செவ்வாய், பிப்ரவரி 19, 2013

அரிது அரிது

அரியது எது? என்று ஔவையிடம் வினவிய போது அவள் கூறியது - 
 
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!

என்பதாகும். இவ்வாறு அரிதாகக் கிடைத்த மானிட வாழ்வை சிலர் சரிவரப் பயன்படுதடாமல்  அதில் குற்றங்கள் பல புரிந்து தண்டனைக்கும் உள்ளாகிறார்கள்.

மனிதர்கள் செய்யும் பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனையாக பல்வேறு அரசாங்கங்கள் பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகின்றன.

பொதுவாக இவ்வாறு தண்டனை வழங்குவதற்கானக் காரணமாகக் கூறப்படுவதற்கு காரணமாக அக்குற்றங்களைச் செய்பவர்கள் அதற்கு வருந்தித் திருந்துவதற்கு வாய்ப்பளித்து ஒரு காரணமாகக் கூறப்படுவதுடன் மற்றவர்கள் அத்தகையக் குற்றங்களைச் செய்ய ஒரு அச்சத்தை அல்லது தயக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது தான்.

மற்ற தண்டனைகளைப் பொறுத்தவரை மேற்கூறிய காரணங்கள் பொருந்தினாலும் மரணதண்டனையைப் பொறுத்தவரை திருந்துவதற்கு வாய்ப்பு என்பதைக் காரணமாகச் சொல்லும் வாய்ப்பு இருப்பதில்லை.

இன்றைக்கு உலகம் முழுவதும் மரண தண்டனைத் தேவையா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. உலகில் பல்வேறு நாடுகள் மரண தண்டனையைக் கைவிட்ட நிலையில் இந்திய அரசாங்கம் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்குவது என்ற நிலையைக் கொண்டுள்ளது.

இதனை, உச்ச நீதி மன்றமும் 1983-ஆம் ஆண்டு அளித்த ஒரு தீர்ப்பில் மரண தண்டனை அரிதினும் அரிதான வழக்குகளிலேயே வழங்கப் பட வேண்டும் என்று உறுதி படுத்தியது.

ஆனால் இதன் இன்றைய நிலைமை என்ன?

இந்தியாவில் மரண தண்டனை கொலை, கொள்ளை, குழந்தைகள் மற்றும் மனநோயாளிகளைத் தற்கொலைச் செய்து கொள்ளத் தூண்டுவது, நாட்டின் மீது போர் தொடுப்பது (War on the nation) ஆகியவற்றிர்காக அரிதினும் அரிதான வழக்குகளில் அளிக்கப்படலாம். போதை மருந்து சட்டத்தின் கீழ் போதை மருந்துகள் கடத்தலில் இரண்டாவது முறையாகவும் குற்றம் புரியும் பட்சத்தில் அதை கட்டாயமாக மரண தண்டனையாக விதிக்கவும் சட்டம் இயற்றப்பட்டது என்றாலும் பம்பாய் நீதி மன்றம் அதை மாற்றி வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் தீர்ப்பிற்கே விட்டு விடத் தீர்ப்பளித்தது. இவற்றைத் தவிர தீவிரவாதச் செயல்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கௌரவக் கொலைகள், என்கௌண்டர் போன்ற போலிஸ் அத்து மீரல்களுக்கும் மரணதண்டனை வழங்க சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.

இந்திய மனித உரிமைகள் மையம், சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி இந்தியாவின் இன்றைய தினம் 1455 பேர் மரண தண்டனையை விதிக்கப்பட்டு தூக்கை எதிர் நோக்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் வெவ்வேறு நீதி மன்றங்களால் 4321 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ளது.

ஒருபுறம் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுவதாகக் கூறுகிறது. மறுபுறம் ஆண்டுக்கு 132 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

ஒருபுறம் அரசியல் கொலைகளுக்கு மட்டும் மரண தண்டனை என்று விதித்தாலும் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றிய பிறகும் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பஞ்சாபின் முதல்வர் பியாந்த் சிங் என்று பெரிய தலைவர்கள் துவங்கி ஆலடி அருணா மாநில அளவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மட்டுமன்றி தா.கிருட்டினன், ராமஜெயம் போன்ற மாவட்ட அளவு பிரமுகர்கள் கூட அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளனர் / செய்யப்பட்டு வருகின்றனர்.

 சரி, மரண தண்டனைகள் மூலமாக குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பதற்காவது ஏதாவது ஆதாரமும் இருக்கிறதா என்று பார்த்தாலும் அதற்கு விடை இருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில்  இந்தியாவில் (கசாப் மற்றும் அப்சல் குரு தவிர) இரண்டு பேர் மட்டுமே (1995-இல் ஆட்டோ சங்கரும், 2004-இல் தனஞ்ஜய் சட்டர்ஜியும்) தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்தியாவில் 2001 ஆம் ஆண்டில் 36,202 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்  2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34,305 ஆக குறைந்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 19 கோடி  உயர்ந்த நிலையிலும் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களில் கூறப்பட்டு உள்ளது.

ஆக, இந்த மரண தண்டனை மற்றவரின் குற்றங்களை தடுப்பதிலும் பெரும் பங்களித்துள்ளதாகத் தெரியவில்லை.

நீதி மன்றங்களும் இந்த மரண தண்டனையை அரிதினும் அரிதாக அளிப்பதாகவும் தோன்றவில்லை!


11 கருத்துகள்:

  1. மிகத் தெளிவானதொரு அலசல்.
    மரண தண்டனை கொலைக் குற்றங்களைக் குறைப்பதுமில்லை.
    மரண தண்டனையைக் கண்டு யாரும் பயப்படுவதில்லையோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. இன்னுமா மனித உயிருக்கு மதிப்பு இருக்கு...?

    தவறு என்பது தவறி செய்வது...
    தப்பு என்பது தெரிந்து செய்வது...
    தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்...
    தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. உங்கள் கருத்திலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

      அதே நேரம். தப்பு செய்தவனை வருந்தும் வகையில் (உண்மையான) ஆயுள் தண்டனைக் கொடுக்கலாம். அரிதினும் அரிதாக மரணதண்டனை தரலாம். அரசும் அதே தப்பை அடிக்கடிச் செய்ய வேண்டுமா? என்பது தான் கேள்வி.

      தண்டனை என்பது மற்றவர் அந்தத் தப்பைச் செய்யாமல் தடுக்க வேண்டும். ஆனால், இது அந்த deterrent ஆக இருக்கவில்லை என்பது தான் இந்த தண்டனையை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமோ என்றுத் தோன்ற வைக்கிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      நீக்கு
  3. பதில்கள்
    1. மரணம் இயற்கையாக நிகழ்ந்தால் விடுதலை.

      அதை மற்றவர் ஏற்படுத்தினால் அது விடுதலை இல்லை அழிப்பது அது மற்றவரின் வாழும் உரிமையைப் பறிப்பது. அந்தத் தப்பை செய்தவருக்கும் அதே தப்பை அரசு செய்ய வேண்டுமா?
      இரண்டு எதிர்மறையால் எதையும் நேர் செய்ய முடியுமா?

      மரணத்தை தானே ஏற்படுத்திக் கொண்டால் அது escapism.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் குட்டன்!

      நீக்கு
  4. மரணதண்டனை வேண்டும் என்பது என் கட்சி. ஆனால் அதை செயல்படுத்துவதிலும் அரசியல் கணக்குகளோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. கடும் தண்டனைகள் வழங்கப் பட்டாலும் குற்றங்கள் குறையக் காணோம்.சாத்வீக முறைகளும் பயனளிப்பதில்லை.தண்டனைகளும் பயனளிப்பதில்லை.என்னதான் செய்வது. பாதிக்கப் பட்டவருக்கு மனத் திருப்தியை வேண்டுமானால் தண்டனைகள் உருவாக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாதிக்கப் பட்டவருக்கு மனத் திருப்தியை வேண்டுமானால் தண்டனைகள் உருவாக்கலாம்//
      இது மட்டும் தான் நடக்கிறது என்பது தான் தற்போதைய நிலைமை!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      நீக்கு