வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

இளம் புயல்களின் எதிர்காலம்


கடந்த மாதம் நடந்த 19-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பைக் கிரிகெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

பதினாறு அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகளில் நான்கு நான்காக குழுக்கள் பிரிக்கப்பட்டு அவைத் தங்களுக்குள் மோத வைக்கப்பட்டன. அவற்றுள் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் காலிறுதிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டன. இந்தப் போட்டிகளில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடாவிட்டாலும் அதன் குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்றது. இது போன்ற நீண்ட போட்டிகளில் ‘peaking at the right time’ என்று சரியான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் முக்கியம். இந்திய இளைஞர் அணி அதைச் சரியாகச் செய்தது. காலிறுதியில் பாகிஸ்தானையும் அரையிறுதியில் நியூசிலாந்தையும் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் மட்டையாட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடாவிட்டாலும் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற முடிந்தது. இறுதிப் போட்டியிலும் ஆரம்பத்தில் மட்டையாட்டத்தில் சற்றுத் தடுமாறினாலும் அணித்தலைவர் உன்முக்த் சந்த்-இன் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை எட்டினார்கள். இது இந்திய இளைஞர் அணி  வெல்லும் (2000, 2008-க்குப் பிறகு) மூன்றாவது உலகக் கோப்பை.

இந்த அணியின் வெற்றிக்குப் பின்னால் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் மூன்று தென்னிந்தியர்கள்.

முதலாமவர் இந்த அணியின் பயிற்சியாளர் பரத் அருண்; தமிழக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் [ரஞ்சிப் போட்டிகளில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், துரதிர்ஷ்ட வசமாகப் பெரிய அளவில் வரவில்லை]. இவர் இந்த இளைஞர்களைத் தேவையான அளவு ஊக்குவித்ததுடன் மட்டுமல்லாமல் மேற்கிந்திய அணியுடன் நடந்த முதல் போட்டியில் தோல்வியுற்றாலும் அணியினர் துவண்டுவிடாமல் அவர்களைத் தேவையான அளவு உற்சாகப்படுத்தி அவர்களின் திறமையைத் தீட்டியவர் என்று அணியினராலும் முன்னாள் வீரர்களாலும் பாராட்டப்படுகிறார்.

அடுத்து அணியின் தடுப்பாட்டப் பயிற்சியாளர் ஸ்ரீதர். ஹைதராபாத்-ஐச் சேர்ந்த இவர் இந்த அணியினருக்குக் கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூரின் தேசிய கிரிகெட் அக்டெமி-யில் பயிற்சியளித்து வருகிறார். லீக் போட்டிகளையும் கால், அரை இறுதிப் போட்டிகளையும் தடுப்பாட்டத்தினாலேயே வென்றார்கள் என்று கூறினால் அது மிகையில்லை. ஏனெனில், இவற்றில் மட்டையாட்டத்தில் மிகவும் குறைவான ஓட்டங்களையேப் பெற்றனர். இவர் பயிற்சி காலத்தின் பொழுது இந்திய அணியில் முன்னணி வீரர்களை (சச்சின், திராவிட், யுவராஜ் போன்றவர்களை) அழைத்து வந்து இந்த இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

மூன்றாவதாக, அணியின் தேர்வாளர், முன்னாள் மிகவேகப்பந்து வீச்சாளர் அபய் குருவிலா [டெஸ்ட் போட்டிகளில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரும் பெரிதாக சாதிக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது]. இவர், அணியில் வேகப்பந்து வீச்சாளர், சுழல் பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் என்று ஒரு balanced அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காகவே பாராட்டப்பட வேண்டியவர்.

இந்நிலையில் இந்த அணியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த இயன் சேப்பல், இந்த இளைஞர்கள், குறிப்பாக உன்முக்த்-உம் பந்து வீச்சாளர் ஹர்மீத் சிங்-கும், இந்திய அணியில் சேர்க்கப்படத் தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார். ஹர்மீத் சிங் பற்றிக் குறிப்பிடுகையில் அவரை பேடி-யுடன் இணைத்துக் கூறி, இங்கிலாந்து தவிர வேறு எந்த நாட்டின் டெஸ்ட் அணியிலும் இவருக்கு இணையான சுழல் பந்து வீச்சாளர் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்த இளைஞர்கள் உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டுமா அல்லது கூடாதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் மனீந்தர் சிங், இவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் முதல் நிலை (first class) ஆட்டங்களை ஆடிய பின்னரே அதன் அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். உதாரணமாக, தன்னையும் சேர்த்து பல்வேறு இளம் வீரர்கள் சிறுவயதிலேயே இந்திய அணியில் சேர்க்கப்பட்டும் பெருமளவில் ஜொலிக்காமல் போனதைக் குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், ஹிர்வானி, விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே.பிரசாத் (இவரை நினைத்தால் குருவி தலையில் பனங்காய் என்ற பழமொழிதான் ஞாபகம் வரும். சிறந்த கீப்பரான இவரை 19 வயதில் அணியில் சேர்த்து இந்தியாவிற்கு வெளியில் நடக்கும் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராகக் களம் இறக்கினால் என்ன செய்ய முடியும்?), பார்த்தீவ் படேல் என்று கூறிக் கொண்டே போகலாம். இதற்கு மிகச் சிறந்த exception என்றால் அது சச்சின் தான்.

ஆனால், சஞ்சய் மஞ்ரேக்கரோ பல வீரர்கள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நல்ல நிலையில் ஆடிவரும் வீரர் அவரது form-ஐ இழக்க நேரிடும் சமயத்தில் அணியில் சேர்க்கப்பட்டு அப்பொழுது சரிவர விளையாடாமல் வாய்ப்பு இழக்க நேரிடுவதைக் குறிப்பிடுகிறார். இதற்கு, அஜய் சர்மா, வி.பி.சந்திரசேகர் போன்றவர்கள் மிகச் சிறந்த உதாரணம். இதற்கு exception திராவிட்.

அணியின் தேர்வாளர் குருவிலா இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது அணியின் கூட்டு வெற்றி என்றும் வீரர்கள் பிரிந்து வேறுவேறு (மாநில) அணிகளுக்கு விளையாடும் பொழுது தங்களை எப்படி அதற்குத் தயார் செய்து கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம் என்றும் இந்த கோப்பை  வெற்றியை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் முக்கியம் என்றும் எனவே அவர்கள் ஒரு சீசனாவது ரஞ்சிப் போட்டிகளை விளையாட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் கம்பீர், விராட் கோஹ்லி. இளைஞராக இருக்கும் போதே அணியில் சேர்ந்த இவர்கள் முதலில் சொதப்பினார்கள். அணியிலிருந்து நீக்கப்பட்டப் பின் ரஞ்சிப் போட்டிகளில் தங்கள் ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொண்டு மீண்டு வந்துள்ளனர்.

இப்பொழுது இவர்கள் ஒரு தொடரில் தான் விளையாடியுள்ளனர். இவர்களின் எதிரணிகளிலும் அனுபவமில்லாத இளைஞர்கள் தான் விளையாடியிருப்பார்கள். அனுபவமிக்க ஒரு அணியை எதிர்கொள்ள இவர்களுக்குக் குறைந்த பட்ச அனுபவமாவது இருக்க வேண்டும். இறுதித் தேர்வை எதிர்கொள்ளும் மாணவன் அதற்கு முன்னர் பயிற்சித் தேர்வு எழுதுவது போல ரஞ்சி மற்றும் முதல் நிலை போட்டிகள் (county போன்றவற்றிலும்) விளையாட வேண்டும். அப்பொழுதான் அவர்களின் திறமை மேலும் மெருகேரும்.

இதுவரை இந்திய அணியில் இடம் பெற்ற 19-வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம்…
          1.       வெங்கடபதி ராஜூ         1988
          2.       நயன் மோங்கியா             1988
          3.       ஹர்பஜன் சிங்                 1998
          4.       விரேந்தர் சேவாக்            1998
          5.       முகமது கைஃப்                1998, 2000
          6.       யுவராஜ் சிங்                    2000
          7.       பார்த்தீவ் படேல்             2002
          8.       இர்ஃபான் படான்  2002
          9.       சுரேஷ் ரெய்னா               2004
          10.     தினேஷ் கார்த்திக்            2004
          11.     பியூஷ் சாவ்லா                2006
          12.     சதேஸ்வர் புஜாரா           2006
          13.     ரவீந்த்ர ஜடேஜா             2006, 2008
          14.     ரோஹித் ஷர்மா              2006
          15.     விராட் கோஹ்லி             2008

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
Once in a Blue Moon என்று ஆங்கிலத்தில் ஒரு செலவடை உண்டு. மிகவும் அரிதான நிகழ்வுகளுக்கு இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவர்.

வானவியல் ஆர்வலர்களைப் பொறுத்தவரை இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதுமே அது போன்ற ஏதாவது நிகழ்வுகள் நடந்து வந்துள்ளன.

இந்த மாதம் நாசா-வின் ‘க்யூரியாசிட்டி’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி அங்குத் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27), செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகம் மிகப் பெரிதாகத் தெரியும் (கிட்டத்தட்ட இன்னொறு நிலாப் போல) என்றும் இது 60000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வென்றும் hoax மின்னஞ்சல் வலைகளில் உலாவரத் துவங்கியது. வான்வியலில் பொதுவாக ஆர்வமுள்ளவர்களுக்கு இது சாத்தியமில்லை என்பது புரிந்தாலும் பொதுமக்களில் நிறைய பேருக்கு இதில் ஆர்வம் இருந்த்து.

செவ்வாயைப் பொறுத்தவரை அது பூமிக்கு மிகவும் நெருக்கமாக வந்தது 2003-ஆம் ஆண்டு (ஆகஸ்ட் 27 தான்); அதுவும் சுமார் 3.60 கோடி மைல்கள் / 5.60 கோடி கி.மீ தூரத்தில். அதன் நீள்வட்ட பாதையில் பூமியும் செவ்வாயும் இதைவிட சற்றேறக் குறைய 1000 கி.மீ வரை நெருங்கிவர சாத்தியம் இருக்கலாம். செவ்வாய் நிலா அளவு பெரிதாகத் தெரிய வேண்டுமானால், அது பூமியிலிருந்து நிலா இருக்கும் தூரத்தைவிட (சந்திரன் பூமியிலிருந்து சுமார் 2.40 லட்சம் மைல் தொலைவில் இருக்கிறது) இருமடங்கு தூரத்தில் அதாவது 5 லட்சம் மைல்களுக்குள் இருந்தால் தான் சாத்தியம்.

ஆனால் இந்த மாதம் வெள்ளி, செவ்வாய் ஆகிய இரு கோள்களும் மிக அருகில் வந்தன. 14-15-ம் தேதி சமயத்தில் சந்திரனும் அதன் அருகில்  வர மிக நல்ல காட்சிகள் காணக் கிடைத்தன. [இப்பொழுதும் மாலை நேரங்களில் சூரியன் மறைந்து 90 நிமிடங்கள் வரை வெள்ளி, செவ்வாய் இரண்டையும் மேற்கு-தென்மேற்குப் பகுதியில்  10 டிகிரி வித்யாசத்தில் காணமுடியும்; வெள்ளி சற்று ஜொலிப்பாகவும் செவ்வாய் ஆரஞ்சு நிறத்திலும் நட்சத்திரம் அளவிற்கு இருக்கும்]

அதே போல சென்ற மாதம் ஒரு நட்சத்திரம் (‘BD+48 740’ என்று குறிப்பிடப்படுகிறது) அதன் கிரகத்தை விழுங்குவதை [நட்சத்திரம் மெல்ல எரிந்து அதன் எரி பொருள்கள் தீர்ந்துவிடும் நிலையில் அருகிலுருக்கும் அதன் கோள்களை விழுங்கி நாளடைவில் கருந்துளையாக மாறும் – அதற்கு சில ஆயிரம் வருடங்கள் ஆகும்] முதல் முறையாக படம் பிடித்துள்ளார்கள்.

மேலும் ஒரு சோக நிகழ்வாக நிலவில் முதன் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்-இன் மரணம் நிகழ்ந்தது. ஆனால், அது நிலவு பயணத்தைத் தொடர்ந்த செவ்வாய் பயணக் கனவை ஆராய்சியாளர்களிடம் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நிலவில் 12 பேர் காலடி வைத்துள்ளனர். அவர்கள்….
1.              நீல் ஆம்ஸ்ட்ராங்           1969  அப்பொலோ-11
2.              பஸ் அல்ட்ரின்               1969  அப்பொலோ-11
3.              சார்லஸ் பீடே கனார்ட்   1969  அப்பொலோ-12
4.              அலன் பீன்                    1969  அப்பொலோ-12
5.              அலன் ஷெபெர்ட்          1971  அப்பொலோ-14
6.              மிட்செல் எட்கர்              1971  அப்பொலோ-14
7.              டேவிட் ஸ்காட்              1971  அப்பொலோ-15
8.              ஜேம்ஸ் இர்வின்            1971  அப்பொலோ-15
9.              ஜேம்ஸ் யங்                             1972  அப்பொலோ-16
10.           சார்லஸ் ட்யூக்                1972  அப்பொலோ-16
11.           யூகென் செரெமன்          1972  அப்பொலோ-17
12.           ஸ்கிமிட் ஹைரிசன்        1972 அப்பொலோ-17
                        
இதுவரைச் சொன்னதெல்லாம் Once in a Blue Moon  என்று எப்பொழுதாவது நிகழும் நிகழ்வுகள். ஆனால், அந்த செலவடையின் அசல் நிகழ்வு வரும் 31-ஆம் தேதி நிகழ்கிறது.

ஆம்! இந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிகழும் முழுநிலவு ‘நீல நிலவு’ என்றே அழைக்கப்படும். ஒரே மாதத்தில் (ஆங்கில மாதம்) இருமுறை முழுநிலவு நிகழ்வதை ‘நீல நிலவு’ என்றே அழைக்கிறார்கள். இந்த Once in a Blue Moon என்ற செலவடையும் கிட்டத்தட்ட இந்த நிகழ்வுகளிலிருந்தே உண்டானது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு வருடத்தின் நான்கு பருவக்காலங்களில் (கிழக்கில், இந்தியாவில் தான் 6 பருவக்காலங்கள்!! மேற்கு நாடுகளில் நான்கு பருவங்கள் தான்), சாதாரணமாக மூன்று மூன்று முழுநிலவுகள் நிகழும் நிலையில், ஏதாவது ஒரு பருவகாலத்தில் நான்கு முழுநிலவுகள் வந்தால் அதைத் தான் ‘நீல நிலவு’ என்று அழைத்து வந்தார்கள். காலப்போக்கில் இது ஒரு மாதத்தில் இரு முழு நிலவுகள் நிகழ்வதைக் குறிப்பதாக மாறிவிட்டது.

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

தேவையில்லா பாரம்பரியம்


சமீபத்தில், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பாரம்பரிய நிறுவனம் (UNESCO) பாரம்பரிய இடமாகப் பராமறிக்கப்பட வேண்டிய இடங்களின் பட்டியலில் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளை இந்தியாவின் 29-ஆவது இடமாக அறிவித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் என்பது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், கோவா, மஹாராஷ்டிரம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1½ லட்சம் ச.கி.மீ பகுதிகளைக் கொண்டது. ஆயினும், இவற்றில் பெரும் பகுதி விவசாய நிலங்களாகவும், தேயிலை, ரப்பர், பனைத் தோட்டங்களாகவும், அணைக்கட்டுகளாகவும் ஓய்வுப்பண்ணைகளாகவும் மாறிவிட்டன. 

இவற்றைத் தவிர பெரும்பாலன இடங்கள் மக்கள் குடியேற்றப்பட்டும் சுரங்க வேலைகளுக்காகவும் அணைக்கட்டுகள் கட்டபட வேண்டியும் ஒதுக்கப்பட்டு இந்த பகுதி மேலும் குறுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற ஆணைகளும், சமூக ஆர்வலர்களும், சுற்றுச் சூழல் நிபுணர்களின் பல்வேறு முயற்சிகளாலும் கூட அரசியல்வாதிகளின் சாதுர்யத்திற்கும் சதியாலோசனைகளையும் குறுக்கு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது தான் இதில் கவலைத் தரும் அம்சம்.

UNESCO சமீபத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவித்தது இதன் 5% பகுதியான சுமார் 7500 ச.கி.மீ. உள்ளடிக்கிய 39 பகுதிகள் தான்.

மகிழ்ச்சியான வரவேற்புடன் பெருமளவில் விளம்பரப் படுத்தப் பட்டு மக்களுக்கு இப்பகுதியின் சிறப்பையும் அதன் பராமரிப்பையும் செய்ய நல்ல வாய்ப்பாக இந்த அறிவிப்புகள் வந்தன. ஆனால், இப்பகுதிகளைப் பெருமளவில் உள்ளடக்கிய மாநிலங்களான கர்நாடகாவோ கேரளாவோ மஹாராஷ்டிராவோ இவற்றை வரவேற்கவில்லை என்பதைவிட மறைமுகமாக விரும்பவில்லை என்பதுதான் உண்மை. காரணம் கேரளாவைப் பொறுத்தவரை இப்பகுதிகளில் அணைக்கட்டுகள் எழுப்ப நடக்கும் முயற்சிகளுக்கு UNESCO-வின் இந்த அறிவிப்பு பெருமளவில் தடையாக இருக்கும் என்பதுதான் காரணம். மஹாராஷ்டிரம், கர்நாடகாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு அணைக்கட்டுகள் எழுப்ப வேண்டிய காரணத்தைத் தவிர சுரங்கத் தொழிலும் பெருமளவில் பாதிக்கப்படும். கர்நாடக அரசியல் பெருமளவில் சுரங்கத்தொழிலை ஒட்டியே நடந்து வருவது நாம் அனைவரும்  அறிந்ததே. சுரங்கத் தொழிலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு ஆணைகளும் வழிகாட்டல்களும் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளன. கர்நாடகம் கலிந்தி நதியில் எழுப்பத் திட்டமிட்டுள்ள அணை, சிந்துதுர்கை, ரத்தினகிரி ஆகிய பகுதிகளில் தொடங்க இருக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை இந்த அறிவிப்பு பெருமளவில் பாதிக்கும்.

ஆக மொத்தத்தில் பாரம்பரிய இடமாக இப்பகுதிகள் அறிவிக்கப்பட்டது இப்பகுதிகளின் அரசாங்கங்களைப் பொறுத்தவரைத் தேவையற்றது என்பது தான் இன்றைய நிலைமை. இப்பகுதியில் சுற்றுச்சூழலும் பல்லாயிரக் கணக்கான உயிரிகளும் அவற்றின் பாதுகாப்பும் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை அவர்களின் பண வரவையோ ஓட்டு வரவையோத் தீர்மானிக்கப் போவதில்லை என்பதால் அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத   அறிவிப்பே.

புதன், ஆகஸ்ட் 22, 2012

மதக்கலவரம் in Waiting (அல்லது) inviting மதக்கலவரம்


கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் துவங்கிய கலவரம் அதன் கோரமுகத்தை சில இடங்களில் கலவரமாகவும் வேறு சில இடங்களில் கலவர வதந்தியாகவும் வெவ்வேறு பரிமாணத்துடன் பம்பாய், பெங்களூர், சென்னை என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதவிதமாக காட்டி வருகிறது.

இந்நிலையில் தில்லியைப் பொறுத்தவரை இங்கு வசித்துவரும் வடகிழக்குப்  இந்தியர்கள் பதட்டமின்றியே இருந்து வருகிறார்கள். தில்லியைப் பொறுத்தவரைத் தங்களின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் வராது என்று நம்புகிறார்கள். அந்த அளவுக்கு நல்லது தான்.

ஆனால், தில்லியில் கடந்த ஒரு மாதமாக வேறு ஒரு பதட்டம் நிலவுகிறது. இது மதக்கலவரமாக மாறாமல் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது எண்ணமுமாக இருக்கிறது. அப்படி என்ன பதட்டம்?

இந்த பதட்டத்தின் முதல் விதை கடந்த ரமலான் மாதம் துவங்குவதற்கு சில நாட்கள் முன்னரே ஆரம்பித்தது. தில்லியில் பல இடங்களில் மெட்ரோ ரயில் இயங்குவது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பணிகள் இன்னமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் நான்காவது பகுதியாக பழைய தில்லி என்றழைக்கப்படும் செங்கோட்டையும் அதைச் சார்ந்த பகுதிகளும் மத்தியத் தலைமைச் செயலகத்துடன் இணைக்க நடந்து வரும் பாதையில் பள்ளம் தோண்டுதல், பூமிக்கடியில் சுரங்கப்பாதை அமைத்தல் என்று வேலைகள் துரிதமாக  நடைபெற்று வந்தன.

இந்த வேலைகளுக்குச் சோதனையாக ரமலான் மாதம் துவங்க சற்று நாட்கள் இருக்கும் நிலையில் ஜம்மா மசூதி-செங்கோட்டை அருகில் சுபாஷ் பார்க் பகுதியில் பூமிக்கடியில் 16-17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கட்டிடம் தென்பட்டது. இது ஷாஜகானால் அவரது மனைவி அக்பராபாதி பேகத்திற்குக் கட்டிக் கொடுக்கப் பட்ட அக்பராபாதி மசூதியாக இருக்கலாம் என்பது கணிப்பு. [மும்தாஜ் இறந்ததும் ஷாஜகான் அரசியல் காரணமாக இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார். அவர்களில் ஒருவர் அக்பராபாதி பேகம்; மற்றவர் காந்தாரி பேகம். பெயரிலிருந்தே ஒருவர் அக்பராபாத் (ஆக்ராவின் மறுபெயர்)-ஐயும் மற்றவர் காந்தாரத்தையும் சேர்ந்தவர் என்பது புரியும். காந்தாரம் ஜஹான்கீரின் ஆட்சியில் முகலாயர்களிடமிருந்து கைநழுவியது. ஷாஜகானின் இந்தத் திருமணங்கள் முகலாய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கம்/நிலைநிறுத்தல் ஆகியவற்றுக்காக நடைபெற்றன. அக்பராபாதி பேகம் பல வழிபாட்டு இடங்கள், நீராதாரங்கள் போன்றவற்றிர்கும் பல்வேறு புரவல்கள் செய்துள்ளார். அதில் இந்த மசூதியும் அடக்கம் என்று வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன]. இந்த மசூதி 1857-ல் சிப்பாய் கலகம் நிகழ்ந்த பொழுது பகதூர்ஷா-வின் ஆதரவாளர்கள் தங்கியிருந்ததால் பிரிடிஷார் செங்கோட்டையைக் கைப்பற்றிய பொழுது இடிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். முன்னர் எட்வர்ட் பார்க் என்று அழைக்கப்பட்ட இந்த பார்க்-இன் பெயர் 1960-களில் சுபாஷ் பார்க் என்று பெயரிடப்பட்டது.

கட்டுமான வேலைகளை உடனே நிறுத்திய மெட்ரோ நிறுவனம், இந்தக் கட்டிடத்தை ASI, தில்லில் அரசு, வடக்கு தில்லி கார்பரேஷன் ஆகியோரில் யாரிடம் இதை ஒப்படைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட மூவரும் முடிவெடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் இப்பகுதி (மதியா மஹல்) சட்டமன்ற உறுப்பினர் ஷோயப் இக்பால், ரமலான் மாதம் துவங்கும் நேரத்தில் இப்பகுதி மக்களுடன் சேர்ந்து பழைய இடிபாடுகளுக்கு மேலாகப் புதிதாக ஒரு கட்டிடத்தை எழுப்பி அதை வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சி செய்தார். ASI பொறுப்பில் இருக்கும் இடத்தில் வழிபாடு நடத்தக் கூடாது. நீதிமன்றம் இதில் தலையிட்டு புதிதாக மேலும் கட்டிடம் எழுப்புவதைத் தடுக்கச் சொல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டது. காவல் துறை இப்பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து புதிய கட்டுமானத்தைத் தடுத்தது. அப்பொழுது ஏற்பட்டப் பதட்டத்தில் நான்கு அரசு வாகனங்கள் சேதமுற்றன.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம் புதிதாக எழுப்பியுள்ளக் கட்டிடத்தை ரம்ஜான் முடிந்ததும் இடிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

இப்பொழுது ரம்ஜான் முடிந்துள்ள நிலையில் காவல்துறை பழைய புராதனக் கட்டிடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளவற்றை இடிக்கும் பொழுது தீய சக்திகள் இப்பகுதி இஸ்லாமிய மக்களைத் தூண்டிவிட்டுக் கல்வரம் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்பதே சாதாரண மக்களின் விருப்பம்.

இப்பகுதி இஸ்லாமியத் தொண்டு நிறுவனங்களும் பொதுமக்கள் குழுவும் மற்ற மதத் தலைவர்களும் காவல்துறையினரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு அமைதிகாக்கும் படிக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தீயில்லாமல் வெறும் வதந்’தீ’யிலேயே பெங்களூர், சென்னை போன்ற அமைதியான நகரங்களே பதட்டம் அடைந்துள்ள நிலையில் தில்லி போன்ற இடங்களைப் பொறுத்தவரை இது சற்று நாசூக்காகவே கையாளப்பட வேண்டிய விஷயமாகும்.

இப்பகுதி இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்த சட்டமன்ற உறுப்பினர் எடுத்துள்ள இது போன்ற நடவடிக்கை மதக்கலவரத்திற்கு ஒரு invitation-தான்.

இப்பொழுது இங்குள்ள அனைவரின் கவலையும் இது பெரிதாகாமல் அடங்க வேண்டும் என்பதே…

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

புத்தகப்பை


ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் திறக்கும் பொழுதேப் பெற்றோர்கள் அனைவருக்கும் குழந்தைகளுக்கு அந்த வருடம் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால் வயிற்றில் புளியைக் கரைக்கும். கடந்த ஆண்டு முழுவதும், சென்னை மற்றும் தமிழகத்தில் மாநில அரசு பாடதிட்டத்தில் எப்பொழுது என்னென்ன மாற்றம் செய்யுமோ அதற்கு எப்பொழுது புத்தகம் அச்சிடப்பட்டு அவை எப்பொழுது விற்பனைக்கு வருமோ என்று தினமும், கிட்டத்தட்ட மாணவர்கள் அந்த வருட இறுதித் தேர்வு எழுதும் வரை, பயந்து கொண்டே கண்விழிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. புத்தகங்கள் அரசினாலேயே அச்சிடப்படுவதால் இவை தேவையான அளவு அச்சிடப்படாமல் பாடபுத்தகம் கிடைப்பதில் இருக்கும் சிரமம் தனிக்கதை.

தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் CBSE பள்ளிகளைப் பொறுத்தவரை, சிபிஎஸ்ஐ-இன் பாடத்திட்டங்களின் படி NCERT பாடப்புத்தகங்களை அச்சிட்டாலும், இந்த முறையில் நடத்தப்படும் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குப் புத்தகங்களைத் தாங்களே அச்சிட்டுக் கொடுத்துவிடுகின்றன.  இதில் இருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் அவற்றின் விலை. சாதாரணமாக இவற்றின் விலை NCERT அச்சிடும் புத்தகங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

நடுத்தர மக்களே பயப்படும் அளவிற்கு இருக்கும் இதன் விலை ஏழைக் குழந்தைகளை மிகவும் அதிகமாக பயமுறுத்தும் என்பதைச் சொல்லவேத் தேவையில்லை.  என்னத்தான் அரசு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கொள்கை-யின் படி கட்டணம் இல்லாமல் ஏழைக் குழந்தைகளுக்கு இடம் வழங்க ஆணையிட்டுவிட்டாலும் இந்த புத்தகக் கட்டணச் சுமையை அவர்கள் எப்படி சுமக்கமுடியும். பள்ளிப் புத்தகமே வாங்க முடியாத அந்தக் குழந்தைகளைப் பொறுத்தவரை பாட சம்மந்தமற்றக் கதைப் புத்தகங்கள் போன்றவை எட்டாக்கனியே.

இந்நிலையில் சென்ற வாரம் தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிக்கைத் தன்னுடைய ‘நீங்கள் படியுங்கள் அவர்கள் கற்கட்டும் (You Read They Learn)’ எனற அமைப்பின் கீழ் ”புத்தகப்பை (Bag of Books)” என்றத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி 84 பள்ளிகளில் ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டு அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பாடபுத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வேறு உபயோகமுள்ள புத்தகங்களை அளிக்குமாறு கோரப்பட்டார்கள். என் மகள், மகன் ஆகியோரது பள்ளிகளிலும் இது போன்ற பெட்டிகள் வைக்கப்பட்டன. குழ்ந்தைகளும் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள்.

இதுவரை இந்தப் புத்தகங்கள், ’ப்ரதம்’, ‘கூஞ்ச்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம், 2574 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொண்டு நிறுவனமான 'CRY'-யும் இதில் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-உடன் கைகோர்த்துள்ளது. மேலும் 10000 மாணவர்களின் கல்விக்காகத் தனி நிதியையும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை குழுமம் அளித்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் தில்லி-தலைநகரத்தில் விற்பனையாகும் ஒவ்வொரு பத்திரிகையின் 5 காசுகளும் இதற்காக ஒதுக்கப்படுகின்றன.

மற்ற நகரங்களில் இருக்கும் நிறுவனங்களும் ஊடகங்களும் இது போன்ற முயற்சிகள் எடுத்தால் நல்லது.

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

'சிட்டுக்குருவி'

விட்டு விடுதலை யாகிநிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடுகட்டிக் கொண்டு
முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலு
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று

என்றுச் சிட்டுக்குருவியைப் பாடிக்காட்டி, நம்மை விட்டுவிடுதலையாகி நிற்கக் கட்டளையிடுகிறான் மகாகவி. ஆம் அவனுக்குக் காக்கை குருவி எல்லாமே நமது ஜாதிதானே.

ஆனால் சமீபகாலமாகச் சிட்டுக்குருவியைக் காண்பதே அரிதாகியுள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் வீட்டின் அருகில் ஒரு குருவியைக் கூடக் காணமுடியவில்லை.  தில்லியில் கோடைக்காலங்களில் காலை 4-5 மணிக்கே ஜன்னலில் அவை ஓசையெழுப்பி நம்மை விழிக்கச் செய்யும். சென்ற மூன்று நான்கு வருடங்களில் அலாரத்தின் ஒலிதான் எழுப்புகிறதே ஒழிய குருவியின் சத்தம் கேட்கவே முடியவில்லை.

இதற்கு, நகரமயமாக்கல் தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் செல்போன்களும் அவற்றின் Tower-களினால் ஏற்படும் மின்காந்த அதிர்வும் தான் காரணம் என்று மறு தரப்பினரும் விவாதித்து வருகிறார்கள். தில்லியில் சமீபத்தில் TERI (சக்தி ஆராய்ச்சி மையம்) நடத்திய ஆய்வில் மாடப்புறாக்களின் ஆதிக்கம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. சான்றாக அவர்கள் குறிப்பிடுவது, 2006-க்குப் பிறகு காக்கை, மைனா, குருவி ஆகியவற்றின் எண்ணிக்கைக் குறைவாகும் அதே நேரத்தில் இந்த மாடப்புறாக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார்கள். இதனால், இவற்றின் அதிகரிப்பால் (அவற்றின்) உணவுப் பகிர்தலில்  ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆராய்ச்சியாளர் நீரஜ் கேரா.

தற்போது Nature Forever Society என்ற அமைப்பு எடுத்த தன்னார்வ முயற்சியால் தில்லி அரசு இந்த சுதந்திர தினத்தில் சிட்டுக்குருவியை மாநிலத்தின் பறவையாக அறிவித்துள்ளது. மீண்டும், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழலை உருவாக்கத் தேவையான ஆராய்ச்சிகளை ஊக்கிவித்துள்ளது.

தில்லி அரசின் இந்த நல் முயற்சியிலாவது மீண்டும் குருவிகளின் ‘கீச் கீச்’ சத்தத்துடன் நம் காலைப் பொழுது விடிய வேண்டும் என்பதே நம் விருப்பம்.

அதுவரை, நாம் தான்
          ’சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா – நீ
           விட்டு பிரிந்து போன பின்னும் அன்பு மாறல’         என்று பாடவேண்டும்…

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

நூறு ரூபாய்க்கு நாலு உயிர்


சமீபத்தில் உத்திர பிரதேசத்தின் கான்பூரில் ஒரு சிறுவன் கையிலிருந்த 100 ரூபாய் நோட்டு தவறி சாக்கடையில் விழுந்துவிட்டது. எனவே, அதை எடுக்க அச்சிறுவன் சாக்கடையில் இறங்கினான். ஆனால், சாக்கடையின் உள்ளிருந்த விஷவாயு தாக்க அவன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டான். விழுந்த மகனைத் தூக்கிவர உள்ளிறங்கிய அவன் தந்தையும் மேலே வரமுடியாமால் அங்கேயே மயங்கி விழுந்தார். வெளியிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் பக்கத்து வீட்டினர் இருவர் உள்ளிறங்க அவர்களும் மேலே வரமுடியாமல் உயிர் துறந்தனர். வெறும் நூறு ரூபாய் நான்கு உயிர்களைக் காவு கொண்டுள்ளது.

