திங்கள், அக்டோபர் 29, 2012

மத்ர தேசம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.

மத்ர தேசம் என்று பொதுவாக அறியப்படுவது இன்றைய பாகீஸ்தான் பகுதியில் இருக்கும் பஞ்சாப் தான். சியால்கோட் (பழைய பெயர் சகாலா) தான் இதன் தலைநகர். இதைத் தவிர அபர மத்ரா (கீழை மத்ரா), உத்தர மத்ரா (வட மத்ரா) என்பவையும் சில இடங்களில் குறிப்பிடப்படுவதும் உண்டு. மத்ர தேசத்திற்கும் சால்வ தேசத்திற்கும்  நிறையத் தொடர்புகளும் வம்ச முறைகளும் கலந்து வந்துள்ளன.

மத்ர தேசம் மேற்கில் சிந்து நதியும் தென் கிழக்கில் ஐராவத நதியும் (தற்போதைய ராவி நதி) எல்லைகளாகக் கொண்டதாகப் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக இந்திய அரச வம்சங்களில் இஷ்வாகுவின் வழித் தோன்றலாக வந்த சூரிய வம்சமம், புரூரவஸ்-இன் வழித்தோன்றலாக வந்த சந்த்ர வம்சம் ஆகிய இரண்டு வழித் தோன்றலாகத்தான் குறிப்பிடப்படுகின்றன. திருவாலங்காடு செப்பேடுகளில் சோழ வம்சம் கூட சூரிய வம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்திரவம்சத்தில் யயாதிக்குப் பின் அந்த வம்சம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. யயாதி கதை [வயதான பின்பும் மீண்டும் இளமையை பெற நினைத்தது. அதற்கு அவர் மகன் யது தன் இளமையைத் தர மறுக்க மற்றொரு மகனான புரு தன் இளமையைத் தந்தது என] நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான். யயாதி தன் இளமையைத் தர மறுத்ததால் அவர் சந்த்ர வம்சத்திலிருந்து விளக்கப் பட்டார். அவரது வம்சம் யது வம்சம் என்று தனியாகக் கிளைவிடத் துவங்கியது (கிருஷ்ணர்-இந்த யது வம்சத்தைச் சேர்ந்தவர் தான்). புரு வம்சம் பெரும் புகழுடன் கிளைவிட்டு அதில் துஷ்யந்தன், பரதன், ஹஸ்தி, குரு என்றுத் தொடர்ந்தது.

புருவின் வம்சத்தில் வ்யுசிஸ்தவன் என்ற ராஜகுமாரன் தோன்றினான். இவன் கௌதம முனிவருக்கும் மகத அரசன் வலி-யின் மனைவியின் வேலைக்காரப் பெண்ணிற்கும் பிறந்த கக்‌ஷிவத் என்பவரின் மகளான பத்ரா-வை மணந்தான். ஆனால், இவர்களுக்குக் குழந்தைப் பிறக்கும் முன்பே வ்யுசிஸ்தவன் இறந்துவிட்டான். ஆனால், பத்ரா-வோ அவன் உடலை அடக்கம் செய்யவிடாமல் அந்த உடல் மூலமே(!!!) ஏழு குழந்தைகளைப் பெற்றதாகப் மஹாபாரதம் கூறுகிறது.

பிணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் என்பதால் இவர்கள் புரு வம்சத்தில் சேர்க்கப்படவில்லை.  பின்னர், அந்த ஏழு குழந்தைகளில் நான்கு மத்ர தேசத்தையும் மூன்று சால்வ தேசத்தையும் ஆண்டதாகக் கூறுகின்றனர். மத்ர தேசமும் சால்வ தேசமும் பல இடங்களில் திருமண சம்பந்தம் வைத்ததாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில் ஒரே தேசமாகவும் ஆளப்பட்டு வந்துள்ளது.

மற்றொரு வம்ச வழியையும் கூறுவது உண்டு. அது…

யயாதியின் நான்காவது மகன் அனு; இந்த அனுவின் வம்சம் பின் வருமாறு:

அனு 
சபநரன்
காலநரன்
ச்ருஞ்ஜயன்
ஜனமேஜயன் (பரீக்ஷித்-இன் மகன் ஜனமேஜயன் வேறொருவன்)

இந்த ஜனமேஜயன்-இன் பேரன் மஹாமன்னின் (மஹாசலனின் மகன்) மகன் உசிநரன்.

இந்த உசிநரனின் முதல் மகன் சிபி; சிபியின் மூன்றாவது மகன் மத்ரன். இந்த மத்ரன் தோற்றுவித்தது மத்ர தேசம் என்றும் கூறுகிறார்கள்

பஹாலிகர்கள் போலவே மத்ர தேசத்தவர்களும் குரு-பாஞ்சால மற்றும் மற்ற கங்கைப்புர அரசக் குடும்பங்களால் ஒரு படி கீழானவர்களாகவே பார்க்கப் படுகின்றனர்.

புராணங்களில் இரண்டு மத்ர அரசர்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஒருவர் நாம் அனைவரும் அறிந்த சல்லியன். இவர் பாண்டுவின் மனைவி மாத்ரியின் (இதுவும் காரணப் பெயர்தான் - காந்தார தேசத்துப் பெண் காந்தாரி; மத்ர தேசத்தின் பெண் மாத்ரி) சகோதரர். பாண்டவருக்கு உதவ வந்து துரியோதனனுக்காகப் போரிட நேர்ந்ததும், கர்ணனுக்குத் தேரோட்டியதும், பின்னர் கௌரவர்களின் சேனாதிபதியாகப் படை நடத்தியதும் நாம் அனைவரும் அறிந்ததே.

மற்றொரு பிரபலமான மத்ர தேச அரசர் சல்லியனுக்கும் பல காலம் முந்தையவர். அவர் பெயர் அஸ்வபதி. இந்தப் பெயரைச் சொன்னால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது கடினம். ஆனால், இவரது மகள், மருமகனின் பெயர் இந்தியா முழுவதும் அனைவரும் அறிந்ததே. அவர்கள் சாவித்ரி-சத்யவான் (இவர் சால்வ தேசத்தைச் சேர்ந்தவர்) ஆகியோர் தான். இந்த அஸ்வபதியின் மனைவியின் பெயர் மால்வி. இந்த அஸ்வபதியின் மகன் தன் தாய் மால்வி-யின் பெயராலேயே மால்வ தேசம் உண்டானதாகவும் குறிப்பிடப்படுகிறது.

7 கருத்துகள்:

 1. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

  தொடர்கிறேன்...

  நன்றி...
  tm1

  பதிலளிநீக்கு
 2. பிணத்தின் மூலம் குழந்தை பிறக்க வைப்பது
  அந்த காலத்திலேயே உள்ள தொழில் நுட்பம் போலும்.

  ஏனென்றால் தற்காலத்தில் இறந்துபோன தன்
  கணவனின் விந்தை விந்து வங்கியிலிருந்து
  பெற்றுஅவள்மனைவி குழந்தை பெற்ற செய்தியும்
  அதுவும் ஒன்று போல தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு