புதன், செப்டம்பர் 26, 2012

உடலுறுப்பு தானம்பொதுவாக மக்கள் கண் தானம், ரத்த தானம் பற்றித் தெரிந்த அளவு கூட உடல் உறுப்பு தானம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இந்த உடல் உறுப்பு தானத்தின் தேவை மற்றும் அதன் கிடைப்பு பற்றி அரசு தரும் தகவலைப் பார்ப்போம்…

சாதாரணமாக ஒரு நாளில் சுமார் 10 நோயாளிகள் உடலுறுப்புகள் மாற்றப்படாததால் இறக்கின்றனர். அதே நேரம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு நோயாளி உடலுறுப்பு மாற்ற வேண்டியத் தேவைக்காக காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்.

தற்பொழுது, சுமார் 10 லட்சம் நோயாளிகள் உடலுறுப்புத் தேவைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் வருடத்தில் சுமார் 3500 உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் தான் செய்யப்படுகின்றன.

அரசாங்கக் கணக்கின்படி இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 80000 உடறுப்பு தானம் செய்ய இணைகிறார்கள். ஆனால், வருடத்திற்கு 100 பேர் மட்டுமே தானம் செய்கிறார்கள்.

இதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில…

1.            தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவச் சாதனங்களின் பற்றாக்குறை
2.            உறுப்புகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயனர்களைச் சென்றடையாமை
3.            சட்டச் சிக்கல்கள் [சென்ற 2011 சட்டத் திருத்தத்திற்கு முன் வரை மூளைச் சாவு என்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை]
4.            தானம் செய்தவர்களின் குடும்பத்தினரின் உதவியின்மை
5.            விழிப்புணர்வு இல்லாமை

விழிப்புணர்வு என்ற இட்த்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மூளைச் சாவு என்பதை இந்தியர்கள் இன்னமும் மனதளவில் ஏற்கவில்லை. இதயத் துடிப்பு அடங்கும் வரை உயிர் இருப்பதாகவும் எப்படியாவது காப்பாற்றிவிட முடியும் என்று காத்திருப்பதால் சில மணி நேரம் வீணாகி விடுகிறது. இதயத் துடிப்பு நின்று இறந்த மணிதரின் 10-15 உறுப்புகள் தான் மற்றவருக்குப் பொறுத்த முடியும். மூளைச் சாவு ஆகிவிட்ட  மனிதரின் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உடல் உறுப்புகள் மாற்று உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் 35-40 உறுப்புகளை மாற்றுச் சிகிச்சைக்கு உபயொகப்படுத்த முடியும்.

இந்த சிக்கல்களைக் களையும் நோக்கத்தில் தில்லி அரசு கடந்த மூன்று நாட்களாக தில்லியின் முக்கிய மருத்துவ மனைகளைச் சேர்ந்த 36 மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சான்றிதழ் பயிற்சி அளிக்கிறது. இதில் மருத்துவப் பயிற்சியைத் தவிர மருத்துவர்களுக்கு தான் செய்தவர்களின் குடும்பங்களை தானத்திற்குத் தயார்படுத்துவதிலும் பயிற்சி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவமனைகளில் இந்த தானம் ஏற்பதற்கும் உறுப்புகள் பயனர்களைத் தகுந்த நேரத்தில் சென்றடைவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் பயிற்சியைப் பற்றி மேலும் குறிப்பிடுகையில், சாதாரணமாக மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் மிகவும் அவசியம் என்றும் அதற்கானப் பயிற்சிக்காணத் திட்டமும்  செயல்முறைப் படுத்தப் பட இருப்பதாகவும் கூறியுள்ளது

இது பற்றி மக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

திங்கள், செப்டம்பர் 24, 2012

பறவைகள் பலவிதம்


’பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்றார் கவியரசர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் க்லாஸ்கோ பல்கலைக் கழகமும் மேற்கு ஸ்காட்லாண்ட் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளில் மனிதர்கள் இ-மெயிலைக் கையாள்வதை ஆராய்ந்து அவற்றை 12 பறவைகளின் பழக்கவழக்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.

அவை….

1.   கட்டாய மரங்கொத்தி (Compulsive Woodpecker): இவர்களால் மரங்கொத்திப் பறவை எப்படி மரங்கொத்துகிறதோ அதேப் போல் கட்டாயம் எப்பொழுதும், இரவு பகல் என்று நேரங்காலம் பார்க்காமல் மெயிலைத் திறந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் இவர்களின் தலை உடைந்து சிதறிவிடும்.
2. ஒடுங்கிய கோட்டான் (Hibernating Poor-will) : இவர்கள் கோட்டானைப் போல அசைவில்லாமல் ஒடுங்கியே எப்பொழுதாவது அவர்களின் மெயில்களைப் படிப்பார்கள். இவர்களிடமிருந்து பதில் தகவல்கள் எதுவுமில்லாததால் இவர்களுக்கு வரும் மெயில்கள் குறைவாகத்தான் இருக்கும்.
3.  அகவும்/கூக்குரலிடும் மயில்கள் (Caterwauling Peacock) : இவர்கள் மயில்களைப் போல் மிகவும் அவசியம் என்று சாதாரண தகவலைக் கூட பெரிதாக அனைவரின் கவனத்தைக் கவரும் படி அனுப்புவார்கள்.
4. எதிர்கால ஈமுக்கள் (Back-covering Emu): இவர்கள் எதிர்காலத்தில் இந்தத் தகவல்களை நான் ஏற்கனவே உனக்குத் தெரியப் படுத்தி விட்டேன் என்று நிரூபிப்பதற்காகச் செய்திகளை (ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருந்தாலும்) அடுத்தவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
5.    எதிரொலிக்கும் மைனாக்கள் (Echoing Mynah) : எந்த மெயில் வந்தாலும் உடனே அது தனக்குக் கிட்டிவிட்டதென்று பதிலளிப்பார்கள்.
6. வெறுப்பேற்றும் கிளிகள் (Boorish Parrot) : தேவையற்ற மெயில்களையும் தகவல்களையும் அனுப்பி வெறுப்பேற்றுபவர்கள்.
7. இருட்டு ஆந்தை (Night Owl) : மற்றவர்கள் நேரத்தை மதிக்காமல் அவர்களுக்கு நேரங்கெட்ட நேரத்தில் தகவல் அனுப்புபவர்கள்.
8.    கலவரக் காக்கை (Pesky Crow):         இவர்கள் ஒரே தகவலை வேறு வேறு வடிவில் அனுப்பிப் பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துவார்கள்.
9.    கடத்தல் குயில்கள் (Buck-passing Cuckoo): இவர்கள் தங்கள் வேலையை மற்றவர்களுக்குக் கடத்திவிடும் சோம்பேறிகள்.
10. மறைந்த கோழிகள் (Camouflaging Woodcock) : இவர்கள் மற்றவர்கள் அனுப்பிய தகவலைத் தாங்களே அனுப்பியது போல மறைத்து அவர்கள் பெயரை நீக்கி அனுப்புவார்கள்.
11.பதுக்கும் குருவிகள் (Hoarding Magpie) : தங்கள் மெயில்களில் ஆயிரக்கணக்காக அப்படியே வைத்துக் கொண்டு எது தேவையானது எது தேவையற்றது என்பது புரியாமல் தவிப்பவர்கள்.
12.மின்னல் குருவிகள் (Lightening-Response Hummingbird): இவர்கள் மெயில் வந்த அடுத்த நொடியே பதிலனுப்பும் சூரர்கள்.

இவற்றைத் தவிர கரிச்சான் குருவி என்று ஒரு பிரிவையும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தான் சரியான நேரத்தில் சரியாக மெயில்களை அனுப்புபவர்கள்; அல்லது அவற்றைப் பார்ப்பவர்கள்.

இவற்றில் நாம் எந்த பிரிவைச் சார்ந்தவர் என்பது நமக்கே தெரியும் [திருவிளையாடல் தருமி!!!]…..

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

காந்தாரம்


56  புராதன இந்திய தேசங்களின் வரிசையில் காம்போஜம்தராடம் ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக...

3.  காந்தாரம்.

காந்தாரம் தற்போது ஆஃப்கானிஸ்தானில் காந்தஹார் என்ற பெயரில் வழங்கப் பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

 

அலெக்ஸாந்தர் காலத்திலிருந்தே காந்தாரமும், குபா நதி என்கிற காபுல் நதிக்கரையில் அமைந்த அதன் புருஷபுரமும் (தற்போதைய பெஷாவர்) தக்ஷசீலமும் (தற்போது டக்ஸிலா) பெயர் பெற்ற நகரங்கள். கிட்டத்தட்ட 11-ம் நூற்றாண்டு வரை, அதாவது முகமது கஜினி அதைக் கைப்பற்றும் வரை அது தனி நாடாகவே இருந்து வந்துள்ளது. பின் அது துருக்கியர்களாலும், மங்கோலியர்களாலும், முகலாயர்களாலும் கைப்பற்றப்பட்டு தனி அரச வம்சத்தினரால் ஆளப்படாமல் அவர்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின், அது ஆஃப்கானிஸ்தானின் பகுதியாக ஆகியது.

 

இப்பகுதிக்கு ஸ்வட் (Swat) பள்ளத்தாக்கு என்ற பெயரும் உண்டு. இதை சமஸ்க்ருத சொல்லான சுவஸ்து என்பதன் திரிபு என்றும் கூறிவர்.

 

வேதங்களைப் பொருத்தவரை மிகவும் பழமையான ரிக் வேதத்திலேயே காந்தாரத்தைப் பற்றிப் பல குறிப்புகள் உண்டு. யயாதியின் வம்சத்தைச் சேர்ந்தவன் அருதன்; அவனுடைய மகன் காந்தாரன். அவன் தான் இந்த அரசைத் தோற்றுவித்ததாக ரிக் வேதம் கூறுகிறது. இவர்கள் த்ருஹுயு என்ற குழுவை/ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

 

அதே நேரம், வருண புராணத்தில் கலியுக முடிவில் காந்தாரம், காலிகா என்ற பிரமதியால் அழிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

ஐத்ரேய ப்ரமாணத்தில் காந்தார அரசன் நகனஜித், ஜனக ராஜனின் சமகாலத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

அதர்வண வேதம் காந்தார தேசத்தவர்களையும் மத்ர பஹாலிக தேசத்தவர்களுடன் இவர்களையும் தூர தேசத்தவர்கள் என்று கூறுகிறது.

 

புராணங்களில், ராமாயத்தில் ராமர் அரசாண்ட பொழுது வட மேற்கு பகுதியின் (குறிப்பாக, கேகேய நாட்டின்) ஆளுமை பரதனின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. அப்பொழுது, பரதன் அருகிலுள்ள நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் இணைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது. பரதனுக்குப் பின் இப்பகுதிகள் அவனுடைய மகன்களான தக்ஷன், புஷ்கரன் ஆகியவர்களின் அரசாட்சியைக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. [தலைநகரங்களான தக்ஷசீலமும், புஷ்கலாவதியும் (தற்போதைய சர்ஸத்தா) அவர்களின் பெயராலேயே வழங்கப்பட்டதாகவும் கூறுவர்]. புஷ்கலாவதியில் காபுல் நதியின் மூன்று கிளைகள் இணையும் இடமும் முன் காலத்தில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப் பட்டதாகவும்  குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பகுதியை இன்றும் ப்ராங் (ப்ரயாகை என்பதன் மரூஉ) என்றே அழைக்கப்படுகிறது. காஷ்மீரத்திலும் இதுபோல மூன்று நதிகள் கூடும் ‘ப்ராங்’ என்ற இடம் இருக்கிறது. ஆனால், ராமாயணத்தில் காந்தாரப் பகுதிகள் குறிக்கப்பட்டாலும் காந்தாரம் என்ற பெயர் குறிப்பிடபப்டவில்லை. வருண புராணத்தில் காந்தாரம் (தேசம்) அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலம் இதுவாக இருக்கலாம்.

 

மகாபாரதத்தில் காந்தாரத்தின் பங்கு நாம் அறிந்ததே. திருதராஷ்டரரின் மனைவி காந்தாரி (பெயர் காரணமே காந்தாரத்தைச் சேர்ந்தவள் என்பது தான்), அவளின் தமையன் சகுனி ஆகியோர் காந்தாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புப் பற்றியக் குறிப்புகளில் காம்போஜம், காந்தாரம் ஆகியவற்றின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அலெக்ஸாண்டரிடம் பணிந்த அம்பி குமாரனைக் குறிப்பிடும் பொழுது அவன் பரதன், சகுனி ஆகியோரின் வம்ச வழி என்று குறிப்பிடப்படுகிறான். அப்பொழுது, காந்தாரம் 5 அல்லது 6 தனிதனி மன்னர்ளால் ஆளப்பட்டு வந்தது. குபேசன், ஹஸ்தின், அஸ்வஜித், அஸ்வகாயன் என்பவை மற்ற அரசர்களின் பெயர்கள்.

 

[சென்னைத் தொலைக்காட்சியில் 1980-82 களில் செவ்வாய் கிழமை 7மணிக்கு இரண்டு மூன்று பிரிவுகளாக ஒளிபரப்பப்பட்ட ஹெரான் த்யேடரின் ’அலெக்ஸாண்டர்’ நாடகத்தில் அம்பி-யின் பெயர் குறிப்பிடப்படுவது ஞாபகம் வருகிறது – ஹெரன் ராமசாமி பற்றி வேறு ஒரு சமயம் எழுதுவேன்; ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த நாடக நடிகர்களில்  அவரும் ஒருவர்]

 

பௌத்தர்களைப் பொறுத்தவரை, திபெத்திய புத்தமதப் பிரிவைத் தோற்றுவித்தவர் என்று கருதப்படும் பத்மசம்பவர் என்பவர் தோன்றியதாகக்  கூறப்படும் தனகோசம் என்ற ஏரி  காந்தாரத்தில் இருப்பதாக அவர்களின்  தொன்மக் கதைகளில் உள்ளது. திபெத்தின் ‘ககயூ’ புத்த மதப் பிரிவின் தொன்மங்களில் இந்த ஸ்வட் பள்ளத்தாக்கின் ஊற்று ஏரியில் ‘அந்தன் தேரி’ ஸ்தூபி இப்பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. [தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் இப்பகுதியின் சக்தாரா என்னும் இடத்தில் இந்த ஸ்தூபி-யைக் கண்டுபிடித்துள்ளனர்; ஆனால் ஏரி இருப்பதற்கான அடையாளம் கிட்டவில்லை].

 

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை அஹமேனியன் (கிரேக்கர்) வரலாறுகளிலும் குறிப்பாக சைப்ரஸின் ஆளுகையின் கீழ் காந்தாரம் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

 

 இந்திய வரலாற்றின் முதல் பேரரசான மகதத்தில் அமைந்த மௌரியப் பேரரசு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் தலைநகரம் பாடலிபுத்திரம் என்பதும் அது இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகரமான ‘பாட்னா’-வின் பழைய பெயர் என்பது நாம் அனைவரும் படித்ததே. இந்த மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்த்ர குப்த மௌரியர். இவர் தக்ஷசீலத்தைச் சேர்ந்தவர்/வாழ்ந்தவர். மகத்த்தை ஆண்ட நந்த வம்சத்தினரால் கைது செய்யப்பட இருந்த சாணக்கியர் அங்கிருந்து தப்பி கால் நடையாகவே தக்ஷசீலத்தை அடைந்து சந்திரகுப்த மௌரியரைச் சந்தித்ததாகக் கூறுவர். அலெக்ஸாண்டருக்குப் அவருடைய இந்தியப் பகுதிகளை  ஆண்ட செல்யூக்கஸ் நிகோடரை சந்திரகுப்த மௌரியர் வென்று அவரிடமிருந்த காந்தார பகுதிகளையும் காம்போஜத்தையும் ஆண்டார் என்று மெகஸ்தனிஸ்-இன் (செல்யூகஸ்-ஆல் பின்னர் அனுப்பிவைக்கப்பட்ட தூதர்) குறிப்புகள் கூறுகின்றன.

 

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்தாலும் கொண்டியரின் (சாணக்கியரின்) அர்த்த சாஸ்த்திரத்தில் காந்தரத்தின் பலப்பகுதிகள் சொல்லப்பட்டு சிறப்பிக்கப்பட்டாலும் காந்தாரம் என்று தனி நாடாகச் சொல்லப் படவில்லை என்பதுதான் வியப்பளிகிறது. அந்த காலகட்டத்தில் காந்தாரம் வாரிசுப் போட்டிகளால் சிற்றரசுகளாகச் சிதறியோ அல்லது தராடம் பற்றிச் சொல்லியது போல் குழுக்களால்  ஆளப்பட்டோ அல்லது காம்போஜ ராஜபாட்டையுடன் இணைந்தோ இருந்திருக்கலாம்.

 

பின்னர், அசோகர் காலத்தில் காந்தாரத்திலும், காம்போஜத்திலும் பல ஸ்தூபிகள் நிறுவப் பட்டன. பானினி-யும் காந்தாரத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அசோகருக்குப் பின்னர் கி.மு முதலாம் நூற்றாண்டில் பாரசீக-க்ரேக்க (Greeko-bactarian) வம்சத்தைச் சேர்ந்த டெமுட்ரிஸ் காந்தாரத்தையும் காம்போஜத்தையும் கைப்பற்றினார். அவரது தலைநகராக சாகலம் (தற்போதைய சியால்கோட் நகரம் (பாக்)) இருந்தது.

 

பின்னர் கி.பி. 1-2 ஆம் நூற்றாண்டுகளில் காந்தாரம் குஷானர்களின் வசம் வந்தது. இதுதான் காந்தாரம் மிகவும் புகழ் மிக்கதாகவும் சிறப்புடனும் விளங்கியது காலம் ஆகும். அதன் பின்னர், அங்கு நிரந்தரமான அமைதி என்பதே இல்லாமல் போனது; போர் என்றால் முதலில் பாதிக்கப்படும் பகுதி இதுதான். காரணம் இந்தியாவில் நுழைய வேண்டும் என்றால் இந்த இடத்தின் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  மங்கோலிய, துருக்கிய, அரேபியர்கள் என்று போர்கலப் பகுதியாகவே உள்ளது. இந்த 20-21 ஆம் நூற்றாண்டிலும் இங்கு அமைதி திரும்ப வாய்ப்பு இருப்பதாகக் கூடத் தெரியவில்லை…..

புதன், செப்டம்பர் 19, 2012

விநாயகன் ஐந்தணி


 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணேச பஞ்சரத்னம் ...
முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

பூரண மோதகம் கைக்கொண்டவனே
காரணம் முக்திக்கு ஆனவனே- நெற்றிச்
சூரணமாய்க் கலைச் சூடிநின்று
ஆழிசூழ் உலகைக் காப்பவனே
தான்தலை என்றே நின்றவர்க்கே
தான் தலைவன் என ஆகிநின்றுத்
தீயரை நாசம் செய்வித்த வி
நாயகன் உனைத்தினம் வணங்கிடுவோம்

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமஸ் ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

பயமெனும் பேரிருள் போக்கிடவே புது
ஞாயிறுயெனவே எழுந்தவனே
தேவாசுரர் பாதம் பணிந்திடவே அவர்
மூவாப்பிணியை முடிப்பவனே
சூரர்கள் தொழுதிடும் அதிபதியே நிதி
சாரமதைத் தினம் காப்பவனே
வாரண முகத்து மூலவனே
சூரகணங்களின் நாயகனே மஹா
ஈஸ்வரன் இணையாம் உனைத் தொழுதால்
சாஸ்வதமாய் பரம் கிட்டிடுமே.

ஸமஸ்த லோகசங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோ தரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

ஈரேழ் உலகினைக் காத்திடவே
வீழ்த்திடுவான் தைத்யக் கூட்டத்தையே
பானைபோல் வயிற்றைக் கொண்டவனே
யானையின் முகத்தொடு அருள்பவனே
ஐங்கரத்தொடு புகழ் கொண்டவனே பெருங்
காருண்யத்தால் மன்னித்தருள்பவனே
உள்ளத்திலுண்மைக் கொண்டு தினம்
பொலிந்திடும் கரியைத் தொழுதிடுவோம்

அகிஞ்ச நார்த்தி மார்ஜனம் சிரந்த நோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்

விந்தை பலதினம் செய்திங்குச்
சிந்தை நோயைத் தீர்ப்பவனே
தந்தையாம் திரிபுரம் வென்றவனின்
முந்தை புதல்வனாய் உதித்தவனே
இந்திரன் அகந்தையைக் கொன்றவனே
அந்தியில் நிலையாய் இருப்பவனே
தந்தத்தை சொந்தமாய் கொண்ட கரி
தந்தலை தனையேச் சூடியவன்
ஐந்துகரத்தனைப் பாடிடுவோம்.

நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீந மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்தகம்

தந்தத்தை சுகந்தவாய் வைத்திருப்பான் அந்தி
மந்தகனை அழித்தொழித்திடுவான் மூடர்
சிந்தித்து அறியா உருவத்துடன் அன்பர்
நெஞ்சத்தில் என்றும் நிரந்தரமாய் - ஒற்றை
தந்தத்தைக் கொண்ட வாரணத்தைச்
சந்ததம் நாமும் போற்றிடுவோம்.

பலச்ருதி:
மஹா கணேச பஞ்ச ரத்ன மாத ரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ர பாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோக தாம தோஷதாம் ஸுஸா ஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமா ஹி தாயரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்


நூற்பயன்
ஐந்தணி இதனை கருக்கொண்டு – அதி
காலையில் சிந்தித்து த்யானிக்க
நோயற்ற வாழ்வுடன் தோஷமி்ன்றி
நிம்மதியுடனே நற்புத்திரரும்
நரைதிரையில்லா நீளாயுள்
வரையேதுமில்லாத அனுபூதிடன்
பெற்றே நற்கதி எய்திடலாம்.