திங்கள், ஏப்ரல் 08, 2013

அவந்தி தேசம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.


அவந்தி தேசம் என்பது யாதவர்களால் ஆளப்பட்டத் தேசங்களுள் ஒன்று. இது மத்தியப்பிரதேசத்தின் க்ஷிப்ரா நதியின் (இது யமுனையின் துணைநதிகளில் ஒன்றான சர்மனதி நதியின் கிளைநதி; தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாயும் இந்த சர்மனவதியின் மற்றொரு துணைநதியான அஸ்வ நதியில் தான் குந்தி தன் குழந்தை கர்ணனை விட்டாள் என்றும் குழந்தையைச் சுமந்த அந்தக் கூடை பின் சர்மனவதியில் கலந்து பின் யமுனை மூலமாகக் கங்கையைச் சென்றடைய, கங்கை நதிக்கரையில் அங்கதேசத் தலைநகர் சம்பாபுரி நகரில் அதிரதனால் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுவர்) கரைகளில் அமைந்த உஜ்ஜயினி நகரத்தைத் தலைநகராகக் கொண்ட நாடு.

இந்தியாவில் நான்கு இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும். அலகாபாத், ஹரித்வார் இவை இரண்டும் பொதுவாக அனைவரும் அறிந்த இடங்கள். மற்ற இரண்டு இடங்கள் நாசிக்-உம் உஜ்ஜயினியும் ஆகும். உஜ்ஜயினியின் கும்பமேளாவிற்கு சிம்மஹஸ்தி என்று பெயர். குரு சிம்ம ராசியில் இருக்கும் வருடத்தில் இந்த கும்பமேளா நடைபெறும். குரு ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்ல சற்றேரக்குறைய ஒருவருடம் கும். தற்போது குரு ரிஷபத்தில் இருக்கிறது. (கடந்த மாசி, பங்குனி மாதங்களில் இரவில் மெல்ல ரோகிணி நட்சத்திரத்தை நெருங்கி மிகவும் அருகில் வந்து பின் தற்பொழுது மெல்ல மெல்ல அதிலிருந்து விலகி செல்வதை கொண்டிருப்பதை நாம் வானில் பார்க்க முடியும்; இந்த சித்திரை-1 ஆம் தேதியன்று சந்திரனும் இந்த ரோகிணிக்கு அருகில் வரும் பொழுது மாலை சூரிய வெளிச்சத்தில் கூட குருவை பார்க்கும் வாய்ப்புக் கிட்டலாம். ஏனென்றால், சந்திரன், குருவுக்கு மிகவும் அருகில் நெருங்கும்.). ரிஷபத்தில் இருக்கும் இந்த குரு இரண்டு மாதங்களில் மிதுனத்திற்கு வந்து விடும். 2015-16 இல் சிம்மராசியில் இருக்கும்; அந்த ஆண்டில் (21.04.2016-22.05.2016) உஜ்ஜயினியில் கும்பமேளா நடைபெறும்.

அவந்தி தேசம் வெற்றாவதி நதியால் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த நதியின் தற்போதையப் பெயர் பேதவா (Betwa). வட அவந்தி தேசத்தின் தலைநகராக உஜ்ஜயினியும் தென்னவந்தியின் தலைநகராக மஹிஷமதி நகரமும் குறிப்பிடப்படுகின்றன.

புராணங்களின் படி சந்திரவம்ச ஹேஹயர்கள் (ஹைஹேயர்கள்) தான் முதலில் அவந்தியை ஆண்டு வந்தனர். இவர்களைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

மஹாபாரதத்தில் பல இடங்களில் அவந்தி குறிப்பிடப்படுகிறது. கிருஷ்ணர் பலராமர் ஆகியோரின் குரு ஸாந்திபனி முனிவர் என்பவர். கிருஷ்ணரும் பலராமரும்  இவரிடம் அவந்தி தேசத்தின் உஜ்ஜயினியில் குருகுல வாசம் செய்ததாகக் குறிப்பிடுகிறது.

அவந்தி தேசத்தின் அரசர்களாக இருவர் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் பெயர் விந்தன், அனுவிந்தன். இருவரும் சகோதரர்கள். இவர்கள் ருக்மி, கம்சன், ஜராசந்தன் ஆகியோருடன் கூட்டு வைத்திருந்தவர்கள். தர்மர் ராஜசூய யாகம் நடத்திய பொழுது. அர்ஜுனன் வடக்கிலும், பீமன் கிழக்கிலும், நகுலன் மேற்கிலும் படை நடத்திச் செல்ல, சகாதேசன் தெற்கு நோக்கி அனுப்பப்பட்டான். கிருஷ்ணர் பாண்டவர்களின் நண்பர் என்பதால் சகாதேவனை இவர்கள் எதிர்த்தனர். சகாதேவன் இவர்களைத் தோற்கடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பின்னர் பாரதப் போரில் இவர்கள் (அவந்தி சகோதரர்கள்) கௌரவர் பக்கம் போரிட்டனர். இவர்கள் தனித்தனியே ஒரு அக்ஷௌனி படைக்குத் தலைமை தாங்கினார்கள். இவர்களின் வீரம் பல இடங்களில் துரியோதனன், பீஷ்மர், த்ரோணர், சஞ்சயன், த்ருதராஷ்டிரன் ஆகியோரால் புகழப்பட்டுள்ளது. கர்ணன் தலைமையில் கௌரவர் படைகள் போரிட்ட பொழுது விந்தனும் அனுவிந்தனும் அர்ஜுனனால் கொல்லப்பட்டனர். அவர்கள் இறந்த பின்னரும் அவந்தி தேசப்படைகள் கௌரவர்கள் சார்பில் போரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொன்மங்களில் குறிப்பிடப்படும் பட்டி-விக்ரமாதித்த (மால்வ தேசத்தவனாகக் குறிப்பிடப்பட்டாலும்) இந்த அவந்தி தேசத்தின் தலைநகரான உஜ்ஜயினிதான் அவன் தலைநகரமாகவும் குறிப்பிடப்படுகிறது. போஜராஜன் (போஜர்களின் இனமும் மால்வா பகுதியைச் சேர்ந்ததாகவே குறிப்பிடப்படுகிறது) உஜ்ஜயினி நகரின் மரத்தடியில் தோண்டிய பொழுதே விக்ரமாதித்தனின் 32 பதுமைகள் கொண்ட சிம்மாசனம் கிடைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

 அசோகர் காலத்தின் 16 ஜனபாதைகளில் தெற்கு நோக்கி விதர்ப தேசத்தைத் தாண்டி ப்ரஸ்தானத்திற்குச் செல்லும் ஜனபாதையில் அவந்தி தேசம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் ஏழு புண்ணிய க்ஷேத்திரங்கள் மோட்சத்தை அளிப்பவை என்று குறிப்பிடுவர். அது பற்றிய வடமொழி ஸ்லோகம் ஒன்று உள்ளது.

          ’அயோத்யா மதுரா மாயா காசி
                   காஞ்சி அவந்திகா
          பூரி, த்வாரவதி சைவ ஸப்தைத
                   மோக்ஷ தேயிகா’

இதில் அவந்தி-யும் குறிப்பிடப்படுகிறது.

2 கருத்துகள்:

  1. ஏழு புண்ணிய க்ஷேத்திரங்களில் அவந்தி பற்றிய சில தகவல்கள் வியப்பைத் தந்தது... விளக்கங்களுக்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு