பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 09, 2013

சூரிய நகரங்கள்


சண்டிகர் நகரத்தின் 2031-ஆம் ஆண்டு பெருந்திட்டம் (Master Plan) வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி 2031ஆம் ஆண்டிற்குள் நகரத்தில் இருக்கும் மழைநீர் சாக்கடை மற்றும் கால்வாய்களின் மேல் சோலார் பேனல்கள் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திறந்தவெளிக் கால்வாய்கள் மூடப்பட்டு அதன் சுற்றுப்புறம் தூய்மையாவதுடன் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சண்டிகர் நகரத்தை இரண்டு சிற்றோடைகள் அல்லது சிறு நதிகள் கடந்துச் செல்கின்றன. அவை பட்டியாலாவின் ராவ் ஓடை மற்றும் ஷுக்னா ஓடை ஆகியவை. இவற்றைத் தவிர என்-கால்வாய் என்ற சிறு கால்வாய் நகரின் பல இடங்களைக்  கடக்கிறது.

இவ்விடங்களை அழகு படுத்தும் முகாந்திரமாக கால்வாய்களில் கற்கள் பதிக்கப்படும் வேலை ஆரம்பம் ஆகிவிட்டது. திட்டத்தின் முதல் படியாக முதலில் மத்திய அரசின் ’புது மற்றும் மரபுசார எரிசக்தி’ அமைச்சகமும் ‘எரிசக்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவன’மும்  இணைந்து சோலார் பேனல்கள் அமைக்கும். இதன் மூலம் 25மெகாவாட் மின்னுற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. (தற்போது சண்டிகரில் தனியாக மின்னுற்பத்தி  எதுவும் செய்யப்படுவதில்லை. அது தன் தேவைகளுக்கு மற்ற மாநிலங்களையே நம்பி இருக்கின்றது). இவற்றைத் தவிர திறந்த வெளிப் பூங்காக்கள் மற்றும் கார் நிறுத்தங்களில் சோலார் பேனல்கள் அமைத்து (10 மெகாவாட்) மின்னுற்பத்திச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தவிரவும் சண்டிகர் நகரைச் சூரிய சக்தி நகரமாக (Solar City) மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நகர நிர்வாகம் நகரின் உபயோகமற்ற அனைத்துப் பகுதியிலும் சோலார் பேனல்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது

மத்திய அரசின் ’புது மற்றும் மரபுசார எரிசக்தி’ அமைச்சகம் தற்போது 54 நகரங்களை சூரிய சக்தி நகரங்களாக மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகரின் 10% மின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மரபுசாரா உற்பத்தியும் சக்தி பாதுகாப்பு முறைகளும் அமுல் படுத்தப்படும். இவற்றில் சூரிய மாற்று சக்தியைத் தவிர காற்றாலைகள், உயிர் மின்சக்தி, குப்பை-கழிவுப் பொருட்களிலிருந்து எடுக்கப்படும் மின்சக்தி ஆகியவையும் அடங்கும்.

இந்த சோலார் மின் சக்தியைப் பொறுத்தவரை இந்த சோலார் பேனல்களின் விலை இது வரை அதிகமாகவே இருந்து வந்துள்ளது. மேலும் அவை இந்தப் பேனல்கள் நீண்ட நாட்களுக்கு உழைப்பதில்லை என்றக் கருத்தும் இருந்து வந்துள்ளது. அதனால் இவற்றின் தயாரிப்பு, பராமரிப்புச் செலவு மற்ற மின் உற்பத்திச் சாதன்ங்களை விட அதிகமாக இருப்பதால் இதுவரை இந்த சூரிய மின்சக்தி வெற்றிகரமாக இருக்கவில்லை. [ஆனால், ஆராய்சிகளின் விளைவாக 2011-ஆம் ஆண்டு இந்தப் பேனல்களின் தரத்தில் பெரிய முன்னேற்றம் வந்த்து என்று படித்த ஞாபகமும் இருக்கிறது].  இவற்றில் மென்மேலும் புதிதாக கண்டுபிடிப்புகள் வந்து இவற்றின் அமைப்பு மற்றும் தயாரிப்புச் செலவு குறைவது தான் இத்திட்டதிற்கு வெற்றியை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

டிஸ்கி:         நான் இந்தத் துறையைச் சேர்ந்தவன் இல்லை என்பதால் இத்துறையைச் சேர்ந்தவர்கள் இதிலுள்ளக் குறைகளைச் சுட்டிக் காட்டி மேலதிகத் தகவல்கள் இருந்தால் அவற்றைக் குறிப்பிடவும் வேண்டுகிறேன்.

புதன், அக்டோபர் 24, 2012

எல்லைக் காவல்


எல்லைக் காவல் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம் ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகள் தான்.

ஆனால், நம் தேசப் பாதுகாப்பில் இம்முப்படைகளைத் தவிர பலவிதமான துணை-ராணுவங்களில் முக்கியமானவையாகக் கருதப்படும் இந்திய-திபெத் எல்லைக் காவல் (ITBP – Indo-Tibet Border Police), எல்லைக் காவல் படை (BSF – Border Security Force), மத்திய ரிசர்வ் போலிஸ் படை (CRPF – Central Reserve Force) ஆகிய மூன்றும் அடங்கும். இதில் CRPF தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும், BSF எல்லைத் தரைப் பகுதியின் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்கின்றன.

மேற்கூறியவற்றைப் போலவே ITBP-யும் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளது. அது தான் இந்திய எல்லையின் மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆகும். இந்த ITBP துவக்கத்தில் சுமார் 2115 கி.மீ. தூரத்தைக் கொண்ட இந்திய-திபெத் எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டிலிருந்து மெல்ல மெல்ல இதற்கு வேறு சில பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. 1992-ஆம் ஆண்டு ITBP சட்டம் உருவாக்கப்பட்டு அது 1994 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.

தற்போது இது எல்லையின் 3488 கி.மீ (காஷ்மீர லடாக் பகுதியின் கரகோரம் கணவாய் முதல் அருணாசலத்தின் ஜீசுப் லா வரை விரிந்த இந்திய-சீன எல்லைப்பகுதி) தூரத்தைப் பாதுகாக்கிறது. இவற்றின் பல மையங்கள் (outposts) 9000 முதல் 18000 வரை உயரமுள்ள பனிபடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில் பல இடங்களுக்கு வீரர்கள் ஹெலிகாப்டரின் உதவியுடன் செல்ல முடியும்.  

மேற்கூறிய பாதுகாப்புப் பணிகளைத் தவிர வேறு சில பொறுப்புகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது கைலாஷ்-மானசரோவர் யாத்திரையில் இவர்களின் பணி. யாத்திரிகர்களின் பாதுகாப்பைத் தவிர, 1981-முதல், குன்ஜி முதல் லிபு லேக் பகுதிவரையில் மருத்துவம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் பொறுப்பும் இவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அதனாலேயே இவர்கள் இமய வீரர்கள் (Himveers) அல்லது மலைக்காவலர்கள் (Protectors of the mountains) என்று அழைக்கப்படுகிறார்கள்.

இதைத் தவிர ITBP-யின் தேசிய மையம் தான், ஐநா-வின் சிவிபோல் (CIVIPOL) சிவிலியன் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இங்கு பயின்ற  காவலர்கள் அங்கோலா, போஸ்னியா, கம்போடியா, காங்கோ, ஹைதி, ஹெர்ஸெகோவினா, கொசாவோ, மொசாம்பிக், சிரியா, லியோன், சூடான், மேற்கு சகாரா பகுதிகளில் இவர்கள் பயிற்றுவித்தவர்கள் தான் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப் பட்டார்கள். தற்போது ஐநா சமாதானப் படையின் காங்கோ, ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் ITBP வீரர்கள் உபயோகப் படுத்தப் படுகிறார்கள்.

தவிர 1965, 1971 ஆகிய போர்களில் ஸ்ரீநகர், பூஞ்ச், பதான் கோட் ஆகிய பகுதிகளில் போருக்கும் பயன்படுத்தப் பட்டார்கள். தவிர உத்ராகாண்ட் மாநிலத்தின் அவ்லி பகுதியில் மலையேற்றப் பயிற்சி மையம் அமைத்து இந்திய மலையேற்றக் குழுவினருக்கு மலையேற்றப் பயிற்சியும் வழங்குகிறார்கள். தவிர, நம் நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், சிக்கிம் மாநிலத்தின் ரூம்டெக் மாண்டெசரி,  ராஜ் பவனின் பாதுகாப்பும் இவர்கள் பொறுப்பில் தான் உள்ளது. பாக் தீவிரவாதி அஜ்மல் கசாப்-ஐ கண்கானிப்பதும் இவர்களே.

1962-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த ITBP இன்று தன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது.

இந்திய அஞ்சல் துறையும் இவர்களின் சேவையைச் சிறப்பிக்கும் வகையில் இந்த பொன்விழா ஆண்டின் சிறப்புத் தபால் தலையை வெளியிட்டுள்ளது.

ITBP-யும் தங்கள் பொன்விழாவை சென்ற ஒரு ஆண்டாக பலவிதங்களில் கொண்டாடிவருகிறார்கள். தங்கள் பணிகளின் சிறப்புத் தருணங்கள், நவீனகரணம், மலையேற்றம், விளையாட்டு, சர்வதேசப் பொறுப்பேற்புகள் அவற்றில் பெற்ற பதக்கங்கள், பட்டங்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் புத்தகங்கள், கண்காட்சிகள் என்று நடத்தினர். இதற்காக  அவர்களின் மூலக் கொள்கையாக இருக்கும் ஷௌர்யா (பலம்), த்ருடதா (திடம்), கர்மனிஷ்டா (செயல்திறன்) ஆகியவற்றை ஒட்டி சிறப்பு லொகோ-வையும் வடிவமைத்துள்ளனர். 

இதற்காக ‘Ganga Punardarshan (கங்கையின் மறுதரிசனம்)’ என்ற பெயரில் கங்கை உருவாகும் கோமுக் பகுதியிலிருந்து கங்கை கடலில் கலக்கும் கங்காநகர் வரையிலான 2525 கிமீ தூரத்தை படகுப் பயணம் மேற்கொண்டு ஐம்பத்தி ஏழே நாட்களில் கடந்துள்ளார்கள்.

இந்தப் பொன்விழா நாளில் நாமும் இவர்களின் சேவையைச் சற்றே நினைத்துப் பார்ப்போம்....

வியாழன், அக்டோபர் 11, 2012

மோனோ லிசாவும் டூயல் லிசாவும்



லியனோர்டோ-டா-வின்ஸி தான் மோனா லிஸா ஓவியத்தை வரைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் டா-வின்ஸி மோனா லிஸா-வின் ஓவியத்தை வரைவதற்குச் சுமார் 10-வருடங்கள் முன்னரே அதேப் போன்ற ஒரு ஓவியத்தை (அது மோனோ லிஸா-வின் சகோதரியாக இருக்கலாம்) வரைந்ததாக அறிவித்துள்ளனர்.

இது இப்பொழுது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டதல்ல. இதன் வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்…

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹ்யூக் ப்ளாக்கர் என்ற கலைப் பொருட்களைச் சேகரிப்பவர் தான் முதன் முதலில் 1913-ஆம் ஆண்டு மோனா லிஸா-வைப் போன்ற கான்வாஸ் ஓவியம் ஒன்று கிடைத்தது. [அசல் மோனா லிஸா ஓவியம் மரத்தில் வரையப் பட்டது]. இதைத் தொடர்ந்தே இந்த ஓவியத்தின் உண்மைத் தன்மை அலசப் பட்டு வந்துள்ளது. இந்த ஓவியம் ப்ளாக்கர்-க்கு ஐல்வொர்த் (Isleworth) என்ற புகழ் பெற்றக் குடும்பத்திடமிருந்து கிட்டியதால் இந்த ஓவியத்தின் பெயர் ஐல்வொர்த் மோனா லிஸா என்றும், ஒரிஜினல் மோனா லிஸா பாரிஸ் நகரத்தில் லௌர் என்ற இடத்தில் வைக்கப் பட்டுள்ளதால் அது லௌர் மோனா லிஸா என்றும் அழைக்கப்பட்டு வந்தன.

1915-ஆம் ஆண்டு ப்ளாக்கர்-இன் வளர்ப்புத் தந்தை ஜான் இயர் என்ற கலை வரலாற்று நிபுணர் தன் புத்தகத்தில் டா-வின்ஸி உண்மையான மோனா லிஸா ஓவியத்தை வரையும் முன் இந்த ஓவியத்தைப் பயிற்சி ஓவியமாக வரைந்ததாக எழுதியிருந்தார்.

ப்ளாக்கர் இந்த ஓவியத்தை அமெரிக்காவின் ஹென்றி புலிட்சர் என்பவருக்கு விற்றார். அது பின்னர் அவருடையத் தோழியிடமிருந்து பல கைகள் மாறி மோனோ லிஸா பவுண்டேஷனிடம் வந்தது.

கடந்த 40 வருடங்களாக ஐச்வொர்த் லிஸா-வின் படம் ஸ்விஸ் வங்கியின் பெட்டகத்தில் மோனோ லிஸா ஃபவுண்டேஷனால் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.

புலிட்சர் இதைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். அதிலும் அவர் தன் ஆராய்ச்சியை இயர் எழுதியவற்றைக் கொண்டு அதன் உண்மையை ஆராய்ந்தார்.

லியனார்டோ 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் (1452-ல் வின்ஸி நகரத்தில் பிறந்தவர் – டா-வின்ஸி என்றால் வின்ஸியைச் சேர்ந்தவர் என்று பொருள் – என்று கூறப்படுகிறது). இதனால் புலிட்சர் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கியார்கியோ வசாரி (1511-1574) என்ற கலை-வரலாற்று ஆசிரியரின் ’கலைஞர்களின் வாழ்க்கை (Lives of Artists)’ என்ற குறிப்புகளை ஆராய்ந்தார். வசாரியின் குறிப்புகளில், ப்ளோரண்டைனின் பட்டு வியாபாரி ஃப்ரன்செஸ்கோ டெல் கியோகாண்டோ என்பவரின் மனைவியான லிஸா க்ஹெரார்தினி என்பவரின் ஓவியத்தை லியணார்டோ 1503-1506 ஆகிய நான்கு வருடங்கள் வரைந்து அதை அரைகுறையாக விட்டுவிட்டதாகவும் எழுதியிருந்தது. 1516-ஆம் ஆண்டு லியனார்டோ, தான் இறப்பதற்கு மூன்று வருடங்கள் முன்பு, முழுவதுமாக வரையப்பட்ட மோனா லிஸா ஓவியத்தை முதலாம் ப்ரான்ஸிஸ் ராஜாவிற்கு விற்றுள்ளார். இதற்குச் சான்றாக புலிட்சர் கியோவானி லொமசோ என்பவர் 1584-இல் வெளியிட்ட கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளில், லியணார்டோவின் ஓவியங்களாக கியோகாண்டோ & மோனா லிஸா என்பவற்றைக் குறித்துள்ளதைக் கூறுகிறார்.

வசாரி-யின் குறிப்புகளில் மோனாலிஸா-வின் புன்னகைப் புத்துணர்ச்சி தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிட்சர் இதைப்பற்றிக் குறிப்பிடுகையில்,  அசல் மோனாலிஸா-வின் ஓவியத்தின் புன்னகை அனைவருக்கும் புதிரானதாகவே இருக்கும். ஆனால், ஐல்வொர்த் லிசா-வின் புன்னகை வெளிப்படையாக இருக்கும். எனவே வசாரியின் குறிப்பில் உள்ளது ஐல்வொர்த் லிசா-வாகத் தான் இருக்கும் என்கிறார்.

ஐல்வொர்த்-இல் இருக்கும் படத்தில் இருக்கும் மோனா லிஸா லோவர் படத்தில் இருக்கும் மோனா லிஸாவை விட இளமையாக இருப்பதால் அது லியனார்டோ லோவர் படத்தை வரைவதற்கு 10 வருடங்களுக்கு முன்னரே ஐல்வொர்த் படம் வரைந்துள்ளார் என்பதைக் காட்டுவதாகவும் புலிட்சர் கூறுகிறார்.

ஆனால், ஆக்ஸ்ஃபொர்ட் பல்கலைக் கழகத்தின் கலை வரலாற்றுத் துறைத் தலைவர் மார்டின் கெம்ப் லியனார்டோ-வின் புகழ் பெற்ற ஓவியங்கள் அனைத்துமே மரத்தில் வரையப்பட்டவை. கான்வாஸ் ஓவியம் எதுவுமே இல்லை. இந்த ஐல்வொர்த் படம் லியணார்டோ-வின் ஓவியத்தைப் பிற்காலத்தில் யாராவது நகல் எடுத்திருக்கலாம் என்று கூறுகிறார். அதில் இருக்கும் உருவம் மோனாலிஸா-வை விட இளமையாக இருப்பதால் அது மோனாலிஸா இளமையாக இருக்கும் பொழுது வரைந்தது என்றுக் கொள்வதை விட, நகலெடுத்தவர் அதை இளமையாக வரைந்திருக்கலாம் என்பதே காரணமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

ஆக லியர்ணாடோ வரைந்தது 'மோனொ' லிஸாவா 'டூயல்' லிசாவா என்ற சர்ச்சை இன்னமும் தீரவில்லை…

புதன், செப்டம்பர் 26, 2012

உடலுறுப்பு தானம்



பொதுவாக மக்கள் கண் தானம், ரத்த தானம் பற்றித் தெரிந்த அளவு கூட உடல் உறுப்பு தானம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இந்த உடல் உறுப்பு தானத்தின் தேவை மற்றும் அதன் கிடைப்பு பற்றி அரசு தரும் தகவலைப் பார்ப்போம்…

சாதாரணமாக ஒரு நாளில் சுமார் 10 நோயாளிகள் உடலுறுப்புகள் மாற்றப்படாததால் இறக்கின்றனர். அதே நேரம் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு நோயாளி உடலுறுப்பு மாற்ற வேண்டியத் தேவைக்காக காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்.

தற்பொழுது, சுமார் 10 லட்சம் நோயாளிகள் உடலுறுப்புத் தேவைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் வருடத்தில் சுமார் 3500 உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் தான் செய்யப்படுகின்றன.

அரசாங்கக் கணக்கின்படி இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 80000 உடறுப்பு தானம் செய்ய இணைகிறார்கள். ஆனால், வருடத்திற்கு 100 பேர் மட்டுமே தானம் செய்கிறார்கள்.

இதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில…

1.            தகுந்த பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவச் சாதனங்களின் பற்றாக்குறை
2.            உறுப்புகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயனர்களைச் சென்றடையாமை
3.            சட்டச் சிக்கல்கள் [சென்ற 2011 சட்டத் திருத்தத்திற்கு முன் வரை மூளைச் சாவு என்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை]
4.            தானம் செய்தவர்களின் குடும்பத்தினரின் உதவியின்மை
5.            விழிப்புணர்வு இல்லாமை

விழிப்புணர்வு என்ற இட்த்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மூளைச் சாவு என்பதை இந்தியர்கள் இன்னமும் மனதளவில் ஏற்கவில்லை. இதயத் துடிப்பு அடங்கும் வரை உயிர் இருப்பதாகவும் எப்படியாவது காப்பாற்றிவிட முடியும் என்று காத்திருப்பதால் சில மணி நேரம் வீணாகி விடுகிறது. இதயத் துடிப்பு நின்று இறந்த மணிதரின் 10-15 உறுப்புகள் தான் மற்றவருக்குப் பொறுத்த முடியும். மூளைச் சாவு ஆகிவிட்ட  மனிதரின் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உடல் உறுப்புகள் மாற்று உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் 35-40 உறுப்புகளை மாற்றுச் சிகிச்சைக்கு உபயொகப்படுத்த முடியும்.

இந்த சிக்கல்களைக் களையும் நோக்கத்தில் தில்லி அரசு கடந்த மூன்று நாட்களாக தில்லியின் முக்கிய மருத்துவ மனைகளைச் சேர்ந்த 36 மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சான்றிதழ் பயிற்சி அளிக்கிறது. இதில் மருத்துவப் பயிற்சியைத் தவிர மருத்துவர்களுக்கு தான் செய்தவர்களின் குடும்பங்களை தானத்திற்குத் தயார்படுத்துவதிலும் பயிற்சி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவமனைகளில் இந்த தானம் ஏற்பதற்கும் உறுப்புகள் பயனர்களைத் தகுந்த நேரத்தில் சென்றடைவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் பயிற்சியைப் பற்றி மேலும் குறிப்பிடுகையில், சாதாரணமாக மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் மிகவும் அவசியம் என்றும் அதற்கானப் பயிற்சிக்காணத் திட்டமும்  செயல்முறைப் படுத்தப் பட இருப்பதாகவும் கூறியுள்ளது

இது பற்றி மக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

திங்கள், செப்டம்பர் 24, 2012

பறவைகள் பலவிதம்


’பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’ என்றார் கவியரசர்.

சமீபத்தில் இங்கிலாந்தில் க்லாஸ்கோ பல்கலைக் கழகமும் மேற்கு ஸ்காட்லாண்ட் பல்கலை கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளில் மனிதர்கள் இ-மெயிலைக் கையாள்வதை ஆராய்ந்து அவற்றை 12 பறவைகளின் பழக்கவழக்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.

அவை….

1.   கட்டாய மரங்கொத்தி (Compulsive Woodpecker): இவர்களால் மரங்கொத்திப் பறவை எப்படி மரங்கொத்துகிறதோ அதேப் போல் கட்டாயம் எப்பொழுதும், இரவு பகல் என்று நேரங்காலம் பார்க்காமல் மெயிலைத் திறந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இல்லையென்றால் இவர்களின் தலை உடைந்து சிதறிவிடும்.
2. ஒடுங்கிய கோட்டான் (Hibernating Poor-will) : இவர்கள் கோட்டானைப் போல அசைவில்லாமல் ஒடுங்கியே எப்பொழுதாவது அவர்களின் மெயில்களைப் படிப்பார்கள். இவர்களிடமிருந்து பதில் தகவல்கள் எதுவுமில்லாததால் இவர்களுக்கு வரும் மெயில்கள் குறைவாகத்தான் இருக்கும்.
3.  அகவும்/கூக்குரலிடும் மயில்கள் (Caterwauling Peacock) : இவர்கள் மயில்களைப் போல் மிகவும் அவசியம் என்று சாதாரண தகவலைக் கூட பெரிதாக அனைவரின் கவனத்தைக் கவரும் படி அனுப்புவார்கள்.
4. எதிர்கால ஈமுக்கள் (Back-covering Emu): இவர்கள் எதிர்காலத்தில் இந்தத் தகவல்களை நான் ஏற்கனவே உனக்குத் தெரியப் படுத்தி விட்டேன் என்று நிரூபிப்பதற்காகச் செய்திகளை (ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருந்தாலும்) அடுத்தவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
5.    எதிரொலிக்கும் மைனாக்கள் (Echoing Mynah) : எந்த மெயில் வந்தாலும் உடனே அது தனக்குக் கிட்டிவிட்டதென்று பதிலளிப்பார்கள்.
6. வெறுப்பேற்றும் கிளிகள் (Boorish Parrot) : தேவையற்ற மெயில்களையும் தகவல்களையும் அனுப்பி வெறுப்பேற்றுபவர்கள்.
7. இருட்டு ஆந்தை (Night Owl) : மற்றவர்கள் நேரத்தை மதிக்காமல் அவர்களுக்கு நேரங்கெட்ட நேரத்தில் தகவல் அனுப்புபவர்கள்.
8.    கலவரக் காக்கை (Pesky Crow):         இவர்கள் ஒரே தகவலை வேறு வேறு வடிவில் அனுப்பிப் பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துவார்கள்.
9.    கடத்தல் குயில்கள் (Buck-passing Cuckoo): இவர்கள் தங்கள் வேலையை மற்றவர்களுக்குக் கடத்திவிடும் சோம்பேறிகள்.
10. மறைந்த கோழிகள் (Camouflaging Woodcock) : இவர்கள் மற்றவர்கள் அனுப்பிய தகவலைத் தாங்களே அனுப்பியது போல மறைத்து அவர்கள் பெயரை நீக்கி அனுப்புவார்கள்.
11.பதுக்கும் குருவிகள் (Hoarding Magpie) : தங்கள் மெயில்களில் ஆயிரக்கணக்காக அப்படியே வைத்துக் கொண்டு எது தேவையானது எது தேவையற்றது என்பது புரியாமல் தவிப்பவர்கள்.
12.மின்னல் குருவிகள் (Lightening-Response Hummingbird): இவர்கள் மெயில் வந்த அடுத்த நொடியே பதிலனுப்பும் சூரர்கள்.

இவற்றைத் தவிர கரிச்சான் குருவி என்று ஒரு பிரிவையும் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் தான் சரியான நேரத்தில் சரியாக மெயில்களை அனுப்புபவர்கள்; அல்லது அவற்றைப் பார்ப்பவர்கள்.

இவற்றில் நாம் எந்த பிரிவைச் சார்ந்தவர் என்பது நமக்கே தெரியும் [திருவிளையாடல் தருமி!!!]…..