குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 13, 2012

திருமணமும் பள்ளிச் சேர்க்கையும்


சமீபத்தில் மதுரையருகே ஓர் அரசுப் பள்ளியில் இரண்டு மாணவிகளைப் பதினோறாம் வகுப்பில் சேர்க்க அப்பள்ளியின் முதல்வர் மறுத்துள்ளார். காரணம் அவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பது தான்.

பள்ளியின் முதல்வர், திருமணமானப் பெண்களைப் பள்ளியில் சேர்த்தால் அவர்களுடன் வகுப்பில் படிக்கும் மற்ற குழந்தைகளை அது பாதிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால், திருமண வயதுக்கு வரும் முன்னரே சட்ட்த்திற்குப் புறம்பாக திருமணம் செய்வது தவறு; அதனால் தவறு செய்த அவர்களைப் பள்ளியில் சேர்த்தால் மற்றவர்களையும் (அதே போல்) தவறு செய்யத் தூண்டும் என்பதால் அந்தப் பள்ளி முதல்வரின் இச்செய்கையைச் சரியானதாக நினைக்கத் தூண்டும். போதாக் குறைக்கு, பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும், குழந்தைத் திருமணம் செய்த் பெண்களுக்கு பள்ளிகள் தடை விதித்தால் அது அதைச் செய்ய விழையும் பெற்றோரை யோசிக்க வைக்கும் என்று ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால், உண்மையில் நிலைமை இவ்வாறு இல்லை….

குழந்தைத் திருமணம் செய்யும் பெற்றோர் பெரும்பாலும் அவர்களின் படிப்பைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை என்பது தான் உண்மை. கூறப்போனால் அவர்களுக்குக் குழந்தையைப் பற்றியதை விட தங்களின் சுமையை (அவர்களைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் சுமைதான்) அல்லது கடமையைச் செய்ய வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருக்கிறது. குழந்தைகள் மிகச் சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க நேரிடுகிறதே என்பதைக் கூட எண்ணாதவர்கள் அவர்களின் எதிர்காலத்தையோ அதிலும் அவர்களின் கல்வியைப் பற்றி அதிகம் கவலைப் படுவார்கள் என்று சொல்வதற்கில்லை.

சில சமயங்களில் மேற்கூறிய சிறுமிகளின் பெற்றோர் போல ஒரு சிலர் திருமணம் ஆன பின்பும் அவர்களின் எதிர்காலத்தை பற்றியச் சிந்தனையுடன் குறைந்த பட்சம் அவர்களின் பள்ளிக் கல்வியைத் தொடர முயலும் போது அதையும் முளையிலேயே கிள்ளிவிட்டால் என்ன சொல்வது?

மேலும், குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு எதிரானது; அதனால் அச்சிறுமியர் குற்றமிழைத்தவர்; எனவே, அவர்களைச் சேர்க்கக் கூடாது என்ற வாதத்திலும் வலுவில்லை. ஏனென்றால், அவர்கள் குழந்தைகள் அவர்களின் விருப்பமோ விருப்பமின்மையோ அவர்களின் பெற்றோரிடம் எடுபடப் போவதில்லை. இத்திருமணங்கள் பெரும்பாலும் அவர்கள் மேல் திணிக்கப்பட்டுத்தான் இருக்கும். இந்நிலையில் குற்றவாளிகள் என்று கூற வேண்டுமானால் அது அவர்களின் பெற்றோரைத் தான் கூற வேண்டியிருக்கும். இக்குழந்தைகளோ பாதிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்களுக்குக் கல்வியும் மறுக்கப்படுவது நியாயமில்லை.

திருமணம் ஆன குழந்தைகளுடன் சேர்ந்துப் படிப்பதால் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படும் என்ற வாதத்திலும் சாரம் இல்லை. ஏனென்றால், பெரும்பாலானத் திருமணங்கள் பெற்றோரால் தான் தீர்மானிக்கப் படுகின்றன. உடன் பயிலும் மாணவர்களின் குடும்பச் சூழல் பெரும்பாலும் யாரையும் பாதிப்பதில்லை என்பது தான் உண்மை.

பெண்கள் அமைப்புகள் ஒன்றைச் சிந்திக்க மறந்துவிட்டன. பெரும்பாலும் இது போன்ற கல்விக் கூடங்களில் சேர்ப்பது மறுக்கப்படுவது பெண்களுக்கு மட்டுமே இருக்கும். காரணம், பெரும்பாலும் அவர்களின் திருமணச் சின்னங்கள் வெளியில் தெரிவது தான். ஆண்களுக்கு இது போன்ற சின்னங்கள் எதுவும் இல்லாத்தால் அவர்களுக்குத் திருமணம் நடந்திருந்தாலும் வெளியில் தெரியாமல் அவர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவதுதான் நடக்கும்.

நல்ல வேளையாக மாநில முக்கிய கல்வி அதிகாரி திரு. நாகராஜ முருகன் அவர்களின் தலையீட்டால், சென்ற வாரம் அந்தப் பள்ளி முதல்வர் இரண்டு சிறுமியரையும் பள்ளியில் சேர்க்கச் சம்மதித்துள்ளார் என்பது தான் இதில் ஆறுதல் தரும் விஷயம்.  

இந்தக் கட்டுரை வல்லமையில் வெளியாகியுள்ளது.

புதன், மே 30, 2012

பொய் சொல்லப் போறேன்


நாம் அனைவரும் நம் குழந்தைகள் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்று விருப்பப் படுவோம்.

 திடீரென்று ஒருநாள் நாம் எதிர்பாராத ஒரு பொழுது அவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதை அல்லது அவர்கள் முன்னர் சொன்ன ஒரு பொய் வெளிப்படும் பொழுது, நம் மனதில் ஒரு பெரிய வெற்றிடமும் அவர்களைப் பற்றிய பெரிய கேள்வியும் உருவாகும்.  இனி அவர்கள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்; படிப்பு, நன்னடத்தை, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படும் என்ற பயமும் உருவாகும். மேலும், மனதின் மற்றொரு பகுதியில் ‘நம் வளர்ப்பு முறைச் சரியில்லையா’ அல்லது ‘அவர்களின் சேர்க்கைச் சரியில்லையா’ என்பது போன்ற கேள்விகளும் வரும்.

ஆனால், சமீபத்திய மனோதத்துவ ஆராய்சிகள் கூறுவது என்னவென்றால், 4 – 6 வயதில் அவர்களுக்கு இந்த பொய் சொல்லும் வழக்கம் துவங்கிவிடுகிறதாம்.  இது அவர்களின் மன வளர்ச்சியின் முக்கிய கட்டமாகும். குழந்தைகளின் ’பொய் சொல்லுதல்’ என்ற இச்செயல் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி நிபுணர்கள் கூறுவது என்னவென்றால்,  பொய் சொல்லத் துவங்கும் குழந்தை முதலில் உண்மை என்ன என்பதை தன் மூளையில் ஏற்றி தனது அறிவால் அதை பகுத்து ஆய்ந்து பின் அதற்கு மாற்றாக ஒரு கற்பனையை தன் மூளையில் உருவாக்கி அதை மற்றவர் நம்பும் வகையில் அவர்களிடம் எப்படி எடுத்து வைப்பது என்பதை ஆராய்ந்து அந்த செயலைச் செய்கிறது. மேலும், இதை வளர்ப்பு, சமூக நிலை என்பவற்றைத் தாண்டி அவர்களின் இயல்பான மூளை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள்.

இந்த பொய் சொல்லுதல் அவர்களுக்கு அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளுவதையும், அவற்றின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளவும் அவற்றுக்கு மாற்றான தன்மையை கற்பனை செய்ய அல்லது அனுமானிக்கவும் உதவுகிறது.

ஆக, சிறுவயதில் குழந்தைகள் கூறும் சிறு சிறு பொய்களைப் பற்றி கவலைப் படுவதற்கு எதுவும் இல்லை. பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த பொய்கள் அளவுக்கு அதிகமாகப் போய்விடக் கூடாது என்பது தான்.

அவர்கள் பொய் சொல்லும் அளவுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்கள் உண்மை சொல்ல ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவது தான். அதாவது, அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது அதைக் கோவமாக வெளிப்படுத்தாமல் அவர்கள் உண்மை உண்மையை உரைத்த்தற்கு பாராட்டியோ அல்லது அந்தத் தவறுகளை மன்னிப்பதன் மூலமோ இதை அவர்களுக்கு உணர்த்தலாம். சில நேரங்களில் நாம் செய்யும் அதீத எதிர்வினைகள் (over reactions) அவர்களை பொய் செல்வதை நோக்கிச் செலுத்துகின்றன. மேலும், உண்மை சொல்வதால் ஏற்படும் நன்மைகளையும் அது தரும் சுயமதிப்பையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உண்மை உரைப்பதற்கும் அதனால் ஏற்படும் சோதனைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக வளர்க்கவும் வேண்டும். 

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

கத்திக்குத்து கற்றுத் தரும் பாடங்கள்



நேற்று மாலை முதல் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் செய்தி ஊடகங்களிலும் முக்கிய்ச் செய்தியாக இடம் பெற்றது தனியார் பள்ளி ஆசிரியை உமாமஹேஸ்வரி அவர்களை அவரின் (9-ஆவது) வகுப்பில் பயிலும் மாணவன் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்திய சம்பவம் தான்.  மாணவன் தான் குத்தியதை ஒப்புக் கொண்டு தன் பெற்றோர் மேலும் வெறுப்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளான்.

ஒட்டு மொத்த ஆசிரிய சமூகமும் பெற்றோர்களும் இச்சம்பவத்தால் சற்று கலங்கியுள்ளன என்றே கூறலாம்.

இன்று மற்றொரு செய்தி, தில்லியில் 12 வயது சிறுவன் ’குற்றமும் பின்ணணியும்’ போன்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து அதில் வருவது போல் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ளான்.

இதற்கு யார் காரணம்? என்று தனிப்பட்ட பிரச்சனையாக இதைப் பார்ப்பதில் ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. முதல் சம்பவத்தில் ஒருவேளை, மாணவனின் தண்டனையை நிர்ணயிக்க வேண்டுமானால் இது நீதிமன்றங்களுக்கு தேவையானதாக இருக்கும். ஆனால் சமூகம் ஒட்டு மொத்தமாக, இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடராமலிருக்க, இதில் ஒரு பாடம் கற்க வாய்ப்புள்ளது. அதற்கு, ஒட்டு மொத்த சமூகமே ஒரு சுய சோதனை செய்து கொள்வது அவசியம். முதலில் காரணங்களாக நமக்குத் தோன்றுவதைப் பார்ப்போம்

ஒருபக்கம் ஒட்டு மொத்த கல்வித்துறையே இன்று வணிகமயம் ஆகிவிட்டது. காரணம், மதிப்பெண் தேர்வு முறை. பள்ளியின் வருமானத்தை கணக்கில் கொண்டு அதிகமாக மாணவர்களைச் சேர்த்து ஆசிரியர்களை செயல்பட முடியாமல் செய்வது. மேலும் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தாலும் பெற்றோராலும் கொடுக்கப்படும் அழுத்தம். அந்த அழுத்த்த்தை அவர்கள் மாணவர்களிடம் திருப்பிவிடுவது. ஆசிரியர்களைக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டும் சேர்த்த பின்பு அவர்களூக்கு வேறு பயிற்சிகள் தராமலிருப்பது.

நம் போன்ற பெற்றோரின் பங்கும் இதில் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஏனென்றால், எத்தனைத் தேர்ச்சி சதவிகிதம் பள்ளி காட்டுகிறதோ அதை வைத்துப் பெற்றோர் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது.
மேலும், நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஒரு நல்ல அரசாங்க அல்லது அந்நிய நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்காக படிக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்கு. அல்லது நம் சிறு வயது கனவுகளை நிரைவேற்றிக் கொள்ளப் பயன் படுத்திக் கொள்வது.

தவிர, போட்டி நிறைந்த உலகமாக மாற்றி சக மாணவர்களுடன் அல்லது அடுத்த வீட்டுக் காரகளுடன் அவர்களை ஒப்பிட்டு அவர்களை விட ஒரு படி மேல் என்று நிரூபித்து தன் ego-வை திருப்தி படுத்திக் கொள்ள அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது.

பிள்ளைகளின் பணத் தேவைகளை நிறைவேற்றினால் மட்டுமே போதுமானதாக நினைத்து அவர்களின் மற்றத் தேவைகளை நிராகரிப்பது; அவர்களுடன் சரிவரப் பழகத் தேவையான நேரத்தை செலவிடாமல் இடைவெளி ஏற்படுத்திக் கொள்வது.

நம் குழந்தைகளிடம் இலக்கை எட்டுவது மட்டுமே முக்கியம் என்றும் அதன் வழி முறைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிப் பழக்கி வருவதையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுவே, நேர்மையும் நல்ல பழக்க வழக்கங்களும் நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு காரணமாகியுள்ளது.

ஆக முதலில் திருந்த வேண்டியது நாம் தான்…..

செவ்வாய், நவம்பர் 08, 2011

கிள்ளை பேச்சு கேட்கவா


குழந்தை பிறந்து ஒர் ஆண்டு ஆனதோ இல்லையோ, எல்லா பெற்றொருக்கும் வரும் முதல் கவலை அது எப்போது பேசத் துவங்கும் என்பதாகத் தான் இருக்கும். அதுவும் அடுத்த வீட்டில் சமவயது குழந்தை இருந்து அது பேசத் துவங்கிவிட்டால் குல தெய்வத்திற்கு காசு முடிவதிலிருந்து கடா வெட்டுவரை வேண்டுதல்கள் இருக்கும். மேலும், அந்த குழந்தையின் அறிவாற்றலையும் சந்தேகிக்க ஆரம்பித்துவிடுவர். சாதாரணமாக சீக்கிரம் பேசத் துவங்கும் குழந்தைகள் புத்திசாலிகள் என்ற கருத்து இருக்கிறது. இது சரியில்லை. குழந்தைகளின் அறிவுத் திறனுக்கும் அவர்கள் பேசத் துவங்குவதற்கும் அதிகத் தொடர்பு இல்லை.  

குழந்தைகள் பேசுவது மிக முக்கியமான ஒன்று தான். பேசுவது என்பது அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவரற்குத் தேவையான மிக முக்கியமான ஒன்று.

சொல்லப் போனால் குழந்தைகள் பேசுவதற்கு முன்னரே தங்களின் எண்ணங்களை, உணர்வுகளை, தேவைகளை – அழுவது, கோபமாக பொருட்களை எறிவது, தரையில் பிரண்டு அரற்றுவது ஆகியவற்றினால் - வெளிப்படுத்தத் துவங்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக – பெற்றோரும் சுற்றத்தாரும் – செல்லும் சொற்களைக் கவணித்து அவற்றில் அவர்களை ஈர்த்த, அவர்களுக்கு எளிதானவற்றைத் திரட்டி தங்கள் அந்த சத்தங்களை பிரதிபலிக்க முயற்சிக்கும். சிறு குழந்தைகளின் கவனிப்புத் திறன்  பெரியவர்களை விட மிகக் கூர்மைனது. காரணம், நம்மைப் போல் அன்றி அவர்களுக்கு கவனச் சிதறல் குறைவு.


குழந்தைகளின் இந்த முயற்சியை வளர்ப்பதிலும் அதைச் சீரமப்பதிலும் பெற்றோருக்குப் பெரும் பங்கு உள்ளது. அவர்களின் பேச்சு, உரையாடல்கள் தான் குழந்தைகளால் அதிகம் கவனிக்கப்படுபவை. அதிகம் தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகளால் -  ஒலி ஒரே இடத்திலிருந்து வருவதால் உரையாடல்களையும் அதற்கான உதட்டசைவு நாக்கு சுழலும் விதம் ஆகியவற்றை கவனிக்க முடியாததாலோ என்னவோ – பேசத் துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால், பேசத்துவங்கும் குழந்தைகளைத் தொலைகாட்சியிலிர்ந்து திசைத் திருப்பி, வெவ்வேறு சத்தங்களையும், சொற்களையும் வார்த்தைகளையும் உச்சரிக்கச் செய்யத் தூண்ட வேண்டும்.

சாதாரணமாக, குழந்தை மூன்று மூன்றரை வயதில் பேச ஆரம்பிக்கும். துவக்கத்தில் அவை வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்காமல் அல்லது பதங்களை மாற்றியோ பேச (உறள சீசீ உளற!!!) ஆரம்பிக்கும். அப்பொழுது அவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ திருத்தவோ முயலக் கூடாது. இது சாதாரணமாக அவர்களை புதுபுது சொற்களை கற்க/உபயோகப்படுத்த முயற்சிப்பதிலிருந்து தடுக்கும். அதே நேரம், பெற்றோர் அவர்களைப் போலவே மழலையாக பேச ஆரம்பிக்கவும் கூடாது. இது அவர்களை அவர்களாகவேத் திருத்திக் கொள்வதிலிருந்துத் தாமதப் படுத்தும்.

மெதுவாக பேச ஆரம்பித்துவிட்டால் அடுத்து பெற்றோர் சந்திக்கும் பிரச்சனை அவர்கள் திக்கித் திக்கி பேசுவது. குழந்தை முதலில் திக்கிப் பேச ஆரம்பித்த உடனேயெ பெற்றோருக்கு tension ஆரம்பித்துவிடும். ஆனால், இதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நினைக்கும் குழந்தைக்கு அதற்கான தகுந்த பொருத்தமான சொற்களை அல்லது அந்தச் சொற்களைப் பயண்படுத்தித் தொடர் வாக்கியமாக மாற்றுவதில் உண்டாகும் குழப்பமே. சில நேரங்களில் பயம் கூடக் காரணமாக இருக்கும். இந்த நேரத்தில்,  அந்த பயத்தைப் போக்கி புது புது வார்த்தைகளை மெதுவாக அவர்களுக்கு அறிமுகப் படுத்துவது நலம்.

பொதுவாக, குழந்தைகள் ஆறு / ஏழு வயதை எட்டும் பொழுது தடுமாறாமல் தொடர்ச்சியாகப் பேசத் துவங்குவர். அதுவரை பொறுமை காப்பது அவசியம்.

திங்கள், அக்டோபர் 24, 2011

வீட்டு விளையாட்டுகள்



விடுமுறை நாள் என்றால் எப்போதும் பையன் அப்பா, வா கேரம் விளையாடலாம்; கிரிக்கெட் விளையாடலாம்; Scrabble விளையாடலாம் என்று ஒரே நச்சரிப்புதான். இதே விளையாட்டு நண்பர்களுடன் விளையாடிய பொழுது போனதே தெரியவில்லை. ஆனால், இவனுடன் விளையாடும் பொழுது மட்டும் ரசிக்கவே முடிவது இல்லை. காரணம், விளையாட்டின் முடிவு. முன்னதில் நமக்கு அது தெரியாது; பின்னதில் பெரும்பாலும், நாம் குழந்தையின் மகிழ்ச்சிக்காகத் தோற்ப்போம், என்பதுதான்.

இப்படி விளையாடும் பொழுது பொதுவாக சந்தேகம் தோன்றும். நாம் எப்பொழுதுமே அவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தோற்க வேண்டுமா? இது சரியா அல்லது தவறா? அப்படி விட்டுக் கொடுத்து ஜெயிப்பதால், (1) அவர்களின் திறமை வளர்ச்சி அடையாமல் போய் விடுமா? (2)  அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்கும் சிறு சிறு தோல்விகளிலே  மனம் உடைந்துவிடுவார்களா? என்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது. இதற்கு விடைதான் என்ன?

விடை என்னவோ சுலபமானது தான்.

குழந்தைகள் வெற்றியைத்தான் விரும்புகின்றன.  

ஆனால், தொடந்து வெற்றியே பெற்று வந்தால் அவர்களுக்கு அந்தப் போட்டியில் அவர்களை வெற்றி பெற வைப்பதற்காகவே பெற்றோர் தம் திறமையை முழுவதும் உபயோகிக்கவில்லையோ என்ற சந்தேகதை ஊட்டும். இது, அவர்கள் திறமை மேல் அவர்களுக்கு சந்தேகத்தை வளர்க்கும்; அல்லது, அவர்கள் வெற்றி பெற யாராவது தியாகம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற வீண் எதிர்பார்பை வளர்க்கும்.

எனவே, அவர்களுக்கு அவ்வப் பொழுது தோல்வியைச் சந்திக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், அதை சற்று நாசூக்காக அவர்கள் மனம் கோணாத படியும் செய்ய வேண்டும். அந்தத் தோல்வியில் அவர்கள் ஏதாவது கற்றுக் கொள்ளும் படி அமைந்த்தாகக் காட்ட வேண்டும்.

சாதாரணமாக, இது போன்ற போட்டி விளையாட்டுகள் குடும்பத்தில் குழந்தைகளுக்கும் பெற்றொருக்கும் அன்பு, நெருக்கம் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு பாலமாகவே இருக்கின்றன. மிகச் சிறு வயதில் (2-5 வயது) தாயம், பரமபதம் போன்ற அதிர்ஷ்ட விளையாட்டுகளை விளையாடுவதுதான் சிறந்தது. ஏனெனில், இதில் குழந்தை, பெரியவர் இருவருக்குமே வெற்றி தோல்வியில் சமவாய்ப்பு இருக்கிறது.

பிறகு, அவர்களுக்கு, சொல் விளையாட்டு (Word Building, Scrabble போன்றவை), அறிவு / உடல் திறன் வளர்க்கும் (Chess போன்றவை) விளையாட்டுகளைச் சொல்லித் தரலாம். முதலில், மொதுவாகவும், எளிதான விளையாட்டுகளை அறிமுகம் செய்ய வேண்டும். போகப் போக அவற்றைச் சற்றுக் கடினமாக்க வேண்டும். அப்பொழுதுதான் திறமை வளரும். மேலும், வெற்றியையும் அவர்கள் அதிக உற்சாகத்துடம் விளையாடுவர். அப்படியேத் தோற்றாலும் போராடிதான் தோற்ற உணர்வை அவர்களுக்குத் தர வேண்டும். அது அவர்களின் திறமை, போராட்ட குணங்களை வளர்க்க உதவும்.