செவ்வாய், நவம்பர் 29, 2011

கலவை – 10


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வடிவேலு காமடி போல் “நடக்கிறது ஆனால் நடக்கவில்லை” என்ற நிலையில் இருக்கிறது. எதிர்கட்சியான பாஜக, தினம் தினம் ஏதாவது புதுப் பிரச்சனையைத் துவக்கி அவையை ஸ்தம்பிக்கச் செய்து தன் கடமையை ஆற்றுகிறது. காங்கிரஸும் தன் பங்கிற்கு குழந்தையைக் கிள்ளிவிடுவது போல் ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது அவர்களுக்குக் கிடைத்திருப்பது சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு. நேரடி வெளிநாட்டு முதலீட்டைப் பொறுத்தவரை பாஜக சாதரணமாக ஆதரவு நிலைதான் எடுக்கும். ஆனால், இது காங்கிரஸின் திட்டம்; அதனால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். இடதுசாரிகள் எதிர்ப்பதிலாவது அர்த்தம் இருக்கிறது. இது அவர்கள் கொள்கைக்கு எதிரானது. ஆனால் பாஜக எதிர்ப்பதற்கு வேறு எந்த காரணமும் தெரியவில்லை.

ஒரு வழியாக கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இன்று விடுதலைச் செய்யப் படுவார். கலைஞருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால், மத்திய அரசில் காலியாக இருக்கும் அமைச்சர் பதவிக்கு யாரையும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

முல்லை-பெரியாறு அணை விவகாரம் மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்தை அடந்திருக்கிறது. நேற்று கேரள நாடாளு மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முன் “தர்ணா”வில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்கள் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாகவும் அதனால் அணை உடையும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அப்படியெனில் புதிதாக அவர்கள் அணைகட்டினால் அது உடையாதா? எந்த அளவு (ரிக்டர் அளவுகோலில்) நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அது அமைக்கப்படும். இதுவரை, நிலநடுக்க அபாயம் இல்லாத பகுதியாக இருந்த அணைபகுதியில் திடீரென அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டால், புதிதாக அணை கட்ட இருக்கும் பகுதியிலும் (இப்பொழுது நிலநடுக்க அபாயம் இல்லை) பின்னர் நிலநடுக்கம் வந்தால் அதனால் ஆபத்து வராதா? ஆனால் ஒன்று கேரள உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். முதல்வருடன் அனைத்து கட்சியினரும் சேர்ந்து பிரதமரைச் சந்தித்திருக்கிறார்கள். நம் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் இது எந்த காலத்திலும் சாத்தியமில்லை என்பது தான் நிதர்சனம்.

தில்லியில் சென்ற இருவாரங்களாக நடந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது. கடந்த எல்லா வருடங்களை விட இந்த வருடம் போக்குவரத்து மிகவும் நன்றாக சீரமைக்கப் பட்டிருந்த்து. சாதாரணமாக இந்த இரண்டு வாரங்கள் இந்த இடத்தை தினமும் கடந்து போகும் பயணிகளுக்கு கெட்ட கனவாகவே இருக்கும். ஆனால், இம்முறை இது மிகவும் நன்கு ஒழுங்குபடுத்தப் பட்டது. காமன்வெல்த் சமயத்தில் நடந்த சீரமைப்பினால் கற்ற பாடமாக இருக்கலாம். மேலும், கூட்டமும் ஒரு கட்டுக்குள்ளேயே வைக்கப் பட்ட்தும் க் கூட காரணமாக இருக்கலாம். இருந்தாலும், தில்லி காவல் துறைக்கு ஒரு ஓ!! போடலாம்.

தில்லியில் நேற்று இரண்டு பேர் சேர்ந்து ஒருவரை (27 வயது) தாக்கிக் கொன்றுள்ளார்கள். காரணம், அவர் இவர்களை ’முறைத்து’க் கொண்டே இருதாராம். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.

மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என்று வென்றுள்ளது இந்திய அணி. கடைசி போட்டியில் 3-0 என்ற வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்கள். ஆனாலும், விராட் கோஹ்லி அவுட் ஆன போது, சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்கள் வேண்டிய நிலையில்  6 விக்கெட்களையும் இழந்து  (சச்சின் முதுகு வலியுடன் சதம் அடித்து சக்லினிடம் அவுட் ஆனது) 2-1 என்றாகிவிடுமோ என்ற பயம் எழத்தான் செய்தது. இன்றிலிருந்து ஒருநாள் போட்டிகள் ஆரம்பம். தோனி இல்லை; சேவாக் தலைமை.

புதன், நவம்பர் 23, 2011

குளிர்காலடக் கூட்டத் தொடரும் காத்திருக்கும் மசோதாக்களும்



ஒரு நீண்ட இடைவேளைக்குப் பின் நேற்றிலிருந்து நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. இது அடுத்த மாதம் 23-ம் தேதி வரை நீடிக்கும்.

காத்திருக்கும் 80-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் 31 நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு சட்டமாக மாற பட்டியலிடப் பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமான சில:

  1. லோக்பால் மசோதா : மத்திய அரசு ஊழியர்களுக்கும் அரசில் பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராகச் சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓர் ஆம்பட்ஸ்மன் (ombudsman) அமைப்பை நிறுவுவதுதான் இதன் நோக்கம். இது இக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப் படாவில்ட்டால் மீண்டும் போராட்டத்தைத் துவங்க இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
  2. நீதித்துறைத் தரமும் பொறுப்பும் மசோதா : இது நீதித்துறை சமீப காலமாக தரம் இழந்து வருவதை தடுக்கக் கொண்டு வரப்பட இருக்கும் மசோதா. இது உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து கணக்கு வெல்ளியிடுவதையும் உள்ளடக்கியது.
  3. Whistleblower (தகவலளிப்பவர்!!) மசோதா : புகார் மற்றும் தகவல் அளிப்பவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அப்புகார்களை விசாரிக்க உதவும் சட்டம்
  4. அரசியல் நிர்ணய சட்ட (108வது திருத்தம்): இது ஏற்கனவே 2010-ல் மாநிலங்கள் அவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது. பல முறை தாக்கல் செய்யப் பட்ட போதும் இதை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாது என்று நிச்சயமாகக் கூறலாம். இந்த திருத்த்த்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இது தான் நாடளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தர ஏதுசெய்யும் திருத்தம்.
  5. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை & வளர்ச்சி ஆணையம் : ஒய்வூதிய நிதியினைத் தகுந்த திட்டங்களில் முதலீடு செய்யவும் அதில் முதலீடு செய்பவர்களின் நிதி பாதுகாப்பை சீரமைக்கவும் ஆணையம் நிறுவுவதற்கானச் சட்டம். பாதிக்கப் பட்டு பனகல் பார்கில் போராடும் முதியவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
  6. விதைகள் மசோதா: தரமான விதைகளை இறக்குமதி, ஏற்றுமதி செய்ய வழிவகுக்க. இதைப் பொதுவாக இடது சாரி கட்சிகளும் விவசாய அமைப்புகளும் எதிர்கின்றன. காரணம் இது பொதுவாக MNC களுக்கு ஆதரவான சட்டம் என்பதால். PT கத்திரிக்காய் என்று கேள்வி பட்டுள்ளீர்களா?
  7. சுரங்க கனிம முன்னேற்ற மசோதா : சுரங்கத் தொழிலை சீரமைக்க. இத்துறையில் கர்நாடகா, ஆந்திரா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை. பெரும்பாலும் இம்மாநிலங்களின் அரசியலையே இவை தான் தீர்மானிக்கின்றன.

இவற்றைத் தவிர நிறுவன சட்டத் திருத்தம், நேர்முக வரி திருத்தம், சேவை வரியில் திருத்தம் என முக்கியமான மசோதாக்கள் சட்டமாக்க் காத்திருக்கின்றன. இதில் முக்கியமாக விடுபட்டது, நில கையகப்படுத்தல் மசோதா, குறிப்பாக மேற்கு வங்கத்தில் த்ரிணாமுல் காங்கிரஸ் இதற்கு எதிராக இருப்பதால் இதை அரசு கையில் எடுக்கத் தயங்குகிறது என்று நினைக்கிறேன். மேலும் உத்திர பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் மாயாவதி இதை காங்கிரஸுக்கு எதிராகப் பயன் படுத்துவார்.

இவற்றைத் தவிர 23 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட உள்ளன. அவற்றுள் முக்கியமானது,
  1. அணுசக்தி சீரமைப்பு ஆணையம் (அணு உலை பாதுகாப்பு, அதன் தொழிலாளர், மக்கள் பாதுகாப்பிற்காக அணுசக்தி பாதுகாப்பு மன்றம் நிறுவப் பட உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமாகத் தான் ஏற்கனவே அவர்களின் பொறுப்பிற்கு உச்ச வரம்பு நிர்ணயித்து ஆணை பிறப்பித்தாகி விட்டதே. கண் துடைப்பிற்காக இதையாவது செய்ய வேண்டாமா?
  2. கள்ளப் பணம் தடுப்பு (திருத்தம்) மசோதா :  வெளிநாட்டிளிருந்து வரும் கள்ள பணத்தை தடுக்க முக்கிய தேவை.
  3. தேசிய உணவு பாதுகாப்பு மசோதா :  பொது விநியோக முறையை சீரமைக்க [75% சத கிராம புற மக்களுக்கும் 50% நகர் புற மக்களுக்கும் ரூ.3/-க்கு அரிசியும், ரூ.2/-க்கு கோதுமையும் ரூ.1/-க்கு தானியமும் தருவார்களாம்!!!]

ஆனால் மேற்கூறிய சட்டங்களை விவாத்திது இயற்ற அவர்களுக்கு இருக்கும் கால அவகாசம் எவ்வளவு தெரியுமா? 22 வேலை நாட்கள். ஆக மொத்தம் 54 மசோதாக்களை இதற்குள் விவாதிக்க வேண்டும்.

இவற்றைத் தவிர அரசியலும் உண்டு. ஆம் ஊழல், விலையேற்றம், கருப்புப் பணம் ஆகியவற்றோடு மாயாவதி கொளுத்திப் போட்ட உத்திர பிரதேச பிரிவினை, தெலுங்கானா பிரச்சனை என்று பல உள்குத்து வேளைகளும் உள்ளன. நேற்றைய தினம் விலைவாசி பிரச்சனைபின் அரசின் நிலையை ஓட்டெடுப்பிற்கு விட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்து விட்டன. பாஜாக வேறு சிதம்பரத்தைப் பேச விடுவதில்லை என்று தீர்மாணித்திருக்கிறது. ஆக மேற்கூறிய சட்டங்களில் சில விவாதமின்றியே (அதாவது அதிலுள்ள நன்மை தீமைகளைப் பற்றி யாருக்குமே தெரியாமல்) நிறைவேறும். சில எப்போதும் போல அடுத்தக் கூட்டத்தொடருக்குக்காக கிடப்பில் போடப்படும்.   

பின் குறிப்பு:   நாடாளுமன்றம் இழக்கும் ஒரு நிமிடத்திற்கு சுமார் ரூ.25000/- நஷ்டம் (அரசு கஜானாவிலிருந்து அதாவது திருவாளர் மக்களின் பணம்).

