செவ்வாய், ஏப்ரல் 30, 2013

அடித்தளம் இல்லாக் கட்டிடம்’எனக்கு பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மெண்ட்-தான் வீக்’

இது வடிவேலு நகைச்சுவைக்காகச் சொன்னது. ஆனால், நிஜத்தில் அடித்தளம் நன்றாக இல்லாவிட்டால் கட்டிடம் ஆட்டம் காணும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த அடித்தளமே இல்லாமல் கட்டிடம் கட்ட முடியுமா?

இந்திய அரசு மூன்றாண்டுகளுக்கு முன்னர் அதைத்தான் செய்ய நினைத்தது அதுவும் கல்வி உரிமை சட்டம் என்ற பெயரில்.

பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறைவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தமே காரணம் என்றும் அந்த அழுத்தத்தை நீக்க அவர்கள் எட்டாம் வகுப்புவரை தேர்வுகளின் வெற்றி-தோல்வியைக் கணக்கில் கொள்ளாமல் அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

மாணவர்களின் தேர்வு அழுத்தத்தை நீக்க எடுக்கப் பட்ட இந்த முடிவு இப்பிரச்சனையின் சில அடிப்படை உண்மைகளைக் கூட ஆராயாமல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது பாடத்திட்டச் சீரமைப்பு. பாடங்களில் தேர்வு எழுதவில்லை என்றாலும் தொடர்ந்து அந்தந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தால் ஓரளவு அப்பாடத்தின் அடிப்படைகளை அறியும் அளவு பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்றாண்டுகள் சென்ற நிலையிலும் இதில் எந்த முனைப்பும் காட்டப்படவில்லை. அடுத்து, ஆசிரியர்களின் அர்பணிப்பு. இன்றைய நிலையில் மாநிலங்களில் அரசுப்பள்ளிகளின் ஆசிரியர் நியமிப்பு என்பது பெருமளவில் அரசியலாக்கப்பட்டுள்ளது. (உதாரணமாக நிதீஷ்குமார் பீஹாரின் முதலமைச்சரானவுடன் அதற்கு முந்திய அரசின் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களை நீக்கி தேர்வையும் தடைசெய்து பட்டம் பெற்ற அனைவரையும்  முறையான பயிர்சி இல்லாமல் ஆசிரியராக நியமித்தது - இவர்களில் பெரும்பாலானோர் முறைதவறி பட்டம் பெற்றவர்கள் – இதுதான் பெரும்பாலான மாநிலங்களில் நடக்கிறது) இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அதைப் பகுதி நேரத் தொழிலாகவே ஆக்கிவிட்டுள்ளனர். மூன்றாவதாக, சரியான பெற்றோர்-ஆசிரியத் தொடர்பு இல்லாதமை. குறைந்த பட்சம் பாடங்களில் மேலதிக கவணிப்புத் தேவைப்படும் மாணாக்கர்களின் பெற்றோருக்கு அதைப்பற்றித் தெரிவிக்கப் பட வேண்டும். ஆனால், இது, Private tuition என்று அவர்களுக்கு மேலும் சுமையேற்ற மட்டுமே பயன்படுத்தி வருவது.

இதனால் கல்வியின் தரம் மிகவும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

2010-ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பில் தேரிய மாணவர்களில் 43% சதவிகத்தினர் 2ஆம் வகுப்பு பாடத்தையே புரிந்து கொள்ள முடியாத நிலைமையில் இருந்தனர். அதிலும் 29% மாணாக்கர்கள் இரு இலக்க ‘கடன் வாங்கி’ கழித்தல்களைச் செய்ய முடியாமல் திணறியுள்ளனர்.

2012-ஆம் ஆண்டு கணக்கின்படி இவர்களின் சதவிகிதம் 53% ஆக உயர்ந்துள்ளது. அதிலும் இரு இலக்கக் கழித்தல்களைச் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 46.5% ஆக உயர்ந்துள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு கல்விக்கான நாடாளுமன்றக் குழு இந்த முறையை மறு பரிசீலனைச் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அரசு இதை மறு பரிசீலனைச் செய்து கல்வி சீர்திருத்தம் செய்யுமா அல்லது மீண்டும் பழைய படியே தேர்வுகளை நடத்தி சும்மா இருக்குமா என்பது தான் தெரியவில்லை.

பெரும்பாலும் இரண்டாவது நடக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். கல்வி சீரமைப்பிற்கெல்லாம் நேரம் ஏது?

12 கருத்துகள்:

 1. நல்ல பொறுப்புணர்வுடன் எழுதியுள்ளீர்கள். ஆனால் என்ன செய்வது? திருட்டுத்தனம் புரிந்து தேர்வெழுதியவரையே கல்வி அமைச்சராக்கியவர்கள் உள்ள நாடு இது.

  காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையுடன்...வாழ்வோம்.

  பதிலளிநீக்கு
 2. கல்வியின் தரம்... அப்படி என்றால்...? இன்று நல்ல தொழில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியார் நடத்த வேண்டிய மது விற்பனைய அரசு நடத்துகிறது.
   மக்கள் நல/முன்னேற்ற விஷயங்களான கல்வி, மருத்துவம் ஆகியவை தனியார்மயம் ஆக்கப்பட்டுவிட்டன!

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தனபாலன்!

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றிகள் தனபாலன்!

   [என்னவென்று தெரியவில்லை தமிழ்மண இணைப்பில் சிறு தடங்கள் ஆகிவருகிறது. இது எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்குமா என்றுத் தெரியவில்லை. மீண்டும் முயற்சி செய்து பார்க்க வேண்டும்]

   நீக்கு
 4. ஒரு பக்கத்தில் கல்வி என்பது வியாபாரமாக மாறிக்கொண்டே இருக்கிறது. மறு பக்கம் அரசியல்வாதிகள் இப்படி ஏடாகூடமாக முடிவு எடுக்கிறார்கள்....

  எங்கே போய் முடியப் போகிறதோ......

  பதிலளிநீக்கு
 5. கல்வித் துறை முழுமையாக சீரமைக்கப் படவேண்டும். படிப்பினில் ஆர்வம் இருக்க வேண்டுமே தவிர போட்டி பொறாமை கூடாது. தேர்ச்சி சதவீதத்தை வைத்து பள்ளியின் தரத்தினை முடிவு செய்யக் கூடாது.
  கல்வியினால் மட்டுமே பாரதத்தை உயர்த்திட முடியும். அக்கல்விக்கு இன்னும் முக்கியத்துவம் வழங்கப் படல் வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஜெயக்குமார்!

   நீக்கு
 6. வியாபாரிகளிடமிருந்து கல்வியைப் பறிக்காதவரை எதுவும் முன்னேறப்போவதில்லை. ஆனால் இது சாத்தியமும் இல்லை. வெகுதூரம் சென்றாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சரி!

   கல்வியைத் தனியார் மயப்படுத்தியதில் வெகு தொலைவு சென்றுவிட்டோம்.
   திரும்ப வரும் சாத்தியக் கூறை விடுங்கள் திரும்புவதைப்பற்றிச் சிந்திக்கக் கூட இயலாத நிலையில் தான் இருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டத்தின்படி நிரப்பப்ப்ட வேண்டிய சேர்க்கைகள் பெரும்பாலும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அவற்றை நிரப்பச் செய்யக் கூட இயலாத நிலையிலேயே அல்லது அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலேயே அரசு இருக்கிறது.

   [இதில் சென்ற ஆண்டில் கர்நாடகத்தில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் படிச் சேர்க்கப்பட்ட மாணாக்கர்களின் (தனியாக தெரியும் வகையில்) சிகை மழிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி வேறு ஊடகங்களில் வந்துள்ளது]

   நீக்கு