வெள்ளி, ஏப்ரல் 27, 2012

பெண்களுக்குத் தலைக்கவசம்


 
சில தினங்களுக்கு முன் ஒரு பொதுநல வழக்கில் தில்லி அரசு, இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் தலைக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறியதை இங்கே எழுதியிருந்தேன்.

இப்பொழுது, தில்லி உயர் நீதி மன்றம் (முக்கிய நீதிபதி ஏ.கே.சிக்ரி மற்றும் நீதிபதி ராஜீவ் சஹாய் அடங்கிய பெஞ்ச்) இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் பெண்கள் தலைக் கவசம் அணிய வேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இதற்கு ஏதுவாக விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர அரசுக்கும் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசின் மோட்டர் வாகனச் சட்டம், 1993-ஐப் பொறுத்தவரை பெண்களுக்குத் தனியாக சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றாலும், தில்லி அரசு, 1999-இலிருந்து இதை அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டது. மோட்டர் வாகனச் சட்டத்தின் 129-வது பிரிவின் படி, சீக்கிய ஆண்களைத் தவிர மற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். ஆனால், சென்ற பிப்ரவரியில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்மனுவில் – தில்லி மாநில மோட்டர் வாகன விதியின் 115-வது பிரிவின் படி – பெண்களுக்கு தலைக்கவசம் அணிவது விருப்பத்தேர்வாக ஆக்கப்பட்டது என்றும் அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது என்றும் கூறியது.

இது பற்றி பொது நல வழக்குத் தொடுத்த சமூக ஆர்வலர் திரு.பி.ஆர்.உல்லாஸ், பாதுகாப்புச் சட்டங்கள் அனைவருக்கும் தேவை; அதில், மதம் பால் ஆகியவற்றின் அடிப்படையில் சலுகைகள் என்ற பெயரில் ஓட்டைகளை ஏற்படுத்தக் கூடாது என்று தன் மனுவில் கூறியிருந்தார். அதை ஒட்டியே தற்பொழுது தில்லி உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

தில்லி காவல் துறை இதை வரவேற்றுள்ளது. பெரும்பாலான விபத்துகளில் தலையில் அடிபடுவதுதான் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது என்பதே இதன் காரணம்.

இதற்கிடையில் தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் கமிட்டியின் தலைவர் பஜன் சிங் வாலியா கருத்து கூறுகையில், தங்கள் மத விதிகளின் படி ஆண்கள் தலைப்பாகையும் பெண்கள் தலையிம் முந்தானையையும் தவிர வேறு ஏதும் அணியக் கூடாது என்றும், இது அவர்கள் மத விதிகளுக்குப் புறம்பானது; எனவே, அரசு தங்கள் மதத்தினருக்கு இதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு, காவல் துறை சீக்கிய பெண்கள் என்று தனியாக பிரித்துப் பார்ப்பது கடினம்; எனவே, அனைவருக்கும் இந்த விதியைப் பொதுவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆக, பெண்கள் தலைகவச விவகாரத்தில் தில்லி காவல் துறை தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

குறட்டையும் குழிகளும்

தில்லியில், எங்கள் நண்பர்களில் ஒருவர் மிகவும் அதிகமாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவர் விட்ட குறட்டையின் அளவு மிகவும் அதிகம். ஒருமுறை நாங்கள் ரயிலில் பயணம் செய்த பொழுது, இரவில் பக்கத்து கூபேயில் இருந்து திட்டு கூட கிடைத்தது

பொதுவாக வார இறுதியில் என் வாசம் அந்த நண்பர்களின் அறையில் தான் இருக்கும். அப்பொழுது, நான் படுப்பது (கவனிக்கவும் தூங்குவது இல்லை) அவர் அருகில் தான் (மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள்).

எங்களால் அதிக கேலி செய்யப்பட்ட நபர் என்றால் அது அவராகத் தான் இருக்கும். எவ்வளவு கேலி செய்தாலும் அதைப் பெரும்பாலும் சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார் என்பது வேறு விஷயம்.

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நாள் அவருடைய தந்தையார் தில்லி வந்திருந்த பொழுது அவரைத் திட்டி உடனே மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். பின்னர் தான் தெரிந்தது அவருக்கு sinusitis கோளாறு இருப்பது தெரிந்தது. அதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டார். ஆனாலும், குறட்டை மட்டும் நிற்கவில்லை.

சற்று மாதங்களுக்கு முன் தில்லி வந்திருந்த அந்த நண்பர் இரவு என் வீட்டில் தங்கிய பொழுது அவரிடமிருந்து குறட்டை சத்தமே இல்லை. விசாரித்ததில், அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் குறட்டை நின்றுவிட்டதாகவும் கூறினார்.

சில தினங்களுக்கு முன் ஒரு செய்தியில் இந்தியாவில் சுமார் 13½ கோடி மக்களுக்கு – அதாவது எட்டு பேரில் ஒருவருக்கு – sinusitis குறைபாடு இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது ஜப்பானிய மொத்த மக்கள் தொகையை விட அதிகம். இது சர்கரை நேய், இதய நோய், ஆஸ்துமா ஆகியவற்றை விட அதிகம். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு இந்த குறைபாடுகள் தொடர்ந்தால், அது பரம்பரை நோயாகும் அபாயமும் இருக்கிறதாம்.

மூக்கு, கன்னம், தொண்டைக்குழாய் ஆகிய பகுதிகளின் எலும்புகளில் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய 5 ஜோடி குழிகள் இருக்கின்றன; இவை மூக்குக் குழாயில் இணைக்கப்பட்டுள்ளன. நாம் சுவாசிக்கும் பொழுது sinus என்று அழைக்கப்படும் இக்குழிகளில் பிராணவாயு நிரம்பி வழுவழுப்பான பொருள் உருவாகிறது. இது க்ரீஸ் போல காற்றில் உள்ள தூசிகளை வழுக்கி வெளியேற்ற உதவுகிறது. குளிர்காலத்தில் இது அதிக அளவில் சளியாக மாறி வெளியேறும். சில நேரங்களில் அந்த சளி கெட்டியாகி குழியை அடைத்து விடும். அந்த சளி மேலும் மேலும் சேர்ந்து கெட்டியாகி முகம், கண் ஆகியவற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். தூங்கும் போது மூக்கில் அடைப்பு உண்டாகி வாய் வழியாக மூச்சு விடுவதால் குறட்டைச் சத்தம் உண்டாகிறது.  

இந்தியாவிலேயே பம்பாய் பகுதியில் தான் இந்த குறைபாடு உள்ளவர்கள் அதிகமாம். அந்த நகரின் ஈரப்பத்துடன் சேர்ந்த சுற்றுச்சூழல் மாசு தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கிறார்கள்.

சுய மருத்துவம் செய்து சளியை மூக்கிலேயே தங்கவிடாமலிருந்தால் இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.        

வியாழன், ஏப்ரல் 19, 2012

நகராட்சித் தேர்தல் முடிவுகளும் நாற்காலி கனவுகளும்

நடந்து முடிந்த புது தில்லியில் நகராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 272 வார்டுகளில் 138-ஐக் வடக்கு தில்லியின் 104 வார்டுகளில் 59-ம்; கிழக்கு தில்லியின் 64 வார்டுகளில் 35-ம்; தெற்கு தில்லியின் 104 வார்டுகளில் 44-ம்  கைப்பற்றியுள்ளது.  

இந்த முடிவுகளைப் பார்த்தவுடன் பாஜக மாநில சட்டமன்றத் தேர்தலை வெல்லும் கனவைக் காண ஆரம்பித்துள்ளது.

உண்மையில் இந்த முடிவுகள் பாஜக-வுக்கு ஆதரவு அலை தானா? பாஜக-வின் கனவு நிறைவேறக் கூடியது தானா?

முதலில் நடந்து முடிந்தது நகராட்சித் தேர்தல்கள் தான். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இல்லை. மக்களின் தினச் சேவைகளுக்கான பொது ஊழியர்களின் தேர்வு தானே தவிர மாநில ஆட்சிக்கான கருதுகோளாகக் கொள்வது சரியல்ல.

அடுத்து, பாஜக உண்மையில் இந்தத் தேர்தலில் தன் இடங்களை இழந்து தான் உள்ளது. ஆம், 2007-ல் நடந்த நகராட்சித் தேர்தலில் பாஜக பெற்ற இடங்கள் 164 இடங்கள்; ஆக தற்போது பாஜக தன் 26 இடங்களை இழந்துள்ளது. மேலும், காங்கிரஸ் சென்ற, நகராட்சியில் பெற்ற 67 இடங்களை விடத் தற்போது, 11 அதிகமாக, 78 வார்டுகளைப் பெற்றுள்ளது.

மேலும், 2007-ல் நகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற பாஜக-வால் 2008 மாநிலத் தேர்தல்களில் வெல்ல முடியவில்லை. அது மட்டுமன்றி, தொடர்ந்த பாரளுமன்றத் தேர்தல்களில் 7-ல் ஒன்றைக் கூட வெல்ல முடியவில்லை.

சாதாரணமாக மற்ற வட மாநிலங்களைப் போலிலாமல் தில்லியைப் பொறுத்தவரை பாஜக அல்லது காங்கிரஸ் என்று இரண்டு கட்சிகளுக்குத் தான் மக்கள் ஆதரவு இருக்கும். ஆனால், இம்முறை மற்ற கட்சிகள் 56 இடங்களைப் பெற்றுள்ளன; இதில், ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுள்ள தேசியவாத காங்கிரஸும் அடக்கம். ஆக, பாஜக-வின் இந்த வெற்றிக்குக் காரணமே அவர்களுக்கு எதிரான வாக்குகள் சிதறியது தான்.

தவிர, என்ன தான் குற்றம் கூறினாலும் காங்கிரஸ் முக்கிய மந்திரியாக ஷீலா தீக்ஷித்-ஐ நிறுத்த முடியும்; அதற்கு அவருக்கு சோனியாவின் ஆதரவு மட்டுமே போதும். ஆனால், பாஜகவிடம் முக்கிய மந்திரியாக அடையாளம் காட்ட யாரும் இல்லை. விஜய் மல்ஹோத்ரா-விற்கு கட்சியிலேயே போதுமான ஆதரவு  இருப்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட மத்தியிலும் இதே நிலைமைதான்.

எனவே மக்களின் ஆதரவு பாஜகவுக்கு முழுவதும் சாதகமாக இருப்பதாகக் கூற முடியாது. காங்கிரஸ் சரியான கூட்டணி அமைத்தால் பாஜக-வின் கனவு கனவாகவே இருக்க வேண்டியது தான்.

ஆனால், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கிறது. அதற்குள் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

பார்ப்போம்…..

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

புது தில்லி நகராட்சித் தேர்தல்


சென்ற ஞாயிறன்று புது தில்லியில் நகராட்சித் தேர்தல் நடைபெற்றது. 


இதற்கு முன் இருந்த நகராட்சித் தேர்தலுக்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்யாசம் இருக்கிறது. அது என்னவெனில், இதற்கு முன் மொத்த தில்லியும் (புது தில்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தவிர மற்றயவை) தில்லி நகராட்சி என்ற பெயரால் ஒரே நகராட்சியாக இயங்கிவந்த ஒன்று மூன்றாகப் வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி நகராட்சிகளாக பிரிக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. இந்த நகராட்சிகளின் 50 சதவீத  வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டவை என்பது இதன் சிறப்பம்சம்.

15-ஆம் தேதி நடந்த இந்தத் தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 50-55 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறை நானும் தேர்தல் வேளைகளில் ஈடுபடுத்தப்பட்டேன். தென் தில்லி நகராட்சிக்கு உட்பட்ட 200-வது வார்டின் 45வது வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் பொறுப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டன. இதற்கு முன் தேர்தல் பணிகள் புரிந்திருந்தாலும், வாக்குச்சாவடியின் முதன்மை அதிகாரப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை.

இந்த  தேர்தல் பணிகளுக்கானப் பயிற்சிகள் சென்ற 9-ஆம் தேதியன்றும் 11-ஆம் தேதியன்றும் தரப்பட்டன.

