தங்கள் கார்பெட்  தயாரிப்பில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதையும் ருக்மார்க் முத்திரை வழங்கப்பட்ட கார்பெட்கள் குழந்தைகள் கைப்படாதவை என்றும் விளம்பரம் படுத்தியது. இதில் ருக்மார்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இடாத நிறுவனங்களும் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தாவிட்டாலும் அவர்கள் இவ்விளம்பரத்தால் பாதிக்கப்படுவதைப் பற்றி விவரித்துள்ளார்
3.     தலைமுதல் வால்வரை ஊழல் (Corruption from Top to Tail)
sting operation மூலம் ஜெயா ஜெட்லிக்கும் (ஜார்ஜ் பெர்ணாடஸின் ஜனதாதளக் கட்சித் தலைவர்), பங்காரு லக்ஷ்மனுக்கும்  (அச்சமயத்தில் பாஜகவின் கட்சித் தலைவர்) லஞ்சம் கொடுத்த மாத்யு சாமுவேல் என்ற தெகல்காவின் நிருபருடன் நடத்திய சந்திப்பும், ராஜஸ்தானில் (ஜனவாத் மாவட்டத்தில் அருணாராய்-ஆல் நடத்தப்பட்ட மக்கள் இயக்கம் தகவலறியும் இயக்கமாக மாறியதையும் (பின்னர் தகவலறியும் சட்டமாக பரிணாமம் பெற்றது) பற்றி விவரித்துள்ளார்.
4.     மாற்றியமைக்கப்பட்ட பீடங்கள் (Altered Altars)
கோவா-வின் மத அரசியலை ப் பற்றி புரிந்து கொள்ளும் வகையில் உள்ள கட்டுரை. குறிப்பாக கிருத்துவ தேவாலயங்கள் இந்திய  கோவில்களைப் போல் இயங்குவதை விளக்குகிறார்.
5.     சைபராபாத் உருவாக்குதல்  (Creating Cyperabad)
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவால் முன்னெடுக்கப்பட்ட இ-கவர்னன்ஸ் கொள்கையும் ஆனால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்கள் சுயமுன்னேற்றத்திற்காக அத்திட்டத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.                                                                                    
6.     சூஃபிகளும் வெற்று நம்பிக்கையும் (The Sufiis and the plain faith)
ஹசரத் நிஜாமுதின் என்ற சூஃபி தர்காவின் பிரபலத்தையும் அது பிரபல படுத்தும் மத நல்லிணக்கம் ஆகியவற்றையும் விளக்கும் அதே வேளையில், தப்லீக்-களின் இஸ்லாத்தைத் தூய்மை படுத்தும் இயக்கம் வளர்ந்து வருவதுடன் அது வஹாபி  முறைக்கு அடிக்கோலிடுவதையும் விளக்குகிறது.
7.     விவசாயத்தின் வெகுமதி (Farmers' reward)
காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையும் அதே நேரம் பாஜக-வின் குஜராத்தில் பாக்கு தொழிலிளும் அதே நிலைமை ஏற்பட்ட பொழுது மத்திய அரசின் கொள்கையையும் பின்னணியில் இருந்த WTO ஒப்பந்தத்தையும் ஆனால், 70-களில் நடந்தது போல் விவசாயிகள் புரட்சி நடக்கச் சாத்தியமில்லாததையும் விவரிக்கிறது
8.     இரு சகோதரர்களின் கதை (A tale of two brothers)
தன் நண்பர் சந்த் பக்ஸ் சிங்-ஐப் பற்றியும் அவர் இந்திராகாந்தியின் ஆட்சியைப் பற்றி சில விமர்சனங்களைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ்சிங்-இன் இடத்திற்கு (தினேஷ் சிங் தனக்கும் இந்திராகாந்திக்கும் இருந்த ‘உறவை’ ஊடகங்களில் கசிய விட்டதால் இந்திரா அவரை நீக்க வேண்டியிருந்ததாம்) அதற்காக அவர் தம்பி வி.பி.சிங்-ஐ உத்திரபிரதேச முதல்வராக ஆக்கியதையும் பின்னர் வி.பி.சிங் பிரதமராக ஆகியதையும் அப்பொழுது வி.பி.சிங் சந்த் பக்ஸ் சிங்-இற்கு உதவ மறுத்ததையும் சந்த் பக்ஸ்-இன் ஃபரீதாபாத் தொகுதியை (தேவிலால் ஒத்துக் கொண்ட பொழுதும்) வி.பி.சிங் தான் எடுத்துக் கொண்டதையும் பற்றி விவரிக்கிறார்.
9.     மழைநீர் சேமிப்பு (Water Harvesting)
2000-ஆம் ஆண்டு ஊடகங்களால் பரப்பப்பட்ட குஜராத் வறட்சியும் அதைப் போக்க சௌராஷ்ட்ரா பகுதியில் ராஜ்சம்தியாலா பகுதியில் சிற்றணைகளால் நீர் சேமிப்பு வெற்றிகரமாக நடந்ததையும் அரசு அதை மற்ற கிராமங்களும் பின்பற்ற ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற சிற்றணைகளுக்கு நிதி வழங்க முடிவெடுத்ததையும் ஆனால் அதிகாரிகளின் ஊழலாலும் நர்மதா அணை அரசியலாலும் இது தோல்வியடைந்ததையும் விவரிக்கிறார்.
10.   இழந்த சொர்கம் (Paradise Lost)
காச்மீர் பிரச்சனையும் அதில் இந்திய அரசு செய்த சொதப்பல்களையும் பின்னணியில் போலீஸின் ஊழலையும் விவரிக்கிறார்.

