புதன், நவம்பர் 21, 2012

இந்திய-சீனப் போர்


நவம்பர் மாதம் 21-ஆம் நாள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சீனா இந்தியாவுடனானத் தன் ஒரு மாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து போர் நிறுத்தத்தை அறிவித்தது.

இந்திய-சீனப் போருக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுவது எல்லைப் பிரச்சனை. இந்திய-சீன எல்லை என்பது சுமார் 3448 கி.மீ. நீளம் கொண்டது. பொதுவாக, இந்த எல்லைப் பிரச்சனை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கூறப்படுகிறது. அவை…

(அ)    மேற்குப் பகுதி:      இது ஜம்மு-காஷ்மீருக்கும் ஸிங்ஜியாங்–இற்கும் இடைப்பட்ட பகுதி. சீனா இந்தியாவின் 43000 ச.கி.மீ பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. இதில் 5180 ச.கி.மீ. பாகீஸ்தானால் சீனாவிற்குக் கொடுக்கப்பட்டது

(ஆ) மத்தியப் பகுதி:         இது ஹிமாசலம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களும் திபெத்தும் இணையும் எல்லைப் பகுதி. இங்கு ஷிப்கி-லா, கௌரிக், புலம், தக்-லா, பராஹொரி, பிங்ரி-லா, லப்தால், சங்கா ஆகியப் பகுதிகளை இந்தியா-சீனா இரண்டும் சொந்தம் கொண்டாடின.

(இ) கிழக்குப் பகுதி:         சீனா இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தின் 90000 ச.கி.மீ. பகுதியை (முக்கியமாக தவாங், பும்-லா, அஸப், லோ-லா ஆகியவை; இதில் தவாங் பகுதி, சியாசின் போல இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது) தனதாகச் சொந்தம் கொண்டாடியது.

1947-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா, அதற்கு முன் பிரிட்டனும்-சீனாவும் அதற்கு முன் கொண்டிருந்த எல்லைகளையே சீனா-வுடனான தனது எல்லையாக வரிந்து கொண்டது. பிரிட்டனைப் பொருத்தவரை 1914-ஆம் ஆண்டு சிம்லாவில் நடந்த மாநாட்டில் இந்திய, சீன, திபெத், ஸிங்யாங் ஆகியவற்றின் எல்லையாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டு வர முயன்றது. இந்த எல்லை, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாப் (ரஞ்சித் சிங்) அரசு திபெத் வரை கொண்டிருந்த எல்லையை அடிப்படையாகக் கொண்டது. சீனா அதிகார பூர்வமாக இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 1914-ஆம் ஆண்டில் மக்மோஹன் கோடு தான் இந்திய-சீன எல்லையாக முன்னெடுக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை அது இந்திய எல்லை மேற்கில் கரகோரம் கணவாயின் முனையிலிருந்து கிழக்கில் தெம்சோக் வரை நீண்டிருக்கிறது என்பதைத் தவிர மற்றவற்றை அதிகார பூர்வமாக ஏற்கவில்லை.

இதற்கு முன்னரே 1899, 1905 ஆகிய ஆண்டுகளில் கரகோரம் கணவாயின் கிழக்குப் பகுதிதயை சீன எல்லையாக எடுத்த முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டவில்லை.

[பிரிட்டனைப் பொறுத்தவரை பத்து பன்னிரண்டு முறை எல்லையைத் தீர்மாணிக்க குழுக்களை அமைத்தது. ஆனால் அக்குழுக்கள் சர்வதேச எல்லைகளை வரையறுப்பதைத் தங்கள் குறிக்கோளாகக் கொள்ளாமல் அப்போதைய அரசியல் நிலைப்பாடுகளைச் வெளிப்படுத்த அல்லது சமன் செய்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. உதாரணமாக ரஷ்யா ஸிங்யாங் பகுதியைத் தாக்கிய பொழுது அதைச் சீனப் பகுதியாகக் காட்ட முயன்றது. காரணம் ரஷ்யா பிரிட்டனின் இந்தியப் பகுதிகளைத் தாக்க இதைத் தாண்ட வேண்டும் எனவே இது கம்யூனிஸ்ட் சீனாவின் பகுதியாக இருந்தால் – ரஷ்யா அதைத் தாக்காது என்பதால் – இது ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று கருதியதுதான்.]
பிரிட்டனின் கீழ் இந்தியா இருந்தவரை சீனா-வும் வலுவான நிலையில் இல்லை. அதனால், சீனா இந்திய எல்லைப் பிரச்சனையை அதுவரை முன்னெடுக்கவில்லை. 1949-க்குப் பிறகு மாவோ-வின் தலைமையில் சீனா வலிமைப் பெற்று பின் 1951-இல் திபெத்தை இணைத்துக் கொண்டபின் நிலைமை தலைகீழாக மாறியது. அதன் பின் இந்திய-சீனப் போருக்கு அடிப்படையான நிகழ்வுகள் பின் வருமாறு…

அக்டோபர், 1950 இல் சீனா திபெத்திய எல்லையைக் கடந்து லாசா-வை நோக்கிப் புறப்பட்டது

ஏப்ரல், 1954-இல் நேரு சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு சீன பிரதமர் சூஎன்லாய்-யுடன் இணைந்து இந்திய-சீன வியாபார மற்றும் நல்லுறவு ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து மே மாதம் சீனாவும் இந்தியாவும் பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் செய்து கொண்டன. சீனப் பிரதமர் சூஎன்லாய் இந்தியா வந்து பஞ்சசீல கொள்கையை மீண்டும் உறுதிபடுத்தி இரு தரப்பு பேதங்களை சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள உறுதியளித்தார்.

மார்ச், 1955-இல் சீனா வெளியிட்ட வரை படத்தில் இந்திய வட எல்லைப் பகுதிகளை சீனப்பகுதிகளாகக் காட்டப்பட இந்தியா அது பஞ்சசீல கொள்கைக்கு முரணானது என்றுக் குற்றம் சாட்டியது.

நவம்பர், 1956-இல் சூஎன்லாய் இரண்டாவது முறையாக இந்தியா வந்து இரு தரப்பிலும் சுமூக நிலையைக் கொண்டுவர முயன்றார்.

செப்டம்பர், 1958-இல் சீன வரைபடத்தில் வடக்கு அசாமின் பகுதிகளும் வடகிழக்கு எல்லை பகுதிகளும் (தற்போதைய அருணாசல பிரதேசம்) இணைக்கப் பட்டதை இந்தியா அதிகார பூர்வமாக மறுத்தது.

ஜனவரி, 1959-இல் முதன் முறையாக சீனா (பிரதமர் சூஎன்லாய்) இந்தியாவின் (லடாக், அருணாசலபிரதேசம்) 40000 சதுர மைல்களைத் தனதாகக் கூறியது.

ஏப்ரல், 1959-இல் தலாய் லாமா லாசா-விலிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்தார்.

ஆகஸ்ட், 1959-இல் சீனப்படை கிழக்கு லடாக்கில் இந்திய படையின் கூடாரத்தைத் தாக்கி ஒரு வீரர் மறைந்தார்.

செப்டம்பர், 1959-இல் சீனா மக்மோகன் கோட்டை ஏற்க மறுத்து சிக்கிம், பூடானின் 50000 சதுர மைல்களை தனதாகச் சொந்தம் கொண்டாடியது.

அக்டோபர், 1959-இல் சீனா இந்திய எல்லைக் காவலர்களைத் தாக்கி ஒன்பது பேரைக் கொன்றது; பத்து பேரைச் சிறை பிடித்தது.

ஏப்ரல், 1960-இல் நேரு-வும் சூஎன்லாயும் தில்லியில் சந்தித்துப் பேசினர்; பேச்சு வார்த்தை எந்தத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியுற்றது.

ஜூன், 1960-இல் சீனா வடகிழக்கில் ஷிப்கி கிராமத்தில் எல்லை மீறி நுழைந்தது.

பிப்ரவரி, 1961-இல் சீனா மேலும் 12000 சதுர மைல்களைக் கைப்பற்றியது.

அக்டோபர், 1961-இல் சீனா எல்லைப்பகுதிகளில் மேலும் தனது படைகளைக் குவித்தது.

டிசம்பர், 1961-இல் இந்திய பிரதமர் நேரு-வும் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனும் ‘முன்னோக்கியக் கொள்கை’ என்ற ஒன்றை உருவாக்கினர். அதன்படி சீனா படைகுவிப்பு நடத்திய இடங்களை ஒட்டி இந்தியாவும் படைக் குவிப்பை நடத்துவது என்பது தான் திட்டம். இந்த நேரத்தில் அப்பொழுதைய சர்வதேச அரசியல் நிலை மிகவும் முக்கியமானது. நேரு சர்வதேச அளவில் குறிப்பாக ஆசியாவின் மிகப் பெரிய தலைவர். சீனா கிட்டத்தட்ட ஒரு தனிமைப் படுத்தப்பட்ட நாடு. இந்தியாவிற்கு ரஷ்யா-வின் ஆதரவு உண்டு. அதனால் அது இந்தியாவை ஆதரித்து வந்தது. அமெரிக்கா எந்நிலையிலும் சீனா-வை ஆதரிக்காது. எனவே, சீனா பயந்து பணிந்துவிடும் என்பதே இருவரின் கணிப்பு. ஆரம்பத்தில் இந்த கொள்கை கைகொடுத்தது என்பதும் உண்மை. இந்திய படை குவிந்த இடங்களில் சீனா தனது படை குவிப்பை குறைத்துக் கொண்டது.

ஏப்ரல், 1962-இல் சீனா இந்தியாவின் படைக் குவிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது.

செப்டம்பர், 1962-இல் சீனா தங்-லா பகுதியில் மக்மோகன் எல்லையைத் தாண்டி இந்திய படையின் கூடாரத்தைத் தாக்கியது.

அக்டோபர் 20, 1962 சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்தது. சீனா இந்தியாவின் மீது போர் தொடுத்த இந்த நேரம் மிகவும் முக்கியமானது. ’ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக் காத்திருக்கும் கொக்கு’ என்பது போல இந்த நிலைக்காகவே காத்திருந்தது சீனா. ஏனென்றால் இதற்கு 10-நாட்களுக்கு முன் தான் க்யூபா-வின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்தது. உலக நாடுகள் அனைத்தும் இது அடுத்த உலகப் போராக மாறிவிடக் கூடாதே என்று கவலைக் கொண்டிருந்ததால் அவை சீனா-விற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை சீனா உணர்ந்திருந்தது. ஒரு வருடம் முன்பே படைக் குவித்திருந்தாலும் அப்பொழுது தைவானின் தாக்குதல் நடக்கும் சாத்தியக்கூறு இருந்ததால் சீனா ஒரு வருடம் காத்திருந்தது.

நவம்பர் 15, 1962 சீனப்படைகள் அருணாசலப் பிரதேசத்தின் தவாங், வாலாங் பகுதிகளைக் கைப்பற்றி ரெசங்-லா பகுதி, சௌஷால் விமான நிலயம் ஆகியவற்றைத் தாக்கியது.

நவம்பர் 18, 1962 சீனா அருணாசல பிரதேசத்தின் பொம்டி-லா பகுதியைக் கைப்பற்றியது.

நவம்பர் 21, 1962 சீனா போர் நிறுத்தத்தை அறிவித்து எல்லைப் பகுதியிலிருந்து (Line of Actual Control) 20 கி.மீ தூரத்திற்குப் படைகளைத் திரும்பப் பெற்றது.

இந்தப் போரின் பின் புலத்தையும் அதைச் சார்ந்த அரசியலையும் பிறகு விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

15 கருத்துகள்:

  1. நல்ல தெளிவான தொகுப்பு. அப்போ படையோட பார்டரைப் புடிச்சான். இப்போ குறைந்த விலை படைப்போட பலரையும் புடிக்கிறானே!!

    (கள்ளன நம்பினாலும் குள்ளன நம்பாதேன்னு சைனாக்காரன மனசில வச்சுத்தான் எங்க பாட்டா சொன்னாரோ!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீணட நாட்களுக்குப் பின் வந்துள்ளீர்கள்!

      வருகைக்கு நன்றிகள். இதன் தொடர்ச்சியை எழுதியுள்ளேன். படித்துக் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

      (அடைப்புக் குறிக்குள் இருப்பதில் உள்குத்து எதுவும் இல்லையே)

      நீக்கு
  2. பதிவுக்கு நன்றி.உங்கள் பதிவை வரவேற்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. வரலாற்று உண்மைகள் விளக்கிய விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான அலசல்.

    பத்மநாபன் அண்ணாச்சி... :)

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிந்தத் தகவல்களைப் பகிர எடுத்த முயற்சியே இந்த வலை!
      இதில் தவறுகள் தெரிந்தால் யாராவது சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளமுடியும் என்பதும் காரணம்.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  6. நல்லதொரு அலசல் + தகவல்கள்... அடுத்த பகுதிக்கு செல்கிறேன்... tm2

    பதிலளிநீக்கு
  7. 'சிங்கநாதம் கேட்குது
    சீன நாகம் ஓடுது - நம்
    சுதந்திரத்தின் வெற்றி வீர
    சங்கநாதம் கேட்குது'

    நீங்கள் எழுதி இருக்கும் சீனப் போரின் சமயத்தில் பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் ஒலிக்கும்.

    தெருக்களில் பெரிய திரை போட்டு, சிவாஜி, ஜெமினி ஆகியோர் நமது படையில் சேருவது போலவும், சாவித்திரி, சரோஜா தேவி ஆகியோர் தமது நகைகளை ராணுவ செலவிற்கு தானம் கொடுப்பது போலவும் திரைப் படங்கள் போடுவார்கள்.

    நிஜமாக எதற்காக அந்தப் போர் மூண்டது என்பதை உங்கள் பதிவு படித்தபின் தான் தெரிந்து கொண்டேன்.

    இத்தனை வருடங்கள் கழித்து!

    அன்று நான் பிறந்திலேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்கள் (குறிப்பாக 1971-இல் நடந்த போர்) போல இது சரியாக ஆவணப் படுத்தப் படவில்லை. காரணம் இந்தப் போரில் இந்தியா அடைந்தத் தோல்வியே! ஆனால், இதைப் பற்றித் தெரிந்துக் கொள்வது அவசியம் என்பதால் தான் இந்தப் பதிவு.

      வருகைக்கு நன்றிகள்!

      நீக்கு
  8. சீனா போர் வேலையில் இந்தய கம்யூனிஸ்ட் தோழர்களின் தேச த்ரோக செயலை விளக்கினால் அடுத்த தலைமுறை விழித்து கொள்ளும்

    பதிலளிநீக்கு