புதன், பிப்ரவரி 06, 2013

புலம் பெயர்ந்த பறவைகள்

தில்லியும் நோய்டாவும் இணையும் இடத்தில் இருப்பது ஓக்லா. [நோய்டா (NOIDA) என்பதன் முழுபெயரே ‘New Okhla Industrial Development Authority’ என்பது தான்].

யமுனையின் மேற்கு பகுதியில் ஓக்லா இருக்க அதன் கிழக்குப் பகுதியில் நோய்டாவின் ‘கலிந்தி குஞ்ச்’ அருகில் யமுனையின் சதுப்புப் பகுதிகளை ஒட்டி ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. இதன் பெயரே ஓக்லா பறவைகள் சரணாலயம் தான். இது சுமார் 3.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சிறிய சரணாலயம் தான்.

1884-ஆம் ஆண்டு ஆக்ரா கால்வாய் என்ற கால்வாய் கட்டப்பட்டது. ஓக்லா அருகே தற்போதைய கலிந்தி-குஞ்ச் பகுதியில் மடை ஒன்றைக் கட்டி யமுனை நீரைத் திருப்பி கால்வாய் வழியே ஆக்ரே அருகில் பானகங்கா நதியில் கலக்க வழி செய்யப்பட்டது. இது தில்லி, குர்கா(வ்)ன், மதுரா, பதர்பூர் ஆகியவற்றில் நீர்பாசனவசதிக்காக யமுனையில் கலக்கும் காராநதி என்ற சிறு ஓடையை சீர்படுத்திக் கட்டப்பட்டது. 1904 ஆம் ஆண்டுவரை இதில் படகுப் போக்குவரத்தும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கலிந்தி-குஞ்ச் பகுதியில் மடை கட்டிய இடத்தில்  நீர் தங்கி ஒரு சிறு ஏரி உருவாகியது. இதில் நாளடைவில் நீர்பறவைகள் வாழத் துவங்கின. மேலும் குளிர்காலத்தில் பனிப் பிரதேசங்களிலிருந்து  பறவைகள் வந்து செல்லவும் ஆரம்பித்தன. 1986-ஆம் ஆண்டு இது அதிகாரபூர்வமாக பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சரணாலயத்தில் குளிர்காலத்தில் வடதுருவம் மற்றும் பனிப் பிரதேசங்களிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 300 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 10-15 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பறவைகள் வந்து சென்றுக் கொண்டிருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவற்றின் வருகைக் கணிசமான அளவில் குறைந்து கொண்டே வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் ஆசிய நீர்பறவை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. இதில் சென்ற 2012-இல் 8751 பறவைகள் வந்து சென்றதாகக் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு (2013) இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து 5545-ஆக ஆகிவிட்டது. [இத்தனைக்கும் சென்ற ஆண்டு 57-வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் வந்த இடத்தில் இந்த ஆண்டு 63 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த  பறவைகள் வந்துள்ளன]. கடற்பறவைகளான ஃப்லெமிங்கோ போன்றவை 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் 20-ஆகக் குறைந்து விட்டது. 2000-க்கும் மேற்பட்ட ஷோவ்லர் பறவையின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக ஆகிவிட்டது.

ஆனாலும், ஓரியண்டல் டார்டர், ஐபிஸ், லாப்விங், காட்விட் போன்ற புதிய இனப் பறவைகளின் வரவு பறவை நோக்கர்களைப் பரவசப் படுத்தியுள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் சுற்றுப்புர மாசு மற்றும் யமுனையின் அசுத்தம் என்றாலும் நகரமயமாதலும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் யமுனையை ஒட்டி இருந்த இடங்களில் சென்ற மாயாவதி அரசு பசுமைப் பகுதியை அழித்து அதில் ஸ்தூபியும் சிலைகளும் வைத்து அதைச் சுற்றுலாப் பூங்காவாக மாற்றியதும் காரணமாக இருக்கலாம். யமுனையின் மீது அமைந்த தில்லி (சரிதாவிஹார்) நோய்டாவை இணைக்கும் கலிந்தி-குஞ்ச் பாலம் அகலப்படுத்தும் வேளை கடந்த சில மாதங்களாக இரவு-பகலாக நடைபெறுவதும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.  இந்தப் பகுதியை ஒட்டியே தில்லி-ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையும் (Express Highway) இந்தப் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. சமீபத்தில் 50-க்கும் மேற்பட்டக் கட்டுமானப்பணிகள் இவ்விடத்தில் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

நகரமயமாக்களும் அதை ஒட்டிய முன்னேற்றக் காரணிகளுமே சில நேரங்களில் இது போன்ற இயற்கை அழகுக்கும் சுற்றுச் சூழல் நிலைக்கும் எதிராக மாறிவிடுகின்றன.

8 கருத்துகள்:

 1. யானை சிலையும் அவரது சிலையும் வைத்தால் போதும், பறவைகள் எதற்கு என நினைத்ததால் வந்த விளைவு!

  தில்லி புறநகர் முழுவதுமே கான்க்ரீட் காடுகளாகிக் கொண்டு வருகிறதே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகர்புறத்தைத் தவிர தற்போது ஆற்றுப் படுகைகளையும் விட்டு வைக்கவில்லை. அக்ஷர்தாம் கோயில் என்று தில்லியில் கட்டியதைப் போல நோய்டாவில் மாயாவதி மந்தி(ர்) (சரி...பூங்கா)

   வருகைக்கு நன்றிகள் வெங்கட்!

   நீக்கு
 2. தகவல்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இந்த பரந்த உலகத்தில் பறவைகள்
  வேறு இடம் தேடிக்கொள்ளும் .

  ஆனால் தான் வாழும் இந்த சுற்றுப்புறத்தை
  நாசப்படுத்தும் இந்த மனித முண்டங்கள்
  எங்கு செல்ல முடியும் என்பதை
  எண்ணி பார்க்க வேண்டும்.

  தான் பிறந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும்
  பல்லாயிரம் பேர் வேறு நாட்டிற்கு
  சென்று வாழ முடியுமா என்பது இன்று பெரிய கேள்விக்குறி?

  ஏனென்றால் உலகம் பெரிதென்றாலும்
  மனித மனங்கள் மிகவும் செயலிழந்த கிட்னி
  போல் சுருங்கி போய்விட்டது.
  அதை மீண்டும் செயல்பட
  வைப்பது மிகவும் கடினம்

  போலிகளும் வேலிகளும்,கருங்காலிகளும்,
  நிறைந்து விட்ட உலகத்தை நம்மை
  படைத்த கடவுள்தான் களையெடுக்க வேண்டும்
  என்று பிரார்த்திப்போமாக

  பதிலளிநீக்கு