ஞாயிறு, நவம்பர் 17, 2013

கார்த்திகைப் பெண்டிரும் ரிஷி பத்தினிகளும்



இன்று கார்த்திகை!

க்ருத்திகா என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘அறுத்தல்’ அல்லது ‘வெட்டுதல்’ என்று பெயர்.

கார்த்திகை நட்சத்திரம் என்றால் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட ஒரு நட்சத்திரக் கூட்டம் ஆகும். ஆறு மிக ஒளிர்ந்த நட்சத்திரங்களைத் தவிர நெபுலாவும் சில ஒளி குறைந்த நட்சத்திரங்களும் உள்ளன.

கார்த்திகைப் பெண்டிர் அறுவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அறுவர் என்றால் ஆறு பேர்களா? அல்லது அறுத்து/வெட்டி விடப் பட்டவர்களா? ஆறு பேர் என்றால் இவர்கள் யார்?

புராணங்களிலும் தொன்மங்களிலும் இவர்களைப் பற்றி வெவ்வேறான கதைகள் கூறப்படுகின்றன.

க்ரேக்கத் தொன்மத்தைப் பொறுத்தவரை கார்த்திகை ‘ப்லெயடெஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்த ப்லெயடெஸ்-கள் மொத்தம் எழுவர். இவர்கள் உலகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் அட்லஸுக்கும் கடல்தேவதையான ப்லெயொன்க்கும் பிறந்தவர்கள்.  இவர்களின் பெயர்கள் மயா, எலெக்ட்ரா, அல்சியான், டெகெட், அஸ்ட்ரோப், சிலியானோ, மெரோப். வேட்டுவனான ஆரியன் (மிருகசீரிஷ நட்சத்திரம்) இந்த ப்லெயடெஸ் தேவதைகளின் மீது இச்சைக் கொண்டு இவர்களை மீண்டும் மீண்டும் அணுக, அவர்களின் தோழியான ஆர்டெமிஸ்  க்ரேக்கரகளின் இந்திரனான ஜியஸை இப்பிரச்சனையில் தலையிடுமாறு கோரியது. ஜியஸ் இவர்களை புறாக்கூட்டமாக மாற்ற, அவர்கள் பறந்து சென்று தனி நட்சத்திரக் கூட்டமாக மாறினர். ப்லெயடெஸ்-இல் இளையவளான மெரோப், பின்னர் ஸிஸிஃபஸ் என்ற மனிதனுடன் (கோரிந்த்-இன் மன்னன்) உறவு கொண்டதால் தன் ஒளியை ஒடுக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு தொன்மத்தில் ட்ராய் நகரின் வீழ்ச்சியால் அந்நகரின் மூதாதையான எலெக்ட்ரா (ட்ராய் மன்னன் ப்ரியம் ஹெக்டர், பாரிஸ் ஆகியோரின் தந்தை எலெக்ட்ராவின் கொள்ளுப்பேரன்) சோகத்தில் வால் நட்சத்திரமாக மாறி வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மகாபாரதக் கதையின் படி, அக்னி தெவன் சப்தரிஷிகளின் மனைவியர் மீது மோகம் கொள்ள அக்னிதேவனின் மனைவியான ஸ்வாஹா தன் உருவை ஸப்தரிஷிபத்தினிகளின் உருவாக மாற்றிக் கொண்டு அவனுடன் இணைய முடிவுகொண்டாள். ஆறு ரிஷிகளின் மனைவியின் உருவம் எடுக்க முடிந்த அவளால் வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் உருவத்தை மட்டும் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் அருந்ததியின் பத்தினித் தன்மை. இதையறிந்த மற்ற ரிஷிகள் தங்கள் மனைவியரை ஒதுக்கிவைத்தனர். இவர்களே கார்த்திகைப் பெண்களாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அருந்ததி மட்டும் தன் கணவர் வசிஷ்டருடன் இருக்கிறாள்.

[இரவில் வானத்தில் தெரியும் சப்த ரிஷி மண்டலத்தில், காற்றாடியின் வால் பகுதி போல் நீண்டிருக்கும் மூன்று நட்சத்திரங்களில் நடுவில் இருப்பது தான் வசிஷ்டர்; அதை ஒட்டியே அருந்ததி நட்சத்திரம் இருக்கிறது]

தைத்ரீய ப்ராஹ்மனத்தில் இவர்களின் பெயர்கள் அம்பா, துலா, நிதானீ, அப்ரயந்தீ, மேகயந்தி, வர்ஷ்யந்தி, சுபானிகா என்று குறிப்பிடப்படுகிறது. சதபத ப்ராஹ்மனத்திலும் கார்த்திகை நட்சத்திரம் சப்தரிஷிகளின் பத்தினி என்றும், ஆனால் இது எப்போதும் கிழக்கில் உதிக்கும் என்றும் - வடக்கில்  துருவ நட்சத்திரத்தை ஒட்டி இருக்கும் - சப்தரிஷி மண்டலத்திலிருந்து விலகி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ புராணம்/ ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் முருகன் பிறந்த கதை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

தாட்சாயினி தேவி தட்சனின் யாகத்தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டதும் சிவபெருமான் சதிதேவியின் உடலைக் கையில் எடுத்து ஊழித்தாண்டவம் ஆட, சதிதேவியின் பூத உடல் இருக்கும்வரை சிவனின் கோபத்தைத் தணிக்க இயலாது என்பதை உணர்ந்த திருமால் தன் சக்கரத்தால் அவ்வுடலைத் துண்டாக்கினார். [அவை விழுந்த இடங்கள் அனைத்தும் 108 சக்தி பீடங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.] சதிதேவியின் உடல் மறைந்த பின் சிவபெருமான் தனிமையில் நீண்ட தவத்தில் கண்மூடி அமர்ந்துவிட்டார்.

சிவபெருமான் நீண்ட தவத்தில் இருந்ததால், அவருக்கு மகன் பிறக்க வாய்ப்பில்லை என்று எண்ணி, தாரகாசுரன் தன் இறப்பு சிவனின் மகனால் ஏற்பட வேண்டும் என வரம் வாங்கியிருந்தான்.

சதிதேவி ஹிமவானின் மகள் பார்வதியாக அவதரித்தாள். அவள் சிவ பெருமானை மணக்கக் காத்திருக்க, அவர்களை இணைக்க காமதேவன் மலர்கணை எய்து சிவனின் நெற்றிக் கண் பெறியினால் தீக்கிரையானான்.

சிவனின் விந்துத் துளிகள் சில பூமியில் சிந்த, அதனால் ஏற்பட்டும் வெப்பத்தாலிருந்து உலகைக் காக்க பிரமன், அக்னித்தேவனை அதை எடுத்துக்கொள்ளப் பணித்தார்.

ஸ்கந்த புராணத்தின் படி, அக்னி அதன் வெப்பத்தைத் தாளாமுடியாமல் தவிக்க பிரமன் அதை குளிர்காய வரும் பெண்ணிடம் அதைக் கொடுக்கக் கூறினார். கார்த்திகைப் பெண்கள் முதலில் வர அவர்களின் உடலில் அந்த வீரியத்தை அக்னி செலுத்த அந்த அறுவருக்கும் குழந்தைகள் பிறந்தனர்.

சிவபுராணத்தில், இது சற்று மாறுபட்டு வெப்பம் தாள முடியாத அக்னி, சிவனின் வீரியத்தை கங்கையில் இட்டதாகவும் அது அங்கிருந்து ஸரவனத்தில்  (நாணல் காடு) ஆறு தாமரைகளில் அவற்றைச் சேர்த்ததாகவும் அங்கு தோன்றிய குழந்தையைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததாகவும் கூறுகிறது.

க்ரேக்க தொன்மத்த்தின் ஏழு ‘ப்லெயடெஸ்’ சகோதரிகளில் மூத்தவள் மயா என்று பார்த்தொம். அவளுக்கும் க்ரேக்கர்களின் இந்திரனான ஜீயஸுக்கும் பிறந்தவன் ஹெர்மஸ். இந்த ஹெர்மஸின் சின்னம் சேவல்; அவன் கையில் பிடித்திருக்கும் தண்டத்திற்கு கெரிகியான் (Kerykeion) என்று பெயர். இந்த கெரிகியான் கடூஸியஸ் – Caduceus (சேவல் சிறகு கொண்ட தண்டத்தில் இரண்டு பாம்புகள் சுற்றியிருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்) – என்றும் அழைக்கப்படும். [இது தவறுதலாக இது தற்போது மருத்துவர்கள் சின்னமாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தத் தவறு ’ஆஸ்க்லியன் தண்டம்’ பாம்பால் சுற்றப்பட்டது என்பதால் ஏற்பட்டது. ஆஸ்கிலபஸ் க்ரேக்கர்களின் மருத்துவ கடவுள்; அவர் தண்ட்த்தில் ஒரு பாம்பு தான் இருக்கும்; சிறகுகள் கிடையாது. அமெரிக்க ராணுவத்தின் மருத்துவப் பிரிவு முதல் முதலாக இந்த்த் தவறைச் செய்ததால் அதுவே பிரபலமாகிவிட்டது]. இந்த ஹெர்மஸ் உள்நோக்கிப் பயணிப்பவரின் வழிகாட்டி (Guide to inner journey) என்று க்ரேக்கர்களால் வணங்கப்படுகிறான். இந்த ஹெர்மஸின் சிலைகளில் ஆண்குறி மிகவும் பிரதானமாகக் குறிக்கப்பட்டிருக்கும்.


முருகனுக்கு குஹன் என்ற பெயரும் உண்டு. குஹன் என்றால் உள்ளில் மறைந்து இருப்பவன் என்ற பொருள் உண்டு. முருகனின் குருகுஹன் என்ற பெயருக்கும் இந்த ஹெர்மஸ்-க்கும் உள்ளத் தொடர்பு மிகவும் வியப்பளிக்கிறது!