நவரத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவரத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 26, 2012

பிற இரத்தினக் கற்கள்


நவரத்தினம் அல்லாத வேறு சிறப்புடைய கற்கள்

நவத்தினங்களைப் பற்றி இரண்டு இடுகைகள் (பாகம் 1, 2) இட்டிருந்தேன்.
நவரத்தினங்கள் மட்டுமன்றி வேறு சில இயற்கைக் கற்கள் கிடைப்பதற்கு அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதோடு மக்களால் நீண்ட காலமாக விரும்பி அணியப்பட்டும் வருகிறது.

நவரத்தினங்கள் பொதுவாக ஜோதிட ரீதியாக அணியப்படுபவை. சில கற்கள் நவரத்தினத்திற்கு மாற்றாகவும் சில அலங்காரத்திற்காவும் அணியப் படுகின்றன. அத்தகைய கற்கள் சிலவற்றைப் பார்ப்போம்…

ஜேட்:    வெளிர் பச்சை மற்றும் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் இது ஒரு ஒளி புகாக் கல் ஆகும். மரகதத்திற்கு மாற்றாக இது பயன் படுத்தப் படுகிறது. நல்ல கடினத்தன்மையுடன் உள்ள இக்கல்லும் ஓர் அரிய வகைக் கல்லே. ஸர்பெண்டைன் என்ற கல் இந்த ஜேட்-க்கும் போலியாகக் கிடைக்கிறது.

ஸ்படிகம்:       ஆங்கிலத்தில் இது க்வார்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நிறமற்றது. நிறமுள்ள ஸ்படிகக் கற்களும் உள்ளன, ஆனால் அவை வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றன.

கத்திரிபூ நிறத்தில் இருப்பது ஆங்கிலத்தில் அமெதிஸ்ட் என்றழைக்கப்படும் செவ்வந்திக் கல்.

சிட்ரின் க்வார்ட்ஸ் என்ப்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

வெவ்வேறு வண்ண க்ரிஸ்டல்களைப் பாருங்கள்...

ஓபல்:    வெள்ளை நிறத்தில் ஒளிபுகாத கல்லான இது வெளிச்சத்தை பல வித வர்ணங்களை பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பு ஓபலஸ்கீன்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும். இதையொட்டியே இக்கற்கள் ஓபல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கல் சூடானால் வெடித்துவிடும், எனவே இதனை அடிக்கடி நீரில் ஊற வைக்க வேண்டும்.

லேபிஸ்லசூலி:        கருநீல நிறமுடைய ஒளி புகாக் கல். மேலே தங்க நிறப் புள்ளிகளுடன் இருக்கும். நீலக்(ப்ளு ஸஃபையர்) கல்லுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவர்.

ப்ளட் ஸ்டோன் :     இக்கல் சிகப்பு புள்ளிகளுடன் பச்சை நிறத்தில் இருக்கும். மேலை நாட்டு  ஜோதிடத்தில் வயிற்றில் கட்டிகள், பாதிப்பு இருப்பவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.
[சென்ற வருடம் சூபர் ஸ்டார் வயிறு சம்பந்தப் பட்ட நோய்க்காகச் சிகிச்சை எடுத்தார் என்று படித்த பொழுது அவர் நடித்த இந்தப் படத்தின் பெயரும் ஞாபகம் வந்தது].

மாலகைட் :    இதுவும் பச்சை நிறமுள்ள ஒளி புகா கல் தான். ஆனால், இதில் கருப்புப் புள்ளிகள்/கோடுகள் இருக்கும்


ஹெமடைட் :  இது கருப்பு நிறமுடைய ஒளி புகாக் கல். கன் மெட்டல் போலவே இருக்கும்.

சூர்ய காந்தம் : சிகப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் வெல்வெட் போன்ற ஜொலிப்புடன் இருக்கும். இது மாணிக்கத்திற்கு மாற்றாக பயன்படுத்தப் படுகிறது. ராஜவர்த்தினி என்ற செயற்கை கல் சூரியகாந்தக் கல்லின் போலி.

ஜிர்கான் :      இது வெள்ளை, பிரவுன், நீலம், பச்சை ஆகிய நிறத்தில் கிடைத்தாலும் வெள்ளை தான் மிகப் பிரபலம். ஏனென்றால், இது வைரத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப் பட்டது.


டர்மலைன்ஸ் :        இவை பச்சை, சிகப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. மரகதம், மாணிக்கம், நீலம் ஆகியவற்றின் மாற்றாகப் பயன் படுகின்றன.

 டோபாஸ் :    சஃபையர் போலவே வண்ணங்களில் கிடைக்கிறது. மஞ்சள் வண்ணம் புஷ்பராகத்தின் மாற்றாகக் கொள்ளப்படுகிறது.

அலெக்ஸாண்டிரைட் :      இது க்ரைஸ்பெரைல் வகையைச் சேர்ந்தது. சூரிய ஒளியில் பச்சையாகவும் செயற்கை ஒளியில் சிகப்பாகவும் மாறும் தன்மை கொண்டது.

பெரிடாட் :     பச்சையும் மஞ்சளும் கொண்ட ஒளி ஊடுறுவும் கல்.

அக்வாமெரைன் :     கடல் நீர் நிறத்தில் அதாவது நீல நிறத்தில் இருந்தாலும் இதுவும் மரகதத்தின் மாற்றாக இருக்கும். இது ஒரு ஒளி ஊடுறுவும் கல்.

சந்திர காந்தம் :       சாதாரணமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இக்கல் சில நேரங்களில் நீலம் கலந்த நிறத்திலும் கிடைக்கிறது.

டர்குவாய்ஸ் : கருப்பு வர்ணத்தில் கோடுகள் கொண்ட வான்நீல நிறம் கொண்ட கல்.

அயோலைட் : ஒரு புறம் நீலமும் மறு புறத்தில் மஞ்சள் அல்லது ப்ரௌன் நிறமும் கொண்ட டிகோரிஸம் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இருநிறத் தோற்றம் கொண்டது அயோலைட்.

இவற்றைத் தவிர, கார்னிட், பைரோப், அல்மேண்டைன், ஆம்பர், பெரிடாட், அசூரைட் போன்ற பல விதமான கற்கள் மக்களால் விரும்பி, சில நேரங்களில் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும், அணியப் படுகின்றன.



ஞாயிறு, ஜூன் 17, 2012

நவரத்தினங்கள் (பாகம்-2)



நவரத்தினங்களில் நான்கை முதல் பகுதியில் பார்த்தோம். மீதமுள்ள ஐந்து கற்களை இப்போது பார்ப்போம்...

5.                  வைரம்

ஆங்கிலத்தில் டையமண்ட் என்றழைக்கப்படும் வைரம் ஹிந்தியில் ஹீரா என்று அழைக்கப்படுகிறது. புராதன காலத்தில் இதன் பெயர் வஜ்ரம். இதிலுள்ள ரசாயனப் பொருள் கார்பன். நவரத்தினங்களிலேயே அதிகக் கடினத் தன்மைக் கொண்டது வைரம் தான். வைரத்தின் தெளிவு, நிறம், எடை ஆகியவற்றை வைத்து இதன் தரம் மற்றும் விலை நிர்ணயிக்கப் படுகிறது. இந்தியா, ஆஃப்ரிகா ஆகிய நாடுகளில் தான் இது அதிக கிடைக்கிறது என்றாலும் பெல்ஜியம் தான் வைரம் பட்டைத் தீட்டுவதில் பெயர் பெற்ற நாடாக இருக்கிறது.

5.        மரகதம்

மரகதத்தின் ஆங்கிலப் பெயர் எமரால்ட்; ஹிந்தி பெயர் பன்னா (पन्ना). இதன் புராதனப் பெயர் ஹரின்மணி. பெரில் வகையைச் சேர்ந்த இதன் ரசாயனப் பொருள் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட். எளிதில் நொறுங்கும் தன்மைக் கொண்டது மரகதம். மதுரை மீனாட்சி அம்மன் திருஉருவச் சிலை மரகதத்தால் ஆனது என்று கூறுவர். அதிர்வுகளால் இது தெரித்துவிடும் என்பதாலேயே கர்பகிரகத்தின் அருகில் மேள தாளங்கள் தவிர்க்கப் படுகிறது. இதிலிருந்து  குரோமியத்தை நீக்கி விட்டால் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படும். இந்த பச்சை நிற பெரிலை சூடாக்கினால் அக்வாமெரின் என்னும் நீலப்பச்சைக் கல்லாக மாறும்.

புளூரைட், மாலக்கைட், ஜேட், செர்ப்பெண்டின்கல் ஆகியவை மரகதத்தின் போலிகள்

7.        வைடூர்யம்

இந்தியிலும் வைடூர்யம் என்ற பெயரையே கொண்ட இதன் ஆங்கிலப் பெயர் ‘கேட்ஸ்-ஐ’. க்ரிஸோபெரில் என்ற வகையைச் சேர்ந்த இதில் உள்ள ரசாயனப் பொருள் பெரில்லியம் அலுமினேட். கேடோயன்ஸி (chatoyancy) என்ற பூனைக்கண்ணைப் போல ஒரு நூலிழையான ஒளி ஊடுறுவிச் செல்வதால் ஆங்கிலத்தில் இது கேட்ஸ்-ஐ என்றுக் கூறப்படுகிறது.

வைடூர்யம் போலவே க்வார்ட்ஸ் வகை வைடூர்யங்களும் கிடைக்கின்றன. இவை ப்ரவுன் கலந்த பச்சையாக இருக்கும். பழுப்பு நிற நூலிழை இருந்தால் டைகர்-ஐ என்றும் கருப்பு நிற நூலிழை இருந்தால் ‘புல்ஸ்-ஐ’ என்றும் அழைக்கப்படும். ஆனால், இவை வைடூர்யம் என்றுக் கொள்ளப்படுவதில்லை.

8.        நீலம்

புராதன காலத்தில் நீலகந்தி (அ) இந்திரநீலம் என்றழைக்கப்பட்டு தற்போது தமிழிலும் இந்தியிலும் நீலம் என்றழைக்கப்படும்  இதன் ஆங்கிலப் பெயர் ப்ளூ ஸஃபையர். யெல்லோ ஸஃபையர் என்றழைக்கப்படும் புஷ்பராகம் போலவே இதுவும் கொரண்டம் வகையைச் சேர்ந்த அலுமினியம்-ட்ரை-ஆக்ஸைட் என்ற ரசாயனப் பொருளையேக் கொண்டது. இதில் டைட்டானியம் என்ற வேதிப் பொருளும் இணைவதால் நீல நிறம் பெருகிறது. காஷ்மீர் நீலம் தான் மிகவும் புகழ்பெற்றது.

நீல டான்சானைட் கல் (கத்திரிபூ நிறம் சேர்ந்தது), நீல டர்மலின் (ராமர் பச்சை நிறம் கொண்டது) ஆகியவை இதன் போலிகள். இந்த போலிகளை டைக்ராஸ்கோப் (dichroscope) என்ற கருவியின் மூலம் கண்டறிகிறாகள்.

9.        பவழம்

முத்தைப் போலவே பவழமும் ஒரு ஆர்கானிக் ஜெம்ஸ்; அதாவது உயிரியிலிருந்து கிடைக்கும் கல்.  இதுவும் கடல் வாழ் உயிரியிலிருந்தே பெறப்படுகிறது. பவழப் பூச்சி  என்ற சிறிய உயிரியின் எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. கால்சியம் கார்பனேட்டால் ஆன இதன் ஆங்கிலப் பெயர் கோரல்; ஹிந்தி பெயர் மூங்கா (मूङ्गा).  பொதுவாக சிவப்பு நிறத்திலேயே இருந்தாலும், வெள்ளை, கருப்பு, நீல வண்ணங்களிலும் கிடைப்பது உண்டு. முத்தைப் போலவே இதன் கடினத் தன்மையும் மிகவும் குறைந்ததாகும்.

கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் ஆகியவை பவழத்தின் போலிகள்.

வெள்ளி, ஜூன் 15, 2012

நவரத்தினங்கள் (பாகம்-1)


உலகில் பலவகையான கற்கள் இருந்தாலும் ஒன்பது கற்கள் சிறப்பாக நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும். அவை...

1.                  மாணிக்கம்:

இது ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்றும், ஹிந்தியில் மாணிக் என்றும் அழைக்கப்படும். புராண நூல்களில் இதற்கு குருவிந்தம், பதுமராகம், ரவிமணி, ஹாரநாயகம் என்ற பெயர்களும் உண்டு. இது பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் கல். ரோஸ் அல்லது சிகப்பு நிறமாக ஒளி ஊடுறவும் தன்மையுடனும் அதே நேரம் முழு சிவப்பு நிறத்தில் ஒளி ஊடுறவா கல்லாக இரு விதமாகவும் கிடைக்கும்.

உயர் தர மாணிக்கங்கள் சாதரண வெளிச்சத்தில் சிகப்பு நிறத்தையும் அதிக வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரத்த சிவப்பையும் காட்டும். உலகிலேயே மிகவும் தரமான மாணிக்கம் பர்மாவிலும் அதற்கு அடுத்த நிலையில் இலங்கையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் ’மைசூர் ரூபி’ என்றத் தரத்தில் சற்று குறைந்த மாணிக்கமும் கிடைக்கிறது.

மாணிக்கத்தில் உள்ள ரசாயனப் பொருள் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு ஆகும்.வை கொரண்டம் (corundum) என்கிற வகையைச் சார்ந்தவை.

மாணிக்கம், போலியாக / செயற்கையாகத் தொழிற்சாலையிலும் தயார் செய்யப் படுகிறது. ஆனால் இதில் காற்றுக் குமிழ்கள் காணப்படும். இது பொதுவாக ஒளி ஊடுறுவக் கூடியதாகவே இருக்கிறது. அமெரிக்கன் டையமண்ட் கற்களில் சிகப்பு நிறத்திலும் கற்கள் வரும். அவையும் மாணிக்கம் போலவே இருக்கும்; இவற்றை சிகப்பு ஸ்பைனல் கற்கள் என்று கூறுவர். இதை Dichroscope என்ற கருவியின் மூலம் அறியலாம்.

புற ஊதா கதிர் விளக்குச் சோதனையிலும் மாணிக்கத்தைக் கண்டறிகிறார்கள். மாணிக்கத்திற்கு நிறம் தரும் குரோமியம், குறிப்பாக பர்மா மாணிக்கங்களில் அதிகமாக, உள்ளதால் அவை புற ஊதா கதிர் விளக்குகளில் அதிகமாக ஒளிர்கின்றன.

2.                  முத்து

இதன் ஆங்கிலப் பெயர் பியர்ல் (Pearl); இந்தியில் இதன் பெயர் மோத்தி (मोति). இதன் புராதனப் பெயர் ப்ரமௌக்திகம் என்பதாகும். உலகிலேயே பட்டைத் தீட்டப் படாத அல்லது பட்டைத் தீட்ட வேண்டிய அவசியமில்லாத ரத்தின வகை ஒன்ரு உண்டெண்றால் அது முத்து தான். மற்ற ரத்தினங்கள் பட்டைத் தீட்டத் தீட்ட ஜொலிக்கும். ஆனால், முத்து ஒன்றுதான் இயற்கையிலேயே ஜொலிப்பவை. முத்து வானவில்லின் ஏழு நிறங்களையும் காட்டி ஜொலிப்பிற்கு ‘ஷீன்’ என்று பெயர். அதே நேரம் மற்ற ரத்தினங்களைப் போலல்லாமல் முத்துக்கள் சில காலத்திற்குப் பின் நிறம் மங்கத் தொடங்கி விடுகின்றன.

