வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

'சிட்டுக்குருவி'

விட்டு விடுதலை யாகிநிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடுகட்டிக் கொண்டு
முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலு
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று

என்றுச் சிட்டுக்குருவியைப் பாடிக்காட்டி, நம்மை விட்டுவிடுதலையாகி நிற்கக் கட்டளையிடுகிறான் மகாகவி. ஆம் அவனுக்குக் காக்கை குருவி எல்லாமே நமது ஜாதிதானே.

ஆனால் சமீபகாலமாகச் சிட்டுக்குருவியைக் காண்பதே அரிதாகியுள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் வீட்டின் அருகில் ஒரு குருவியைக் கூடக் காணமுடியவில்லை.  தில்லியில் கோடைக்காலங்களில் காலை 4-5 மணிக்கே ஜன்னலில் அவை ஓசையெழுப்பி நம்மை விழிக்கச் செய்யும். சென்ற மூன்று நான்கு வருடங்களில் அலாரத்தின் ஒலிதான் எழுப்புகிறதே ஒழிய குருவியின் சத்தம் கேட்கவே முடியவில்லை.

இதற்கு, நகரமயமாக்கல் தான் காரணம் என்று ஒரு தரப்பினரும் செல்போன்களும் அவற்றின் Tower-களினால் ஏற்படும் மின்காந்த அதிர்வும் தான் காரணம் என்று மறு தரப்பினரும் விவாதித்து வருகிறார்கள். தில்லியில் சமீபத்தில் TERI (சக்தி ஆராய்ச்சி மையம்) நடத்திய ஆய்வில் மாடப்புறாக்களின் ஆதிக்கம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. சான்றாக அவர்கள் குறிப்பிடுவது, 2006-க்குப் பிறகு காக்கை, மைனா, குருவி ஆகியவற்றின் எண்ணிக்கைக் குறைவாகும் அதே நேரத்தில் இந்த மாடப்புறாக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார்கள். இதனால், இவற்றின் அதிகரிப்பால் (அவற்றின்) உணவுப் பகிர்தலில்  ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆராய்ச்சியாளர் நீரஜ் கேரா.

தற்போது Nature Forever Society என்ற அமைப்பு எடுத்த தன்னார்வ முயற்சியால் தில்லி அரசு இந்த சுதந்திர தினத்தில் சிட்டுக்குருவியை மாநிலத்தின் பறவையாக அறிவித்துள்ளது. மீண்டும், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழலை உருவாக்கத் தேவையான ஆராய்ச்சிகளை ஊக்கிவித்துள்ளது.

தில்லி அரசின் இந்த நல் முயற்சியிலாவது மீண்டும் குருவிகளின் ‘கீச் கீச்’ சத்தத்துடன் நம் காலைப் பொழுது விடிய வேண்டும் என்பதே நம் விருப்பம்.

அதுவரை, நாம் தான்
          ’சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா – நீ
           விட்டு பிரிந்து போன பின்னும் அன்பு மாறல’         என்று பாடவேண்டும்…

6 கருத்துகள்:

  1. Good initiative by Delhi Govt. Let us hope Chittu kuruvis are back again

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறந்த முயற்சி.... இனி சிட்டுக் குருவிகளை படங்களில் மட்டும் தான் பார்க்க வேண்டும் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முயற்சியிலாவது சிட்டுக்குருவி மீண்டும் கண்ணில் படவேண்டும் என்பதே விருப்பம்.
      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  3. நல்ல முயற்சி. இங்கே எனது வீட்டருகில் சில கிளிகள், குருவிகள், அணில்கள் என துயிலெழுப்புகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணில்களும், புறாக்களும் இருக்கின்றன; நாரைகள் கூட இருக்கின்றன. புறாக்கள் அதிகமானதால் கழுகுகளும் அதிகமாகிவிட்டன. ஓரிரு மைனாக்கள் கூட பார்க்க முடிகிறது. சிட்டுக்குருவிதான் அரிதாகிவிட்டது.

      நீக்கு