புதன், அக்டோபர் 31, 2012

இந்திரா – சக்திப் போராட்டம்


அக்டோபர் 31 ஆம் தேதி….

சரியாக இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த அவரது பாதுகாவலர்களாலேயே அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம்.

இந்திரா காந்தி-யின் பன்முகத் தலைமையைத் தேசம் கண்டிருந்தாலும் இன்று பொதுமக்கள் அவரை நினைவு கூறுவது என்பது 1977-இல் அவரால் கொண்டு வரப்பட்ட ’நெருக்கடி நிலை’ அறிவிப்பு தான்.

இந்திரா-வின் இந்த நினைவு நாளை ஒட்டி எழுத்தாளர் நயன்தாரா சஹகல், தான் எழுதிய இந்திரா-வின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் ‘Indira Gandhi : Tryst with Power’  என்ற பெயரில் 1982-ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தை  30 ஆண்டுகள் கழித்து மீண்டும் மறு வெளியிடு செய்துள்ளார்.

முதலில் யார் இந்த நயன்தாரா சஹகல் என்று பார்ப்போம்.

ஜவஹர்லால் நேரு-வின் சகோதரி விஜயலக்ஷ்மி பண்டிட்-இன் இரண்டாவது மகள் தான் இந்த நயன்தாரா சஹகல். 9 நாவல்களும் 8 பிற புத்தகங்களும் எழுதியுள்ள இவருக்கு வயது 85. நேரு குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும் இவர் அவர்களை எப்பொழுதும் விமர்சித்தே வந்துள்ளார். அதிலும் குறிப்பாக ‘நெருக்கடி நிலை’யில் அதற்கு எதிராகப் போராடியும் உள்ளார். 1980-இல் மீண்டும் பிரதமரான இந்திரா முதலில் செய்த செயல் இவரது வெளிநாட்டு தூதர் பணிநியமனத்தை நீக்கியது தான். அந்த அளவு இந்திரா-வை இவர் எதிர்த்துள்ளார்.

1974-ஆம் ஆண்டு ’தெற்காசிய தலைமைப்பண்பு’ என்ற மாநாட்டிற்கு இந்திரா காந்தியின்  மனநிலை மெல்ல மெல்ல சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்வதை இந்த மாநாட்டின் கட்டுரையில் தெரிவித்தக் கருத்துகள் பின்னர் விளக்கமாக எழுதப்பட்டது தான் இந்த புத்தகங்கள்.

புத்தக வெளியீட்டில், இந்திரா ஒன்று தெய்வமாக (துர்கையாக) பார்க்கப்படுகிறார் அல்லது ஒரு சூழ்ச்சிக்காரியாகப் பார்க்கப்படுகிறார்; வரலாறு அவரை அனுசரனையாகப் பார்க்கவில்லையா? என்ற கேள்விக்கு ”இரண்டுமே சரியானவை தான். வரலாறு யாரையும் அனுசரனையாகப் பார்க்க அவசியம் இல்லை; அது அவர்களைக் கணித்து விமர்சிப்பது மட்டுமே அவசியம்.” என்றும் கூறிய அவர் தன்னால் வரலாற்றில் இந்திராவின் நிலையை இன்று வரை முழுமையாகக் கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதும் முழுக்க ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஒருபுறம் வங்கத்தில் ஒரு குடியரசு அமையப் போரிட்ட அதே நேரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளையும் இந்திரா சீரழித்து வந்துள்ளார். அதிகாரம் அனைத்தையும் மையத்தில் குவித்து அதன் ஒரே சர்வாதிகாரியாகத் தான் மட்டுமே இருக்கும் வகையில் அவரது ஒவ்வொரு செயலும்  இருந்து வந்துள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் இன்று வரை சீரமைக்கப்பட இயலாத நிலைக்கு வித்திட்டதே இந்திரா தான் என்று கூறலாம். நேரு-வின் காலத்திலேயே இந்திரா கட்சியின் தலைவர் பதவிக்கு வந்துவிட்டாலும் (1959), அதை முழுக்க முழுக்க நேருவின் செயலாகக் கூறமுடியாது. ஏனெனில், நேருவே முதலில் இந்திரா அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனாலும், மணவாழ்வு கசந்த நிலையில் பொது வாழ்வில் ஈடுபடுவது அவரது மனத்துயரை மாற்றியமைக்கும் என்பதால் அதை அனுமதித்ததாகத் தன் சகோதரி விஜயலக்ஷ்மிக்கு (1957-இல்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிலும், தான் பிரதமராக இருக்கும் பொழுது தன் மகள் கட்சியின் தலைவர் ஆவது (1960) ஆரோக்கியமானதல்ல என்று நேரு வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனாலும், ஜி.பி.பந்த், யு.என்.தெபார் ஆகியோரின் வற்புறுத்தலை நேரு ஏற்க வேண்டியதாயிற்று.