தேர்தலன்று காலை 6 மணிக்கு வாக்கு இயந்திரங்கள் வருவதற்கு முன் வாக்குச்சாவடியை அடைந்து முன்னேற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் அன்று காலை 4.30 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி 5.45க்குள் வாக்குசாவடியை அடந்தேன். என்னுடன் பணிபுரிய நியமிக்கப்பட்ட நண்பர்களும் நேரத்திற்கு வந்து முன்னேற்பாடுகளைச் செய்ய உதவி புரிந்தனர்.

சரியாக, 6 மணிக்கு வாக்கு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அவற்றின் நிலையைப் பரிசோதித்து, அவற்றின் இயங்கு நிலைகளைச் சீரமைக்கவும், 7 மணிக்கு போட்டியாளர்கள் நியமித்த அவர்களின் ஊழியர்கள் வரவும் சரியாக இருந்தது. அவர்களின் பணி நியமனங்களைச் சரிபார்த்து அவர்களுக்கு நியமனச் சீட்டுகளை வழங்கி 7½ மணிக்கு இயந்திரம் சரியாக இயங்குவதை அவர்களுக்கு  ஒரு ஒத்திகைத் தேர்தலை நடத்திக் காட்டி 7.50க்கு  இயந்திரத்தை சீல் செய்தோம்.

சரியாக, 8.00 மணிக்குத்  தேர்தல் துவக்கம்  முறைப்படி அறிவிக்கப்பட்டது. நாங்கள் பணிபுரிந்த இந்த வார்ட் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கீடு செய்யபட்டது. மொத்தம்,  9 போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். எங்கள் வாக்குச் சாவடியில் மொத்தம் 870 வாக்காளர்கள். மாலை 5.30 மணிக்கு தேர்தல் முடியும் வரை மொத்தம் 390 வாக்குகள் (43%) பதிவாகின. பின்னர். இயந்திரத்தை சீல் வைத்து ஏஜெண்டுகளிடம்  தேர்தல் கணக்கின் நகலை ஒப்படைப்பது, மற்ற சட்ட ரீதியான காகிதங்கள் மற்றும் அனைத்தையும் முடிக்க 6.30 மணி ஆயிற்று. பின் அந்த பள்ளியில் இருந்த மற்ற (சுமார் 20) வாக்குச் சாவடிகள் அனைத்திலும் மேற்சொன்ன பணிகள் முடிந்தவுடன் அங்கிருந்து வாக்கு இயந்திரங்கள் வைக்கும் இட்த்திற்கு அனைவரும் தகுந்த காவலுடன் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு இயந்திரத்தின் சீல் மற்றும் எண்கள் சரிபார்க்கப்பட்டு, காகிதங்களும் சரிபார்க்கப்பட்டு 10.30 மணிக்கு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டோம். வீடு வந்து சேர இரவு 12 மணியானது.

இந்த பணிகளில் தேர்தல் ஆணையம் பணியாளர்களின் வசதிக்காக மெட்ரோ மற்றும் பேருந்துகளை காலை சற்று முன்னதாக இயக்க வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி, காலை 4 மணிக்கு பேருந்துகளும் 5 மணிக்கு மெட்ரோ ரயிலும் சேவையைத் துவக்கின. எனினும் என்னைப் போன்ற வெளி மாநிலத்திலிருந்து வரும் ஊழியர்கள் சற்று திண்டாடத்தான் செய்தோம். [தில்லியில் வேளை செய்யும் ஊதியர்களில் ஹரியானா (ஃபரிதாபாத், குர்காவ்(ன்), ரோதக்) மற்றும் உ.பி. (நோய்டா மற்றும் காசியாபாத்) பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகம்.] குறிப்பாகப் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எதுவுமே செய்யப்படவில்லை. கணிணி மயமாக்கப்பட்ட இந்நாட்களில் ஊழியர்கள் வசிக்கும் இடத்திற்கு  அருகில் வாக்குச்சாவடி பகிர்ந்தளிப்பது அவ்வளவு கடினம் இல்லை. மேலும், பகுதிவாரியாகத் தனி போக்குவரத்து ஏற்பாடுகள் செய்திருக்கலாம். ஏனெனில், விடியல் காலையில் உபயோகத்தில் இல்லாத பேருந்துகளை இதற்காகப் பயன் படுத்த முடியும்.

இனிவரும் காலங்களிலாவது இது போன்ற ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

பின் குறிப்பு :         சற்று முன் வந்த தகவலின் படி பாரதிய ஜனதா கட்சி மூன்று நகராட்சியிலுமே முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.   

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

புத்தாண்டும் நாட்காட்டிகளும்

தமிழ் புத்தாண்டு என்றதும் கடந்த சில வருடங்களாக நம்மிடையே எழும் கேள்வி தையா? சித்திரையா? என்பதுதான்.

பூமியின் வட தென் பகுதிகளைப் பிரிக்கும் கற்பனைக் கோடு பூமத்திய ரேகை. அதே நேரம் பூமி 23.5 டிகிரி பாகை சாய்ந்த நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. எனவே, சூரியனின் கிரணங்கள் நேரடியாக பூமியின் பூமத்திய ரேகையை வருடத்தில் இரண்டு முறையே சந்திக்கும்; அவை, மார்ச்-21ம் தேதி, செப்டம்பர் மாதங்களின் 23-ம் தேதி. (இதில் மார்ச் மாத தினத்தை வசந்த சம நிலை நாள் – Vernal Equinox – என்றும் செப்டம்பர் மாத தினத்தை இலையுதிர்கால சம நிலை நாள் – Autumn Equinox – என்றும் கூறுவர்) இத்தினத்தில் இரவு-பகல் இரண்டும் சம நிலையில் இருக்கும். இந்த இரண்டு மாதங்களிலும் இரவு-பகல் சற்றேரக்குறைய சரிசமமாக இருக்கும். இதில் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் நுழையும் மேஷ சங்கராந்தியைத் தான் சித்திரையில் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

உலகின் பெரும்பாலான நாட்காட்டிகளின் வருடப் பிறப்பு இந்த வசந்த காலத்தில் தான் இருந்தன. க்ரேக்க ரோமானிய நாட்காட்டிகளே இன்றைய சர்வதேச நாட்காட்டிகளுக்கு அடிப்படை. ஐரோப்பியர்களின் வருடம், கி.மு. 7-ஆம் நூற்றாண்டு வரை, குளிர்காலம் முடிந்து மார்ச் மாதமே துவங்கின. [குளிர்காலம் கணக்கில் கொள்ளப் பட மாட்டாது. 30 நாட்களுடன் 10 மாதங்களைக் கணக்கிட்டு 300 நாட்கள் கொண்ட வருடம் டிசம்பரில் முடிந்தது. பின்னர், தற்போதைய காலண்டரின் துவக்க வடிவத்தில் சீரமைக்கப் பட்டு குளிர்காலமும் கணக்கில் கொள்ளப்பட்டு தற்போதைய வடிவத்தை பதினாறாம் நூற்றாண்டில் தான் அடைந்தது.]

ஆக ஈக்வினாக்ஸ்-உம் மேஷ ராசியும் தான் பொதுவாக ஆரம்பம் என்று கொள்ளப்பட்டு பெரும்பாலான நாட்காட்டிகள் வருடத் துவக்கத்தைக் கொள்கின்றன.

ஆனாலும், இதைப் பொது விதியாகக் கூற முடியாது. ஏனெனில், இந்தியாவிலேயே சில இடங்களில் (குஜராத், நேபாளம்) ஐப்பசி-யை ஆண்டுத் துவக்கமாகக் கொள்கிறார்கள். மேலும், பல்வேறு தரப்பினர் பல்வேறு நாற்காட்டிகளை உபயோகிக்கின்றனர்.

கேரளாவை எடுத்துக் கொண்டோமென்றால் விஷு-பண்டிகையை ஒட்டி சில இடங்களில் வருடப் பிறப்பு கொண்டாடினாலும், பல பகுதிகளில் (குறிப்பாக, கொல்லம் பகுதியில்) ஓணம்-பண்டிகையை ஒட்டி வருடப்பிறப்புக் கொண்டாடப்படுகிறது; இதையொட்டியே தற்போது அம்மாநில அரசு அதிகார பூர்வமாக அம்மாநில வருடப் பிறப்பாகக்  கொண்டாடுகிறது. அவ்வாறு, கொண்டாடப்படுவதால், விஷு பண்டிகை புறக்கணிக்கப்படவும் இல்லை.

