புதன், மார்ச் 27, 2013

வண்ணக் கொண்டாட்டம்வட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பங்குனி மாதப் பூர்த்தியில் பௌர்ணமியன்றுக் கொண்டாடப் படும் பண்டிகை ஹோலி.

ஹோலி என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது வண்ண வண்ண பொடிகளையும் சாயங்களையும் ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழும் காட்சிதான் நம் அனைவரின் மனக்கண் முன் தோன்றும். திரைப்படங்களில் ஒரு ஆண் (நாயகன்!) ஒரு கூட்டத்துடன் (நண்பர்கள்!) ஒரு பெண்ணை (நாயகி!) அல்லது பெண் கூட்டத்தை (நாயகியின் தோழிகள்) வண்ணம் பூசி ஆடுவதைத் தான் ஹோலி பண்டிகையாகக் காட்சி படுத்தி வருகின்றன. சில இடங்களில் நாயகன் ‘பாங்க்’ என்ற போதை வஸ்துவை அருந்தி ஆடுவது போல் காட்டப்படுவதும் உண்டு.  ஊடகங்களிலும் பெரும்பாலும் இது போன்றக் காட்சிகளே திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தப் பட்டு வரும்.

ஆனால், இந்த வண்ணங்களைப் பூசி மகிழ்ந்து கொண்டாடப் படுவதைத் தாண்டியும் இப்பண்டிகை, சில இடங்களில் ’வசந்தோஸ்தவம்’ என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படும். இது வசந்த பஞ்சமி தினத்தில் துவங்கி ஹோலிவரைக் கொண்டாடப்படும். சில இடங்களில் வேறு வகையிலும் ‘ரங்பஞ்சமி’ (வண்ண ஐந்து நாள்) என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இது ஹோலிக்கு முதல் தினத்திலுருந்து துவங்கி பஞ்சமி வரைக் கொண்டாடப்படும்

இந்த வசந்தோஸ்தவ/ரங்பஞ்சமி கொண்டாட்டங்கள் கீழ் கண்ட இடங்களில் மிகவும் பிரபலம்...

1.            மதுரா
மதுரா பகவான் கண்ணன் கம்சனின் சிறைச்சாலையில் அவதரித்த இடம். இங்கு இந்த ரங்பஞ்சமி 40 நாட்கள் தொடர்ந்து (வசந்த பஞ்சமியிலிருந்து துவங்கும்) நடைபெறும். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நடனக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, அந்த நடனக் கலைஞர்கள், கிருஷ்ணரும் கோபியரும் நடத்திய  ராசலீலைகளை அடிப்படையாகக் கொண்ட நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துவர். மதுராவின் க்ருஷ்ணர் கோவிலை மையமாகக் கொண்டு இந்த உற்சவங்கள் நடைபெறும்.

2.                  வ்ருந்தாவன் (ப்ருந்தாவனம்)
வ்ருந்தாவனத்தில் பங்கே-பிஹாரி ஆலயத்தில் இந்த உற்சவங்கள் கொண்டாடப்படும். வ்ருந்தாவனும் மதுராவும் இரட்டை நகரங்கள். எனவே, மதுராவின் கொண்டாட்டங்களில் இடம் பெறும் கலைஞர்கள் இங்கேயும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விப்பர்.

3.                  பர்ஸானா
உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த ஊர் ராதை பிறந்த ஊர். ராதையைக் காண வந்த கிருஷ்ணர் அவள் மீது விளையாட்டாக வண்ணக்கலவைச் சேர்த்த நீரை விளையாட்டாக வீசி/ஊற்றி மகிழ்ந்து விளையாட தன் கையில் இருந்த மத்தால் ராதை கிருஷ்ணரை அடித்ததாகத் தொன்மக் கதைக் கூறுகிறார்கள். இதன் காரணமாக இன்றும் நந்தகிராமத்திலிருந்து ஆண்கள் இந்த ஹோலி தினத்தன்று இந்த கிராமத்திற்கு வர இங்கிருக்கும் பெண்கள் அவ்வாறு இங்கு வரும் ஆண்களை சிறுகுச்சியால் அடித்து விளையாடுவது வழக்கம். இதை லாட்டி-கி-ஹோலி என்று அழைப்பர்.

4.                  வ்ரஜ கிராமம்
வ்ரஜ் கிராமத்தில் கோவர்த்தன மலையை ஒட்டிய குலால் குந்த் என்ற ஏரிக்கரைப் பகுதியில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண லீலை நடனங்கள் இப்பகுதியில் மிகவும் பிரபலம்.

5.                  புர்ணிலா
மேற்கு வங்கத்தின் புர்ணிலா மாவட்டத்திலும் இந்த ரங்பஞ்சமி நாற்பது நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இச்சமயத்தில் வங்கத்தின் கிராமியக் கலைகளான சாஹூ, தர்பாரி, ஜுமூர், நட்வா போன்ற நடங்கள் இச்சமயத்தில் ஆடப்பட்டு மக்களை மகிழ்விக்கின்றன.

6.                  சாந்தி நிகேதனம்
சாந்திநிகேதனைப் பொறுத்தவரை இந்த ரங்பஞ்சமி விழா இதன் நிறுவனர் கவிஞர் ரவீந்த்ரநாத் தாகூர் காலத்தில் அவராலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று வரைத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வசந்தகாலக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக விஷ்வபாரதி பல்கலைக் கழக மாணாக்கர்களால் நடத்தப்படும் இக்கொண்டாட்டங்கள் இந்த ஹோலியன்று நிறைவு பெறும். பல்வண்ண ஆடைகளைக் கொண்டு இதைக் கண்டு களிக்கவரும் ஆர்வலர்களை பரவசப்படுத்தும்.
 
வெறும் வண்ணம் பூசி மகிழ்வதைத் தாண்டிக் கலைஞர்களை ஊக்குவித்துக் கலையை வளர்க்கும் இவற்றையும் ஊடகங்கள் காட்சிப் படுத்தினால் நல்லது.

4 கருத்துகள்:

  1. வண்ணக் கொண்டாட்ட பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. சுற்றுப்புற சூழல் பாதிக்காத வண்ணம், உடல் நலம் பதிக்காத வண்ணம் - வண்ணம் இருந்தால் சரி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு