சனி, ஜூலை 25, 2020

முதுமை


முதுமை
[வல்லமை இதழின் 266-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 
 
 
தட்டில் சோறு வைத்திட்டு – வீதியை
எட்டிப் பார்த்துச் சொந்தங்கள் தேடும்
வீட்டுப் படிகளே நாற்காலியென
வாட்டம் காட்டிடும் பருவம்…
 
வாழ்வின் சுவடுகள்
முகம் முழுதும் எழுதிய
கவிதை வரியால் நிறைந்த
அனுபவப் புத்தகம்…
 
காலமெல்லாம் கடந்தும்
பட்ட கட்ட நட்டங்கள்
அட்ச தீர்க்க ரேகைகளாய்
அலைமோதும் ஜீவகோளம்…
 
கடந்ததை எண்ணித் தேங்கிடாமல்
வருவதை எதிர்பார்த்துக் காத்திராமல்
இருப்பதை வைத்து இயல்பாய்
நாட்களைக் கடத்துவதே முதுமை…
 

சனி, ஜூலை 18, 2020

மொட்டு மலரட்டும்

மொட்டு மலரட்டும்
[வல்லமை இதழின் 265-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
 

  1. கிட்டிய நாளையெல்லாம்
    எட்டிக்காய் என்றெண்ணி
    வெட்டியாய் கழித்து -ஞானப்
    பட்டினியில் வாழ்ந்திருப்போம்…

    ஒரு நாளில் கருவுற்று
    மறுநாளில் சருகாகி
    உயிர்நீங்கி மறைந்தாலும்
    வாட்டம் முகம் காட்டவில்லை…

    வண்டுவந்து தீண்டிடுமோ
    மகரந்தம் சேர்ந்திடுமோ
    விருட்ச விதை விளைந்திடுமோ
    என்றெண்ணி வாழ்வதில்லை…

    புவியெங்கும் மணம்வீசி
    அமிழ்தத் தேன் கொடுத்து
    மகிழ்ச்சிப் புன்னகை உயிர்ப்பித்து
    மலர்ந்திருக்க மறப்பதில்லை…

    மனவாட்டம் தனை விடுத்து
    மனிதநேயம் தனை வளர்த்து
    வாழ்வதனின் பலன் வளர்க்க – நம்
    மனமொட்டு மலரட்டும்…
     
  2.  

சனி, ஜூலை 11, 2020

பிரம்மனின் தூரிகை

பிரம்மனின் தூரிகை
[வல்லமை இதழின்264-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
 
 

மைபூசி திருடும் கள்வன்போல்
கார்வண்டு தேன் எடுத்துச் 
சென்றுவிட
வெள்ளந்தியாகப் பூவண்ணம்
 மேனி 
பூசி
‘வெண்ணை’பூச்சியாக நிற்கும் பேதை 
நீ…

பூக்கடைக்கு விளம்பரம்
தேவையில்லை 
என்றாலும்
பூவழகை 
புவனிக்குக்
கொண்டு சேர்க்கும் தூதுவன் 
நீ…

காதலியின் கண் துடிப்பைக்
கண்டுணரும் 
காதலன்போல்
பூக்களின் இதயத் துடிப்பை  
சிறகினில்
புலம்பெயர்த்த சித்துவித்தைககாரன் 
நீ….

வாடிச் சருகாகும் பூக்களின்
வண்ணத்தை 
வார்த்தெடுத்து
புனர்ஜென்மம் 
கொடுத்துவிடும்
பிரம்மனின் தூரிகை நீயன்றோ...

திங்கள், ஜூலை 06, 2020

உயிர் சுழற்சி

உயிர் சுழற்சி
[வல்லமை இதழின்262-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


பேரிச்சைப் பாலை விட்டு –
நெல்இச்சைக் கொண்டு வந்து
உரம்பாய்ச்சி வளர்த்து வைத்தக்
கதிரழித்த வெட்டுக்கிளி…
 
நாடுவிட்டு நாடுசென்று
ஏவுகணைப் போலத் தாக்கிப்
பாடுபட்டு வளர்த்த பயிர்
காவுகொண்டு போனதிங்கே….
 
பூச்சியினம் ஊர்வன உண்ணும்
ஊர்வனத்தை விலங்கு உண்ணும்
விலங்கினங்கள் காட்டில் வாழும்
உயிர் சுழற்சிப் பாடம் கண்டோம்…
 
உயிர் சுழற்சி இயற்கையை – நாம்
முறைதவற வைத்துவிட்டு
சிற்றுயிரிப் பூச்சியினைக்
குற்றஞ்சொல்லி ஏது பயன்…

(இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது)