புதன், ஜனவரி 20, 2021

குடியாட்சியும் குடியரசும்



சமீபத்தில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற்றது. அதில் Democractic கட்சியும் Republic கட்சியும் போட்டியிட்டன. இதில் Democratic கட்சி வெற்றி பெற்று அக்கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராகப் பதிவியேற்கிறார்.

 

இரண்டு கட்சிகளின் கொள்கைகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால், பொதுவாக இக்கட்சிகளின் பெயர்களான Democratic (ஜனநாயகம்/குடியாட்சி) என்பதற்கும் Republic (குடியரசு) என்பதற்கும் என்ன வேறுபாடு என்பதைப் பார்போம்.

 

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் – அதாவது 1776, ஜூலை 4-ஆம் நாள் – அமெரிக்க சுதந்திர பிரகடனப் படுத்திய பொழுது 13 தனித்தனி காலனிகளாக இருந்த அவை இணைந்து அவை அனைத்திற்கும் இயைந்த ஒரு கூட்டாட்சி அமைக்க முடிவெடுத்தன. அப்போது அமெரிக்காவில் ”குடியாட்சி – குடியரசு” ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று மாறிமாறி பயன்படுத்தப்பட்டன; ஆனால், "மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஆட்சி என்ற சொல்லாடல் அப்போது பயன்படுத்தப்படவில்லை.

 

பொதுவாக, அமெரிக்க மக்களாட்சித் தத்துவம் பழங்கால கிரேக்க ரோம அரசியல் தத்துவங்களிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய இரு அமைப்புக்களிலும் சட்டமன்ற அடிப்படையிலான அமைப்பு முறைகளுக்கு தேர்வு இருந்து ஆட்சி நடந்தாலும் இரண்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அந்த அதிகாரம் மன்னர் (அ) தலைவரிடமே இருந்தது. அமெரிக்காவும் கிட்டத்தட்ட அதே போன்ற தலைவரிடம் அதிகாரம் குவிந்த ஒரு அரசையே நிறுவ தலைப்பட்டது.

 

கிட்டத்தட்ட அதே  நேரத்தில் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர், பிரிட்டிஷ் அமைப்பு முழு அளவிலான பாராளுமன்ற அரசாங்கமாக விரிந்தது. ஆனால் அதற்கு முன்னரே, ஐக்கிய அமெரிக்க அரசியல் சட்டத்தை உருவாகி விட்டது. எனவே அமெரிக்க அரசியல் சட்டம்,  பிரிட்டனின் அரசியலமைப்பை ஒட்டிய – வாக்காளர்களின் முழு தேர்வில் அமைந்த  ஒரு பாராளுமன்ற அரசாங்கத்தைகூறுகளைப் பெரிதாகக் கொண்டிருக்கவில்லை.

 

ஆரம்பத்தில், அரசியல் அமைப்பு உறுப்பினர்களிடையே மக்களாட்சி பற்றிய சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் மக்களாட்சியின் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் சிறு குழப்பம் ஏற்பட்டு அது சில மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது அதன் உறுப்பினரான ஜேம்ஸ் மேடிசன் (இவர் பின்னர் அமெரிக்காவின் 4-ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்) ஃபெடரலிஸ்ட் என்ற கட்டுரைத்தொடரில் (இவை மேடிசன், அலெக்சாண்டர் ஹாமில்டன், ஜான் ஜெ மற்றும் சிலரால் எழுதப்பட்ட 80-85 கட்டுரைகள்) ”தூய ஜனநாயகம்” என்பதைப் பற்றிய இரண்டு நிலைகளை எடுத்து வைத்தார். அவை "அரசாங்கத்தை நேரடியாக ஒன்றுசேர்த்து நிர்வகிக்கும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான குடிமக்களை கொண்ட சமூகம்"  மற்றும் "பிரதிநிதித்துவத் திட்டத்தின் அடிப்படையில்  நடைபெறும் ஒரு அரசாங்கம்" ஆகியவை ஆகும்.

 

மேடிசன், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் தலைவரைக் கொண்ட ஒரு சிறிய அளவிலான அரசாங்கம் என்பதை குடியாட்சி (Democracy) என்ற பொருளிலும்;  அதுவே நாடு பெரிதாக விரவடையும் பொழுது அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி என்பதை குடியரசு (Republic) என்ற பொருளிலும் இரண்டயும் வகைப்படுத்தினார்.

 

ஆனாலும், மேடிசன் தன் குடியரசு வரையரையைப் பரந்த வாக்காளர்களைக் கொண்ட மாநிலங்களுக்குப் பயண்படுத்த மறுத்தது மற்ற உறுப்பினர்களிடம் சலசலப்பை உறுவாக்கியது

 

1787 நவம்பரில், இரண்டு மாதங்களுக்குப் பின்னர், ஒத்திவைக்கப்பட்ட மாநாடு மீண்டும் கூடிய பொழுது சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களுள் ஒருவரான ஜேம்ஸ் வில்சன் ஒரு புதிய வகைப்பாடு ஒன்றை முன்மொழிந்தார்.

 

அவர் அரசாங்கங்களை மூன்று வகையாக பட்டியலிட்டார். அவை முடியாட்சி, சீரியோர் ஆட்சி, ஜனநாயக (குடியரசு) ஆட்சி ஆகியவை ஆகும். என்றும் முடியாட்சியில்,  உயர்ந்த அதிகாரம்  ஒரு தனிநபரிடத்தில் குவிந்திருக்கும்; சீரியோர் ஆட்சியில், வம்சாவளி, தனிப்பட்ட தகுதி அல்லது பிராந்திய தகுதியை வைத்து தங்களுக்குள் தேர்வு செய்த பிரதிநிதியைக் கொண்டு செய்யும் ஆட்சி; குடியாட்சியில், மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. என்றும் கூறினார்.

 

சில மாதங்களுக்குப் பின்னர் வர்ஜீனியாவில் நடைபெற்ற மாநாட்டில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் எதிர்கால தலைமை நீதிபதியான ஜான்மார்ஷல், "எந்த அரசரோ அல்லது ஜனாதிபதியோ (மக்களால் தேர்வு செய்யப்பட்ட) பிரதிநிதித்துவ அரசாங்கத்தை கீழறுக்க முடியாத - நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஜனநாயகத்திற்கான - உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது என்று அறிவித்தார்.

 

இந்த வகைப்படுத்தலுக்கும் இப்போதைய அமெரிக்க கட்சிகளின் பெயர்களுக்கும் பெரிதாக ஒன்றும் ஒற்றுமை இல்லை. இருந்தாலும் அவற்றின் பெயர்களின் வரலாறு அவைத் துவங்கிய நேரத்தில் இருந்த நிலையை ஒட்டியதே ஆகும். இன்றைய நிலையில் குடியாட்சி / மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு ஆட்சியை குறிக்கிறது. இதில் மக்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவரை நேரடியாகத் தேர்வு செயவர். குடியரசு என்பது மக்களின் பிரதிநிதிகள் அரசு என்ற அமைப்பை அல்லது அர்சு இயந்திரத்தை இயக்கும் இயக்குநராகச் செயல்படச் செய்யும் ஒரு அமைப்பாகும். 


இந்தியச் அரசியலில் குடியாட்சி - குடியரசு ஆகியவற்றை பின்னர் வேறு பதிவில் பார்க்கலாம், இப்போது அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகியவை தோன்றிய நிகழ்வுகளைப் பார்ப்போந்ம்.

 

அமெரிக்க சுதந்திர பிரகடனத்திற்குப் பின், மேடிசன். சுதந்திரப் பிரகடனத்தின் முக்கிய வடிவமைப்பாளரும் அமெரிக்காவின் எதிர்கால மூன்றாவது ஜனாதிபதியுமான தாமஸ் ஜெபர்சன், ஜான் மார்ஷல் மற்றும் பலருடன் இணைந்து துவங்கிய அரசியல் கட்சி, ஜனநாயக-குடியரசுக் கட்சி என்று அழைக்கப்பட்டது.

 

1824-இல் ஜனநாயக-குடியரசு கட்சியைச் சேர்ந்த - ஆண்ட்ரூ ஜாக்சன், ஜான் க்வின்ஸி ஆடம்ஸ், வில்லியம் க்ராஃபோர்ட்,  ஹென்றி க்லே – ஆகிய நால்வர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். எவருக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை. அதிக வாக்குகள் பெற்ற ஜாக்சனை – பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) அதிபராகத் தேர்ந்தெடுக்காமல் அவரைவிட குறைவான வாக்குகள் பெற்ற  ஆடம்ஸ்-ஐ அதிபராகத் தேர்வு செய்தது. [அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலில், பிரதிநிதிகள் சபையின் தீர்மாணமே இறுதியானது. இதனால் தான் தற்போது அங்கு தீர்மாணம் நிறைவேற்றும்/அறிவிக்கும் நாளில் கலவரம் நடந்தது.] சபை ஆடம்ஸ்-ஐ அதிபராக்கக் காரணம், குறைந்த வாக்குகள் பெற்ற க்லே, தான் போட்டியிலிருந்து விலகுவதாகவும் தனக்கு வாக்களித்த கெண்டகி மாநில வாக்குகளை ஆடம்ஸ்-க்கு விட்டுக் கொடுப்பதாகவும் அறிவித்ததே. [இத்தனைக்கும் கெண்டகி மாநில சபை ஜான்சனுக்கு ஆதரவாகத் தீர்மானம் வேறு நிறைவேற்றியிருந்தது]. ஆடம்ஸ் அதிபரானதும் க்லேவிற்கு அவர் மந்திரி சபையில் முதலிடம் வழங்கப்பட்டது. இதனால் கட்சி  பிளவுபட்டது. பின்னர், பிளவுபட்ட கட்சியின் சார்பில் 1828-இல் ஜான்சன் வெற்றிபெற இவருடைய கட்டுப்பாட்டில் இருந்த கட்சி ஜனநாயக கட்சி என்று மாற்றம் பெற்றது.

