பாரதி…
எங்கு நீ சென்றாய் பாரதி…
இன்னும் உன் தேவை இருந்திடும் போதும்
எங்கு நீ சென்றாய் பாரதி…
பாட்டினில் பல்பொருளுரைத்தாய் – அதைக்
கேட்டிங்கு நடக்க யாருமில்லை!
நாட்டின் நிலைமையைச் சொல்வேன் – இதைக்
கேட்டு நீ ஆவனச் செய்வாய்…
பாருக்குள்ளே நல்ல நாடென்றாய் – மது
ஆறுக்குள்ளே தினம் மூழ்க வைத்தார்…
சாதிகள் இல்லையடி யென்றாய்
வீதிகள் தேறும் சங்கம் வைத்துச்
சாதிக்கொரு கொடி ஏற்றி வைத்தார்…
தனியொரு மனிதனுக்குணவில்லையேல்
ஜகத்தினையே நீ அழித்திடச் சொன்னாய் – ஆயின்
தாலியை விற்றும் உணவின்றி
பட்டினியால் தினம் உழவனைச் சாகவைத்தார்
தானியம் விளைவிக்கும் விளை நிலத்தைக்
காலி மனையெனக் கூறி விற்றுவிட்டார்…
மாமுனியோர் பலர் வாழ்ந்த நாடென்றாய்
காமுறுவோர் எலாம் சாமியாய் மாறி – அவர்
பேயென மாறிப் பொல்லாங்கு செய்துப்
பிணந்தின்னிச் சாத்திரம் ஓதுகின்றார்…
பஞ்சை மகளிரவர் தஞ்சமின்றி
மிஞ்சவிட மாட்டோமென்றாய் – அவர்
பிஞ்சென்றுப் பூமியில் பிறக்குமுன்பே
நஞ்சைக் கருவினில் வைத்துவிடும் – கடும்
நெஞ்சைக் கொண்டிங்கு வாழ்ந்து நின்றார்…
செந்தமிழ் நாட்டைச் சொல்கையிலே
செவிதனிலின்பம் பாயுமென்றாய் – இங்கோ
பைந்தமிழ் உயிரெனப் பொய்யுரைத்துப்
பள்ளிப் பாடத்திலேத் தமிழ் நீக்கிவிட்டார்….
மன்னும் இமயமென் மலையென்றாய் – நதி
மண்ணையும் விற்றுப் பொருள் – வெளி
மண்ணிலே அதைத் தேக்கி வைத்தார்…
சொந்த நாட்டிலேப் பரர்க்கடிமைச்
செய்திடமாட்டோமென்றே சூளுரைத்தாய் – இவர்
அந்நிய நிறுவனம் வளர்த்திடவேத் தினம்
அடிமை சாசனம் தந்து நிற்பார்…
காட்டும் இந்நிலை மாற்றிடவே
பாட்டுச் சாட்டையைத் தான் சுழற்றி
நாட்டைத் திருத்துமோர் சாரதி
மீண்டும் நீ வருவாய்! பாரதி!!!
