வெள்ளி, ஜனவரி 15, 2021

குத்துவிளக்கு

 குத்துவிளக்கு

கடவுள் வேடம் போட்டும் கவலைகள் ஏதும் தீரவில்லை

கிளிபோல் இன்மொழிச் சொற்கள் அறிந்தும் பேசிட இங்கே உரிமையில்லை

மணிமுடியணிகளம் யாவும் இருந்தும் அடிமைக்கோலம் மறைந்திடவில்லை

மறுமொழி உரைக்கும் கல்விகள் இன்றித் தடைகள் எப்போதும் உடைவதில்லை


பச்சை நிறங்கள் இருந்தாலும் பாசியில் வளங்கள் ஏதுமில்லை

இச்சைபேச்சு வார்த்தையன்றி உரிமைகள் ஏதும் கிட்டுவதில்லை

பச்சைக்காளிகள் அழித்தாலும் தஞ்சகன் என்றும் மாய்வதில்லை

பவழக்காளியாய் மாறினாலன்றித் தீமைகள் எதுவும் அழிவதில்லை


பெண்ணினம் சரிநிகரெனினும் அவர் ஆண்டிடும் வழிகள் இங்கில்லை

கண்ணிமையாகக் காப்பதாய்க்கூறி அடைத்து வைத்தல் ஞாயமில்லை

குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால் வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை

கைவிளங்குடைத்து வெளியேறாவிடில் சுதந்திர வாசம் கிடைப்பதில்லை[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது]

வெள்ளி, ஜனவரி 08, 2021

குழந்தைப் பருவம்

 குழந்தைப் பருவம்

[வல்லமை இதழின் 291-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] ஆட்டம் பாட்டு விளையாட்டு என்று
வாட்டம் துன்பம் கேடுகள் நீக்கி
கூட்டம் குழுவாய்க் கூடி நின்று
காட்டும் இன்பம்போல் ஏதுமில்லை

பணிச்சுமைகள் ஏதுமில்லை
பிணிப்புடுங்கள் நோய்களில்லை
கனியமது மொழிகள் போல
தேனமுதுச் சுவைகள் இல்லை

கள்ளங் கபடம் ஏதுமின்றி
வெள்ளப்பெருக்கின் ஓட்டம்போல்
துள்ளித் துள்ளி ஆட்டமிடும்
பிள்ளைப்பருவம் போல் வேறில்லை

அச்சம் நாண வேடங்கள் போட்டு
நெஞ்சில் உள்ளதை மறைப்பதில்லை
வஞ்சம் அறியாக் குழந்தையாய் இருப்பின்
கொஞ்சமும் இன்பம் குறைவதில்லை…

வெள்ளி, ஜனவரி 01, 2021

புதுப்பாதை

 


புதுப்பாதை

[வல்லமை இதழின் 290-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 
துள்ளிக் குதித்து
புத்தகப் பையைத் தூக்கி
பள்ளிக்குச் செல்ல முடியவில்லை
அள்ளித் தெளித்துப் போட்டு வைத்தக் கோலம் அழித்து ஓடி
விஷமம் செய்ய முடியவில்லை
வெயிலில் புழுதியில்
உடைகள் அழுக்காக்கி
ஆட்டம் போட முடியவில்லை
கையில் காலில் சிறுகாயம் கொள்ள
தாய்தந்தைத் தேற்றும்
விளையாடல் இருக்கவில்லை….

முகமறியா நபர்களிடம் பழகத்
தடை விதித்தார்கள்; இப்போது
முகம்மூடா நபர்களைக் காணமுடிவதில்லை….

வீட்டை விட்டு வெளியே வந்து
ஆட்டம் போடமுடியவில்ல
கூட்டில் அடைபட்ட மழலைப் பறவைகள்
சிறகை விறித்து உலகம் காணவில்லை…

ஜன்னல் காட்சியே உலகம் ஆனது
பின்னல் பிணைப்பெலாம் காணாமல் போனது
எத்தனைக் காலம் சும்மா இருப்பது
புத்தாண்டே புதுப்பாதை வகுக்க வா!!


(இது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

புதன், டிசம்பர் 30, 2020

திருவாதிரை [ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்... (நிறைவுப்பகுதி)]

திருவாதிரை

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்... (பகுதி-6)
(நிறைவுப்பகுதி)

(இதன்  பகுதி-1பகுதி-2பகுதி-3பகுதி-4, பகுதி-5) 


இப்பொழுது இடுகையின் தலைப்பிற்கு வருவோம்.


ஓரியன் நட்சத்திரக் கூட்ட்த்தைக் குறிப்பிடும் பொழுது அது வேட்டுவன் என்றும் அது சிவனைக் குறிப்பதாகவும் இந்த இடுகையில் குறிப்பிட்டு இருந்தேன். வான்வெளியின் மிக ஒளிமிகுந்த நட்சத்திரமான திருவாதிரை (Betelgeuse) இந்த ஓரியன் நட்சத்திரத்தின் தோள் பட்டையில் அமைந்திருப்பதைப் பார்த்தோம். ஓங்கிய அதன் கைகளில் உள்ளது அவரின் உடுக்கை இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. கீழே ஓடும் நதி அவர் தலையிலிருந்து வழியும் கங்கையாகக் கொள்ளப்படுகிறது. சில இடங்களில் நடராஜரின் வடிவமும் ஓரியனை ஒத்ததாகக் கூறப்படுகிறது. தவிரவும் சிவனின் ருத்ர ரூபத்தில் வில் தான் அவருடைய முக்கிய ஆயுதமாகக் கூறப்படுகிறது. யஜுர் வேதத்தின் பகுதியான ருத்ர மந்திரத்தில் “ஓம் நமோ பகவ்தே ருத்ராய: நமஸ்தே ருத்ர மன்யவ இதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முததே நம:” [ருத்ரனை நமஸ்கரிக்கின்றேன். வலிய பகைவரை வில்லம்பால் அழிக்கும் சீற்றமிகு நினது கணைகளை வணங்குகின்றேன்! வில்லேந்திய உனையடைய முயற்சிக்கும் வலியநின் கரங்களை நான் வணங்குகிறேன்!] என்று ஆரம்பிக்கும் பொழுதே சிவனை வில் ஏந்திய வீரனாகவே வர்ணிக்கின்ரது. மேலும் பல் இடஙளில் ருத்ரனை வேடுவனாகவே வர்ணிக்கின்றனர்ஓரியன் நட்சத்திரக் கூட்டத்திற்கு கீழே உள்ள சிரியஸ் என்ற நாய் வடிவிலான நட்சத்திரக்கூட்டம் பைரவரைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

சில இடங்களில், ஓரியன் ப்ரஜாபதியின் வடிவமாகவும் கொள்ளப்படுகிறதுஐதரேய பிராமணம் என்னும் வேதப் பகுதியில் ம்ருக வ்யாத (வேடன்) என்ற பெயரில் ஓரியன் நட்சத்திரம் வருணிக்கப்படுகிறது. அவர் பிரஜாபதி என்றும் அவர் மகள் ரோகிணியை துரத்திச் செல்கிறார் என்றும் பிராமணங்களில் எழுதப்பட்டுள்ளது. அப்போது சிரியஸ் (Sirius) வேடன் வடிவத்தில் அம்பு எய்ததாகவும் உள்ளது

க்ரேக்க தொன்மங்களைப் பொறுத்தவரை, ஓரியன் நட்சத்திரம், ஓடிஸியஸைக் குறிப்பதாகக் கொள்கிறது. ஓங்கிய அதன் கைகளின் உள்ள வடிவம் அவன் துடுப்பை ஏந்தி அனைவரிடமும் அதைப் பற்றிக் கேட்பதின் வடிவமாகக் கொள்கிறார்கள்

 

கிருத்துவத்தின் சில பகுதிகளில்/பிரிவுகளில் இந்த ஓரியன் நட்சத்திரக் கூட்டம் ஏசுவின் வடிவமாகக் கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் யோவான் ஞானஸ்நானம் செய்விக்கும் பொழுது,, “பாவமன்னிபடைய மனம் மாறி திருமுழுக்கு செய்து வாருங்கள். நான் தண்ணீரால் உங்களுக்கு ஞானஸ்நானம் செய்விக்கிறேன்; எனக்குப் பின் என்னைவிட வலிமை மிக்கவர் ஒருவர் வருகிறார் அவர் தூயஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுபார். அவர் அரிவாளைக் கையில் ஏந்தி கோதுமையையும் பதரையும் பிரித்தெடுபார். தம் கோதுமைகளைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்என்று கூறியதைக் குறிப்பிடுகிறார்கள் 

ஓங்கிய கைகளில் அறிவாளை ஏந்தி கோதுமைகளை அறுவடை செய்வதை அவருக்கு முன் வந்த யோவான் அறிவித்ததை இந்த நட்சத்திரம் குறிப்பதாகக் கொள்கிறார்கள். மேலும், ஓரியன் நட்சத்திரத்தின் இடுப்பில் இருக்கும் மூன்று நட்சத்திரங்கள் கிரிஸ்த்துவர்களின் திரித்துவத்தையும், சிவந்த ஆதிரை நட்சத்திரம் அவரின் தியாகத்தையும் குறிப்பதாகக் கருதுகிறார்கள்கீழே ஓடும் நதி ஜோர்டான் நதியாகவும் கிருஸ்து ஞானஸ்நானம் செய்விப்பவராகவும் கொள்ளப்படுகிறது. அதேபோல், யோவான் கும்ப ராசியைக் குறிப்பதாகவும் கொள்கிறார்கள்.

ஒருவேளை, 'ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்என்று பாடிய பாரதியும் மேற்கூறிய தொன்மங்களை அறிந்திருந்து அதனால் இப்படிப் பாடியிருபானோ?


[தற்போதைய மார்கழி மாதம் முதல்  மாலை வேளைகளில் நாம் இந்த ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தைக் காண முடியும் ]