மார்கழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 16, 2013

மார்கழி – அகரஹாயணம்




'மாதங்களில் நான் மார்கழி' என்பது இறை வாக்கு.

நம் இந்திய வானியலில் பால்வீதி மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்தியத் தொன்மங்கள் மற்றும் சமய நூல்களில், பால்வீதியின் மையத்தில் விஷ்ணு சயனித்திருப்பதாகக் கூறப்படுவது நாம் அனைவரும் அறிந்த்தே.

இந்தப் பால்வீதி இருப்பது ரிஷப ராசிக்கும் மிதுன ராசிக்கும் இடையில் தான். மிதுன ராசியின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம் ஆகியவை.
 
 இந்த மாதத்தின் வானவெளியில் Orion (ஓரியன்) என்ற வேட்டுவனை நாம் காண முடியும். இந்தியத் தொன்மத்தில் இது பிரஜாபதியைக் குறிக்கும். பிரஜாபதியின்  தோள் பட்டை இருக்கும் இடத்தில் உள்ள நட்சத்திரம் தான் திருவாதிரை.  இந்திய தொன்மத்தில் பிரஜாபதி விடையாட்டின் தலையைக் கொண்டவர். இவர் தலைப் பகுதியில் இருக்கும் ஐந்து நட்சத்திரங்கள் மிருகத் தலை வடிவைக் கொண்டுள்ளன. அதுவே மிருகசீர்ஷம் (மிருகம் + சிரஸ்).  பிரஜாபதியின் இடுப்பில் (திரிசூலத்தால் குத்தப்பட்ட துளை போல மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. அவை முறையே அக்னி, சோமன், விஷ்ணு ஆகியோரைக் குறிக்கும். பால்வீதிக்கு அருகில் இந்த நட்சத்திரம் உள்ளதால் இது விஷ்ணு-வாகக் குறிப்பிடப் பட்டிருக்கலாம்.

பால கங்காதர திலகர் தன் ருக் வேத ஆராய்ச்சியில் இந்த ஒரியன் தோன்றும் மாதமே முதல் மாதமாகக் குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார். அவர், ருக் வேதம்  சுமார் கி.மு. 4000 வருட வாக்கில் ருக் வேதம் தோன்றியிருக்கலாம் என்று கருதினார். இதற்கு ஆதாரமாக அவர் கூறுவது என்னவெனில் மற்ற மாதங்களின் பெயர்கள் அந்தந்த பௌர்ணமிகளின் நட்சத்திரங்களின் பெயரில் குறிப்பிடப்பட மார்கழி மட்டும் மார்கசீர்ஷம் /அகரஹாயணம் என்று குறிப்பிடப்படுவதைக் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை மார்கசீர்ஷம் என்பது வெறும் மிருகசீர்ஷ நட்சத்திரத்தைக் குறிக்கவில்லை.  மார்கம் என்றால் பாதை; சிரஸ் என்றால் தலை (அ) ஆரம்பம் – எனவே, மார்கசீர்ஷம் என்றால் பாதையின் ஆரம்பம் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து. இதற்குச் சான்றாக சில இடங்களில் மார்கழி, அகரஹாயணம் - அகரம் என்றால் முதல்; அயணம் என்றால் சூரியன் செல்லும் பாதை – என்று குறிப்பிடப்படுவதைக் காட்டுகிறார்.

சூரியனின் அயனம் (equinox) சுமார் கி.மு. 4000 வருடத்தில் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் இருந்தது. அதனால், அந்த சமயத்தில் தான் ருக் வேதம் தோன்றியிருக்கக் கூடும் என்று அவர் கருதினார்.  

சாதாரணமாக விவசாயிகள் விதை விதைக்க சரியான நேரமாகக் கருதுவது கார்த்திகையின் பின் பகுதியையே. அக்னிபுராணத்தில் ‘முஷ்டிக்ரஹானம்’ என்ற ஒரு பண்டிகை/கொண்டாட்டம் குறிப்பிடப்படுகிறது. இது விளைந்த பயிரை அறுவடைச் செய்வதற்கு முன் செய்வது. சந்தனம், பூ, பழம் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்து முதல் கதிரை அறுத்து ஈசான மூலை வழியாக தலைமேல் தூக்கி வீடு செல்வர். பிறகு, அகரஹாயனத்தில் நவான்னம் (புத்தரிசி) படைத்துக் கொண்டாட வேண்டும் என்று கூறுகிறது.  

மாதங்களில் முதலான மார்கழியைக் கொண்டாடுவோம்.

ஞாயிறு, டிசம்பர் 16, 2012

மார்கழி வழிபாடு



சமூதாயத்திற்கு நன்மைத் தரும் விஷயங்களை மதத்தில் பிணைத்து மதச் சடங்குகளாகவும் பண்டிகைகளாகவும் கூறுவது நம் நாட்டு வழக்கம். முன்பனிக்காலத்தின் குளிருக்கு முடங்கிவிடாமல் அவர்கள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாய் இருக்கவும் தை மாதத்தின் அறுவடைக்காக விதைத்த நெல்லைப் பாதுகாக்கவும் ஆநிரைகளைப் பராமரிக்கவும் அவர்கள் விடியலில் எழுவது முக்கியம். எனவே அவர்களை விடியலில் எழ வைக்க செய்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் மார்கழி பாவை நோன்பு.

இதனால் இரண்டு நன்மைகள் ஒன்று லௌகீமான அல்லது புற வாழ்க்கையில் நன்மை. நோயற்ற வாழ்வும் செல்வமும் கிட்டும். மற்றொன்று கடவுள் வழிபாடு; இது அகத்தூய்மைக்கான ஏற்பாடு. மார்கழியில் அதிகாலைத் துயில் நீக்கி, நீராடித் தூய்மையாய் கடவுளை நினைத்து பாடுவது மரபு.

மார்கழிப் பாவை நோன்பு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பாவை. ஆண்டாள் தான் மட்டும் தனியே இறைவனை நாடாமல் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் முழுவதும் கிட்ட வேண்டும் என்று எண்ணி எழுதியதுதான் இந்தத் திருப்பாவை. இது, முதல் பாடலிலேயே ஆண்டாள் ‘நீராடப் போதுமீர் போதுமின்’ என்று விருப்பமுள்ளவர்களை வரச் சொல்லிக் கூப்பிடுவது வெறும் சாதாரண நீராட்டத்திற்கு மட்டுமன்றி பக்திக் கடலில் அனைவரையும் மூழ்க வைக்கவும் தான் என்பதிலிருந்தே புரிபடும்.

ஆண்டால், ஏன் பாவை நோன்பிருந்தாள்? அதனால் அவளுக்குக் கிட்டியது என்ன? அதை எப்படி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று எழுதியதே ‘திருப்பாவை’. இதில், ஆண்டாள் கூறியதைச் சற்றுப் பார்ப்போம்....

கடலில் மூழ்கினால் முத்து கிடைக்கும். நாராயணனின் பக்தியில் என்ன கிடைக்கும்? இதற்கான பதிலை ஆண்டாளே தருகிறாள்; அது தான் ‘பறை’

அதை யார் தருவார்? ’நாராயணனே நமக்கே பறைத் தருவான்’. (முதல் பாடல்)

எப்பொழுது?         ’நம்மால் போற்றப் பறைத் தரும் புண்ணியன்’ (10-ஆவது பாடல்)

இதை சொன்னது யார்?   ’உமக்கு அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்’ [உங்களுக்குப் பறை தருவேன் என்று கண்ணன் நேற்றே (முன்னரே) வாக்களித்துள்ளான்]. (16-ஆம் பாடல்)

எப்படித் தருவான்? ’என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்’. (24-ஆம் பாடல்)

எவ்வாறு கேட்க வேண்டும்?      ’உன் தன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி’. (25-ஆம் பாடல்)

முதல் 25 பாடல்கள் வரை ‘பறை’யையும் அதை நாரணனிடமிருந்துப் பெறுவதையுமே எழுது வந்துள்ளாள். ‘பறை’ என்றால் அறிவித்தல். எதை அறிவிப்பார்கள்? அங்கீகாரம் பெற்றதை அறிவிப்பார்கள். இங்கு நாராயணிடம் பக்தர்களுக்கு வேண்டியது அவன் அங்கீகாரம் மட்டுமே என்பதையே குறிக்கிறாள் ஆண்டாள். 26 ஆவது பாடலில்  ‘சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே’ பறையின் சுகானுபவத்தையும் 27-ஆம் பாடலில் அப்பறைக் கிட்டியதின் கொண்டாட்டத்தையும் காட்டுகிறாள்.

ஆனால் 29-ஆம் பாடலில் ‘பறை’யையும் தாண்டி ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவோம் உமக்கே யாமாட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று’ என்று அடுத்த நிலையையும் காட்டுகிறாள்.

30-ஆவது பாடல் திருப்பாவையில் பலச்ருதி!

பொதுவாக கிருத்துவரகள் 25-ஆம் தேதி கிருஸ்மஸ் கொண்டாட முன்னேற்பாடாக 11-ஆம் தேதியிலிருந்து கிருஸ்மஸ் மரம் அலங்கரித்து வைப்பர். அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் முன்னேற்பாடுகள் தான் இந்த மார்கழிக் கொண்டாடங்களாக இருந்திருக்கலாம்.

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மார்கழி



மார்கழி மாதம் முன் பனிக் காலம். இம்மாதத்தின் விடியற் காலையில் குளிர் அதிகமாக இருக்கும். அனைவருக்கும் நன்றாகப் போர்வையை இழுத்துத் தூங்குவதென்றால் மிகவும் விருப்பமாக இருக்கும். ஆனால் இப்படிச் சோம்பி இருக்கக் கூடாது என்பது தான் பெரியோரின் எண்ணம்.

சாதாரணமாக அறிவுரையாகக் கூறினால் யாருக்கும் பிடிக்காது என்பதால் இது போன்ற விஷயங்களை மதத்தில் இணைத்துக் கூறுவது மரபு. அதனால் தான், கீதையில் கண்ணன்

बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||
[ததா² ஸாம்நாம் ப்³ருஹத்ஸாம:= சாமங்களில் (வேதம்) பிருஹத்சாமம் என்ற பெரிய சாமம்
²ந்த³ஸாம் கா³யத்ரீ அஹம்       = சந்தஸ்களில் நான் காயத்ரி
மாஸாநாம் மார்க
³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் அஹம் குஸுமாகர:      = பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில்]

என்று, மாதங்களில் தான் மார்கழியாக இருப்பதாகக் கூறுகிறான். கவியரசு கண்ணதாசன் இதன் தாக்கத்திலேயே தன் தாயைப் பற்றிய கவிதையில் “மாதங்களில் அவள் மார்கழி” என்று எழுதினார் [அதுவே பின் திரைப்படத்தில் நாயகியை எண்ணிப் பாடப்படுவதாக வரிந்து கொள்ளப் பட்ட்து].

இம்மாதத்தில் வைகறையில் துயில் நீக்கி, நன்னீராடி, உடலும் உள்ளமும் தூய்மையாக்கி கடவுளைப் பாடி வழிபடுவர். ஆலயங்களில் விடியலிலேயே நடை திறந்து மக்கள் கூடி இறைவனை வணங்குவர்.

வைணவக் கோயில்களில் திருப்பாவையும், சைவக் கோயில்களில் திருவெம்பாவையும் / திருப்பள்ளியெழுச்சியும் பாடி வழிபடுவார்கள். திருப்பாவை ’சூடிக்கொடுத்த சுடர் மணி’ கோதைநாச்சியார் என்று அழைக்கப் படும் ஆண்டாள் அருளியது; திருவெம்பாவையும் / திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகர் அருளியது.

திருப்பாவையில் ஆண்டாள் தன்னைக் கோகுலத்தில் பிறந்த ஒரு பெண்ணாகவே வரிந்து அவர்கள் நேர்த்ததாகக் கூறப்பட்ட பாவை நோன்பை தானும் தன் தோழியருடன் (உண்மையாகவே இருந்தார்களோ இல்லை கற்பனைத் தோழியரோ !!!)   சேர்ந்து இருப்பதாக எழுதப்பட்ட பாடல்கள்.  மிக எளிமையான தமிழ், பக்தி சுவை, நாயக-நாயகி பாவம் இயல்பாக அமைந்தது ஆகியவை இதன் சிறப்பு

சாதாரணமாக அணைவரும் மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய திருப்பாவை வைணவர்களுக்கு வேதமாக இருப்பது போல் சைவப் பெண்டிரும்  நாயகி பாவத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட அருளிது என்று எண்ணுவர். ஆனால், மாணிக்கவாசகர் வாழ்ந்தது மூன்றாம் நூற்றாண்டு என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வேறு சிலரோ அவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பர். ஆண்டாள் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதால், எப்படியிருப்பினும் மாணிக்கவாசகர் காலத்தால் முந்தியவர்.

ஒரு காலத்தில் மாணிக்கவாசகர், உபநிஷத்-இலுள்ள கருத்துக்களை எழுதியுள்ளார்; அவற்றை ஓதினாலேயே வீடுபேறு கிட்டும். எனவே, அவரின் பாடல்களுக்கு உரை எழுதக் கூடாது என்ற கருத்து நிலவி வந்திருந்துள்ளது.

திருவெம்பாவை, இருபது பாடல்கள் கொண்டது. முதல் எட்டு பாடல்களில் தோழியர் ஒருவரை ஒருவர் (நீராடி இறைவனைத் தொழ) கூப்பிடும் பாடல்கள். [இவைத் தத்துவரீதியாக அஷ்ட சித்திகள் ஒன்றை ஒன்று உசுப்பி எழுப்புவதைக் குறிப்பதாகக் கூறுவர்.] பின்னர், சில பாடல்கள் இறைவனைப் புகழ்ந்தும், அதன் பின் அவன் சக்தியை வியந்தும், அதன் பின் அவன் எளிமையையும் அவன் அருளாலே அவனை வணங்க முடியும் (அவனருளாலே அவன் தாள் பணிந்து என்ற சிவபுராண கருத்தை வலியுருத்தல்) என்பதை விளக்கியும் உள்ளன. இறுதிப் பாடல் “போற்றி போற்றி” என்று இறை வணக்கத்துடன் முடியும்.

திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்களைக் கொண்டது. அணைத்தும் இறைவனைத் துயில் எழுப்பி தமக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள்.

பொதுவாக முதல் இருபது நாட்கள் திருவெம்பாவையும் பின் அடுத்த பத்து நாட்களும் திருப்பள்ளியெழுச்சியும் பாடப்பட்டாலும் இரண்டும் வேறு வேறு காலங்களில் பாடப்பட்டவை. திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது. திருப்பள்ளியெழுச்சியோ அதில் குறிப்பிட்டுள்ளபடி திருப்பெரும்துரை சிவபெருமானை நேக்கிப் பாடப்பட்டது.

சிறு வயதில் எங்கள் வீட்டில் என் தாயார், விடியல் காலையில் எழுந்து (தினமும் ஒரு) திருப்பாவையும் திருவெம்பாவையும் (அ) திருப்பள்ளியெழுச்சியும்  பாடிக்கொண்டே பொங்கல் செய்வார். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே மெல்ல கண் விழிப்போம். அதே நேரம் அருகிலுள்ள கோவில்களிலும் பக்திப் பாடல்கள் (குறிப்பாக ஐயப்பன் பாடல்கள்) மற்றும் பக்தி திரைப்படங்களின் ஒலிக்கோப்புகள் (திருவிளையாடல், சரஸ்வதி சபதம்), ஒலிபரப்பு ஆரம்பமாகும்.

தில்லி வந்த பின்பு இழந்ததில் இதுவும் ஒன்று. ஆனால், சமீபகாலமாகத் (கடந்த 3-4 ஆண்டுகளாக) தொலைக்காட்சிகளில் பாவையும் பாடல்களும் (டிசம்பர் சீசன்) ஒளிபரப்ப ஆரம்பித்தது என் போன்றவர்களுக்கு ஒரு வரமே.