இதில் உள்ள ரசாயனப் பொருள் கால்சியம் கார்பனேட். இது ஆர்கானிக் ஜெம்ஸ் என்ற வகையைச் சார்ந்தது. சாதாரணமாக சிப்பிகள் அவற்றின் உள்ளே அழுக்குகள் படிந்திருந்தால் அவை தாக்காமலிருக்க வேதிப்பொருளைச் சுரந்து அந்த அழுக்கைச் சுற்றி அடுக்குகளாகப் படிந்துவிடுகின்றன. இந்த அடுக்குகள் மேலும் மேலும் இறுகி திரண்டு முத்துக்களாக மாறிவிடுகின்றன.  

செயற்கை முத்துக்களைப் பொறுத்தவரை, இந்த சிப்பிகளில் துளை செய்து அதில் வேறு சிப்பிகளின் தசைகளை வைத்து விடுவார்கள் அவற்றைச் சுற்றி இந்த வேதிப் பொருள் படிந்து அதன் மூலம் முத்துக்கள் உருவாகின்றன. ஆனாலும் இவற்றின் அடுக்குகள் இயற்கை முத்துக்களைப் போல அல்லாமல் வெங்காயத்தைப் போல ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காக இருக்கின்றன.

3.                  புஷ்பராகம்

சாதாரணமாக இதை கனக புஷ்பராகம் அதாவது ஆங்கிலத்தில் Yellow Sapphire என்று அழைக்கப்படுகின்றன; சிலர் இதை மஞ்சள் டோபாஸ் என்றும் அழைப்பர். இதன் புராதனப் பெயர் பதுமராகம், பதுபராஜ் என்பவை ஆகும். இந்தியில் இதன் பெயர் புக்ராஜ். கொரண்டம் வகையைச் சார்ந்த இவற்றில் உள்ள வேதிப் பொருளும் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு தான். இது நிறமற்றது. ஆனால், இதனுடம் வேறு தாதுப் பொருட்கள் சேர அவற்றின்  தாக்கத்தால் இவை மாணிக்கமாக அல்லது நீலம் என்று மாற்றம் பெருகின்றன. நிறம் எதுவும் சேராதது வெண்புஷ்பராகம் என்றழைக்கப் படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா மாநிலத்திலும், இலங்கை, ஆஸ்த்ரேலியாவிலும் கிடைக்கின்றன. புஷ்பராகத்தைப் போலவே மஞ்சள் டோபாஸ், மஞ்சள் பெரில் அல்லது ஹெலியோடோர் ஆகியவையும் இருக்கும்; ஆனால், இவையும் அபூர்வக் கற்களே. புஷ்பராகத்தின் போலியாகக் கருதப் படுவது சைட்ரைன் குவார்ட்ஸ் என்ற கல்லே. ஆனால், இது புஷ்பராகத்தைவிட எடைக் குறைவாக இருக்கும்.


4.                  கோமேதகம்

கோமேதகத்தின் ஆங்கில பெயர் ஹெஸோநைட் (Hessonite). ஹிந்தியிலும் இதன் பெயர் கோமேதக் தான். இதன் நிறம் பசுவின் சிறுநீரின் நிறத்தில் இருப்பதால், புராதன காலத்தின் இதை கோமூத்திரம் என்றும் அழைப்பர். இது கார்னெட் வகையைச் சார்ந்தது. இதிலுள்ள ரசாயனப் பொருள் கால்சியம் அலுமினியம் சிலிகேட். ஆரஞ்சு நிறமுடைய அமெரிக்கன் டைமண்ட் கோமேதகம் போலத்தான் இருக்கும். தேன் நிற ஜிர்க்கானைக் கோமேதகத்திற்கு போலியாகக் கூறுவர்.