 

குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதன் வரலாறு, 1832-ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி அதிபரான ஆண்ட்ரூ ஜான்சனுக்கு எதிராக இயங்கிய விக் (Whig) கட்சியிலிருந்து துவங்குகிறது. விக் என்ற பதம் விக்மோர் என்ற ஸ்காட் இயக்கத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது. [விக்மோர் இயக்கம் பிரிட்டனின் எதேச்சையதிகார அரசருக்கு எதிராக ஸ்காட்லாண்டில் போராடிய இயக்கம்]. அதிபர் ஜான்சன், அடிமை ஒழிப்பிற்காக மக்கள் சபை இயற்றிய தீர்மானங்களையும் சட்ட வடிவங்களையும் தன் veto சக்தியைப் பயன்படுத்தி தடுத்துவந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரே ஒரு பெரிய அடிமைப் பண்ணையின் உரிமையாளர். இதனால், அவரின் எதேச்சையதிகாரத்தை சுட்டிக்காட்ட அவரை ’அரசர் ஜான்சன்’ என்றும் அதை எதிர்க்க தங்கள் கட்சிக்கு விக் கட்சிஎன்றும் பெயரிட்டனர். ஆரம்பத்தில், விக் கட்சி அடிமை முறையை ஒழிக்கப் போராடுவதில் முனைப்பைக் காட்டியது. பின்னர், விக் கட்சி ஆட்சியில் அமர்ந்த பொழுது, புதிதாகச் சேர்ந்த பகுதிகளில் அடிமை ஒழிப்பை செயல் படுத்த போதிய முனைப்பைக் காட்டவில்லை. இதனால் கட்சி பிளவுபட்டது.

 

[இந்த விக் கட்சியே க்லே-வின் தலைமையில் தான் துவங்கப்பட்டது. க்லே கொள்கையளவில் அடிமை முறைக்கு எதிரானவர். ஜான்சன் அடிமை முறையை ஆதரிப்பவர். ஆடம்ஸ்-க்கு அவர் ஆதரவளிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம். தனிப்பட்ட முறையில் அவருக்கு ஆடம்ஸ்-இன் அமைச்சரவையில் முதலிடம் கிடைத்தாலும் அதன் மூலம் அடிமை முறையை அழிக்க அப்பதவி உதவும் என்பதும் அவர் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஏனென்றால், பின்னர் அடிமை ஒழிப்பின் முக்கிய தலைவராகக் கருதப்படும் ஆபிரஹாம் லிங்கன், க்லே-வையே தன் முன்னோடியாகக் குறிப்பிடுகிறார்]

 

பிளவுபட்ட விக் கட்சியினர் சிலரும், ஜனநாயகக் கட்சியில் சேராத பழைய  ஜனநாயக-குடியரசுக் கட்சியினரும் ஒன்று கூடி 1958-இல் நடத்திய மாநாட்டில் குடியரசுக் கட்சித் துவக்கப்பட்டது. [பொதுவாக, ஆபிரஹாம் லிங்கன் தான் இதைத் துவக்கியதாக எல்லோராலும் கருதப்பட்டாலும் இதைத் துவக்கியவர், ஜேக்கப் மெரிட் ஹோவர்ட் என்பவரே]. பின்னர், ஆபிரஹாம் லிங்கன் இக்கட்சியில் இணைய, 1860-இல் அவர் அமெரிக்க அதிபராக ஆனார். பின்னர் அமெரிக்க உள்நாட்டுப் போர்களினால், மீண்டும் தேசிய கூட்டுக் கட்சி என்ற பெயரில் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து போராட கட்சி அவரை அதிபர் வேட்பாளராகவும் ஜான்சனை துணை அதிபராகவும் அறிவித்தது. அத்தேர்தலில் வெற்றிபெற்ற லிங்கன் அதிபரான அடுத்த ஆண்டே கொல்லப்பட, துணை அதிபரான ஜான்சன் அதிபராக ஆனார்.

 

ஆக அடிமைமுறைக்கு எதிராகப் போராடுவதற்காகத் துவங்கப்பட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் ஆட்சியில் கருப்பர்கள் அடிமைப் படுத்தப்படுவதற்காக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பது பெரிய நகைமுரண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக