ஞாயிறு, ஜனவரி 13, 2013

நெருப்புத் திருவிழா


வெப்பநிலை 0-5 செல்சியஸ் டிகிரியுடன் உறைபனி குளிர் மத்தியில், அடர் பனி சூழ்ந்து நடுங்கிக் கொண்டு வட இந்திய பகுதிகள் எல்லாம்  மந்தமாகவும் மக்கள் சோம்பல் கொண்டும் வீட்டில் ஒடுங்கி இருக்கும் பொழுது அவர்களின் குளிர் நீக்கி தேக்க நிலையை மாற்றி வீறு கொண்டு ஆடி மகிழச் செய்ய ஏற்படுத்தப்பட்ட ஓர் ஏற்பாடு தான் ’லோஹ்ரி’ என்ற நெருப்புத் திருவிழா.

வட இந்திய மாநிலங்களில் – குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம் பகுதிகளில் – மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து ரவி அறுவடை (குளிர்காலத்தில்) போது பாரம்பரிய நாட்டுப்புற இசை நடனத்துடன் கொண்டாடும் பண்டிகை தான் இந்த லோடி என்ற லோஹ்ரி.

பஞ்சாபில் ரபி பருவ தானியமான கோதுமை  அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இரு போகமாகப் பயிரிடப்படுகிறது. இதன் முதல் போகத்தின் அறுவடை ஜனவரி மத்தியில் ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் குளிருக்கு ஒடுங்கியிருந்தால் அறுவடை செய்வது கடினம். இந்தச் சோம்பலை நீக்கி அறுவடை விழாவைக் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே இந்த லோடி.

இது பஞ்சாபியரின் புஸ் மாதம் நிறைவு பெறுவதை ஒட்டி நடத்தப்படும் விழா. பஞ்சாபிகளின் புஸ் மாதம் என்பது புஷ்ய மாதம் என்பதன் திரிபு. இது மக மாதத்தின் முந்தைய மாதம். புஷ்ய மாதம் என்பது நமது தை மாதம் தான். வட இந்தியாவில் தை மாதம் அதாவது புஷ்ய மாதம் பௌர்ணமி அன்றோடு முடிந்து மக மாதம் ஆரம்பமே ஆகிவிட்டது. (காரணம் அவர்கள் மாதங்களைச் சந்திரனின் சுழற்சி கொண்டு கணக்கிடுவதே). அதே நேரம், இந்த லோஹ்ரி சூரியனின் பாதையைக் கொண்டு (அதாவது பூமியின் சுழற்சியைக் கொண்டு),  மகரசங்கராந்தியை ஒட்டி, ஜனவரி 12 அல்லது 13-ம் தேதியன்று தான் வரும். சாதாரணமாக நம் போகி/பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப் படும்.

லோரி அன்று காலை, குழந்தைகள் கஜக், ரேவ்டி(ரி) (எள்ளுருண்டை & எள் தட்டை), வேர்கடலை, வெல்லம் அல்லது இனிப்பு, பணம், உணவு பொருட்களைக் கோரி லோரி 'திருட்டை' செய்வர். அப்போது அவர்கள் துல்ஹா பட்டி என்ற பஞ்சாபிகளின் ராபின் ஹூட்டை, புகழ்ந்து அவன் ஏழைகளுக்கு உதவி செய்த கதையைப் பாடுவர்.

மாலையில் சூரியனின் மறைந்த பின் வீட்டு முற்றம் மற்றும் அறுவடை துறைகளில் பெரும் நெருப்பை ஏற்றி, உயர்ந்து எரியும் அந்நெருப்பைச் சுற்றிச்சுற்றி வருவர். மேலும் அவல், சோளம், கடலை ஆகியவற்றை தூக்கி நெருப்பில் போட்டு, "ஆதர் ஆயே திலேதெர் ஜாயே" (மதிப்பு வரட்டும் வறுமை மறையட்டும்!), என்று உரக்கக் கூறி பிரபலமான நாட்டுப்புற இசையை இசைப்பார்கள். ஏராளமான சுபீட்சத்தைக் கொண்டு வந்த நிலம், அக்னி (தீ கடவுள்), என்று பிரார்த்தனை செய்து பாடுவது வழக்கம்.

பின்னர், அவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாழ்த்துக்களையும்,  பரிசுகளையும் பிரசாதங்களாக கஜக், ரேவ்டி, வெல்லம், வேர்கடலை, சோளப்பொறி ஆகியவற்றை விநியோகிப்பர்.

பிராத்தனையும் பிரசாதங்கள் விநியோகிப்பது முடிந்த்தும் ஆண்கள் பாங்ரா நடன ஆடத் துவங்குவர். குழுக் குழுவாக தாளங்கள் இசைத்து ஆட்டம் இரவு வரைத் தொடரும். முன்காலத்தில், பெண்கள் பாங்ரா-வில் சேர்ந்து ஆட மாட்டார்கள். அவர்கள்,  தங்கள் முற்றத்தில் ஒரு தனி நெருப்பு வைத்து, கிட்டா (gidda) என்ற நடனத்தை ஆடுவர். ஆனால், தற்போது  ஆண்களும் பெண்களும் இணைந்தே பங்கேற்கிறார்கள். ஆட்டம் இரவு உணவு உண்ணும் வரைத் தொடரும். உணவாக சோளம் மற்றும் பல தினை வகைகளின் மாவினால் செய்யப்பட்ட ரொட்டிகளை (மக்கி-கீ ரொட்டி) கடுகுக் கீரையுடன் (சர்சோங்கா சாக்) சேர்த்து உண்பர்.

மறுநாள், ’மகி’ என்று அழைக்கப்படும். அன்று காலை நன்னீராடி இனிப்பு (கீர் என்ற பாயசம் தான் முக்கியம்) படைப்பர்.

பொதுவாக லோரி என்பது வெறும் பண்டிகையாக இல்லாமல் பஞ்சாபிகளின் வேடிக்கை-விரும்பும் (fun-loving) மனப்பாங்கையும் அவர்கள் காதல், வீரம் ஆகியவற்றை பறைச்சாற்றவும் அவர்களின் உணவு செழிப்பை எடுத்துக் காட்டும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டில் திருமணம், குழந்தைப் பிறப்பு ஆகிய நந்நிகழ்வுகள்  நிகழ்ந்த வருடங்களில் இந்த லோடி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுவது வழக்கம்.


10 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு சீனு. தெரியாதவர்களுக்கு இந்த தகவல் புதியதாக இருக்கும். இங்கே இப்போது தான் லோரி கொண்டாடி முடித்தார்கள்... :)

    பதிலளிநீக்கு
  2. (மதிப்பு வரட்டும் வறுமை மறையட்டும்!), என்று உரக்கக் கூறி பிரபலமான நாட்டுப்புற இசையை இசைப்பார்கள். ஏராளமான சுபீட்சத்தைக் கொண்டு வந்த நிலம், அக்னி (தீ கடவுள்), என்று பிரார்த்தனை செய்து பாடுவது வழக்கம்.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிக சிறப்பான பதிவு, பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள்!

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனங்கனிந்தப் பொங்கல் நல்வாழ்த்துகள் ஆகாஷ்!

      நீக்கு
  4. அருமை! சண்டிகர் வாசத்தில் கண்டு களித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. லோரி திருவிழா கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு