செவ்வாய், நவம்பர் 29, 2011

கலவை – 10


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வடிவேலு காமடி போல் “நடக்கிறது ஆனால் நடக்கவில்லை” என்ற நிலையில் இருக்கிறது. எதிர்கட்சியான பாஜக, தினம் தினம் ஏதாவது புதுப் பிரச்சனையைத் துவக்கி அவையை ஸ்தம்பிக்கச் செய்து தன் கடமையை ஆற்றுகிறது. காங்கிரஸும் தன் பங்கிற்கு குழந்தையைக் கிள்ளிவிடுவது போல் ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது அவர்களுக்குக் கிடைத்திருப்பது சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு. நேரடி வெளிநாட்டு முதலீட்டைப் பொறுத்தவரை பாஜக சாதரணமாக ஆதரவு நிலைதான் எடுக்கும். ஆனால், இது காங்கிரஸின் திட்டம்; அதனால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். இடதுசாரிகள் எதிர்ப்பதிலாவது அர்த்தம் இருக்கிறது. இது அவர்கள் கொள்கைக்கு எதிரானது. ஆனால் பாஜக எதிர்ப்பதற்கு வேறு எந்த காரணமும் தெரியவில்லை.

ஒரு வழியாக கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இன்று விடுதலைச் செய்யப் படுவார். கலைஞருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால், மத்திய அரசில் காலியாக இருக்கும் அமைச்சர் பதவிக்கு யாரையும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

முல்லை-பெரியாறு அணை விவகாரம் மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்தை அடந்திருக்கிறது. நேற்று கேரள நாடாளு மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முன் “தர்ணா”வில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்கள் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாகவும் அதனால் அணை உடையும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அப்படியெனில் புதிதாக அவர்கள் அணைகட்டினால் அது உடையாதா? எந்த அளவு (ரிக்டர் அளவுகோலில்) நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அது அமைக்கப்படும். இதுவரை, நிலநடுக்க அபாயம் இல்லாத பகுதியாக இருந்த அணைபகுதியில் திடீரென அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டால், புதிதாக அணை கட்ட இருக்கும் பகுதியிலும் (இப்பொழுது நிலநடுக்க அபாயம் இல்லை) பின்னர் நிலநடுக்கம் வந்தால் அதனால் ஆபத்து வராதா? ஆனால் ஒன்று கேரள உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். முதல்வருடன் அனைத்து கட்சியினரும் சேர்ந்து பிரதமரைச் சந்தித்திருக்கிறார்கள். நம் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் இது எந்த காலத்திலும் சாத்தியமில்லை என்பது தான் நிதர்சனம்.

தில்லியில் சென்ற இருவாரங்களாக நடந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது. கடந்த எல்லா வருடங்களை விட இந்த வருடம் போக்குவரத்து மிகவும் நன்றாக சீரமைக்கப் பட்டிருந்த்து. சாதாரணமாக இந்த இரண்டு வாரங்கள் இந்த இடத்தை தினமும் கடந்து போகும் பயணிகளுக்கு கெட்ட கனவாகவே இருக்கும். ஆனால், இம்முறை இது மிகவும் நன்கு ஒழுங்குபடுத்தப் பட்டது. காமன்வெல்த் சமயத்தில் நடந்த சீரமைப்பினால் கற்ற பாடமாக இருக்கலாம். மேலும், கூட்டமும் ஒரு கட்டுக்குள்ளேயே வைக்கப் பட்ட்தும் க் கூட காரணமாக இருக்கலாம். இருந்தாலும், தில்லி காவல் துறைக்கு ஒரு ஓ!! போடலாம்.

தில்லியில் நேற்று இரண்டு பேர் சேர்ந்து ஒருவரை (27 வயது) தாக்கிக் கொன்றுள்ளார்கள். காரணம், அவர் இவர்களை ’முறைத்து’க் கொண்டே இருதாராம். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.

மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என்று வென்றுள்ளது இந்திய அணி. கடைசி போட்டியில் 3-0 என்ற வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்கள். ஆனாலும், விராட் கோஹ்லி அவுட் ஆன போது, சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்கள் வேண்டிய நிலையில்  6 விக்கெட்களையும் இழந்து  (சச்சின் முதுகு வலியுடன் சதம் அடித்து சக்லினிடம் அவுட் ஆனது) 2-1 என்றாகிவிடுமோ என்ற பயம் எழத்தான் செய்தது. இன்றிலிருந்து ஒருநாள் போட்டிகள் ஆரம்பம். தோனி இல்லை; சேவாக் தலைமை.

4 கருத்துகள்:

  1. கலவை நல்ல அலசல்..
    கண்காட்சிக்கு நீங்க போகலையா?
    முறைத்ததற்காக கொலையா!!!:(((

    பதிலளிநீக்கு
  2. கலவை நல்லா இருக்கு சீனு....

    எங்கே சென்று கொண்டு இருக்கிறோம்.... இப்போதெல்லாம் அடிக்கடி அப்படி கேட்க வேண்டும் போல இருக்கிறது தில்லியில் நடக்கும் நிகழ்வுகள் பார்த்தால்.....

    பதிலளிநீக்கு
  3. //கலவை நல்ல அலசல்.//
    நன்றி.

    //கண்காட்சிக்கு நீங்க போகலையா?//
    இல்லை. உன் (கண்காட்சி) பதிவு படித்தேன். நன்றாக இருந்தது. உடனே பின்னூட்டம் எழுத முடியவில்லை.

    //முறைத்ததற்காக கொலையா!!//
    ஆம். அது மெல்ல வாக்குவாதமாக மாறி, அடிதடி, கொலை..

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றிகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு