புதன், ஜனவரி 30, 2013

காந்தியடிகளும் மதுவிலக்கும்



நாம் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே காந்தியடிகளைப் பற்றிப் படிக்கும் பொழுது அவரின் மதுவிலக்கு நிலைப்பாட்டைப் பற்றியே படித்துவந்துள்ளோம். எனவே, காந்தியடிகள் என்றவுடன் அஹிம்சையும், மதுவிலக்கும் நம் அனைவராலும் அறியப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் அரசின் மதுபான நிறுவனம் (Chhattisgarh State Beverages Corporation) – சத்தீஸ்கரின் டாஸ்மாக் - தன் முக்கியச் செயலான மதுபான விற்பனையுடன் மதுவிலக்குப் பிரசாரத்தையும் செய்ய உத்தேசித்துள்ளது. இதற்கு, தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் பெயரைப் பயன்படுத்த உள்ளது. சமீபத்தில் (24.01.2013 அன்று) இந்த வருட காலண்டரை காந்தியடிகளின் உருவத்துடன் வெளியிட்டுள்ளது.

காந்தியடிகளின் படம் ’குடிமகன்’களின் மனவுணர்வைத் தூண்டி அவர்களைப் படிப்படியாக இப்பழக்கத்திலிருந்து விடுவிக்கத் தூண்டும் என்று காலண்டரை வெளியிட்ட சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் தெரிவித்துள்ளார். காலண்டரில் காந்தியடிகள் மதுபானப் பழக்கத்திற்கு எதிராக வெளியிட்டக் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. காந்தியடிகளின் இந்தக் கருத்துகளைப் படிப்பவர்கள் மெல்லத் தங்கள் குடிப்பழக்கத்தை விட்டுத் திருந்த ஒரு வாய்ப்பாக இது இருக்கும் என்று அந்நிறுவனத் தலைவர் தேவஜ்பாய் படேல் கூறியுள்ளார்.

ஆனால், மாநில எதிர்கட்சியான காங்கிரஸ், மதுபான நிறுவனத்தின் காலண்டரில் காந்தியடிகளின் படத்தை வெளியிடுவது காந்தியடிகளை அவமானப்படுத்தும் செயல் என அறிக்கைவிட்டுள்ளது.

சத்தீஸ்கர் அரசு மதுபான நிறுவனம் சமீபகாலமாகச் சில சமூகப் பொறுப்புள்ளச் செயல்களையும் செய்ய முனைந்துள்ளது. முதல் கட்டமாக, இரண்டாயிரத்திற்கும் குறைவான மக்கள் தெகையுள்ள கிராமங்களில் தன் மதுபானக் கடைகளை அகற்றியது. பின் அடுத்த கட்டமாக இந்த எல்லையை 2500க்கு விரிவாக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 350 மதுபானக் கடைகளை சமீபத்தில் மூடியுள்ளது. தவிரவும் இந்த நிறுவனம் ‘பாரத் மாதா வாஹினி’ என்ற மாதர் சங்கங்களையும் அமைத்து மதுவிலக்குப் பிரசாரம் செய்து வருகிறது.

மற்ற மாநிலங்களைப் போலன்றி வெறும் மதுபான விற்பனையை மட்டும் செய்யாமல் – பூரண மதுவிலக்கை அறிவிக்க இயலாத நிலையில் – ஓரளவு இது போன்ற செயல்களையாவது செய்கிறதே என்றுத் தேற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இன்று நாடு உள்ளது.

காந்தியின் பெயரை உபயோகித்தாவது நிலைமையைச் சற்று சீர் செய்ய நினைக்கும் சத்தீஸ்கர் அரசின் மதுபான நிறுவனத்தின் இந்தச் செய்கையைப் பாராட்ட முடியாவிட்டாலும், தவறு என்று கூறமுடியாது.

வெள்ளி, ஜனவரி 25, 2013

குடியரசு தின அணிவகுப்பு


நாளை நம் நாட்டின் 64-ஆவது குடியரசுத் தினம்.

இத்தினத்தில் ஒவ்வொரு வருடமும் தலைநகர் தில்லியின் ராஜப்பாட்டையில் (ராஜ்பாத்) குடியரசுத் தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும் அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் அரசுத் துறைகளும் அவர்களின் சிறப்புகளையும் நடத்தும் சமுதாய முன்னேற்றப் பணிகளையும் காட்சிப் படுத்துவதும் நடைபெறும்.

இந்த வருட குடியரசு தின அணிவகுப்பில் 19 நடன வாகனங்களின் அணிவகுப்புகள் நடபெறத் திட்டமிடப் பட்டுள்ளது. இவற்றில் 14 மாநிலங்களைச் சேர்ந்தவை. ஐந்து மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்தவை. இவற்றில் 400-க்கும் அதிகமான கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆண்டு மாநிலங்களிலிருந்து 28-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் 14 மட்டுமேத் தேர்வுச் செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவற்றில் சில முக்கியமானவற்றைப் பார்ப்போம்...

பிஹார் மாநிலத்தின் ஊர்தியில் சிக்கா புல்லிலிருந்துத் தயாரிக்கப்பட்டக் கைவினைப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஊர்தியில் புந்திக் கோட்டையும் அங்குக் கட்டப்பட்டுள்ள பள்ளிகளும் காட்சிப் படுத்தப்பட உள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம் சிர்பூர் தொழில் நகரத்தை முக்கியமாகக் காட்சிப்படுத்த உள்ளது.

உத்திரப் பிரதேசம் வ்ரிஜ் நகரத்தில் நடக்கும் ஹோலி விழாவை (ராசலீலா) காட்சிப் படுத்த உள்ளது.

மேற்கு வங்கம் விவேகாநந்தரின் நூற்றாண்டை மையமாகக் கொண்டு அவரின் போதனைகளை அடிபடையாகக் கொண்டு அதன் ஊர்தியை வடிவமைத்துள்ளது.

இவற்றைத் தவிர ஜார்கண்ட், மேகாலயா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், கேரளம், ஹிமாசலம், ஒடிஸா, த்ரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த உள்ளன.

தில்லியைப் பொறுத்தவரை இந்த ஆண்டு பல்வேறு கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கும். காட்சி ஊர்தியின் மையக்கருத்தாக ’தில்லி – தேசத்தின் கலாச்சார மையம்’ என்று வைக்கப் பட்டுள்ளது. இதில் இந்திய நடனம், இசை, நாடகம், நுண்கலைகள் போன்றவைக் காட்சிப் படுத்தப்படும். சாகித்ய கலா பரிஷத் (இலக்கியக் கலைச் சங்கம்) இந்த காட்சி ஊர்தியை வடிவமைத்துள்ளது. இந்த ஊர்தி இரண்டு பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளது. ஒன்றில் தில்லியின் புராணா கிலா என்று அழைக்கப்படும் பழையக் கோட்டையின் வடிவில் மேடை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு கலைஞர்கள் தில்லியின் ’இன்றைய நிலைமை’ என்று நகரத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை வடிவமைப்பதை காட்சிப்படுத்துவதுடன் ‘பானபட்டரின் கதை’ நாடகமாகவும் காட்டப்படும்.  மற்றொன்றில் கதக் நாட்டியமாடும் ஒரு பெண்ணைச் சுற்றி ஒருபக்கத்தில் பல்வேறு இந்திய வாத்தியங்களான சரோத், தபேலா, தம்பூராவும்  ஆகியவையும் மற்றொரு பக்கத்தில் தில்லியின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்ட சிட்டுக்குருவியும் இருப்பது போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் திரையுலகின் நூறாவது வருட நிறைவை ஒட்டி திரைப்படங்களில் வெளிவந்த பிரபல பாத்திரங்களின் உருவங்களைக் கொண்ட ஊர்தியை வடிவமைத்துள்ளது.

ஊர்வலம் ஆரம்பம் ஆகும் முன்னரே விவாதிப்பதற்கும் ’அவல்’ கிடைத்து விட்ட்து. ‘மாற்றுத் திறனாளிகள் விவகாரத் துறை’ (இதன் பெயர் Department of Differently Abled Affairs என்று இல்லாமல் Department of Disability Affairs என்று இருக்கிறது), அதன் காட்சி ஊர்தியின் பெயர் பலகையில் இந்தியில் ‘நிஷக்ததா கார்ய விபாக்’ (பொருள் : சக்தியற்றவர்கள் விவகாரத் துறை) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே காரணம். அணிவகுப்பின் ஒத்திகை நடந்த பொழுது இதை கண்ட ’இயலாமை உரிமைக் குழு’ (Disability Rights Group)  இது மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் விதத்தில் உள்ளது என்றுக் கூறி மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை ஏற்கப்படுவது கடினம் என்றேத் தோன்றுகிறது. நாளை அணிவகுப்பு நடக்கும் பொழுதுதான் நிலைமை தெரியவரும்.

மற்றபடி, ஒத்திகை அணிவகுப்பின் படி நிகழ்ச்சி வண்ணமயமாகவே இருக்கும் என்றுத் தோன்றுகிறது. அனைவரும் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்போம்.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

வியாழன், ஜனவரி 24, 2013

ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம்


காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இராகுல் காந்தி நியமிக்கப்பட்டது அரசியலில் வியப்பாகக் கருதப்படவில்லை. பல நாட்களாகவே காங்கிரஸ் கட்சியிலோ அல்லது அரசிலோ ஏதேனும் பொறுப்பை ஏற்க கட்சியின் பல்வேறு நிலைகளிலிருந்துக் கோரிக்கை எழுந்த வண்ணமே இருந்து வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இராகுல் தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் –  தன் நேரு-காந்தி குடும்பப் பின்னணியை வைத்து – தனக்கு நெருக்கமானவர்களுக்கும் தான் விரும்பியவர்களுக்கும் கட்சியிலும் அரசிலும் பதவியும் பொறுப்புகளும் வழங்கியே வந்துள்ளார். அதனால், இந்த அறிவிப்பால் இராகுலுக்கு புதிதாகக் கிடைக்கப் போவது எதுவுமில்லை.

மாறாக, கட்சியின் தினசரி நடவடிக்கைகளிலும் பல்வேறு விவகாரங்களில் கட்சியின் நிலையை பிரதிபலிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்குக் கூடியிருக்கிறது. கூடுதலாக அடுத்த ஆண்டு நட்க்க இருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸின் தற்போதையச் சரிவைத் தடுத்து நிறுத்தி வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் சேர்ந்துள்ளது. இதுவரை நடந்தத் தேர்தல் தோல்விகளுக்கு அந்தந்த மாநில தலைமையைக் குறைக் கூறியது போல பொறுப்பைத் தட்டிக் கழித்து விட முடியாது.

ஆனால், இதுவரை இராகுல் கடந்த தேர்தல்களில் தன் நாடாளுமன்றத் தொகுதியில் (அது காலங்காலமாக அவர்கள் குடும்பத்தினராலேயே ஆளப்பட்டு வந்த உத்திரப் பிரதேசத்தின் அமேதி தொகுதி தான்) தொடர்ந்து வெற்றிப் பெற்றதைத் தவிர சிறப்பாக வேறு எதுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை. மாநிலத் தேர்தல்கள் எதிலும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க முடியவும் இல்லை. இரண்டாம் முறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியைமைக்க பாஜக சரியான போட்டியைக் கொடுக்கவில்லை / கொடுக்கும் நிலையில் இருக்கவில்லை என்பது தான் காரணமேயன்றி இராகுலின் பங்கு அதில் எதுவும் இல்லை.

பொது பிரச்சனைகளிலும் அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை. இளைஞர் சக்தியை அவர் பிரதிபலிப்பதாகக் கூறுவதும் ஒரு பிரமையே. கடந்த ஆண்டில் தில்லியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கு பெற்ற இரண்டு முக்கியப் பிரச்சனையில் அவர் பங்கு எதுவுமில்லை.

கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடந்த லோக்பால் போராட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர் பேசிய போது லோக்பாலை அரசியலமைப்பு சட்ட்த்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக் கூறினார். ஆனால், அதன் பிறகு லோக்பால் சட்ட மசோதாவிலோ அல்லது அதைச் செயல்படுத்தும் விதத்திலோ அவர் எதுவுமே செய்யவில்லை. ஆண்டின் கடைசியில் பாலியல் வன்முறைக்கு எதிரானப் போராட்டின் போது அவர் வெளியில் தலைக் கூடக் காட்டவில்லை.

அவர் இருக்கும் தலைநகரிலேயே இளைஞர்களிடம் அவருக்குத் தொடர்பில்லாமல் இருக்கும் பொழுது நாடு முழுவதும் இளைஞர்களின் பிரதிநிதியாக அவர் எப்படி இருக்கமுடியும் என்பது கேள்விக் குறியே!

இருந்தாலும் எந்த நேரு-காந்தி குடும்ப பின்னணியை வைத்துக் காங்கிரஸ் கட்சி குறைக் கூறப்படுகிறதோ அதே நேரு-காந்தி குடும்பம் தான் கடந்த 10-15 ஆண்டுகளாக அக்கட்சியைச் சிதறாமல் ஒருங்கிணைக்கும் ஒரு காந்தமாகக் கட்டி வைத்துள்ளது. கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் அதாவது சோனியாவின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னால் அது தமிழகத்தில் தமாக, மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், வங்கத்தில் திரிணாமுல் என்று பிரிந்தது போல் மற்ற மாநிலங்களிலும் பிரிந்திருக்கும். பாஜாக-விற்கு ஆர்.எஸ்.எஸ் என்னும் காந்தம் இருப்பது போல் காங்கிரஸுக்கு இந்த நேரு-காந்தி குடும்பம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர மற்றக் கட்சிகள் எதுவும் குடும்ப அரசியல் செய்யாமல் இருக்கவில்லை என்பது தான் உண்மை. பாஜக-வும் சங் குடும்பம் (ஆம், இந்தியில் பரிவார் என்றால் குடும்பம் என்று தான் பொருள்) சொல்படி நடக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறது.

எனவே, காங்கிரஸ் கட்சியில் இராகுலுக்கு பதவி அளித்தது ஆச்சரியமான விஷயமாக கொள்ளவோ அல்லது மற்றக் கட்சிகள் அதைக் குறைக் கூறவோத் தேவையில்லை. ஏனென்றால், காங்கிரஸுக்கு நேரு-காந்தி குடும்பத்தின் தேவையும் நேரு-காந்தி குடும்பத்திற்கு காங்கிரஸின் தேவையும் இருக்கும் வரை இது நடக்கத் தான் செய்யும். மக்கள் தலைவர்களின் குடும்பத்தினருக்கு வாக்களிப்பதுத் தொடரும் வரை இதைத் தடுக்க முடியாது.

திங்கள், ஜனவரி 14, 2013

பொங்கல் வாழ்த்துகள்


மார்கழி மாதம் முடிந்து தைத் திங்கள் முதல் நாளில் பயிர் வளர உதவிய சூரியனுக்கும் உழவில் உதவிய மாக்கணங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக நம் தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவே பொங்கல் என்று நாம் அனைவரும் அறிவோம். பொங்கல் என்றாலே வளம் பொங்குதல் என்றுப் பொருள் படும். உழவு முடிந்து அறுவடை நடந்தால் வளம் பொங்கும் என்பதால் இன்றிலிருந்து அனைவருக்கும் வளம் பொங்கும் என்பதே இதன் அடிப்படையாக இருக்க முடியும்.

இந்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நம் தமிழகத்தில் மட்டுமேக் கொண்டாடப்படுகிறது. இருந்தாலும் நாட்டின் மற்றப் பகுதிகளிலும் இதுக் கொண்டாடப்படாமல் இல்லை. இதன் காரணம், உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேல் அரிசி விளைச்சல் ஆசிய கண்ட்த்தில் தான் விளைகிறது. அதிலும் இந்தியா உலக அரிசி விளைச்சலில் முதலிடத்தில் இருக்கும் நாடு ; உலக அரிசி விளைச்சலில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் தான் விளைகிறது. இந்திய அளவில் தமிழகம் அரிசி விளைச்சலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. [முதலிடத்தில் மேற்கு வங்கம்(16%); இரண்டாவது இடத்தில் ஆந்திரம் (13%); மூன்றாவது இடத்தில் உ.பி. (12%); நான்காவது இடத்தில் பஞ்சாப் (11%); ஒரிசாவும் தமிழகமும் ஐந்தாவது இடம் (7.5%)].

