வெள்ளி, ஜனவரி 15, 2021

குத்துவிளக்கு

 குத்துவிளக்கு

கடவுள் வேடம் போட்டும் கவலைகள் ஏதும் தீரவில்லை

கிளிபோல் இன்மொழிச் சொற்கள் அறிந்தும் பேசிட இங்கே உரிமையில்லை

மணிமுடியணிகளம் யாவும் இருந்தும் அடிமைக்கோலம் மறைந்திடவில்லை

மறுமொழி உரைக்கும் கல்விகள் இன்றித் தடைகள் எப்போதும் உடைவதில்லை


பச்சை நிறங்கள் இருந்தாலும் பாசியில் வளங்கள் ஏதுமில்லை

இச்சைபேச்சு வார்த்தையன்றி உரிமைகள் ஏதும் கிட்டுவதில்லை

பச்சைக்காளிகள் அழித்தாலும் தஞ்சகன் என்றும் மாய்வதில்லை

பவழக்காளியாய் மாறினாலன்றித் தீமைகள் எதுவும் அழிவதில்லை


பெண்ணினம் சரிநிகரெனினும் அவர் ஆண்டிடும் வழிகள் இங்கில்லை

கண்ணிமையாகக் காப்பதாய்க்கூறி அடைத்து வைத்தல் ஞாயமில்லை

குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால் வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை

கைவிளங்குடைத்து வெளியேறாவிடில் சுதந்திர வாசம் கிடைப்பதில்லை[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது]

வெள்ளி, ஜனவரி 08, 2021

குழந்தைப் பருவம்

 குழந்தைப் பருவம்

[வல்லமை இதழின் 291-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] ஆட்டம் பாட்டு விளையாட்டு என்று
வாட்டம் துன்பம் கேடுகள் நீக்கி
கூட்டம் குழுவாய்க் கூடி நின்று
காட்டும் இன்பம்போல் ஏதுமில்லை

பணிச்சுமைகள் ஏதுமில்லை
பிணிப்புடுங்கள் நோய்களில்லை
கனியமது மொழிகள் போல
தேனமுதுச் சுவைகள் இல்லை

கள்ளங் கபடம் ஏதுமின்றி
வெள்ளப்பெருக்கின் ஓட்டம்போல்
துள்ளித் துள்ளி ஆட்டமிடும்
பிள்ளைப்பருவம் போல் வேறில்லை

அச்சம் நாண வேடங்கள் போட்டு
நெஞ்சில் உள்ளதை மறைப்பதில்லை
வஞ்சம் அறியாக் குழந்தையாய் இருப்பின்
கொஞ்சமும் இன்பம் குறைவதில்லை…

வெள்ளி, ஜனவரி 01, 2021

புதுப்பாதை

 


புதுப்பாதை

[வல்லமை இதழின் 290-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 
துள்ளிக் குதித்து
புத்தகப் பையைத் தூக்கி
பள்ளிக்குச் செல்ல முடியவில்லை
அள்ளித் தெளித்துப் போட்டு வைத்தக் கோலம் அழித்து ஓடி
விஷமம் செய்ய முடியவில்லை
வெயிலில் புழுதியில்
உடைகள் அழுக்காக்கி
ஆட்டம் போட முடியவில்லை
கையில் காலில் சிறுகாயம் கொள்ள
தாய்தந்தைத் தேற்றும்
விளையாடல் இருக்கவில்லை….

முகமறியா நபர்களிடம் பழகத்
தடை விதித்தார்கள்; இப்போது
முகம்மூடா நபர்களைக் காணமுடிவதில்லை….

வீட்டை விட்டு வெளியே வந்து
ஆட்டம் போடமுடியவில்ல
கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகள்
சிறகை விறித்து உலகம் காணவில்லை…

ஜன்னல் காட்சியே உலகம் ஆனது
பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது
எத்தனைக் காலம் சும்மா இருப்பது
புத்தாண்டே புதுப்பாதை வகுக்க வா!!


(இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)