உத்திர பிரதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உத்திர பிரதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

நூறு ரூபாய்க்கு நாலு உயிர்


சமீபத்தில் உத்திர பிரதேசத்தின் கான்பூரில் ஒரு சிறுவன் கையிலிருந்த 100 ரூபாய் நோட்டு தவறி சாக்கடையில் விழுந்துவிட்டது. எனவே, அதை எடுக்க அச்சிறுவன் சாக்கடையில் இறங்கினான். ஆனால், சாக்கடையின் உள்ளிருந்த விஷவாயு தாக்க அவன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டான். விழுந்த மகனைத் தூக்கிவர உள்ளிறங்கிய அவன் தந்தையும் மேலே வரமுடியாமால் அங்கேயே மயங்கி விழுந்தார். வெளியிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் பக்கத்து வீட்டினர் இருவர் உள்ளிறங்க அவர்களும் மேலே வரமுடியாமல் உயிர் துறந்தனர். வெறும் நூறு ரூபாய் நான்கு உயிர்களைக் காவு கொண்டுள்ளது.

ஆனால் அரசாளும் அகிலேஷுக்கோ அவர் தந்தை முலாயமுக்கோ ஏழைகள் பற்றி என்ன புரியும். அவர்களின் சொத்துக்களோ தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கின்றதே..

1977-ஆம் ஆண்டு வெறும் 77000 மதிப்பிலிருந்த முலாயம் சிங்கின் சொத்து 1993 ஆம் ஆண்டு அவர் அளித்த வருமான வரி அறிக்கையின் படி ரூபாய் 18¼ லட்சம். 2005 ஆம் ஆண்டில் அவர் வசமுள்ள சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 4½ கோடிகள். 1993-2003 வரையான 12 வருடங்களில் அவர் வருமானம் ரூ.6¼ கோடியாகவும் செலவுகள் ரூ.4½ கோடியாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆக அவர்களின் சொத்து மதிப்பு உயர்வு ரூ.1¾  கோடியாக இருக்க வேண்டும். ஆக, சுமார் ரூ.2½ கோடி சொத்து வருமானத்திற்கு அதிகமான சொத்து என்று சி.பி.ஐ.-ஆல் போடப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் இன்னமும் நிலுவையில் உள்ளது. [எப்பொழுதெல்லாம்  மத்திய அரசுக்கும் (காங்கிரஸ் என்றும் படித்துக் கொள்ளலாம்) சமாஜ்வாதி கட்சிக்கும் பிணக்குள் வருமோ அப்பொழுதெல்லாம் இந்த வழக்குத் தூசி தட்டப்படும் (உதா. அமெரிக்க ந்யூக்லியர் 123 உடண்பாடு, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரே நாளில் முலாயம் அடித்த பல்டி)]. மேற்கூறிய சொத்துக்கள் அனைத்தும் காகித மதிப்புகள். இதன் 2005-ஆம் ஆண்டு சந்தை மதிப்பு 100 கோடி என்று சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதன் விவரங்கள்...

எண்
சொத்து
மதிப்பு
2005 ஆம் ஆண்டு சந்தை மதிப்பு
1.
எடாவா ஃப்ரெண்ட்ஸ் காலணி வீடு
56000
1 கோடி
2.
லக்னௌ ரமணா தில்குஷ் பண்ணை
20 லட்சம்
4 கோடி
3.
லக்னௌ ஹஸரத் கஞ்ச்
35 லட்சம்
12 கோடி
4.
சைஃபையில் உள்ள விவசாய நிலம்
5.4 லட்சம்
2 கோடி
5.
எடாவா சிவில் லைன்ஸின் உள்ள ப்ளாட்
10 லட்சம்
8 கோடி
6.
சைஃபையில் உள்ள சௌத்ரி சரண்சிங் கல்லூரி
10000
½ கோடி
7.
சைஃபை வீடு
20000
10 லட்சம்

இதைத் தவிர, முலாயாம், அவர் மனைவி காலம் சென்ற மாலதி தேவி, அகிலேஷ், அவர் மனைவி டிம்பிள் ஆகியோரின் நகைகள், அவர்கள் பெயரில் உள்ள முதலீடுகள், இருப்புத் தொகைகள் என்று பலவற்றைப் பட்டியலிட்டுள்ளது. இது அனைத்தும் 2005-ஆம் ஆண்டுச் சந்தை மதிப்பு. இன்று இதன் மதிப்பு மேலும் அதிகரித்திருக்கும் என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை...

உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி வளர்ச்சித் திட்டங்களை கவனிக்காமல் சிலைகளுக்கும் தலைவர்கள் பெயரில் அழகுப் பூங்காக்களுக்கும் அதிக நேரத்தையும் செலவிட்டதைத் தேர்தல் சமயத்தில் அதிகம் விமர்சித்தது சமாஜ்வாதி கட்சி. ஆனால், தற்போது அகிலேஷ் யாதவ், உத்திர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் மாயாவதி அமைத்ததைவிடப் பெரிய அதிக செலவிலானப் பூங்காக்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், இது போன்ற மூடப்படாத சாக்கடைகளுக்கும் பள்ளங்களுக்கும் செலவிட அரசாங்கங்களிடம் பணம் இருப்பதில்லை. திட்டக்குழுத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா ரூ.32/- சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழாக இருப்பவராகக் கருதப்பட மாட்டார் என்று கூறியது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாட்டில் ஏழைகளின் உயிர் இந்த 32 ரூபாய்க்கும் குறைவாகவே நம் அரசாங்கங்களால் கருதப்படுகின்றன என்பது மீண்டும் நிரூபணமாகின்றது....

வியாழன், ஜூலை 05, 2012

பிறந்த நாள் பரிசு


’ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே’
’கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ’

இப்படி எத்தனையோ பழமொழிகள் கேள்வி பட்டிருக்கிறோம் அதில் புதிதாக ‘மக்கள் நல நிதியோ உறுப்பினரின் ஊர்தியோ’ என்று புதுமொழியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறு குழந்தைகளின் பிறந்த நாள் விழா கொண்டாடும் பொழுது, அதில் கலந்து கொண்டு பரிசுகளைத் தரும் குழந்தைகளுக்கு return gift என்று பதில் மரியாதை செய்வது வழக்கம்.

சென்ற ஞாயிறன்று உத்திர பிரதேசத்தின் செல்லப் பிள்ளை அகிலேஷ் யாதவ்-விற்கு 39-ஆவது பிறந்த நாள். அதில் அவரது கட்சி உறுப்பினர்கள் அவருக்குப் பல பரிசுகள் அளித்திருப்பார்கள். அவர்களுக்கு பதில் மரியாதை செய்யும் விதமாக, தன் கட்சியினருக்கு மட்டுமே அளித்தால் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவாக, அகிலேஷ் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது என்னவெனில், அனைத்து உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தை சொகுசு சிற்றுந்து (Luxury Car)  வாங்கிக் கொள்ளலாம் என்பது தான். உறுப்பினர்களுக்கு வாகனம் அளித்தால் அது அவர்கள் மக்களைச் சந்திப்பதை எளிதாக்கும் என்றும் அது தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கு உதவும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஏழைகள். கார் கூட வாங்க முடியாத அவர்களின் வெறும் 70% உறுப்பினர்கள் மட்டுமே கோடீஸ்வரர்கள்!
 
முதலில் எதிர்கட்சிகளின் எதிர்க்க ஆரம்பித்தவுடன் இத்திட்டம் தேவையிருக்கும் உறுப்பினர்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் நேற்று இத்திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். 

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால்  அகிலேஷின் உண்மையான பிறந்த நாள் அக்டோபர் 24. ஆனால், பள்ளியில் சேர்க்கும் பொழுது அவரது பிறந்த தேதியை ஜூலை 1-ஆம் தேதியாகத் தவறுதலாகக் குறித்து விட்டார்கள். அதனால், அகிலேஷே பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடவில்லை என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது.

வெள்ளி, மார்ச் 16, 2012

இளைய முதல்வர்


நேற்று, உத்திரப் பிரதேச் முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவியேற்றார். 38-வயதில் முதல்வராகப் பதவியேற்கும் அகிலேஷ், இந்தியாவின் மிக இளைய வயது முதல்வர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருடன் முலாயம் சிங்-இன் சகோதரர் சிவபால் சிங் யாதவ்-உம், கட்சியின் மூத்த தலைவர் முஹமத் அஸம் கான்-உம் பதவியேற்றனர். முலாயம், [இவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தியே தன் மகன் அகிலேஷ் பதவியேற்க வழி செய்தார்.]