ஆனால் இந்திராவோ தன் மகன் சஞ்சய் காந்தியை வெளிப்படையாகவே தன் வாரிசாக நியமித்தார். அரசாங்கத்தின் பல்வேறு முடிவுகள் சஞ்சய் காந்தியே எடுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. சஞ்சயின் மறைவிற்குப் பின் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் பின் தள்ளப்பட்டு எந்த முன்னனுபவமும் இல்லாத ராஜீவ் அரசியலுக்குள் திணிக்கப்பட்டார்.

புத்தகத்தில் இந்திரா காந்தி-யின் சர்வாதிகார மனப்பான்மையை விளக்க பல்வேறு செயல்கள் கூறப் பட்டாலும் அவர் பிரதமர் ஆவதற்கு முன்னரே நடந்த ஒரு முக்கிய நிகழ்வு முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. அது தான் இந்தியாவின் மாநிலம் ஒன்றில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நீக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக் கொண்டுவரப்பட்டமை. 1960-இல் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் கேரளத்தில் நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சியில் ரோமன் கத்தோலிக கிருத்துவர்களுக்கும் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் போராட்டம் நடந்தது. இதைக் காரணம் காட்டி, கேரள அரசை நீக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் பரிந்துரை செய்ததே இந்திராதான். அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.பி.பந்த் உடனே இதை மந்திரி சபையின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றினார்.

1964-இல் நேரு இறந்த பொழுது லால் பகதூர் சாஸ்திரி மந்திரி சபையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினாலும் கட்சி நிர்வாகத்தில் மிகவும் முனைப்புடன் பணிபுரிய முடியாதபடி (கணவரை இழந்த நிலையில்) குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டதையும் உடல் நலக் கோளாறுகளுக்காகச் (சிறுநீரகக் கல்) சிகிச்சைப் பெற்று வந்ததையும் குறிப்பிடுகிறார். நேருவின் தொகுதியில் (உத்திர பிரதேசத்தில் பூல்பூர்) கூட அவர் சகோதரி விஜயலக்ஷ்மி-தான் போட்டியிட்டார்.

Tryst என்பதற்கு ஆங்கிலத்தில் assignment, rendezvous அதாவது கள்ள (காதல்) சந்திப்பு என்பது போன்ற பொருள் இருந்தாலும் இங்கு உபயோகிக்க நினைத்தது போராட்டம் என்றப் பொருளில் தான். காரணம் நேரு இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது பேசிய சொற்பொழிவு ‘Tryst with Destiny’ அதாவது விதியுடன் போராட்டம் என்பது தான். இங்கு நயன்தாரா, Power என்ற வார்த்தையை பலம், பதவி, அதிகாரம் என்ற பொருளில் கூறினாலும் சங்கேதமாக, 1971-இல் வங்காள தேசம் உருவாக நடந்தப் போரைத்  தொடர்ந்து இந்திரா ‘சக்தி’யாகக் கூறப்பட்டதைக் கேலி செய்யவே இப்படி எழுதியிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.

புத்தக வெளியீட்டின் பொழுது சோனியா பற்றி நயனதாரா கூறிய இந்த கருத்து புத்தகத்திற்கு நல்ல விளம்பரம் தரும் என்று நினைக்கிறேன். அது, ‘சோனியா அவரது மாமியாரின் பேசுவதையும் நடப்பதையும் அவதனித்துள்ளார்; அவரைப் போலவே அரசியல் முடிவுகளுக்குக் (அவரது) குழந்தைகளைச் சார்ந்துள்ளார். மேலும், அவரைப் போலவே மகனை வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளார்’ என்பது தான். 

திங்கள், அக்டோபர் 29, 2012

மத்ர தேசம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.

மத்ர தேசம் என்று பொதுவாக அறியப்படுவது இன்றைய பாகீஸ்தான் பகுதியில் இருக்கும் பஞ்சாப் தான். சியால்கோட் (பழைய பெயர் சகாலா) தான் இதன் தலைநகர். இதைத் தவிர அபர மத்ரா (கீழை மத்ரா), உத்தர மத்ரா (வட மத்ரா) என்பவையும் சில இடங்களில் குறிப்பிடப்படுவதும் உண்டு. மத்ர தேசத்திற்கும் சால்வ தேசத்திற்கும்  நிறையத் தொடர்புகளும் வம்ச முறைகளும் கலந்து வந்துள்ளன.

மத்ர தேசம் மேற்கில் சிந்து நதியும் தென் கிழக்கில் ஐராவத நதியும் (தற்போதைய ராவி நதி) எல்லைகளாகக் கொண்டதாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக இந்திய அரச வம்சங்களில் இஷ்வாகுவின் வழித் தோன்றலாக வந்த சூரிய வம்சமம், புரூரவஸ்-இன் வழித்தோன்றலாக வந்த சந்த்ர வம்சம் ஆகிய இரண்டு வழித் தோன்றலாகத்தான் குறிப்பிடப்படுகின்றன. திருவாலங்காடு செப்பேடுகளில் சோழ வம்சம் கூட சூரிய வம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்திரவம்சத்தில் யயாதிக்குப் பின் அந்த வம்சம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. யயாதி கதை [வயதான பின்பும் மீண்டும் இளமையை பெற நினைத்தது. அதற்கு அவர் மகன் யது தன் இளமையைத் தர மறுக்க மற்றொரு மகனான புரு தன் இளமையைத் தந்தது என] நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான். யயாதி தன் இளமையைத் தர மறுத்ததால் அவர் சந்த்ர வம்சத்திலிருந்து விளக்கப் பட்டார். அவரது வம்சம் யது வம்சம் என்று தனியாகக் கிளைவிடத் துவங்கியது (கிருஷ்ணர்-இந்த யது வம்சத்தைச் சேர்ந்தவர் தான்). புரு வம்சம் பெரும் புகழுடன் கிளைவிட்டு அதில் துஷ்யந்தன், பரதன், ஹஸ்தி, குரு என்றுத் தொடர்ந்தது.

புருவின் வம்சத்தில் வ்யுசிஸ்தவன் என்ற ராஜகுமாரன் தோன்றினான். இவன் கௌதம முனிவருக்கும் மகத அரசன் வலி-யின் மனைவியின் வேலைக்காரப் பெண்ணிற்கும் பிறந்த கக்‌ஷிவத் என்பவரின் மகளான பத்ரா-வை மணந்தான். ஆனால், இவர்களுக்குக் குழந்தைப் பிறக்கும் முன்பே வ்யுசிஸ்தவன் இறந்துவிட்டான். ஆனால், பத்ரா-வோ அவன் உடலை அடக்கம் செய்யவிடாமல் அந்த உடல் மூலமே(!!!) ஏழு குழந்தைகளைப் பெற்றதாகப் மஹாபாரதம் கூறுகிறது.

பிணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் என்பதால் இவர்கள் புரு வம்சத்தில் சேர்க்கப்படவில்லை.  பின்னர், அந்த ஏழு குழந்தைகளில் நான்கு மத்ர தேசத்தையும் மூன்று சால்வ தேசத்தையும் ஆண்டதாகக் கூறுகின்றனர். மத்ர தேசமும் சால்வ தேசமும் பல இடங்களில் திருமண சம்பந்தம் வைத்ததாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில் ஒரே தேசமாகவும் ஆளப்பட்டு வந்துள்ளது.

மற்றொரு வம்ச வழியையும் கூறுவது உண்டு. அது…

யயாதியின் நான்காவது மகன் அனு; இந்த அனுவின் வம்சம் பின் வருமாறு:

அனு 
சபநரன்
காலநரன்
ச்ருஞ்ஜயன்
ஜனமேஜயன் (பரீக்ஷித்-இன் மகன் ஜனமேஜயன் வேறொருவன்)

இந்த ஜனமேஜயன்-இன் பேரன் மஹாமன்னின் (மஹாசலனின் மகன்) மகன் உசிநரன்.