திங்கள், நவம்பர் 21, 2011

கலவை – 9


மல்லையாவைக் கைத்தூக்கிவிடுவோம் என்று எழுதி ஒரு வாரம் கூட ஆகவில்லை, இது தான் சமயமென்று நிதி அமைச்சகம் விமானப் போக்குவரத்துத் துறையில் 24 சதவீதம் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (Foreign Direct Investment) அனுமதிக்க உள்ளது. இது பல நாட்களாகவே அரசின் திட்டத்தில் இருந்தாலும் அத்துறை நிறுவனங்களின் எதிர்ப்பால் அதற்கு அனுமதிக்கவில்லை. இப்போதைய ‘கிங்பிஷர்’-இன் நிலைமையைக் கண்டு இதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு தான் தீர்வு என்ற துறை வல்லுநர்களின் கூற்றுக்காகவே காத்திருந்தது போல் மத்திய அரசு இப்போது இதற்கு அனுமதி தந்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமை வேண்டுமானால் சீராகுமே தவிர மக்களுக்கு அதன் பலனாக போக்குவரத்து செலவு குறையுமா என்பது புரியவில்லை. பொதுவாக, இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின்  முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று முதலில் சில சலுகைகளைத் தந்து பின்னர் போட்டியிலிருக்கும் இந்திய நிறுவனங்களை மூழ்கடித்துத் துரத்திவிட்டு பின் சுரண்டத் தொடங்குவர். நம் கண் முன்னரேயே பெப்ஸி, கோக் நிறுவனங்கள் முதலில் ரூ.5/- க்கு விற்ற அதே அளவு பானத்தை இன்று ரூ.22/-க்கு விற்கிறார்கள். இடையில், இந்திய நிறுவனங்கள் தாக்கு பிடிக்க முடியாததால் தொழிலை விட்டுவிட்டன அல்லது அவற்றின் பிரபலமான brand-கள் (limca, thumpsup போன்றவை) இவற்றாலேயே வாங்கப்பட்டது தான் மிச்சம். ஆனால், இப்போதைக்கு இதன் அனுமதி வெறும் 24% என்பது தான் ஒரே ஆறுதல்.

தில்லி மெட்ரோ ரயில் சேவையின் நான்காம் கட்டத்தின் திட்ட விரிவாக்க அறிக்கைத் தயாரிக்கப் பட உள்ளது. இதன் படி, ஏழு புதிய இணைப்புகள் நடக்க இருக்கின்றன. அவை:
1.    யமுனா – லோனி எல்லை (11.97 கி.மீ)
2.    ஜனக்புரி (மே) – முகுந்த்புரி (18.74 கி.மீ)
3.    முகுந்த்புரி – தில்ஷாத் கார்டன் (17.54 கி.மீ)
4.    கீர்த்திநகர் – த்வாரகா (செ.28) (18.7 கி.மீ)
5.    பதர்பூர் – தில்லி ஏரோசிட்டி (20.79 கி.மீ)
6.    லாஜ்பத் நகர் – மதன்கீர் (7.33 கி.மீ)
7.    ஆசாத் பூர் – ராமக்ருஷ்ணா ஆஷ்ரமம் (8.3 கி.மீ)
மேற்கூறிய இணைப்புகள் நிறைவேறினால் தில்லி மெட்ரோ ரயில் லண்டன் மெட்ரோவை விட நீளமானதாக ஆகிவிடும். இது வரை காலக்கெடுவுக்குள் தன் புதுத் தளங்கள் மற்றும் இணைப்புகளை நிறைவேற்றியுள்ள DMRC இதையும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் என்று நம்புவோம்.

இங்கே கூடங்குளத்தில் புதிய அணு உலை திறப்பிற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ஈரானில் இதற்கு நேர் எதிர் நிலை. டெஹ்ரானில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தில் அணு உலையை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமன்றி ஆயுதம் தயாரிக்கவும் பயன் படுத்துகிறது என அமெரிக்காவும் பிரிட்டனும் புகார் கூறியுள்ளன. ஈரான் அரசும் இதை மறுத்துள்ளது. ஈராகிலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை (தவறாக) சதாமுக்கு எதிராகக் கூறியது நினைவுக்கு வருகிறது.

சென்ற வாரம், வினோத் காம்ப்ளி 1996 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் (இந்தியா-இலங்கை இடையே நடைபெற்றது) அணிக் கூட்டத்தில் முதலில் மட்டையாட்த் தீர்மானித்ததாகவும் ஆனால், டாஸில் வென்றதும் (அசார் தன்னிச்சையாக) முதலில் இலங்கையை விளையாட அனுமதித்த்தில் ஏதோ உள் நோக்கம் இருந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், அணியின் அப்போதைய பயிற்சியாளர் கெய்க்வாட் மற்றும் அணைத்து ஆட்டகாரகளும் (சித்து நீங்கலாக) மறுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் இது காலந்தவறிய குற்றச்சாடு. இந்தக் குற்றச்சாட்டை அவர் அப்போதே (ஏனெனில் அப்போது அசார் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அவர் தனிமை படுத்தப் பட்டிருந்தார். அதாவது அவர் influence-இல் இல்லை; அந்த சமயத்தில் அவர் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் நம்பப் பட்டிருக்கும்) அதைவிட்டு இப்பொழுது கூறுவதை “கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது” என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அன்றைய தேதியில் இலங்கை நல்ல chaser-களாக இருந்தார்கள்; தவிர தில்லியில் நடந்த லீக் போட்டியில் சச்சின் சதம் அடித்தும் முதலில் விளையாடிய இந்தியா தோற்றது. அதனால், பொதுவாக ரசிகர்கள் மத்தியிலேயே இந்தியா முதலில் பந்து வீச வேண்டும்; அப்படி வீசினால் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடாமல் சற்று நிதானமாக ஆடுவார்கள் (யார் ஜெயசூர்யா கலு ஜோடியா என்று எதிர்கேள்வி கேட்பது புரிகிறது) மைதானமும் fresh ஆக இருப்பதால் துவக்க ஆட்டக் காரர்களால் அடிக்க முடியாது என்று தான் பேசிக் கொண்டோம். அது ஓரளவு நல்ல முடிவாக துவக்க ஆட்டக் காரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். (அரவிந்தா வேறு திட்டம் வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்?). அதே போல, இந்திய வீரர்கள் 92/2 என்ற நிலையிலிருந்து சச்சின் அவுட் ஆனவுடன்108/8 என்று மாறியதிலும் ”ஏதோ” நடந்திருக்கிறது என்கிறார். ஆனால், வல்லுநர்கள் புதிதாக இடப்பட்ட மைதானம் உடைந்தது தான் காரணம் என்று அன்றைய தினம் comment செய்தனர்; இதைப் பற்றி மைதானத்தில் அவுட் ஆகாமல் இருந்த காம்ப்ளி கூறுவது தான் சரியாக இருக்கும் என்று கொண்டாலும், இத்தனைக் காலம் கழித்து இதைக் கூறுவது சரியில்லை என்பது தான் என் கருத்து.

கடைசியாக படித்ததில் பிடித்தது,

”ராஜராஜ சோழனுக்குப் பின் ”அம்மா” அரசாண்டிருந்தால்…..
பெரிய கோவில், பெரியாஸ்பத்திரி ஆகியிருக்கும்.”
Mummy Returns!!!

வியாழன், நவம்பர் 17, 2011

உத்திர பிரதேசத்தின் எதிர்காலம்



நேற்று மாயாவதி உத்திர பிரதேசத்தை நான்கு – பஷ்சிம் ப்ரதேஷ், ஆவாத் ப்ரதேஷ், புந்தேல்கந்த், பூர்வாஞ்சல் - புதிய மாநிலங்களாக மாற்ற சட்டசபைத் தீர்மாணம் இயற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

உத்திர பிரதேசம் சுமார் 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், இன்றைய நிலையில் சுமார் 20 கோடி மக்கள் தொகையையும் (அதாவது தேசத்தின் 16% மக்கள் தொகை) கொண்ட ஒரு பெரிய மாநிலம். எனவே அது ஒரு கட்டுபாடற்ற மாநிலமாக இருப்பதாகவும், அதை நான்காகப் பிரிப்பதுதான் தீர்வு என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கானா விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாத காங்கிரஸ், இது மிகவும் நாசூக்கான விஷயம் என்று கருத்து கூறியுள்ளது. பாஜக-வோ இது மக்களைத் திசை திருப்பும் வெறும்  கண் துடிப்பு நாடகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளன. ஆக, இவர்களின் நிலை என்ன என்று வெளிப்படையாக இன்னமும் சொல்லவில்லை.

மறைமுகமாக பாஜக சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப் படுவதையே விரும்பும் என்று நினைக்கிறேன். தெலுங்கானா  விலும் சற்றேரக் குறைய இதே நிலைதான். ஏனென்றால் அதில் ஒன்றிரண்டு முதலமைச்சராக ஆக வாய்ப்பு கிட்டும். புள்ளிவிவரங்களை மாற்றி கட்சி வளர்ந்துள்ளதாக – அதாவது 2000 ஆண்டில் அத்தனை முதல்வர்கள், இன்று இது இத்தனையாக உயர்ந்துள்ளது – என்று காட்டிக் கொள்ளலாம்.

காங்கிரசுக்கும் ஓரளவு ஏற்புடையதாக – atleast யுவராஜனின் கைங்கர்யத்தால் வென்றதாகக் கணக்கு காட்ட உதவும் என்பதால் – ஏற்புடையதாகவே இருக்கும். மேலும், சில வருடங்களுக்கு முன்பே ராகுல் உத்திர பிரதேசத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் (அப்போது உத்திர பிரதேசத்திலிருந்து ஹரீத் ப்ரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த அஜித் சிங் – முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகன் – உடன் கூட்டு வைத்திருந்ததால் கூட இருக்கலாம். (அது அஜித் சிங் பலமாக இருந்த அவர் ஜாதியை சேர்ந்த ஜாட்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதை ஊகித்திருந்தால் நீங்கள் இந்திய அரசியல் வாதிகளைப் பற்றி சரியாகப் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று பொருள்). ஆனால், இன்றைய நிலையில் இது தெலுங்கானா பிரிவினைக்கு போராடுபவர்களுக்கு மேலும்  சாதகமாக இருக்கும் என்பதால் அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம்.

மாயாவதியைப் பொறுத்தவரை இது உடனடியாக நடக்காது என்பது அவருக்கு நன்கு தெரியும். அதே நேரம் தேர்தல் வருவதால் மக்களைத் திசைத் திருப்ப வேண்டிய கட்டாயம். [மேலும், அப்படியே பிரிக்கப் பட்டாலும் இரண்டு மாநிலத்தில் – at least பச்சிம் ப்ரதேசத்திலாவது – அவருக்கு வாய்ப்பு கிட்டும். அவர் ஒருவருக்கு தானே, அதுவே போதும். இரண்டு மாநிலம் ஆகிவிட்டால், மம்தா பானர்ஜி யாருக்கு மத்திய அமைச்சர் பதவி  கொடுப்பது என்று குழம்பியது போல் குழப்பம் வேறு வரும்.] ஏதோ குட்டையைக் குழப்பலாம் என்று தான் இதை அறிவித்திருப்பதாகவேத் தெரிகிறது. ஆனாலும், பிரிவினைக்கான விதையைத் தூவிவிட்டு விட்டார்.

[ஒரு சின்ன diversion : நோய்டாவைப் பொருத்தவரை மாயாவதிதான். நோய்டாவின் இன்றைய முன்னேற்றம் தில்லியின் வளர்ச்சியை ஒட்டியதாகவும், தேசிய தலைநகர் பகுதியில் இடம் பெற்றிப்பதாலும் என்றாலும் கூட, இங்குள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் அவரின் செயல்கள் யாராலும் மறுக்க முடியாது. அதிலும், முலாயாம் ”அம்மா” ஜெயலலிதாவின் சிஷ்யனாக முந்தைய மாயாவதி அரசின் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் நிறுத்தியது, பஸ் வசதிகளில் செய்த குளறுபடிகள் ஆகியவற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மேலும், அவரது சொந்த தொகுதி வேறு நோய்டாவை ஒட்டி இருக்கிறது.]

முலாயம் சிங்கைப் பொறுத்தவரை இது மாயாவதியின் திட்டம் அதனால் அனைவரும் எதிர்பார்த்தபடியே அவரும் இதை எதிர்த்து அறிக்கை விட்டுவிட்டார்.

இந்தியாவிற்கு பெரும்பாலான பிரதமர்களைத் தந்து இந்திய அரசியலைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த உத்திர பிரதேசம் இன்னும் எத்தனை நாள் இந்திய வரைபடத்தில் முழுமையாக இருக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் தர இயலும்.


புதன், நவம்பர் 16, 2011

மல்லையாவை கைத்தூக்கி விடுவோம்


சென்ற ஒரு வாரமாக ஒரு விஷயம் தான் நாட்டு மக்கள் அனைவருக்கும்  தீராத கவலையாக மனதை வாட்டி வருகிறது. அது விஜய் மல்லையாவின் “கிங்பிஷர்” நிறுவனம் அடைந்துள்ள 7000 கோடி நஷ்டமும் தான்.

பாவம் விஜய் மல்லையா 7000 கோடி நஷ்டம் ஏற்பட்டால் அவரால் என்ன செய்ய முடியும்? எப்படி IPL, Grant Prix  போன்றவற்றில் ஈடுபடமுடியும்? புது வருடம் வேறு வருகிறது. மாடல் அழகிகளை எப்படி படம் பிடித்து calendar வெளியிட முடியும். அவர் மகனை எப்படி Bollywood நடிகைகளுடன் பழக வைக்கமுடியும். டாஸ்மாக் supply வேறு பார்க்க வேண்டும். அவருக்கு எத்தனை கவலைகள்.

மேலும் அவர் நாம் விமானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்றுதானே நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விமான நிறுவனம் நடத்துகிறார். அது மட்டுமா அதே தொழிலில் இருக்கும் indigo நிறுவனம் மக்கள் மேல் அக்கரையின்றி லாபம் அடைந்து –  அதற்கு காரணம் நல்ல நிர்வாகம் என்று பொய் கூறி – வருவதை  போலல்லாமல் மக்களுக்காகவே உழைக்கும் நிறுவனம் அதுவல்லவா? அதனால் தான், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வரப் போகிறார் என்பது தான் அனைவருடைய பிரார்த்தனையாக இருக்கும்.

மேலும்,  மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி!!! என்பதையும் கவனிக்க வேண்டும்.

நம் பிரதமருக்கு மிகவும் இளகிய மனம். அதனால் தான் விஜய் மல்லையாவின் கவலைகளை நன்கு புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய நினைக்கிறார் போலிருக்கிறது.

இல்லையென்றால் தினம் தினம் உயரும் விலைவாசி பிரச்சனை - உணவு, பெட்ரோல் பொருட்களின் விலையேற்றம் அதை தொடர்ந்து ஏறு முகமாகவே இருக்கும் inflation, பெருகிவரும் ஊழல், தெலுங்கானா, கூடங்குளம் ஆகியவற்றின் மக்கள் போராட்டங்கள் போன்ற நாட்டின் தலையாய பிரச்சனைகளில் வாயையே திறக்காமல் மேலிடத்தின் உத்தரவிற்காகக் காத்திருந்த பிரதமர் மன்மோகன்சிங், இப்போது கிங்பிஷர்-ஐ bailout செய்வதைப் பற்றிக்  கவலைப் பட்டுள்ளார்.
 எனவே.  அவரை bailout செய்து கைத்தூக்கிவிடுவது நம் கடமை.
இல்லையென்றால் அவர்க்கென்ன இருக்கவே இருக்கிறது, ABCL-ல் அமிதாப் செய்தது போல் ஒரு மஞ்சள் காகிதம் கொடுத்தால் போதும். நஷ்டப்படப் போவது அந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களும் அவருக்கு கடன் கொடுத்த SBI வங்கியும் தானே.
என்ன SBI-இல் இருப்பது யாருடைய பணம்? முதலீட்டாளர்கள் சாதாரண மக்கள் இல்லையா? என்று தானே கேட்கிறீர்கள்.

உங்களுக்கு குசும்பு அதிகம் தான். நீங்கள் இந்தியாவில் தானே இருக்கிறீர்கள். இன்றைய தேதியில் விற்கும் விலைவாசியில் வங்கியில் பணம் சேமிக்கவோ பங்குகளில் முதலீடு செய்யும் அளவுக்கு வசதியாக மக்கள் இருக்கிறார்களா?

எனவே, விஜய் மல்லையாவைக் கைத்தூக்கிவிடுவது அரசின் கடமை. சரிதானே!!!