சமீபத்தில் தில்லி பல்கலைக் கழகம்
வரும் ஜூலையில் துவங்கும் இந்த வருடக் கல்வியாண்டிலிருந்து பட்டப்படிப்பை மூன்று
ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
இத்திட்டத்தின் படி இதுவரை இருந்த
கலை, அறிவியல் ஆகியவற்றில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் நீக்கப்பட்டு அனைத்து
மாணவருக்கும் (அவர்கள் 11-12 ஆம் வகுப்பில் எந்தத் துறையைத்
தேர்ந்தெடுத்திருந்தாலும்) முதல் இரண்டு ஆண்டுகள் அடித்தளக் கல்வியும், மூன்றாம்
ஆண்டில் பட்டப்படிப்பும் நான்காம் ஆண்டில் துறையின் நுணுக்க அறிவும் வழங்கப்படும்
என்றுக் கூறப்படுகிறது.
இவ்வாறு மாற்றுவதற்கு அவர்கள்
கூறும் முக்கியக் காரணம் இந்தியப் பல்கலைக் கழகங்களைத் தவிர்த்து அனைத்து
சர்வதேசக் கல்லூரிகளும் நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பைத் தருகின்றன. இந்திய
மாணவர்கள் மேல் படிப்பிற்கு சர்வதேசக் கல்லூரிகளில் சேரும் பொழுது அவர்களுக்கு
அங்கு ஒருவருடம் அடிப்படைக் கல்வி அளிக்கப்படும் என்பதையும் சுட்டிக்
காட்டுகிறார்கள்.
இந்த மாற்றங்களின் தேவையைப் பற்றி
நம் போன்ற பொதுமக்களின் கருத்து குழப்பத்தைத் தான் தரும். ஏனென்றால்
கல்வியாளர்களும் துறைச் சார்ந்தவர்களும் தான் இதன் தேவையை விவாதிப்பது நல்லது.
இருந்தாலும் பொதுமக்களுக்கு இதில்
சில கேள்விகள் உள்ளன. இதைப் பற்றி சரியான பதிலளிக்க தில்லி பல்கலைக் கழகம்
கடமைப்பட்டுள்ளது. அக் கேள்விகள்…
1.
முதலில் இது பல்கலைக் கழக
மானியக் குழுவால் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக மாற்றப்படாமல் தில்லி பல்கலைக்
கழகத்தில் மட்டும் மாற்றம் நிகழ்வது ஏன்?
2.
இதன் சாதக பாதகங்கள் முறையாக
கல்வியாளர்களாலும் துறைச் சார்ந்தவர்களிடமும் விவாதிக்கப்படாமல் திடீரென்று
திணிக்கப்படுவது ஏன்?
3.
80-களுக்கு முன் வரை
பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாகத்தான் இருந்தது. ஆனால், அப்பொழுது, பத்தாம்
வகுப்பிற்குப் பின் பி.யூ.சி என்று ஒரு ஆண்டு மாணவர் தேர்ந்தெடுக்கும் துறையில்
அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. பின் அந்த அடிப்படைக் கல்வி
இரண்டாண்டுகளுக்கு (+1, +2 என) நீட்டிக்கப்பட்டு பட்டப்படிப்பு மூன்றாண்டுகளாகத்
திருத்தி அமைக்கப்பட்ட்து. தற்போது, 11-12 ஆம் வகுப்பில் அவர்கள் தங்கள் துறையை
தேர்ந்தெடுக்கும் வழக்கம் நீக்கப்படுமா?
4.
சர்வதேசக் கல்லூரிகளில் மேல்
படிப்பு பெற விழைபவர்கள் எத்தனைச் சதவிகித்த்தினர்? அவர்களை மட்டுமேக் கருத்தில்
கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரும் காரணம் என்ன?
5.
பட்டப்படிப்பு 4 ஆண்டுகளாக
ஆக்கப்பட்டுள்ளதால் பட்ட மேற்படிப்பு ஓர் ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால்,
வேறு பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று தில்லியில் மேற்படிப்புப் படிக்க
விழையும் மாணவர்கள் இரண்டாண்டுகள் (முதல் ஆண்டு அடிப்படைக் கல்வியும் இரண்டாம்
ஆண்டு துறை மேற்படிப்பும்) கல்வி பயில வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தில்லியில் பட்டப்படிப்பு படித்து மற்ற பல்கலைக் கழகங்களில் மேற்படிப்புப்
படிக்க விழைவோரின் நிலைமை என்ன? அவர்களுக்கு ஓராண்டு வீணாகுவதை எப்படித் தடுக்க
முடியும். இது பற்றி மற்ற பல்கலைக் கழகங்களுடன் ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ
கல்வித்துறை மூலம் ஏதாவது அறிவிப்புகளோ வெளியிட ஏதாவது ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றனவா?
6.
பட்டப் படிப்பு
மூன்றாண்டுகள் நடக்கும் பொழுதே அதற்காக ஆகும் செலவு மிகவும் அதிகமாகிக் கொண்டே
வருகிறது. இப்பொழுது மேலும் ஓராண்டு அதிகமானால் அதற்காக ஆகும் மேற்செலவை யார்
ஏற்பார்கள். மற்றவர்களைவிட வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களை இது மேலும்
சுமையேற்றி அவர்கள் பள்ளிப் படிப்புடன் நிறுத்திவிட இது வழிவகுப்பதை எப்படி அரசு /
மக்களால் சமாளிக்க முடியும்?
7.
நான்காண்டுகளுக்காக திருத்தி
வடிவமைக்கப் பட்டப் பாடப்பகுதிகளை நட்த்துவதற்கு ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளதா?
8.
புதிதாகப் பாடப்புத்தகங்கள்
எப்பொழுது வடிவமைக்கப்படும்?
பெரும்பாலான (தில்லிக்
கல்லூரிகளின்) ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டத்தை எதிர்கத்தான் செய்கிறார்கள். அதே
நேரம், இத்திட்டம் முன்னாள் மாணவர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுத்தான்
இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச பல்கலைக் கழகங்களில் மேற்படிப்பு
படிக்க முடியாமல் போயிருக்கலாம் அல்லது சர்வதேச நிறுவன்ங்களால்
நிராகரிக்கப்பட்டும் இருக்கலாம்.
இத்திட்டத்தால் கல்வியின் தரம் உயரம் என்பதை ஏற்றுக்
கொண்டாலும் இது பொதுவெளியில் ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல்
நடைமுறைப் படுத்தவது தவறு தான். சென்ற வருடம் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை
இதுபோன்றே ‘வெளிப்படையாக’ விவாதிக்கப்படாமல் நடைமுறைப் படுத்தப்பட்டது.
பொதுவாக, இந்தத் திட்டம் மட்டுமல்ல
அனைத்துத் திட்டங்களுமே அது அணு உலை அமைப்பதாகட்டும் அணு ஆயுத ஒப்பந்தமாகட்டும்
அல்லது தேர்தல் சீர்திருத்தம் ஆகட்டும் இவை எதுவுமே பொதுவெளியில் வெளிப்படையாக
விவாதிக்கப்படாமல் திணிக்கப்படுவதே வழக்கமாக உள்ளது என்பது தான் இதில் வருத்தமான
விஷயம்…