இந்த உசிநரனின் முதல் மகன் சிபி; சிபியின் மூன்றாவது மகன் மத்ரன். இந்த மத்ரன் தோற்றுவித்தது மத்ர தேசம் என்றும் கூறுகிறார்கள்

பஹாலிகர்கள் போலவே மத்ர தேசத்தவர்களும் குரு-பாஞ்சால மற்றும் மற்ற கங்கைப்புர அரசக் குடும்பங்களால் ஒரு படி கீழானவர்களாகவே பார்க்கப் படுகின்றனர்.

புராணங்களில் இரண்டு மத்ர அரசர்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஒருவர் நாம் அனைவரும் அறிந்த சல்லியன். இவர் பாண்டுவின் மனைவி மாத்ரியின் (இதுவும் காரணப் பெயர்தான் - காந்தார தேசத்துப் பெண் காந்தாரி; மத்ர தேசத்தின் பெண் மாத்ரி) சகோதரர். பாண்டவருக்கு உதவ வந்து துரியோதனனுக்காகப் போரிட நேர்ந்ததும், கர்ணனுக்குத் தேரோட்டியதும், பின்னர் கௌரவர்களின் சேனாதிபதியாகப் படை நடத்தியதும் நாம் அனைவரும் அறிந்ததே.

மற்றொரு பிரபலமான மத்ர தேச அரசர் சல்லியனுக்கும் பல காலம் முந்தையவர். அவர் பெயர் அஸ்வபதி. இந்தப் பெயரைச் சொன்னால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது கடினம். ஆனால், இவரது மகள், மருமகனின் பெயர் இந்தியா முழுவதும் அனைவரும் அறிந்ததே. அவர்கள் சாவித்ரி-சத்யவான் (இவர் சால்வ தேசத்தைச் சேர்ந்தவர்) ஆகியோர் தான். இந்த அஸ்வபதியின் மனைவியின் பெயர் மால்வி. இந்த அஸ்வபதியின் மகன் தன் தாய் மால்வி-யின் பெயராலேயே மால்வ தேசம் உண்டானதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளி, அக்டோபர் 26, 2012

பொன்னானக் கைகள்


நான்கு புறமும் மணல் மேடுகள். வெகு வேகமாக மணலை அடித்துக் கொண்டு மணலுடன் நீர் கலந்து ஓடும் ஆறு. இது தான் சோம நதி. இது ஹரியானாவில் இருக்கும் ஒரு மழைக்காலச் சிற்றாறு. தில்லி அருகே ஹரியானாவில் யமுனாநகர் என்ற இடத்தில் இது யமுனையில் கலக்கிறது.

இந்த நதியில் ஆங்காங்கே நதியில் நின்று எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். நதியில் நின்று அதில் கைவிட்டு உற்றுப் பார்த்துத் தேடிக் கொண்டிருந்தால் மீன்பிடிப்பாகத் தான் இருக்கும் என்று நினைப்போம். ஆனால், இந்த நதிக்கரையில் இருக்கும் 25 கிராமங்களில் மீன் பிடித்தல் தொழில் இல்லை. பிறகு என்ன தான் செய்கிறார்கள்?

இந்த 25 கிராமங்களின் பரம்பரைத் தொழில் மீன் பிடித்தல் அல்ல; மாறாக தங்கம் சேகரித்தல். ஆம் இந்த நதியின் மணல் துகள்களில் தங்கத் துகள்களும் கலந்துள்ளன. அவற்றைச் சேகரிப்பது தான் அவர்கள் பரம்பரைத் தொழில். இதற்கு இவர்கள் பயன்படுத்துவதுத் தங்கள் கண்களையும் கைகளையும் மட்டுமே; வேறு எந்த உபகரணங்களையும் உபயோகிப்பதில்லை. ஒரு கையளவுமண்ணில் தங்கம் கலந்திருக்கிறதா இல்லையா என்பதை பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

தினமும் காலை 8 மணியளவில் சூரிய வெளிச்சம் நன்கு வெளிவந்த பின்பு இவர்கள் தங்கம் சேகரிப்பதுத் துவங்கி விடுகிறது. கையில் ஒரு மரப்பட்டையை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் கொஞ்சம் மணலைப் போடுகிறார்கள். பின் மெல்ல மெல்ல நீரால் அதை கழுவுகிறார்கள். வழிந்தோடும் மணலில் தென்படும் தங்கத்தை மறுகையால் பிடித்து மீண்டும் அதை கழுவி கழுவி தங்கத்தைப் பிரிக்கிறார்கள்.

இப்படி இவர்கள் நாள் முழுதும் வேளை செய்தால் சில மில்லி கிராம் தங்கம் கிடைக்கிறது. இந்த வேளை வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் – மழைக்காலங்களில் மட்டும் தான் – நடக்கும். காரணம், மழைப் பெய்யும் பொழுது தான் மலையிலிருந்து பாறைகள் உருண்டு மணல் துகளாக அடித்துவரும் அந்த மணல் துகளிலிருந்து தான் இவர்கள் தங்கம் எடுக்கிறார்கள்.

இந்த தங்கம் எடுக்கும் தொழில் வருடா வருடம் குத்தகைக்கும் விடப் படுகிறது. வருடத்தில் (2-3 மாதங்களில் மட்டுமே வேலைச் செய்ய முடியும் என்றாலும் குத்தகை வருடம் முழுவதற்குமாகத் தான் நடைபெறும்) குத்தகைத் தொகை மட்டுமே லட்ச ரூபாய்க்கு இருக்கும். அக்டோபர் மாதத்தில் தான் இந்த ஏலம் நடைபெறுகிறது.

மிகவும் லாபமான தொழிலாக இதைச் சொல்ல முடியாது ஏனெனில் நாள் முழுவதும் சேகரித்த மில்லி கிராம் அளவிருக்கும் தங்கத்தை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு பாரா என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். அப்பொழுது கொஞ்சம் தங்கம் கரைந்து விடுகிறது. பிறகு, இதை சந்தையில் நேரடியாக விற்க முடியாது. அதற்கும் இடைத் தரகர்கள் இருக்கிறார்கள். கண்கள் வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பதால் சீக்கிரமே கண்களில் பொறை விழுந்து விடுகிறது. வயதானவர்களின் கண் பார்வைத் திறன் குறைபாடுகளால் அவர்களால் இதைச் செய்ய முடிவதில்லை. இளைய தலைமுறைக்கு இத்தொழிலில் ஆர்வம் இருப்பதில்லை. அதனால், மெல்ல மெல்ல இந்த தொழில் அழிந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

பரம்பரை பரம்பரையாகக் கைகளாலேயே தங்கம் எடுக்கும் இவர்களின் கைகளைப் ‘பொன்னானக் கைகள்’ என்று பி.பி.ஸ்ரீநிவாஸ் போல பாடலாமா என்றால் முடியாது. காரணம் நாள் முழுவதும் தண்ணீரிலும் மண்ணிலும் கைகளை உழப்பியபடியே இருப்பதால் அவர்களின் கைகள் புண்ணானக் கைகளாகவே இருக்கின்றன.

புதன், அக்டோபர் 24, 2012

எல்லைக் காவல்


எல்லைக் காவல் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம் ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகள் தான்.

ஆனால், நம் தேசப் பாதுகாப்பில் இம்முப்படைகளைத் தவிர பலவிதமான துணை-ராணுவங்களில் முக்கியமானவையாகக் கருதப்படும் இந்திய-திபெத் எல்லைக் காவல் (ITBP – Indo-Tibet Border Police), எல்லைக் காவல் படை (BSF – Border Security Force), மத்திய ரிசர்வ் போலிஸ் படை (CRPF – Central Reserve Force) ஆகிய மூன்றும் அடங்கும். இதில் CRPF தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும், BSF எல்லைத் தரைப் பகுதியின் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்கின்றன.

மேற்கூறியவற்றைப் போலவே ITBP-யும் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளது. அது தான் இந்திய எல்லையின் மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆகும். இந்த ITBP துவக்கத்தில் சுமார் 2115 கி.மீ. தூரத்தைக் கொண்ட இந்திய-திபெத் எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டிலிருந்து மெல்ல மெல்ல இதற்கு வேறு சில பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. 1992-ஆம் ஆண்டு ITBP சட்டம் உருவாக்கப்பட்டு அது 1994 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.

தற்போது இது எல்லையின் 3488 கி.மீ (காஷ்மீர லடாக் பகுதியின் கரகோரம் கணவாய் முதல் அருணாசலத்தின் ஜீசுப் லா வரை விரிந்த இந்திய-சீன எல்லைப்பகுதி) தூரத்தைப் பாதுகாக்கிறது. இவற்றின் பல மையங்கள் (outposts) 9000 முதல் 18000 வரை உயரமுள்ள பனிபடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில் பல இடங்களுக்கு வீரர்கள் ஹெலிகாப்டரின் உதவியுடன் செல்ல முடியும்.  

மேற்கூறிய பாதுகாப்புப் பணிகளைத் தவிர வேறு சில பொறுப்புகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது கைலாஷ்-மானசரோவர் யாத்திரையில் இவர்களின் பணி. யாத்திரிகர்களின் பாதுகாப்பைத் தவிர, 1981-முதல், குன்ஜி முதல் லிபு லேக் பகுதிவரையில் மருத்துவம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் பொறுப்பும் இவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அதனாலேயே இவர்கள் இமய வீரர்கள் (Himveers) அல்லது மலைக்காவலர்கள் (Protectors of the mountains) என்று அழைக்கப்படுகிறார்கள்.

இதைத் தவிர ITBP-யின் தேசிய மையம் தான், ஐநா-வின் சிவிபோல் (CIVIPOL) சிவிலியன் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இங்கு பயின்ற  காவலர்கள் அங்கோலா, போஸ்னியா, கம்போடியா, காங்கோ, ஹைதி, ஹெர்ஸெகோவினா, கொசாவோ, மொசாம்பிக், சிரியா, லியோன், சூடான், மேற்கு சகாரா பகுதிகளில் இவர்கள் பயிற்றுவித்தவர்கள் தான் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப் பட்டார்கள். தற்போது ஐநா சமாதானப் படையின் காங்கோ, ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் ITBP வீரர்கள் உபயோகப் படுத்தப் படுகிறார்கள்.

தவிர 1965, 1971 ஆகிய போர்களில் ஸ்ரீநகர், பூஞ்ச், பதான் கோட் ஆகிய பகுதிகளில் போருக்கும் பயன்படுத்தப் பட்டார்கள். தவிர உத்ராகாண்ட் மாநிலத்தின் அவ்லி பகுதியில் மலையேற்றப் பயிற்சி மையம் அமைத்து இந்திய மலையேற்றக் குழுவினருக்கு மலையேற்றப் பயிற்சியும் வழங்குகிறார்கள். தவிர, நம் நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், சிக்கிம் மாநிலத்தின் ரூம்டெக் மாண்டெசரி,  ராஜ் பவனின் பாதுகாப்பும் இவர்கள் பொறுப்பில் தான் உள்ளது. பாக் தீவிரவாதி அஜ்மல் கசாப்-ஐ கண்கானிப்பதும் இவர்களே.

1962-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த ITBP இன்று தன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது.

இந்திய அஞ்சல் துறையும் இவர்களின் சேவையைச் சிறப்பிக்கும் வகையில் இந்த பொன்விழா ஆண்டின் சிறப்புத் தபால் தலையை வெளியிட்டுள்ளது.

ITBP-யும் தங்கள் பொன்விழாவை சென்ற ஒரு ஆண்டாக பலவிதங்களில் கொண்டாடிவருகிறார்கள். தங்கள் பணிகளின் சிறப்புத் தருணங்கள், நவீனகரணம், மலையேற்றம், விளையாட்டு, சர்வதேசப் பொறுப்பேற்புகள் அவற்றில் பெற்ற பதக்கங்கள், பட்டங்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் புத்தகங்கள், கண்காட்சிகள் என்று நடத்தினர். இதற்காக  அவர்களின் மூலக் கொள்கையாக இருக்கும் ஷௌர்யா (பலம்), த்ருடதா (திடம்), கர்மனிஷ்டா (செயல்திறன்) ஆகியவற்றை ஒட்டி சிறப்பு லொகோ-வையும் வடிவமைத்துள்ளனர். 

இதற்காக ‘Ganga Punardarshan (கங்கையின் மறுதரிசனம்)’ என்ற பெயரில் கங்கை உருவாகும் கோமுக் பகுதியிலிருந்து கங்கை கடலில் கலக்கும் கங்காநகர் வரையிலான 2525 கிமீ தூரத்தை படகுப் பயணம் மேற்கொண்டு ஐம்பத்தி ஏழே நாட்களில் கடந்துள்ளார்கள்.

இந்தப் பொன்விழா நாளில் நாமும் இவர்களின் சேவையைச் சற்றே நினைத்துப் பார்ப்போம்....

திங்கள், அக்டோபர் 22, 2012

இரட்டை வால் நட்சத்திரம்


அடுத்த வருடம் (2013) நவம்பர்-டிசம்பரில், நிலாவைவிட சுமார் 15 மடங்கு ஒளிரக் கூடிய ஒரு வால் நட்சத்திரம் பூவெளிக்கு வெகு அருகில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 2 மில்லியன் மைல்களுக்குள் வந்து செல்லும் என்று ரஷ்யாவின் வானியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது வியாழனுக்கு அருகில் சூரியனை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரத்தை comet ISON என்று கூறுகிறார்கள். இது அடுத்த வருடம் பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்று கணித்திருக்கிறார்கள். பூமியின் வடபகுதிகளில் இருக்கும் நாடுகள் இதை முழுவதுமாகத் தெளிவாகக் காணமுடியும் என்றும் கணித்திருக்கிறார்கள்.

இதன் பாதையைப் parabolic – அதாவது நீள்வட்டப்பாதை என்று கணித்திருக்கிறார்கள்.


ஜன் ஹெண்ட்ரிக்ஸ் ஓர்ட் (1900-1992) என்ற டச்சு வானியல் நிபுணர், கேலக்ஸிகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்றும் அந்த சுழற்சியில் அவை மேகம் போன்ற ஒன்றை உருவாக்குவதாகசும் நிரூபித்துள்ளார். இதற்கு ஓர்ட் மேகம் என்ற பெயரும் உண்டு.

ந்த வால் நட்சத்திரம் ஓர்ட் மேகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இறுகி அதனுடன் சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதியில் இருந்த வான் கற்களும் துகல்களும் கூடி ஈர்ப்பு விசைப் பெற்று நகரத் துவங்கியிருக்கக் கூடும் என்று நினைக்கிறார்கள்.

துகள்களும் பனிக்கட்டியும் சேர்ந்து இவை அழுக்குப் பனிக்கட்டிக் கோளமாகக் காட்சியளிக்கும். பனிக்கட்டிகளால் இவை சூரிய வெளிச்சத்தைக் கண்ணாடி போலப் பிரதிபலிக்கும்.

ஒரு குளிர்ந்த பனிக்கட்டி பந்து அதுவும் அழுக்காகச் சற்றுப் பெரிய பனிக்கட்டி - எவ்வளவு பெரியது என்றால் சற்றேறக்குறைய நிலா அளவுக்குப் பெரியது – அது தான் இந்த வால் நட்சத்திரத்தின் அமைப்பு என்று கூறுகிறார்கள். பனிக்கட்டி சாதாரணமாக உடைந்து விடும் என்று நினைக்காதீர்கள்; அது அதன் கடினத்தன்மையையும் அளவையும் பொறுத்தது.

இந்த வால் நட்சத்திர காட்சியைக் காண அனைவரும் தயாராக ஆவதற்கு முன்னர் இதற்கு முன்னோட்டமாக அடுத்த ஜூன்-ஜூலை மாதத்தில் ஒரு வால் நட்சத்திரத்தைக் காணலாம். இது சமீப காலங்களில் (கடந்த 2-3 நூற்றாண்டுகளில் வந்துச் சென்ற வால் நட்சத்திரங்களை விடப் பெரிதாக இருக்கும் என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், தற்போது ரஷ்ய வானியல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ள நவம்பரில் வரும் வால் நட்சத்திரம் அதை விடப் பெரிதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஒரே வருடத்தில் இரண்டு வால் நட்சத்திரங்களைக் காணமுடியும் என்பதே அபூர்வமான நிகழ்வுதான். அது அடுத்த 2013-ஆம் வருடம் நிகழ இருக்கிறது.

நாம் அனைவரும் இதைக் காணத் தயாராவோம்...