தலைக்கவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைக்கவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

பெண்களுக்குத் தலைக்கவசம்


 
சில தினங்களுக்கு முன் ஒரு பொதுநல வழக்கில் தில்லி அரசு, இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தலைக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறியதை இங்கே எழுதியிருந்தேன்.

இப்பொழுது, தில்லி உயர் நீதி மன்றம் (முக்கிய நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் நீதிபதி ராஜீவ் சஹாய் அடங்கிய பெஞ்ச்) இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பெண்கள் தலைக் கவசம் அணிய வேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதற்கு ஏதுவாக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர அரசுக்கும் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசின் மோட்டர் வாகனச் சட்டம், 1993-ஐப் பொறுத்தவரை பெண்களுக்குத் தனியாக சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றாலும், தில்லி அரசு, 1999-இலிருந்து இதை அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டது. மோட்டர் வாகனச் சட்டத்தின் 129-வது பிரிவின் படி, சீக்கிய ஆண்களைத் தவிர மற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். ஆனால், சென்ற பிப்ரவரியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்மனுவில் – தில்லி மாநில மோட்டர் வாகன விதியின் 115-வது பிரிவின் படி – பெண்களுக்கு தலைக்கவசம் அணிவது விருப்பத்தேர்வாக ஆக்கப்பட்டது என்றும் அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது என்றும் கூறியது.

இது பற்றி பொது நல வழக்குத் தொடுத்த சமூக ஆர்வலர் திரு.பி.ஆர்.உல்லாஸ், பாதுகாப்புச் சட்டங்கள் அனைவருக்கும் தேவை; அதில், மதம் பால் ஆகியவற்றின் அடிப்படையில் சலுகைகள் என்ற பெயரில் ஓட்டைகளை ஏற்படுத்தக் கூடாது என்று தன் மனுவில் கூறியிருந்தார். அதை ஒட்டியே தற்பொழுது தில்லி உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

தில்லி காவல் துறை இதை வரவேற்றுள்ளது. பெரும்பாலான விபத்துகளில் தலையில் அடிபடுவதுதான் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது என்பதே இதன் காரணம்.

இதற்கிடையில் தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் கமிட்டியின் தலைவர் பஜன் சிங் வாலியா கருத்து கூறுகையில், தங்கள் மத விதிகளின் படி ஆண்கள் தலைப்பாகையும் பெண்கள் தலையிம் முந்தானையையும் தவிர வேறு ஏதும் அணியக் கூடாது என்றும், இது அவர்கள் மத விதிகளுக்குப் புறம்பானது; எனவே, அரசு தங்கள் மதத்தினருக்கு இதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு, காவல் துறை சீக்கிய பெண்கள் என்று தனியாக பிரித்துப் பார்ப்பது கடினம்; எனவே, அனைவருக்கும் இந்த விதியைப் பொதுவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆக, பெண்கள் தலைகவச விவகாரத்தில் தில்லி காவல் துறை தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது.

வெள்ளி, மார்ச் 02, 2012

உங்கள் தலை (விதி) உங்கள் கையில்


'ஜான் ஏறினால் முழம் சறுக்குவது' என்று கூறுவதைக் கேள்வி பட்டிருக்கிறோம். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

நேற்று தில்லி அமைச்சரவை சாலைப் போக்குவரத்து விதிகளை திருத்தி விதி மீறுபவர்களுக்கு விதிக்கப் படும் அபராதத் தொகையையும் தண்டனையையும் அதிகரிக்க ஒப்புதல் தந்துள்ளது.

அவ்வாறு திறுத்தப் பட இருக்கும் அபராதத் தொகையும் தண்டனையும் –

குடி போதையில் ஓட்டுதல்
`.2000 மற்றும்/ அல்லது 6 மாதச் சிறை என்பதிலிருந்து  `.2000 - 5000 மற்றும்/ அல்லது 6 மாதம் – 2 ஆண்டுகள்  சிறை (முதல் முறைக்கும்); `.10000 மற்றும்/ அல்லது 4 வருடச் சிறை (தொடர்ந்த தவறுகளுக்கும்)

அதி வேகம்
            `.400(முதல் முறை) `.1000 (தொடர்ந்த தவறுகளுக்கும்) என்பதிலிருந்து  `.1000 (முதல் முறை) `.2000-5000 (தொடர்ந்த தவறுகளுக்கும்)

கைபேசி உபயோகம்
`.500 என்பதிலிருந்து  `.500 (முதல் முறைக்கும்); `.5000 (தொடர்ந்த தவறுகளுக்கும்)

அபாயகரமாக ஓட்டுதல்
`.1000 மற்றும்/ அல்லது 6 மாதச் சிறை என்பதிலிருந்து  `.1000 மற்றும்/ அல்லது  6 மாதச் சிறை (முதல் முறைக்கும்); `.2000-5000 மற்றும்/ அல்லது 6 வருடச் சிறை (தொடர்ந்த தவறுகளுக்கும்)

போக்குவரத்து விளக்குகளை மதியாமை, தலைக்கவசம்-இருக்கைப் பட்டைகள் அணியாமை,
            `.100(முதல் முறை) `.300 (தொடர்ந்த தவறுகளுக்கும்) என்பதிலிருந்து  `.500 (முதல் முறை) `.1000-1500 (தொடர்ந்த தவறுகளுக்கும்)

தில்லி-யில் வசிப்பவர்களுக்கு இங்குள்ள போக்குவரத்து விதி மீறல்களும் அதனால் ஏற்படும் இன்னல்களும் புரிந்திருக்கும். காவலர்கள் (சில இடங்களில் சற்று மீறப்பட்டாலும்)  விதிகளை ஒழுங்காகச் செயல் படுத்துவதால் நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளது.

[தில்லியே ஓரளவு பரவாயில்லை என்று உத்திரபிரதேசத்தின் போக்குவரத்து சீரற்ற நிலைமை உணர்த்தும். தில்லியில் போக்குவரத்து விதிகளின் படி நடக்கும் அதே வாகன ஓட்டுனர், உத்திரப் பிரதேசத்தைத் தொட்டவுடன் அவ்விதிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்.]

எனவே, இந்த விதிகளைச் சற்று கடுமைப் படுத்துவது இன்றைய நிலையில் தேவையான ஒன்றே.

இது மட்டுமே நடந்திருந்தால் இந்த பதிவே இருந்திருக்காது வேறு ஒரு நிகழ்வும் நடந்தது தான் இதை எழுதக் காரணம்.

அது தான் அந்த ஜான் ஏறினால் முழம் சறுக்கும் விஷயம்…

உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில், பெண்கள் அமைப்புகள் கொடுத்தல் அழுத்தத்தில், பெண்கள் தலையில் எதுவும் (தப்பா நினைச்சுக்காதீங்க, தலைக்கவசம் தான்) இருக்கத் தேவையில்லை என்று தில்லி அரசு கூறியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் தலைக்காயத்தினால் மரணங்கள் ஏற்படுவதாகவும் அதில் 70 சதவிகிதம் இருசக்கர வாகன்ங்களில் பயணிப்பவர்கள் என்று ஒருத் தகவல் கூறுகிறது. சென்ற ஜனவரி 29-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் திருமதி.ஷீலா தீக்ஷித் அவர்கள் தலைக்கவசம் அணியாமையே பெரும்பாலான சாலை விபத்து மரணங்களுக்கும் காரணம் என்று பேசியுள்ளார். ஆனால், அவரது அரசோ பெண்களைப் பாதிக்கும் இது போன்ற ஒரு கருத்தைக் கூறியுள்ளது. ஏற்கனவே சீக்கியர்களுக்குத் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இப்போது, பெண்களுக்கும் விலக்களிக்கப்படும் போலிருக்கிறது.

ஆகப் பெண்களிடம், “உங்கள் தலைவிதி உங்கள் கைகளில் தான்” என்று அரசு சொல்லாமல் சொல்கிறதோ?