இந்தப் பொங்கல் திருநாளை வட இந்தியாவில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். பன்னிரண்டு ராசி சக்கரங்களில் மகர ராசியில் சூரியன் நுழைவதே மகர சங்கராந்தி. நெற்பயிர் வளர நல்ல மழையும் சூரிய ஒளியும் தேவை என்பதால் குளிர்காலத்திலிருந்து பருவநிலை மாற்றம் கொண்டுவர சூரியனின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால் நாடு முழுவதும் சூரியன் தென் திசையின் மகர ரேகையைத் தொட்டுத் திரும்பும் நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

பஞ்சாபியர்கள் நாம் போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது போலவே ‘லோடி’ பண்டிகையக் கொண்டாடுவதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இன்று ’மாகி’ என்ற பெயரால் குறிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் இப்பண்டிகை ‘கிசிரி’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அலகாபாத்-இல் ‘மக மேலா’ என்ற கண்காட்சி நடைபெறும். திரிவேணி சங்கமம், ஹரித்வார், முக்தேஷ்வர் மற்றும் பிஹாரின் பாட்னா ஆகிய இடங்களில் நந்நீராடுதலும் நடைபெறும்.

வங்காளத்தில் இந்நாளன்று கங்கை பாதாள உலகத்தில் பாய்வதாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. [ராமாயனத்தில் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்து பாதள உலகத்தில் இறந்து கிடந்த தன் முன்னோர்களை (சாகரனின் மகன்கள்) உயிர்ப்பித்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. கங்கை முகப்பில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபடுகின்றனர்.

மராட்டியர்கள் இந்நாளில் எள் உருண்டைகளும் எள் போலிகளும் செய்து மற்றவர்களுக்கு வழங்கி மற்றவர்களுடன் இன்சொல் பேச வேண்டும் என்பதைக் குறிக்க ’தில் குல் க்யா, குட் குட் போலா’ (இனிப்பு எள்ளை ஏற்று இனிக்க இனிக்க பேசு) என்று கூறுவார்கள். மணமானப் பெண்கள் மற்றப் பெண்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள்-குங்குமம் கொடுத்து பாத்திரங்களைப் பரிசளிப்பர்.

குஜராத்தில் இது காற்றாடி விடும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மத்தியபிரதேசத்தில், குறிப்பாக பந்தேல்கண்ட் பகுதியில் ‘சாகரத்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒரிஸாவில் ‘மக யாத்திரை’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ‘போகாலி பிஹு’ என்றப் பெயரில் கொண்டாடப் படுகிறது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

ஞாயிறு, ஜனவரி 13, 2013

நெருப்புத் திருவிழா


வெப்பநிலை 0-5 செல்சியஸ் டிகிரியுடன் உறைபனி குளிர் மத்தியில், அடர் பனி சூழ்ந்து நடுங்கிக் கொண்டு வட இந்திய பகுதிகள் எல்லாம்  மந்தமாகவும் மக்கள் சோம்பல் கொண்டும் வீட்டில் ஒடுங்கி இருக்கும் பொழுது அவர்களின் குளிர் நீக்கி தேக்க நிலையை மாற்றி வீறு கொண்டு ஆடி மகிழச் செய்ய ஏற்படுத்தப்பட்ட ஓர் ஏற்பாடு தான் ’லோஹ்ரி’ என்ற நெருப்புத் திருவிழா.

வட இந்திய மாநிலங்களில் – குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் பகுதிகளில் – மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து ரவி அறுவடை (குளிர்காலத்தில்) போது பாரம்பரிய நாட்டுப்புற இசை நடனத்துடன் கொண்டாடும் பண்டிகை தான் இந்த லோடி என்ற லோஹ்ரி.

பஞ்சாபில் ரபி பருவ தானியமான கோதுமை  அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இரு போகமாகப் பயிரிடப்படுகிறது. இதன் முதல் போகத்தின் அறுவடை ஜனவரி மத்தியில் ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் குளிருக்கு ஒடுங்கியிருந்தால் அறுவடை செய்வது கடினம். இந்தச் சோம்பலை நீக்கி அறுவடை விழாவைக் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே இந்த லோடி.

இது பஞ்சாபியரின் புஸ் மாதம் நிறைவு பெறுவதை ஒட்டி நடத்தப்படும் விழா. பஞ்சாபிகளின் புஸ் மாதம் என்பது புஷ்ய மாதம் என்பதன் திரிபு. இது மக மாதத்தின் முந்தைய மாதம். புஷ்ய மாதம் என்பது நமது தை மாதம் தான். வட இந்தியாவில் தை மாதம் அதாவது புஷ்ய மாதம் பௌர்ணமி அன்றோடு முடிந்து மக மாதம் ஆரம்பமே ஆகிவிட்டது. (காரணம் அவர்கள் மாதங்களைச் சந்திரனின் சுழற்சி கொண்டு கணக்கிடுவதே). அதே நேரம், இந்த லோஹ்ரி சூரியனின் பாதையைக் கொண்டு (அதாவது பூமியின் சுழற்சியைக் கொண்டு),  மகரசங்கராந்தியை ஒட்டி, ஜனவரி 12 அல்லது 13-ம் தேதியன்று தான் வரும். சாதாரணமாக நம் போகி/பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப் படும்.

லோரி அன்று காலை, குழந்தைகள் கஜக், ரேவ்டி(ரி) (எள்ளுருண்டை & எள் தட்டை), வேர்கடலை, வெல்லம் அல்லது இனிப்பு, பணம், உணவு பொருட்களைக் கோரி லோரி 'திருட்டை' செய்வர். அப்போது அவர்கள் துல்ஹா பட்டி என்ற பஞ்சாபிகளின் ராபின் ஹூட்டை, புகழ்ந்து அவன் ஏழைகளுக்கு உதவி செய்த கதையைப் பாடுவர்.

மாலையில் சூரியனின் மறைந்த பின் வீட்டு முற்றம் மற்றும் அறுவடை துறைகளில் பெரும் நெருப்பை ஏற்றி, உயர்ந்து எரியும் அந்நெருப்பைச் சுற்றிச்சுற்றி வருவர். மேலும் அவல், சோளம், கடலை ஆகியவற்றை தூக்கி நெருப்பில் போட்டு, "ஆதர் ஆயே திலேதெர் ஜாயே" (மதிப்பு வரட்டும் வறுமை மறையட்டும்!), என்று உரக்கக் கூறி பிரபலமான நாட்டுப்புற இசையை இசைப்பார்கள். ஏராளமான சுபீட்சத்தைக் கொண்டு வந்த நிலம், அக்னி (தீ கடவுள்), என்று பிரார்த்தனை செய்து பாடுவது வழக்கம்.

பின்னர், அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாழ்த்துக்களையும்,  பரிசுகளையும் பிரசாதங்களாக கஜக், ரேவ்டி, வெல்லம், வேர்கடலை, சோளப்பொறி ஆகியவற்றை விநியோகிப்பர்.

பிராத்தனையும் பிரசாதங்கள் விநியோகிப்பது முடிந்த்தும் ஆண்கள் பாங்ரா நடன ஆடத் துவங்குவர். குழுக் குழுவாக தாளங்கள் இசைத்து ஆட்டம் இரவு வரைத் தொடரும். முன்காலத்தில், பெண்கள் பாங்ரா-வில் சேர்ந்து ஆட மாட்டார்கள். அவர்கள்,  தங்கள் முற்றத்தில் ஒரு தனி நெருப்பு வைத்து, கிட்டா (gidda) என்ற நடனத்தை ஆடுவர். ஆனால், தற்போது  ஆண்களும் பெண்களும் இணைந்தே பங்கேற்கிறார்கள். ஆட்டம் இரவு உணவு உண்ணும் வரைத் தொடரும். உணவாக சோளம் மற்றும் பல தினை வகைகளின் மாவினால் செய்யப்பட்ட ரொட்டிகளை (மக்கி-கீ ரொட்டி) கடுகுக் கீரையுடன் (சர்சோங்கா சாக்) சேர்த்து உண்பர்.

மறுநாள், ’மகி’ என்று அழைக்கப்படும். அன்று காலை நன்னீராடி இனிப்பு (கீர் என்ற பாயசம் தான் முக்கியம்) படைப்பர்.

பொதுவாக லோரி என்பது வெறும் பண்டிகையாக இல்லாமல் பஞ்சாபிகளின் வேடிக்கை-விரும்பும் (fun-loving) மனப்பாங்கையும் அவர்கள் காதல், வீரம் ஆகியவற்றை பறைச்சாற்றவும் அவர்களின் உணவு செழிப்பை எடுத்துக் காட்டும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டில் திருமணம், குழந்தைப் பிறப்பு ஆகிய நந்நிகழ்வுகள்  நிகழ்ந்த வருடங்களில் இந்த லோடி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுவது வழக்கம்.