முடிவுரையாக 2002-ஆம் ஆண்டு நடந்த கோத்ரா சம்பவம், குஜராத் கலவரம் அதில் அரசியல் அதிகார வர்கத்தின் கையாளாகாதத் தனத்தையும் விமர்சிக்கிறார். முன்னாள் சி.பி.ஐ தலைவர் ராகவன் அந்நிய ஆட்சியின் நீட்சியாகவே அரசியல் அதிகார வர்கம் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறார். வி.பி.சிங் தான் நேர்மையாக இருந்தாலும் தன் கட்சி வெற்றி பெற மற்றவர்களின் நேர்மையற்ற நிதி தேவையாக இருக்கிறது என்று குறிப்பிடுவதை காட்டுகிறார். இதிலிருந்து பொதுவாக இந்தியாவின் அரசியல் நிலைமையை நமக்கு விளங்குகிறது. இந்தியாவின் மெதுவான வேகத்திற்கு இதன் ஜனநாயகத்தையே சில குறை கூறுவதை சுட்டும் வேளையில் அது இல்லாத அண்டை நாடுகளின் வளர்ச்சி இதையும் விட மோசமாக இருப்பதையும் காட்டி அதை மறுக்கிறார். இந்தியா ஒரு transitional நேரத்தில் இருப்பதையும் அதுவே அதன் வளர்ச்சியின் தளர்ச்சிக்குக் காரணம் என்றும் கூறுகிறார்

தன் அனுபவத்தில் சந்தித்தவைகளை வைத்து இந்தியாவின் நிகழ்வுகளையும் அதன் மறுபக்கத்தையும் நகைச்சுவையுடன், அதே நேரம் மற்ற ஆங்கில எழுத்தாளர்கள் போல் குறைகளை மட்டுமேச் சுட்டிக்காட்டி கிண்டலடிக்காமல் (இதற்கு அவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்ததும் காரணமாக இருக்கலாம்) அதே நேரம் நம்மிடமுள்ள முரண்பாடுகளை நயம்பட எடுத்துக் கூறியும் எழுதி இந்தியாவின் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டுகளை அதன் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தும் கூறுகளை எடுத்துக் கூறுவதே இந்தப் புத்தகம்.

மொத்தத்தில் பல்வேறு இந்திய மாநிலங்களைப் பற்றியும் அவற்றின் அரசியல் நிலைமையையும் புரிந்து கொள்ள உதவும் நல்ல புத்தகம்!

[இந்த புத்தக விமர்சனம் இன்று திண்ணை மின்பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது]

புதன், அக்டோபர் 31, 2012

இந்திரா – சக்திப் போராட்டம்


அக்டோபர் 31 ஆம் தேதி….

சரியாக இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர்களாலேயே அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம்.

இந்திரா காந்தி-யின் பன்முகத் தலைமையைத் தேசம் கண்டிருந்தாலும் இன்று பொதுமக்கள் அவரை நினைவு கூறுவது என்பது 1977-இல் அவரால் கொண்டு வரப்பட்ட ’நெருக்கடி நிலை’ அறிவிப்பு தான்.

இந்திரா-வின் இந்த நினைவு நாளை ஒட்டி எழுத்தாளர் நயன்தாரா சஹகல், தான் எழுதிய இந்திரா-வின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் ‘Indira Gandhi : Tryst with Power’  என்ற பெயரில் 1982-ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தை  30 ஆண்டுகள் கழித்து மீண்டும் மறு வெளியிடு செய்துள்ளார்.

முதலில் யார் இந்த நயன்தாரா சஹகல் என்று பார்ப்போம்.

ஜவஹர்லால் நேரு-வின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட்-இன் இரண்டாவது மகள் தான் இந்த நயன்தாரா சஹகல். 9 நாவல்களும் 8 பிற புத்தகங்களும் எழுதியுள்ள இவருக்கு வயது 85. நேரு குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும் இவர் அவர்களை எப்பொழுதும் விமர்சித்தே வந்துள்ளார். அதிலும் குறிப்பாக ‘நெருக்கடி நிலை’யில் அதற்கு எதிராகப் போராடியும் உள்ளார். 1980-இல் மீண்டும் பிரதமரான இந்திரா முதலில் செய்த செயல் இவரது வெளிநாட்டு தூதர் பணிநியமனத்தை நீக்கியது தான். அந்த அளவு இந்திரா-வை இவர் எதிர்த்துள்ளார்.

1974-ஆம் ஆண்டு ’தெற்காசிய தலைமைப்பண்பு’ என்ற மாநாட்டிற்கு இந்திரா காந்தியின்  மனநிலை மெல்ல மெல்ல சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்வதை இந்த மாநாட்டின் கட்டுரையில் தெரிவித்தக் கருத்துகள் பின்னர் விளக்கமாக எழுதப்பட்டது தான் இந்த புத்தகங்கள்.

புத்தக வெளியீட்டில், இந்திரா ஒன்று தெய்வமாக (துர்கையாக) பார்க்கப்படுகிறார் அல்லது ஒரு சூழ்ச்சிக்காரியாகப் பார்க்கப்படுகிறார்; வரலாறு அவரை அனுசரனையாகப் பார்க்கவில்லையா? என்ற கேள்விக்கு ”இரண்டுமே சரியானவை தான். வரலாறு யாரையும் அனுசரனையாகப் பார்க்க அவசியம் இல்லை; அது அவர்களைக் கணித்து விமர்சிப்பது மட்டுமே அவசியம்.” என்றும் கூறிய அவர் தன்னால் வரலாற்றில் இந்திராவின் நிலையை இன்று வரை முழுமையாகக் கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதும் முழுக்க ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஒருபுறம் வங்கத்தில் ஒரு குடியரசு அமையப் போரிட்ட அதே நேரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளையும் இந்திரா சீரழித்து வந்துள்ளார். அதிகாரம் அனைத்தையும் மையத்தில் குவித்து அதன் ஒரே சர்வாதிகாரியாகத் தான் மட்டுமே இருக்கும் வகையில் அவரது ஒவ்வொரு செயலும்  இருந்து வந்துள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் இன்று வரை சீரமைக்கப்பட இயலாத நிலைக்கு வித்திட்டதே இந்திரா தான் என்று கூறலாம். நேரு-வின் காலத்திலேயே இந்திரா கட்சியின் தலைவர் பதவிக்கு வந்துவிட்டாலும் (1959), அதை முழுக்க முழுக்க நேருவின் செயலாகக் கூறமுடியாது. ஏனெனில், நேருவே முதலில் இந்திரா அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனாலும், மணவாழ்வு கசந்த நிலையில் பொது வாழ்வில் ஈடுபடுவது அவரது மனத்துயரை மாற்றியமைக்கும் என்பதால் அதை அனுமதித்ததாகத் தன் சகோதரி விஜயலக்ஷ்மிக்கு (1957-இல்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிலும், தான் பிரதமராக இருக்கும் பொழுது தன் மகள் கட்சியின் தலைவர் ஆவது (1960) ஆரோக்கியமானதல்ல என்று நேரு வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனாலும், ஜி.பி.பந்த், யு.என்.தெபார் ஆகியோரின் வற்புறுத்தலை நேரு ஏற்க வேண்டியதாயிற்று.

ஆனால் இந்திராவோ தன் மகன் சஞ்சய் காந்தியை வெளிப்படையாகவே தன் வாரிசாக நியமித்தார். அரசாங்கத்தின் பல்வேறு முடிவுகள் சஞ்சய் காந்தியே எடுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. சஞ்சயின் மறைவிற்குப் பின் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் பின் தள்ளப்பட்டு எந்த முன்னனுபவமும் இல்லாத ராஜீவ் அரசியலுக்குள் திணிக்கப்பட்டார்.

புத்தகத்தில் இந்திரா காந்தி-யின் சர்வாதிகார மனப்பான்மையை விளக்க பல்வேறு செயல்கள் கூறப் பட்டாலும் அவர் பிரதமர் ஆவதற்கு முன்னரே நடந்த ஒரு முக்கிய நிகழ்வு முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. அது தான் இந்தியாவின் மாநிலம் ஒன்றில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நீக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக் கொண்டுவரப்பட்டமை. 1960-இல் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் கேரளத்தில் நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சியில் ரோமன் கத்தோலிக கிருத்துவர்களுக்கும் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் போராட்டம் நடந்தது. இதைக் காரணம் காட்டி, கேரள அரசை நீக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் பரிந்துரை செய்ததே இந்திராதான். அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.பி.பந்த் உடனே இதை மந்திரி சபையின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றினார்.

1964-இல் நேரு இறந்த பொழுது லால் பகதூர் சாஸ்திரி மந்திரி சபையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினாலும் கட்சி நிர்வாகத்தில் மிகவும் முனைப்புடன் பணிபுரிய முடியாதபடி (கணவரை இழந்த நிலையில்) குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டதையும் உடல் நலக் கோளாறுகளுக்காகச் (சிறுநீரகக் கல்) சிகிச்சைப் பெற்று வந்ததையும் குறிப்பிடுகிறார். நேருவின் தொகுதியில் (உத்திர பிரதேசத்தில் பூல்பூர்) கூட அவர் சகோதரி விஜயலக்ஷ்மி-தான் போட்டியிட்டார்.

Tryst என்பதற்கு ஆங்கிலத்தில் assignment, rendezvous அதாவது கள்ள (காதல்) சந்திப்பு என்பது போன்ற பொருள் இருந்தாலும் இங்கு உபயோகிக்க நினைத்தது போராட்டம் என்றப் பொருளில் தான். காரணம் நேரு இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது பேசிய சொற்பொழிவு ‘Tryst with Destiny’ அதாவது விதியுடன் போராட்டம் என்பது தான். இங்கு நயன்தாரா, Power என்ற வார்த்தையை பலம், பதவி, அதிகாரம் என்ற பொருளில் கூறினாலும் சங்கேதமாக, 1971-இல் வங்காள தேசம் உருவாக நடந்தப் போரைத்  தொடர்ந்து இந்திரா ‘சக்தி’யாகக் கூறப்பட்டதைக் கேலி செய்யவே இப்படி எழுதியிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

புத்தக வெளியீட்டின் பொழுது சோனியா பற்றி நயனதாரா கூறிய இந்த கருத்து புத்தகத்திற்கு நல்ல விளம்பரம் தரும் என்று நினைக்கிறேன். அது, ‘சோனியா அவரது மாமியாரின் பேசுவதையும் நடப்பதையும் அவதனித்துள்ளார்; அவரைப் போலவே அரசியல் முடிவுகளுக்குக் (அவரது) குழந்தைகளைச் சார்ந்துள்ளார். மேலும், அவரைப் போலவே மகனை வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளார்’ என்பது தான். 

திங்கள், ஜூலை 16, 2012

மூன்று புத்தகங்களின் அரசியல்

சமீபத்தில் மூன்று புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன.

ஒன்று முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் எழுதிய Turning Points.

இரண்டாவது முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.அர்ஜுன் சிங் எழுதிய A Grain of Sand in Hourglass of Time.

மூன்றாவது மூத்த பத்திரிக்கையாளர் திரு. குல்தீப் நய்யர் எழுதிய ‘Beyond the Lines’.

பொதுவாக இது போன்ற சுயசரிதை அல்லது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் புத்தகங்கள் அரசியல் ஆர்வலர்கள்,  ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் சலசலப்பை உறுவாக்கும். (சில நேரங்களில் இந்த சலசலப்புகளே அப்புத்தகங்களின் விற்பனை வெற்றிக்கு உதவும் என்பதால் வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்பும் விஷயங்கள் நுழைக்கப்படுவது உண்டு). இப்பொழுது, இந்த மூன்று புத்தகங்களும் கிளப்பியுள்ளச் சர்ச்சைகளைப் பார்ப்போம்....

இதில் முதலில் கலாம் அவர்களின் புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அவர் தன் புத்தகத்தில் 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி அமைக்க இருந்த சமயத்தில் சோனியாகாந்தி பிரதமராக ஆவதை அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த கலாம் அதை விரும்பாமல் மறுத்ததாகவும் அதைத் தொடர்ந்து மன்மோஹன் சிங் பிரதமராக ஐமுமு-வால் தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும் உலவிய வதந்தியை மறுத்துள்ளார். மேலும், 2002-இல் குஜராத் கலவரங்கள் நடந்த பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ததன் பின்னர் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும்  குறிப்பிட்டு இருப்பது. இதில், கலாமை காங்கிரஸ் மீண்டும் குடியரசுத் தலைவராக நியமிக்க மறுத்துவிட்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது சோனியாவை (பிரதமராக) நியமிக்க மறுத்த கிசுகிசுதான். இந்த முறை கலாமை பாஜக முதலில் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. பின்னர், பிரணாப் முகர்ஜியின் பெயர் வெளியிடப்படக் கூடும் என்றவுடன் மம்தா பானர்ஜி அவர் பெயரை முன் மொழிந்ததைத் தொடர்ந்தும் முகநூல், எலெக்ட்ரானிக் ஊடகங்களில் அவர் பெயருக்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து தான் கலாமின் பெயரை பாஜக அவர் பெயரை வெளியிட்டது. இதற்கு, குஜராத் சம்பவமும் காரணமாக இருக்கலாம். ஆனால், இதே புத்தகத்தில் குஜராத் சுற்றுப் பயணத்தில் மோடியும் அவரது அரசும் அளித்த ஒத்துழைப்பைச் சிலாகித்துள்ளதைப் பற்றி ஊடகங்கள் எதுவும் கூறவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

