திங்கள், ஜனவரி 14, 2013

பொங்கல் வாழ்த்துகள்


மார்கழி மாதம் முடிந்து தைத் திங்கள் முதல் நாளில் பயிர் வளர உதவிய சூரியனுக்கும் உழவில் உதவிய மாக்கணங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக நம் தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாவே பொங்கல் என்று நாம் அனைவரும் அறிவோம். பொங்கல் என்றாலே வளம் பொங்குதல் என்றுப் பொருள் படும். உழவு முடிந்து அறுவடை நடந்தால் வளம் பொங்கும் என்பதால் இன்றிலிருந்து அனைவருக்கும் வளம் பொங்கும் என்பதே இதன் அடிப்படையாக இருக்க முடியும்.

இந்தத் திருவிழா மிகவும் சிறப்பாக நம் தமிழகத்தில் மட்டுமேக் கொண்டாடப்படுகிறது. இருந்தாலும் நாட்டின் மற்றப் பகுதிகளிலும் இதுக் கொண்டாடப்படாமல் இல்லை. இதன் காரணம், உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேல் அரிசி விளைச்சல் ஆசிய கண்ட்த்தில் தான் விளைகிறது. அதிலும் இந்தியா உலக அரிசி விளைச்சலில் முதலிடத்தில் இருக்கும் நாடு ; உலக அரிசி விளைச்சலில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் தான் விளைகிறது. இந்திய அளவில் தமிழகம் அரிசி விளைச்சலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. [முதலிடத்தில் மேற்கு வங்கம்(16%); இரண்டாவது இடத்தில் ஆந்திரம் (13%); மூன்றாவது இடத்தில் உ.பி. (12%); நான்காவது இடத்தில் பஞ்சாப் (11%); ஒரிசாவும் தமிழகமும் ஐந்தாவது இடம் (7.5%)].

இந்தப் பொங்கல் திருநாளை வட இந்தியாவில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். பன்னிரண்டு ராசி சக்கரங்களில் மகர ராசியில் சூரியன் நுழைவதே மகர சங்கராந்தி. நெற்பயிர் வளர நல்ல மழையும் சூரிய ஒளியும் தேவை என்பதால் குளிர்காலத்திலிருந்து பருவநிலை மாற்றம் கொண்டுவர சூரியனின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால் நாடு முழுவதும் சூரியன் தென் திசையின் மகர ரேகையைத் தொட்டுத் திரும்பும் நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

பஞ்சாபியர்கள் நாம் போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது போலவே ‘லோடி’ பண்டிகையக் கொண்டாடுவதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இன்று ’மாகி’ என்ற பெயரால் குறிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் இப்பண்டிகை ‘கிசிரி’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அலகாபாத்-இல் ‘மக மேலா’ என்ற கண்காட்சி நடைபெறும். திரிவேணி சங்கமம், ஹரித்வார், முக்தேஷ்வர் மற்றும் பிஹாரின் பாட்னா ஆகிய இடங்களில் நந்நீராடுதலும் நடைபெறும்.

வங்காளத்தில் இந்நாளன்று கங்கை பாதாள உலகத்தில் பாய்வதாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. [ராமாயனத்தில் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்து பாதள உலகத்தில் இறந்து கிடந்த தன் முன்னோர்களை (சாகரனின் மகன்கள்) உயிர்ப்பித்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. கங்கை முகப்பில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபடுகின்றனர்.

மராட்டியர்கள் இந்நாளில் எள் உருண்டைகளும் எள் போலிகளும் செய்து மற்றவர்களுக்கு வழங்கி மற்றவர்களுடன் இன்சொல் பேச வேண்டும் என்பதைக் குறிக்க ’தில் குல் க்யா, குட் குட் போலா’ (இனிப்பு எள்ளை ஏற்று இனிக்க இனிக்க பேசு) என்று கூறுவார்கள். மணமானப் பெண்கள் மற்றப் பெண்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள்-குங்குமம் கொடுத்து பாத்திரங்களைப் பரிசளிப்பர்.

குஜராத்தில் இது காற்றாடி விடும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மத்தியபிரதேசத்தில், குறிப்பாக பந்தேல்கண்ட் பகுதியில் ‘சாகரத்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒரிஸாவில் ‘மக யாத்திரை’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ‘போகாலி பிஹு’ என்றப் பெயரில் கொண்டாடப் படுகிறது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

10 கருத்துகள்:

 1. நல்ல தகவல்கள் சீனு.

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இன்றைய நாள் நம் நாட்டில் எப்படிக் கொண்டாடப் படுகிறது என்பதை சிறப்பாக விளக்கியது நன்று.
  இனிய இணைய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். (நேற்றே, இல்லை, இல்லை. நேற்று முந்தினமே சொன்னதாக கணக்கில் வைத்துக் கொள்ளவும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு (நேற்று முன் தினத் தேதியில்!) நன்றிகள் பத்து!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் ராமமூர்த்தி!

   நீக்கு