திங்கள், மார்ச் 11, 2013

மாளவம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.


மாளவ தேசம்

தற்போதைய இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் குறிப்பாக குஜராத் மற்றும் தென் கிழக்கு ராஜஸ்தான் ஆகியவற்றை ஒட்டிய பகுதி மால்வா பகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.  இது ராஜஸ்தானுக்குத் தென்கிழக்கில் மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய பீடபூமிப் பகுதியைக் குறிக்கும்.

ஆனால் மஹாபாரத புராண காலத்தில் இது மத்ர தேசத்தை ஒட்டி இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மத்ர தேச அரசர்களில் அஸ்வபதி என்ற மன்னரின் பெயர் மஹாபாரதத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த அஸ்வபதிக்கும் மாளவிக்கும் பிறந்தவள் சாவித்திரி. கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்ட நாம் அனைவரும் அறிந்த கதையின் சுருக்கம்...

நீண்ட காலம் மகப்பேறு இல்லாமல் இருந்த அஸ்வபதி-மாளவிக்கு காயத்ரி தேவியின் அருளால் சாவித்திரி என்ற மகள் பிறந்தாள். பூவைப் பருவமடைந்த சாவித்திரி, சத்யவானை ஒரு முனிவரின் ஆசிரமத்தில் சந்தித்தாள். சத்யவான் சிறுவயதாக இருந்த பொழுது அவன் தந்தை த்யுமத்சேனன் கண்பார்வை இழந்ததால் அவனுடையப் பகைவர்கள் அவன் ஆட்சியைப் பறிக்க அம்மன்னன் தன் மனைவி, மகன் சத்யவானுடன் அம்முனிவரின் ஆசிரமக் குடிலில் வசித்து வந்திருந்தனர்.

சாவித்ரியும் சத்யவானும் காதல் கொள்ள அதை அறிந்த நாரதர், சத்யவானின் ஆயுள் ஒரு வருடத்தில் முடியும்; எனவே அவனை மணக்க நினைக்கும் எண்ணத்தைக் கைவிடும்படித் தெரிவித்தார். ஆனாலும், பிடிவாதமாக அவனையே மணந்தாள்.

ஆயுள் முடிய கணித்த நாளுக்கு நான்கு நாட்கள் முன்னரே ‘த்ரிதத்ர’ என்ற மூன்று இரவு-பகல் கண்விழித்து காக்கும் உண்ணா நோன்பை மேற்கொண்டாள்.

நான்காவது நாள் சத்யவானின் உயிரைக் கொண்டுச் செல்லத் தானே வந்த யமனைத் தொடர்ந்து சாவித்ரியும் சென்றாள். அவ்வாறு தன்னைப் பின் தொடரும் சாவித்ரியை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள இருவருக்கும் நீண்ட விவாதம் நடந்தது. அப்போது யமன் சாவித்ரிக்கு பல வரங்களை வழங்கினான். முடிவில், சத்யவானின் உயிரையும் திருப்பித் தந்தான்.

இந்தக் கதையில் யமன் பல்வேறு வரங்களைத் தந்த பொழுது சாவித்ரி தன் கணவன் இறந்த நிலையில் தானும் உயிர் துறக்க நேரிடும் என்றும் அதனால் தன் ஒரே மகளை இழந்த தன் தந்தை அஸ்வபதியும் உயிர்விடுவார், அதனால் மத்ர தேசம் அரசனை இழந்து ஆட்சி செய்ய ஆளில்லாமல் அழிந்துவிடும் என்று கூற, அஸ்வபதிக்கு மாளவி மூலம் நூறு மகன்கள் பிறக்க யமன் ஆசி கூறியதாகவும், அவ்வாறு பிறந்த மாளவியின் மகன்கள் மாளவர்கள் என்று புராண கதைகள் கூறுகின்றன.

மத்ர தேசத்தை அடுத்த பஞ்சாப் பகுதியில் (குறிப்பாக பர்னாலா, பதான்கோட், லுதியானா, படியாலா பகுதிகளில்) மால்வாய் என்ற இனத்தவர்கள் இருக்கிறார்கள். சமீபத்துச் செய்திகளில் இடம் பெறும் முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் க்யானி ஜெயில்சிங் ஆகியோர் இந்த மால்வாய் இனத்தவரே.

அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பின் பொழுது இந்தப் பகுதியில் மாலோய் என்ற இனத்தவர் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மால்வி பிராமணர்களும், மாலி என்ற ஜாட் மன்னர் பரம்பரையினரும் இந்த இனத்தவர்களே என்று ஜாட் இனத்தவர்களின் வரலாற்றை விவரிக்கும் டாகூர் தேஷ்ராஜ் என்பவர் எழுதியுள்ள ’ஜாட் இதிஹாஸ்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. மற்ற இனத்தவர்களைப் போல் மேற்கிலுருந்துத் தொடர்ந்த படையெடுப்புகளில் இவர்கள் கிழக்கில் புலம் பெயர்ந்து தற்போதைய மால்வா பகுதிகளுக்கு புலம் பெயர்ந்திருக்க சாத்தியம் உள்ளது.

தற்போதைய மாளவ பகுதியாகக் கூறப்படுவது மத்திய பிரதேசத்தில் அவந்திக்கு (உஜ்ஜயினி பகுதி) அருகில் உள்ளது. குப்தர்கள் காலத்தில் இப்பகுதி பெரும்பாலும் அவந்தியுடன் இணைத்துக் கூறப்பட்டாலும் சிலபல தனித்தன்மைகளுடனும் தனி அரசர்களாலும் ஆளப்பட்டு வந்துள்ளது.

பிற்கால மாளவப் பகுதிகளில் குப்த வம்சத்தின் இறுதி காலத்தில் மாளாவ அரசு தனி தேசமாக மீண்டும் தலையெடுத்தது.

4-ஆம் நூற்றாண்டில் சமுத்திர குப்தருக்கு சமகாலத்தவராகக் கூறப்படும் மாளவ அரசன் சிங்கவர்மன். இவருக்கு சந்த்ரவர்மன், நரவர்மன் என இரண்டு மகன்கள். சந்த்ரவர்மன் மாளவப்பகுதிகளிலிருந்து வெளியேறி மார்வார் பகுதியில் தனி அரசை நிறுவினான். நரவர்மனின் மகன் விஷ்வவர்மன். அவனுடைய முதல் மகன் ரகுவர்மன் குப்த பேரரசுக்குக் கட்டுப்பட்ட ஒரு சிற்றரசனாக விளங்கினான். இரண்டாம் மகன் பீமவர்மன் ஸ்கந்த குப்த விக்ரமாதித்தனின் மகன் குமாரகுப்தனுக்கு தன் மகளை மணமுடித்து வைத்தான். இவர்களின் மகன் பானகுப்த பாலாதித்யன்.

ரகுவர்மனின் மகன் விஷ்னுவர்தன்; அவன் மகன் யசோதர்மன்.

மாளவ அரசர்களின் முக்கிய அரசனாகக் கருதப்படுபவன் யசோதர்மன். கி.பி. 528-இல் யசோதர்மனும் பானகுப்தனும் சேர்ந்து ஹூனர்களை தடுத்து நிறுத்தி அவர்களை வென்றனர். யசோதர்மன் பின்னர் தன் பெயரை விக்ரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு அரசாட்சி செய்தான். கல்ஹனரின் ராஜதரங்கினியில், நம் ஔவையார் போல், மூன்று காளிதாஸர்கள் இருந்ததாகக் குறிப்பிடப் படுகிறது. அதில் இரண்டாவது காளிதாஸர் இந்த யசோதர்ம விக்ரமாதித்தனின் அரசவையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ரகுவம்சம், மாளவிகாசந்தேசனம் ஆகியவை இந்த காளிதாசனால் தான் எழுதப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


யசோதர்மனின் மகன் சிலாதித்யன். இவன் காலத்தில் தான் சீன யாத்ரிகர் யுவான் சுவாங் இந்தியா வந்தார். அவர் குறிப்புகளிலும் இவன் பெயர் காணப்படுகிறது.  இவன் புத்த மதத்தை தழுவினான். பிற நாட்டினர் தாக்குதலால், குறிப்பாக பிராமணர்களின் தூண்டுதலால், மாளவத்தை விட்டு காஷ்மீரத்திற்கு குடி பெயர்ந்தான். காஷ்மீரத்தின் ப்ரவரசேனனால் அங்கேயே மீண்டும் மன்னனாக முடிசூட்டப்பட்டான். அதற்குப் பின் மாளவம் ஹர்ஷவர்தனர், கூர்ஜர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்றவர்களால் ஆளப்பட்டு 13-ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தான்கள் வசம் வந்தது.

இன்றைய மாளவம், மத்திய பிரதேசத்தின் இந்தோர், மண்ட்சௌர், விந்தியத்தின் நிமார் பகுதி, ராஜஸ்தானின் சித்தூர்கர் ஆகியப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

4 கருத்துகள்:

 1. சாவித்திரி, தன் கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்ட கதையை இவ்வளவு நாள் அரையும் குறையுமாகத்தான் தெரிந்து வைத்திருந்தேன். இனி பேரப்புள்ளகளுக்கு (?) தெளிவா சொல்லிக்கொடுக்கலாமில்ல. மாளவ தேசத்தின் வரலாறு நல்ல ஆராய்ச்சி.

  (நமக்குள்ளே இருக்கட்டும். நம்ம மாளவிகா இந்த நாட்டுக்காரியா? சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸத்யவான் ஸாவித்ரி புராணக் கதை பாடல் தொகுப்பாக (கதா காலக்ஷேப பாடல் வடிவில்) ஒன்று இருக்கிறது. அதை அடுத்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன். படித்துப் பார்க்கவும்.

   [உங்கக் கேள்வி மாளவிகா ரசிகர் மன்றம், தலைவர் விவேக்!!!(அவர்தான் 2-3 படங்களில் மாளவிகா ரசிகராக நடித்துள்ளார் ) வாளைமீன் பட்டி, விலாங்கு குப்பம், மீன் தொட்டிக்கு அனுப்பி வைக்கப் படுகிறது]

   நீக்கு