ஆனால் அரசாளும் அகிலேஷுக்கோ அவர் தந்தை முலாயமுக்கோ ஏழைகள் பற்றி என்ன புரியும். அவர்களின் சொத்துக்களோ தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கின்றதே..

1977-ஆம் ஆண்டு வெறும் 77000 மதிப்பிலிருந்த முலாயம் சிங்கின் சொத்து 1993 ஆம் ஆண்டு அவர் அளித்த வருமான வரி அறிக்கையின் படி ரூபாய் 18¼ லட்சம். 2005 ஆம் ஆண்டில் அவர் வசமுள்ள சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 4½ கோடிகள். 1993-2003 வரையான 12 வருடங்களில் அவர் வருமானம் ரூ.6¼ கோடியாகவும் செலவுகள் ரூ.4½ கோடியாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆக அவர்களின் சொத்து மதிப்பு உயர்வு ரூ.1¾  கோடியாக இருக்க வேண்டும். ஆக, சுமார் ரூ.2½ கோடி சொத்து வருமானத்திற்கு அதிகமான சொத்து என்று சி.பி.ஐ.-ஆல் போடப்பட்டுள்ள வழக்கு சுப்ரீம் கோர்டில் இன்னமும் நிலுவையில் உள்ளது. [எப்பொழுதெல்லாம்  மத்திய அரசுக்கும் (காங்கிரஸ் என்றும் படித்துக் கொள்ளலாம்) சமாஜ்வாதி கட்சிக்கும் பிணக்குள் வருமோ அப்பொழுதெல்லாம் இந்த வழக்குத் தூசி தட்டப்படும் (உதா. அமெரிக்க ந்யூக்லியர் 123 உடண்பாடு, குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரே நாளில் முலாயம் அடித்த பல்டி)]. மேற்கூறிய சொத்துக்கள் அனைத்தும் காகித மதிப்புகள். இதன் 2005-ஆம் ஆண்டு சந்தை மதிப்பு 100 கோடி என்று சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதன் விவரங்கள்...

எண்
சொத்து
மதிப்பு
2005 ஆம் ஆண்டு சந்தை மதிப்பு
1.
எடாவா ஃப்ரெண்ட்ஸ் காலணி வீடு
56000
1 கோடி
2.
லக்னௌ ரமணா தில்குஷ் பண்ணை
20 லட்சம்
4 கோடி
3.
லக்னௌ ஹஸரத் கஞ்ச்
35 லட்சம்
12 கோடி
4.
சைஃபையில் உள்ள விவசாய நிலம்
5.4 லட்சம்
2 கோடி
5.
எடாவா சிவில் லைன்ஸின் உள்ள ப்ளாட்
10 லட்சம்
8 கோடி
6.
சைஃபையில் உள்ள சௌத்ரி சரண்சிங் கல்லூரி
10000
½ கோடி
7.
சைஃபை வீடு
20000
10 லட்சம்

இதைத் தவிர, முலாயாம், அவர் மனைவி காலம் சென்ற மாலதி தேவி, அகிலேஷ், அவர் மனைவி டிம்பிள் ஆகியோரின் நகைகள், அவர்கள் பெயரில் உள்ள முதலீடுகள், இருப்புத் தொகைகள் என்று பலவற்றைப் பட்டியலிட்டுள்ளது. இது அனைத்தும் 2005-ஆம் ஆண்டுச் சந்தை மதிப்பு. இன்று இதன் மதிப்பு மேலும் அதிகரித்திருக்கும் என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை...

உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி வளர்ச்சித் திட்டங்களை கவனிக்காமல் சிலைகளுக்கும் தலைவர்கள் பெயரில் அழகுப் பூங்காக்களுக்கும் அதிக நேரத்தையும் செலவிட்டதைத் தேர்தல் சமயத்தில் அதிகம் விமர்சித்தது சமாஜ்வாதி கட்சி. ஆனால், தற்போது அகிலேஷ் யாதவ், உத்திர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் மாயாவதி அமைத்ததைவிடப் பெரிய அதிக செலவிலானப் பூங்காக்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், இது போன்ற மூடப்படாத சாக்கடைகளுக்கும் பள்ளங்களுக்கும் செலவிட அரசாங்கங்களிடம் பணம் இருப்பதில்லை. திட்டக்குழுத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா ரூ.32/- சம்பாதித்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழாக இருப்பவராகக் கருதப்பட மாட்டார் என்று கூறியது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாட்டில் ஏழைகளின் உயிர் இந்த 32 ரூபாய்க்கும் குறைவாகவே நம் அரசாங்கங்களால் கருதப்படுகின்றன என்பது மீண்டும் நிரூபணமாகின்றது....