எனவே, சித்திரையில் கொண்டாடுவதா அல்லது தையில் கொண்டாடுவதா என்று குழம்புவது தேவையில்லை. ஒரு பொது வழக்கமாகத் தைமாதம் ஏற்கப் பட்டு அரசு தரப்பில் பொது விழாவாகக் கொண்டாடப்பட்டாலும் தவறில்லை; அது ஏற்கத்தக்கதே. சித்திரையில் மதச் சடங்காக அதைச் சார்ந்த மக்களால் கொண்டாடப் படுவதும் இதனால் மாறிவிடும் என்றும் தோன்றவில்லை. ஊடகங்களும் வணிகர்களும் தங்கள் வணிக நோக்கில் இந்த பண்டிகையை, வேறு பெயரிலாவது, மக்களிடம் விளம்பரம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். உதாரணமாக, 10-15 வருடங்களுக்கு முன் அக்ஷய த்ரிதியை என்பது ஒரு சாதாரண தினமாகத்தான் இருந்தது. ஆனால் இன்று அது ஒரு முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. இதற்கு வணிக நோக்கத்தைத் தவிர வேறு காரணம் தெரியவில்லை. கிட்டத்தட்ட காதலர் தினமும் இவ்வாறு தான் பிரபலப் படுத்தப்படுகிறது. எனவே, இந்த மாற்றங்களை ஏற்பதும் ஏற்காத்தும் அவரவர்கள் மனம் சம்பந்தப் பட்டதே.

இந்த வருடத்தைப் பொருத்தவரை அரசுத் தரப்பிலும் சித்திரையிலேயே கொண்டாடுகிறார்கள்.
     
புத்தாண்டில் இல்லங்களிலும் ஆலயங்களிலும் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம்.

பஞ்சாங்கம் என்றால் ஐந்து விவரங்களைக் காட்டும் நாட்காட்டி தான். திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகியவையே அந்த ஐந்து விவரங்கள். இந்த அடிப்படையிலேயே மாதங்களும் வெவ்வேறு பண்டிகைகளும் கொண்டாடப் படுகின்றன.

பஞ்சாங்கங்களில், கனக்கிடுதலின் அடிப்படையில், வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று முக்கிய இரண்டு பிரிவுகள் உள்ளன.

வாக்கிய பஞ்சாங்கம் என்பது சூரிய சிந்தாந்தம் என்ற சூத்திரத்தின் அடிப்படையில் கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றின் நிலைகளைக்   கணக்கிட்டு அவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுவது. சூரிய சித்தாந்தத்தைப் போல 18-வகையான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.ந்த சூரிய சித்தாந்தத்தை இயற்றியவர் யார் என்பது தீர்மாணிக்க முடியவில்லை. கி.மு. 12-ம் நூற்றாண்டு முதல் இந்த முறை வழக்கத்தில் இருப்பதாகக் கருதப்பட்டாலும் நூல்களில் இந்த வழக்கம் துவங்கிய காலம் குறிக்கப்படவில்லை.  என்றாலும், கி.பி. 4-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆர்யபட்டரின் நூலில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதன் கணிப்பில் சில தவறுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது, உதாரணமாக, பூமி சூரியனைச் சுற்ற ஆகும் நேரம் 365.2564 நாட்கள்; ஆனால், சூரிய சிந்தாந்த அடிப்படையில் அது 365.258756 நாட்களாகக் கூறப்படுகிறது. இது சற்றேரக்குறைய 3½ நிமிட வேறுபாடு ஆகும். ஆனால், பாரம்பரிய பஞ்சாங்கங்கள் இந்த அடிப்படையிலேயே கணிக்கப் படுகின்றன.  தமிழ்நாட்டில் பாம்பு பஞ்சாங்கம் என்று கூறப்படும் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் இதன் அடிப்படையில் கணிக்கப்படுவதே.

திருக்கணித பஞ்சாங்கம் என்பவை நவீன கணக்கீடுகளின் அடிப்படையில் கோள்கள் விண்மீன்கள் ஆகியவற்றின் நிலைகள்  கணக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுவது. ஆர்யபட்டர் காலத்திற்கு முன்னரே இந்தத் திருக்கணித முறைக் கைக்கொள்ளப்பட்டது. ஆர்யபட்டரின் காலத்தில் இவை மேலும் சீரமைக்கப்பட்டன. இந்த அடிப்படையிலான கணிப்புகள் பின்னர் வந்த  வானவியல் நிபுணர்களால் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. காலிதாஸரின் ’உத்தர காலாம்ருதம்’ என்ற ஜோதிட நூலும் திருக்கணித முறையையே பரிந்துரைக்கிறது. காஞ்சி சங்கர மடம் வெளியிடும் பஞ்சாங்கம், ஆனந்த போதினி பஞ்சாங்கங்கள் திருக்கணித முறையில் கணிக்கப்பட்ட பஞ்சாங்கங்களே.

இவற்றைத் தவிர வெவ்வேறு தரப்பினர் மற்றும் வெவ்வேறு குழுக்கள் தங்களின் தேவைக் கேற்ப அக்குழுக்களின் தலைமையிடங்களின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடும். உதாரணமாக, காஞ்சி சங்கர மடம் வெளியிடும் பஞ்சாங்கம் கோள்கள், விண்மீன்கள் நிலைமை காஞ்சி நகரத்தை மையமாகக் கொண்டு கணிக்கப்படும். ஸ்ரீரங்க ஜீயர் மட பஞ்சாங்கம் ஸ்ரீரங்கத்தை மையமாக கொண்டு கணிக்கப்படும். வேறு நகரங்களில் இருப்பவர்கள் இந்த பஞ்சாங்களை உபயோகிக்கும் பொழுது அவர்கள் இருக்கும் இடத்திம் அட்ச தீர்க ரேகைகளுக்கு ஏற்ப நேர வேறுபாடுகளை சமன் (reconcile) செய்து கொள்ள வேண்டும்.

இந்த வாக்கிய-திருகணித நேர வேறுபாட்டால், இந்த வருடம் வாக்கிய பஞ்சாங்கப்படி வெள்ளி மதியமே சூரியன் மேஷ ராசியில் நுழைந்து விடுகிறது; அதனால், வெள்ளியன்று சித்திரை 1-ஆம் தேதியாகக் கொள்ளப்படும். ஆனால், திருக்கணிதப்படி இரவு 7½ மணிக்கு தான் மேஷ ராசியில் நுழைகிறது; சூரிய அஸ்தமனம் ஆகிவிடுவதால், சனிக்கிழமைதான் சித்திரை 1-ம் தேதியாகக் கருதப்படும். கேரள விஷு பண்டிகையைப் பொறுத்தவரை சூரிய உதயத்தின் பொழுது சூரியன் மேஷ ராசியில் இருக்க வேண்டும். எனவே, விஷு பண்டிகையும் சனிக்கிழமையே.

இப்போது பஞ்சாங்கம் தரும் விவரங்களைப் பார்ப்போம்….
(1)     திதி:  நாம் சாதாரணமாக தேதி என்று குறிப்பிடுவது திதி என்பதன் திரிபு. ஆனால் இந்த திதி என்பது 24 மணி நேரம் கொண்ட ஒரு ஆங்கில நாள் இல்லை. அதாவது, ஆங்கில நாட்களைப் போல் இரவு 00.00.01 மணியிலிருந்து துவங்கி அடுத்த நாள் இரவு 12.00.00 வரை கணக்கிடப் படுவது இல்லை. இவை சந்திர நாட்கள் அதாவது பிறை வளர்ச்சியை   திதியை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. இவை பிறைகளின் வளர்ச்சியை/தேய்வையே குறிக்கின்றன. மாதங்களின் நாட்கள் திதிகளைக் கொண்டே குறிக்கப்படும். பொதுவாக சூரிய உதயத்தின் பொழுது இருந்த திதியே அன்றைய திதியாகக் கருதப்படும். ஒரு திதியின் நேரம் 19.98 மணி நேரத்திலிருந்து 26.78 மணி நேரம் வரை மாறுபடும். எனவே, சில திதிகள் இரண்டு சூரிய உதயத்தைச் சந்திக்கும்; அதே நேரம் சில திதிகள் ஒரு சூரிய உதயத்தைக் கூட சந்திக்காது. திதிகள் வளர் பிறை (சுக்ல பக்ஷம் சுக்ல என்றால் வெண்மை) பிரதமையிலிருந்து பௌர்ணமி வரையும் பின் தேய்பிறை (க்ருஷ்ண பக்ஷம் க்ருஷ்ண என்றால் கருமை) பிரதமையிலிருந்து அமாவாசை வரையும் கணக்கிடப்படும்.

(2)     வாரம்: வாரம் என்பது ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு கிழமைகள் தான். இந்திய, மேற்கத்திய முறை இரண்டிலுமே கிழமைகள் வானத்தில் நாம் நம் கண்ணால் காணக் கூடிய வான்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரி பெயரிடப் பட்டுள்ளன. ஆனால், இவை எந்த அடிப்படைகளில் இந்த வரிசையில் இந்த பெயர்களைப் பெற்றுள்ளன என்பதைப் பற்றிய விவரங்கள் இதுவரை சரியாகத் தெரியவில்லை.

(3)     நக்ஷத்திரம்:          நக்ஷத்திரம் என்று சாதாரணமாகக் கூறினாலும் இதை நக்ஷத்திரக் கூட்டம் என்று கூறுவது தான் சரியாக இருக்கும். ஏனென்றால்,  சில நக்ஷத்திரங்களைத் தவிர பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்டவையே. வானத்தில் கோடிக்கணக்கான நக்ஷத்திரங்கள் இருந்தாலும், நிலவு பூமியைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் நாட்களுக்கு (27 நாட்கள் 7¾ மணி நேரம்) ஏற்ப 27 பாகங்களாகப் பிரித்து அந்த நக்ஷத்திரக் கூட்டத்திற்கு அருகில் சந்திரன் செல்வது அந்த நக்ஷத்திரமாகக் குறிக்கப் படும்.

(4) யோகம் : யோகம் என்றால் கூட்டு அல்லது இணைப்பு என்று பொருள். மனமும் உடலும் இணைந்து/சேர்ந்து ஒருங்கிணைப்பத்து தான் யோகக் கலை. இங்கு இது சூரிய சந்திர சேர்க்கை என்ற பொருளில் கூறப்படுகிறது. 27 நாட்களில் சூரியனும் சந்திரனும் மாறி மாறி வெவ்வேறு கோணங்களில் இருக்கும் அவை, 27 வெவ்வேறு பெயருடன் குறிப்பிடப்படும்.

மற்றொரு வகை யோகமும் உண்டு. அது ஞாயிறு முதல் சனி வரை உள்ள தினங்களும் நக்ஷத்திரமும் சம்பந்தப்பட்டது. வெவ்வேறு சேர்க்கைகள் வேறு வேறு யோகங்களாகக் சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் குறிக்கப்படும். 

(5) கரணம்: கரணம் என்பது திதியில் பாதி. மொத்தம் 30 திதிகள் என்று பார்த்தோம். அப்படியானால், 60 கரணங்கள் இருக்க வேண்டும். ஆனால், கரணங்கள் மொத்தம் 11 தான். வளர்பிறை முதல் (பிரதமை) திதியின் முதல் பாதி எப்பொழுதுமே ‘கிம்ஸ்துக’ கரணம் என்று அழக்கப்படும்; தொடர்ந்து 7 கரணங்கள் (பவ, பாலவ, கௌளவ, தைதூல, கர்ஜ, வணிஜ, விஸ்தி(அ) பத்ரா) 8 முறைத் திரும்பத் திரும்ப வரும். மீதி உள்ள 3 பாதி திதிகள் சகுனி, சதுஷ்பதம், நாகவம் என்ற கரணங்களாகக் குறிக்கப்படும்

பஞ்சாங்கங்களில் இவற்றைத் தவிர வேறு பல குறிப்புகள் இருந்தாலும், பஞ்ச அங்கம் என்ற ஐந்து அடிப்படைக் குறிப்புகள் மேற்கூறியவையே.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….