புதன், அக்டோபர் 28, 2020

மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

 மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

[வல்லமை இதழின் 280-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] கண்டதே காட்சி…
காண்பதே உண்மை…
கேட்பதே செய்தி …
           – என்று
சொன்னதை நம்பி
தீர ஆராயும் திறனேதும் கொள்ளாமல்
கொண்டதே கோலமென வாழ்ந்ததால்
வாழ்வியல் செய்திகளை,
சமூக நிலைமைகளை,
சரித்திர உண்மைகளை
மூடி போட்டு மறைத்து வைத்து
வனிகச் செய்திகளை
வறட்டு விவாதங்களை
பசப்பு வார்த்தைகளை
படாடோப விளம்பரங்களை
வெளிச்சம் போட்டுக் காட்டுவதை
உண்மை என்று வாழ்ந்து
சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் வாழுகின்றோம்
சொந்தங்களை இழந்துவிட்டு
அநாதையாய் இருக்கின்றோம்....

அரசியல் வாணிகப் பாம்புகளின்
ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு
மயங்கி மதிகேட்டு நிற்கும் பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்...

வெள்ளி, அக்டோபர் 23, 2020

உப்பும் மேகமும்உப்பும் மேகமும்

[வல்லமை இதழின் 279-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 

 

ஆழக் கடலில் தான் விளையும்
ஆதவன் அருளால் உரு கொள்ளும்
கொடுவெப்பம் ஏறுகையில் உயிர் தரிக்கும்
கொட்டும் மழையில் கரைந்து போகும்
மானுடனின் பசிதீர தான் கரையும்
வானுயர அதன் மேன்மை ஓங்கி நிற்கும்
அளவுக்கு மிஞ்சுகையில் அதிர்ச்சியூட்டும்
களவுசெய்ய ஒன்னாப் பெருஞ்செல்வம்
படிக வடிவில் உருவானப் பெட்டகமாம்
உப்பும் முகிலும் உலகம் காக்கும்

ஞாயிறு, அக்டோபர் 18, 2020

தலையாட்டி பொம்மைகள்

தலையாட்டி பொம்மைகள்

[வல்லமை இதழின் 278-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] மந்தை ஆடுகளாய்
மதியில்லா மாடுகளாய்
சுயம் கெட்டு
சூழ்நிலையைப் பாழ்செய்து – நல்
சூத்திரங்கள் அழித்துவிட்டு
எடுப்பார்க் கைப்பிள்ளையென
ஏவல்கள் செய்திருந்து
விதியை தினம் நொந்து
வீண் பொழுதுப் போக்கிவிட்டுத்
தன்னம்பிக்கை ஏதுமின்றித்
தலையாட்டி பொம்மைகளாய் – பிறர்
தாளத்திற்கு ஆடிவிட்டு
வேரருந்த விருட்சமென
வீணாகி விழ்ந்துள்ளோம்…

அறிவுக் கண் திறந்து
அறப்பொருளைத் தானுணர்ந்து
உண்மையை உணர்ந்தறியும்
உன்னத ஞானம் தரும்
நற்கல்வித் தேடிக் கற்று
எல்லோரும் மன்னரென்றக்
மக்களாட்சித் தத்துவத்தின்
மாண்பதனை மிட்டெடுப்போம்…


[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

செவ்வாய், அக்டோபர் 13, 2020

இளமையே நீ தாவி வா!

இளமையே நீ தாவி வா!

[வல்லமை இதழின் 277-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] தரையிருந்து வான் எட்டி
மலை முகடு வழியிறங்கி
தாவிக் குதித்தோடிக்
கடும் பாறைச் சமமாக்கி
பூமிவளம் தான் பெருக்கி
குளிர்விக்கும் நீர்ப்போல
தாயின் மடி குடியிருந்து
தந்தைத்தோள் சேர்ந்து
தன் காலில் தான் நின்று
தரைமீது நடைபயின்று
துள்ளிக் குதித்தோடி
பழமைக் கறைக் களைந்துப்
புதுப் புனல் பொங்கு நீராடிட
இளமையே நீ தாவி வா!

புதன், அக்டோபர் 07, 2020

செயல்வீரர்

செயல்வீரர்

[வல்லமை இதழின் 276-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

உறுமீனைக் கண்டறிந்து
இலக்கு நோக்கிப் பாய்ந்து
வான் நோக்கி மீண்டெழுந்து
இரை தேடும் பறவையென
காலமதைத் தானறிந்து
கனியும்வகைத் தெளிந்து
காரியங்கள் செய்திடுவார்
திறன் வாய்ந்தோர் செயல்வீரர்!

கொட்டும் மழைப் பொய்ததென
வெட்டியாய் நேரம் கடத்திடாமல்
கால்வாய் வெட்டி கழனி திருத்தி
நிலம் கொழிக்க வழி செய்வார்
பட்டினியால் வாடினாலும்
விதைநெல்லைச் சேர்த்துவைத்து
வருங்காலச் சந்ததிக்கு
வாழ வழிச் செய்த்திடுவார்!

எதிர்காலம் கனவென்று
எதிர்வாதம் செய்துவிட்டு
நிகழ்காலம் வீணாக்கும் – வெற்று
வேதாந்தம் விட்டுவிட்டு
வருங்கால வெற்றிக்குத்
திட்டங்கள் தீட்டிவைத்து
முயலாமை தனை விழுங்கி
முன்னேற்றப் பாதையிலே
சிறகடித்துப் பறந்திடுவர்!