ஆனால், அவருடன் பதவியேற்ற நாற்பத்தி ஏழு அமைச்சர்களில், நான்கு பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகளும் குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதிலும், குறிப்பாக “ராஜூ பையா” என்று அழைக்கப்படும் ராஜா ரகுராஜ் ப்ரதாப் சிங்; இவர் மீது ஆள் கடத்தல், கொள்ளை என்று பல்வேறு கிரிமினல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில், உள்ளன.

உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சென்ற ஆட்சியின் (2003-07) மேலுள்ள முக்கியக் குற்றச்சாட்டே அவர்கள் ஆட்சியில் நடைபெற்றக் கிரிமினல் குற்றங்களே; அதிலும் குறிப்பாக அதில் அரசியல்வாதிகளின் பங்கும் அதற்கு ஆளும் கட்சி கொடுத்த ஆதரவும் அரசின் செயல்கள் (அல்லது செயலற்ற நிலை) தான்  வெகுவாக விமர்சிக்கப் பட்டது.

இந்நிலையில், இம்முறை முந்தய ஆட்சியின் தவறுகள் திரும்ப நடக்காது என்ற நம்பிக்கை, இம்முறை கிரிமினல் வழக்குகள் உள்ள முன்னாள் கட்சித் தலைவர்களுக்கு (குறிப்பாக டி.பி.யாதவ் போன்றவர்கள்) தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, தோன்றியது. அதிலும், இம்முறை முலாயம் சிங்-கும் அவர் மகன் அகிலேஷ் யாதவ்-உம் மேற்கொண்ட பிரசாரங்களும் அந்நம்பிக்கையை வலு செய்தன.

ஆனால் தற்போது ராஜு பையா-வை அமைச்சர் ஆக்கியதன் சமாஜ்வாதி கட்சி எதிரான பழைய கவலைகள் மீண்டும் தலைத் தூக்கியுள்ளன. இத்தனைக்கும் ராஜா பையா சமாஜ்வாதி கட்சி சார்பில்  போட்டியிட்டு வென்ற உறுப்பினர் இல்லை; சுயேச்சை உறுப்பினர்தான். சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மை  பெற்று ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அவரை அமைச்சரவையில் சேர்த்துள்ளது தவிர்த்திருக்க முடிந்த ஒரு நிலை தான். ஒருவேளை, அவர் முதல்வர் ஆவதற்குக்காகக் கொடுத்திருக்கும் விலையாகக் கூட இருக்கலாம்.

தவிரவும் அவரது பதவியேற்பின் போது அவரது கட்சியினர் மேடையிலேயே செய்த ரகளையும் போலிஸ் அதைத் தடுக்கக் கூட இயலாத நிலையில் இருப்பது மேலும் கவலைத் தருகின்றன.

பதவியேற்று ஒரு நாள் தானே ஆகியுள்ளது; போகப்போக ஆட்சியையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்று நம்புவோம்!

இதுதான் இன்றைய நிலையில் அவருக்கு முக்கிய சவால்!

வியாழன், நவம்பர் 17, 2011

உத்திர பிரதேசத்தின் எதிர்காலம்



நேற்று மாயாவதி உத்திர பிரதேசத்தை நான்கு – பஷ்சிம் ப்ரதேஷ், ஆவாத் ப்ரதேஷ், புந்தேல்கந்த், பூர்வாஞ்சல் - புதிய மாநிலங்களாக மாற்ற சட்டசபைத் தீர்மாணம் இயற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

உத்திர பிரதேசம் சுமார் 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், இன்றைய நிலையில் சுமார் 20 கோடி மக்கள் தொகையையும் (அதாவது தேசத்தின் 16% மக்கள் தொகை) கொண்ட ஒரு பெரிய மாநிலம். எனவே அது ஒரு கட்டுபாடற்ற மாநிலமாக இருப்பதாகவும், அதை நான்காகப் பிரிப்பதுதான் தீர்வு என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கானா விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாத காங்கிரஸ், இது மிகவும் நாசூக்கான விஷயம் என்று கருத்து கூறியுள்ளது. பாஜக-வோ இது மக்களைத் திசை திருப்பும் வெறும்  கண் துடிப்பு நாடகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளன. ஆக, இவர்களின் நிலை என்ன என்று வெளிப்படையாக இன்னமும் சொல்லவில்லை.

மறைமுகமாக பாஜக சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப் படுவதையே விரும்பும் என்று நினைக்கிறேன். தெலுங்கானா  விலும் சற்றேரக் குறைய இதே நிலைதான். ஏனென்றால் அதில் ஒன்றிரண்டு முதலமைச்சராக ஆக வாய்ப்பு கிட்டும். புள்ளிவிவரங்களை மாற்றி கட்சி வளர்ந்துள்ளதாக – அதாவது 2000 ஆண்டில் அத்தனை முதல்வர்கள், இன்று இது இத்தனையாக உயர்ந்துள்ளது – என்று காட்டிக் கொள்ளலாம்.

காங்கிரசுக்கும் ஓரளவு ஏற்புடையதாக – atleast யுவராஜனின் கைங்கர்யத்தால் வென்றதாகக் கணக்கு காட்ட உதவும் என்பதால் – ஏற்புடையதாகவே இருக்கும். மேலும், சில வருடங்களுக்கு முன்பே ராகுல் உத்திர பிரதேசத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் (அப்போது உத்திர பிரதேசத்திலிருந்து ஹரீத் ப்ரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த அஜித் சிங் – முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகன் – உடன் கூட்டு வைத்திருந்ததால் கூட இருக்கலாம். (அது அஜித் சிங் பலமாக இருந்த அவர் ஜாதியை சேர்ந்த ஜாட்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதை ஊகித்திருந்தால் நீங்கள் இந்திய அரசியல் வாதிகளைப் பற்றி சரியாகப் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று பொருள்). ஆனால், இன்றைய நிலையில் இது தெலுங்கானா பிரிவினைக்கு போராடுபவர்களுக்கு மேலும்  சாதகமாக இருக்கும் என்பதால் அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம்.

மாயாவதியைப் பொறுத்தவரை இது உடனடியாக நடக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும். அதே நேரம் தேர்தல் வருவதால் மக்களைத் திசைத் திருப்ப வேண்டிய கட்டாயம். [மேலும், அப்படியே பிரிக்கப் பட்டாலும் இரண்டு மாநிலத்தில் – at least பச்சிம் ப்ரதேசத்திலாவது – அவருக்கு வாய்ப்பு கிட்டும். அவர் ஒருவருக்கு தானே, அதுவே போதும். இரண்டு மாநிலம் ஆகிவிட்டால், மம்தா பானர்ஜி யாருக்கு மத்திய அமைச்சர் பதவி  கொடுப்பது என்று குழம்பியது போல் குழப்பம் வேறு வரும்.] ஏதோ குட்டையைக் குழப்பலாம் என்று தான் இதை அறிவித்திருப்பதாகவேத் தெரிகிறது. ஆனாலும், பிரிவினைக்கான விதையைத் தூவிவிட்டு விட்டார்.

[ஒரு சின்ன diversion : நோய்டாவைப் பொருத்தவரை மாயாவதிதான். நோய்டாவின் இன்றைய முன்னேற்றம் தில்லியின் வளர்ச்சியை ஒட்டியதாகவும், தேசிய தலைநகர் பகுதியில் இடம் பெற்றிப்பதாலும் என்றாலும் கூட, இங்குள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் அவரின் செயல்கள் யாராலும் மறுக்க முடியாது. அதிலும், முலாயாம் ”அம்மா” ஜெயலலிதாவின் சிஷ்யனாக முந்தைய மாயாவதி அரசின் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நிறுத்தியது, பஸ் வசதிகளில் செய்த குளறுபடிகள் ஆகியவற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மேலும், அவரது சொந்த தொகுதி வேறு நோய்டாவை ஒட்டி இருக்கிறது.]

முலாயம் சிங்கைப் பொறுத்தவரை இது மாயாவதியின் திட்டம் அதனால் அனைவரும் எதிர்பார்த்தபடியே அவரும் இதை எதிர்த்து அறிக்கை விட்டுவிட்டார்.

இந்தியாவிற்கு பெரும்பாலான பிரதமர்களைத் தந்து இந்திய அரசியலைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த உத்திர பிரதேசம் இன்னும் எத்தனை நாள் இந்திய வரைபடத்தில் முழுமையாக இருக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் தர இயலும்.