அடுத்து அர்ஜுன் சிங்-இன் புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. 1984-ஆம் ஆண்டு போபால் விஷ வாயு விபத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வாரன் ஆண்ட்ர்சன்–ஐ இந்தியாவிலுருந்துத் தப்பிக்க உதவியர் அப்போதைய காங்கிரஸ் முதல்வரான அர்ஜுன் சிங் மற்றும் அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி தான் என்பது அனைவராலும் எழுப்பப்படும் குற்றச்சாட்டு. இதை இந்நாள் வரை மறுத்துவந்த அர்ஜுன் சிங், தற்போது தன் புத்தகத்தில் இதற்குக் காரணம் தானோ அல்லது பிரதமர் இராஜீவோ அல்ல என்றும் அப்போதைய மத்திய உள் துறை அமைச்சராக இருந்த காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்-தான் என்று கூறியுள்ளது தான் முதல் சர்ச்சை. இரண்டாவதாக தான் எப்பொழுதுமே நேரு குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளதாகவும் ஆனால், ஐமுமு இரண்டாம் முறை அரசு அமைத்த பொழுது தான் வேண்டுமென்றே ஓரங்கட்டப் பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்திருப்பதே.

இதில் நரசிம்மராவ் அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு காலந்தவறியதாகவே படுகிறது. மேலும் இராஜீவை குற்றமற்றவர் என இவர் சான்றளித்து இருப்பது ஒருவேளை பிரணாப் முகர்ஜியால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இவர் பெற முயற்சி செய்கிறார் என்பது போலத்தான் தோன்றுகிறது. அதனால் தான் நேரு குடும்பத்திற்கானத் தன் விசுவாசத்தை மீண்டும் புணர்ப்பிக்கச் செய்யும்  முயற்சிகள்.

http://releasedateindia.in/book/wp-content/uploads/2012/06/Beyond-the-Lines-An-Autobiography-by-Kuldip-Nayar.jpgமூன்றாவதாக, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது அப்போதைய பிரதமர் அதை தடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்தார் என்பது அனைவராலும் சொல்லப் படும் குற்றசாட்டு. இதற்கு, மேலும் வலு சேர்க்கும் வண்ணம் குல்தீப் நய்யாரின் புத்தகத்தில் நரசிம்மராவ் அந்த சம்பவம் நடந்த நேரம் கரசேவகர்கள் மசூதிமேல் ஏற்யவுடன் அவர் பூஜையில் அமர்ந்துவிட்டதாகவும் மசூதி இடிக்கப்பட்டச் செய்தி அவருக்குச் சொல்லப்பட்ட பின்னரே பூஜையிலிருந்து வெளிவந்ததாகவும் மது லிமாயே தனக்குச் சொன்னதாகக் கூறியுள்ளார். நய்யாரைப் பொறுத்தவரை அவர் பொதுவாக காங்கிரஸுக்கு எதிராகத்தான் எழுதுவார் (காரணம், எமெர்ஜென்ஸியில் பாதிக்கப்பட்ட முக்கிய பத்திரிக்கையாளர்களில் அவரும் ஒருவர் என்பதால் கூட இருக்கலாம்) ஆனால், அதே நேரம் பாஜக ஆதரவாளரும் இல்லை [ஹேமந்த் காக்ரே இறப்பில் வலதுசாரி அமைப்புகள் காரணம் என்று முதலில் கூறியவர் அவர்தான்].

இந்தக் குற்றச்சாட்டைப் பொறுத்தவரை நரசிம்ம ராவின் மகன் திரு. ரங்காராவ், குற்றச்சாட்டை மறுக்கவோ தன்னிலை விளக்கம் அளிக்கவோ தன் தந்தை உயிருடன் இல்லாத நிலையில் நய்யார் இதைச் சொல்வது சரியில்லை என்று கூறியுள்ளார். லிமாயே-வோ 1995-லேயே காலமாகிவிட்டார்.

மேற்கூறிய மூன்று புத்தகங்களில் இரண்டில் நரசிம்ம ராவ் அவர்களைக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கூறப்படும் சம்பவங்கள் அவர் ஆட்சியில் இருந்த பொழுதோ அல்லது அதன் பின்னர் அவர் உயிருடன் இருந்த பொழுதோ வெளிவந்திருக்க வேண்டும். தற்போது அதை மீண்டும் கிளறுவது சரியில்லை தான்.

 இது அதீதம் மின்னிதழில் வெளிவந்தது.