வெள்ளி, மார்ச் 29, 2013

புனித வெள்ளிஇன்று புனித வெள்ளி.  பஸ்சல் மாதப் பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் ஞாயிறு ஈஸ்டர் (உயிர்த்தெழுந்த ஞாயிறு) தினமாகவும் அதற்கு முந்தைய வெள்ளி புனித வெள்ளியாகவும் கொண்டாடப்படும்.

பொதுவாக, பங்குனி உத்திரத்தை ஒட்டிய பௌர்ணமிதான் யூதர்களின் பஸ்சல் பௌர்ணமி (சில நேரங்களில் அரிதாக சித்திரா பௌர்ணமியை ஒட்டியும் வர வாய்ப்புள்ளது).

இதைப் பற்றி ஏற்கனவே புனித வெள்ளியும் உயிர்த்தெழுந்த ஞாயிறும் என்ற முந்தைய பதிவில் எழுதியுள்ளேன். அப்பதிவில் க்ரிகேரியன் நாட்காட்டியைப் பற்றி எழுதியிருந்தேன்.

க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் ஜீலியன் நாட்காட்டிக்கும் இருந்த முக்கிய வேறுபாடே லீப் நாள் சம்பந்தப்பட்டதே. இதைப்பற்றி புத்தாண்டு அன்று எழுதியிருந்தேன்.

அதைப் பற்றி மேலும் சில தகவல்கள்...

ஈக்வினாக்ஸ் என்றால் சூரியன் பூமியின் ஒரு அட்ச ரேகையில் இருந்து மீண்டும் அதே அட்ச ரேகைக்கு வர எடுக்கும் நேரத்தைக் குறிக்கும். உலகின் பருவ மாற்றங்கள் இதைக் கொண்டே தீர்மாணிக்க முடியும்.  நாட்காட்டிகள் குறிக்கப்பட்ட முக்கிய காரணமே பருவ நிலையைக் கணித்து அதை விவசாயத்திற்கு உபயோகித்துக் கொள்ள எண்ணியதே. ஒரு ஈக்வினாக்ஸ் ஆண்டு 365.24237 நாட்களைக் கொண்டது. சராசரியாக, ஒரு ஜூலியன் வருடம் என்பது 365.25 நாட்களைக் கொண்டது. அதே நேரம், ஒரு சராசரி க்ரிகேரியன் ஆண்டு 365.2425 நாட்களைக் கொண்டது. அதாவது, ஜூலியன் ஆண்டிற்கும் பருவ ஆண்டிற்கும் 128 ஆண்டுகளில் ஒருநாள் வித்யாசம் உண்டாகும். ஆனால், க்ரிகேரியன் ஆண்டிற்கும் பருவ ஆண்டிற்கும் இந்த வித்யாசம் 7700 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஏற்படும்.

400 க்ரிகேரியன் ஆண்டுகளைக் கொண்ட ஒரு சுற்று 146097 நாட்களை / 20871 வாரங்களைக் கொண்டிருக்கும். அதாவது, க்ரிகேரியன் முறையில் 1613 ஆம் ஆண்டின் தேதிகளின் கிழமைகளும் நடப்பு 2013 ஆம் ஆண்டின் கிழமைகளும் ஒரே மாதிரி இருக்கும். 2413 ஆண்டின் தேதிகளின் கிழமைகளும் இந்த வருடக் கிழமைகள் போலவே இருக்கும்.

1576-ஆம் ஆண்டு ஆலோசியஸ் லிலுஸ் என்பவரின் வழிமுறையை ஆதாரமாகக் கொண்டு கிரிஸ்டோபர் க்லாவியாஸ் என்பவர் பஸ்சல் பௌர்ணமியை குறிக்கும் ஒரு அட்டவணையைத் தாயாரித்தார். க்ரிகேரியன் தன் நாட்காட்டிக்கு இதையே ஆதாரமாகக் காட்டினார். அதனால் தான் ஈஸ்டர் அட்டவணையே க்லாவியஸ் அட்டவணை என்று அழைக்கப்படுகிறது.

க்லாவியஸ் அட்டவணைப்படி, மார்ச் 21 முதல் ஏப்ரல் 18 வரை ’பஸ்சல்’ மாதமாக வரையறுக்கப்பட்டு அதில் வரும் முழுநிலவு நாள் ‘பஸ்சல் பௌர்ணமி’ ஆகக் கூறப்பட்டுள்ளது. எனவே, ஈஸ்டர் பண்டிகை மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு இடையில் அமையும்.

யூதர்கள் பயன்படுத்துவது நம் ஆந்திர-கர்நாடக மாநிலங்களைப் போல ஒரு சந்திர-சூர்ய நாட்காட்டி, அதாவது சந்திரனின் சுற்றுகளின் படி மாதங்களும் பின்  சூரியனின் சுற்றோடு வருடங்களைச் சமன்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது. அமாவாசைக்கு அடுத்த தினத்தை ஆரம்பமாகக் கொண்டு மாதங்கள் ஆரம்பமாகும்.  பின் 19 வருடச் சுற்றுகளைக் கொண்டு அதில் 3,6,8,11,14,17, 19 ஆகிய வருடங்கள் லீப் வருடங்களாகக் கொண்டு அதில் ஒரு மாதம் அதிகரிக்கப்படும். அதாவது ஒவ்வொரு 19 வருடச் சுற்றிலும் 235 சந்திர மாதங்கள் இருக்கும். ஒரு சாதாரண வருடத்தில் 353-355 நாட்களும் ஒரு லீப் வருடத்தில் 383-385 நாட்களும் இருக்கும்.

யூதர்களின் மாதங்களின் பெயர்கள்…

1.           திஸ்ரி              -        30 நாட்கள்
2.           ஹேஷ்வன்     -        29/30 நாட்கள்
3.           கிஸ்லெவ்       -        29/30 நாட்கள்
4.           தெவெட்                   -        29 நாட்கள்
5.           ஷெவெட்        -        30 நாட்கள்
6.           அதர்                -        29 நாட்கள்
[லீப் வருடங்களில் இது அதர்-1 (30 நாட்கள்), அதர்-2 (29 நாட்கள்) என்று இரண்டு மாதங்களாகக் கணிக்கப்படும்]
7.           நிஸான்           -        30 நாட்கள்
[இந்த மாதப் பௌர்ணமி தான் பஸ்சல் பௌர்ணமி]
8.           இயர்               -        29 நாட்கள்
9.           சிவான்            -        30 நாட்கள்
10.       தும்முஸ்          -        29 நாட்கள்
11.       அவ்                 -        30 நாட்கள்
12.       எலுல்              -        29 நாட்கள்

இந்த  க்ரிகேரியன் நாட்காட்டிச் சீரமைப்பின் 400-ஆவது  ஆண்டு நிறைவையொட்டி 1983-ஆம் ஆண்டு வாட்டிகன் ஒரு மாநாட்டையும் நடத்தியுள்ளது.

அனைத்து கிருத்துவ நண்பர்களுக்கும் புனித வெள்ளி, உயிர்த்தெழுந்த தின நல்வாழ்த்துகள்...

புதன், மார்ச் 27, 2013

வண்ணக் கொண்டாட்டம்வட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பங்குனி மாதப் பூர்த்தியில் பௌர்ணமியன்றுக் கொண்டாடப் படும் பண்டிகை ஹோலி.

ஹோலி என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது வண்ண வண்ண பொடிகளையும் சாயங்களையும் ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழும் காட்சிதான் நம் அனைவரின் மனக்கண் முன் தோன்றும். திரைப்படங்களில் ஒரு ஆண் (நாயகன்!) ஒரு கூட்டத்துடன் (நண்பர்கள்!) ஒரு பெண்ணை (நாயகி!) அல்லது பெண் கூட்டத்தை (நாயகியின் தோழிகள்) வண்ணம் பூசி ஆடுவதைத் தான் ஹோலி பண்டிகையாகக் காட்சி படுத்தி வருகின்றன. சில இடங்களில் நாயகன் ‘பாங்க்’ என்ற போதை வஸ்துவை அருந்தி ஆடுவது போல் காட்டப்படுவதும் உண்டு.  ஊடகங்களிலும் பெரும்பாலும் இது போன்றக் காட்சிகளே திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தப் பட்டு வரும்.

ஆனால், இந்த வண்ணங்களைப் பூசி மகிழ்ந்து கொண்டாடப் படுவதைத் தாண்டியும் இப்பண்டிகை, சில இடங்களில் ’வசந்தோஸ்தவம்’ என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படும். இது வசந்த பஞ்சமி தினத்தில் துவங்கி ஹோலிவரைக் கொண்டாடப்படும். சில இடங்களில் வேறு வகையிலும் ‘ரங்பஞ்சமி’ (வண்ண ஐந்து நாள்) என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. இது ஹோலிக்கு முதல் தினத்திலுருந்து துவங்கி பஞ்சமி வரைக் கொண்டாடப்படும்

இந்த வசந்தோஸ்தவ/ரங்பஞ்சமி கொண்டாட்டங்கள் கீழ் கண்ட இடங்களில் மிகவும் பிரபலம்...

1.            மதுரா
மதுரா பகவான் கண்ணன் கம்சனின் சிறைச்சாலையில் அவதரித்த இடம். இங்கு இந்த ரங்பஞ்சமி 40 நாட்கள் தொடர்ந்து (வசந்த பஞ்சமியிலிருந்து துவங்கும்) நடைபெறும். நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நடனக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு, அந்த நடனக் கலைஞர்கள், கிருஷ்ணரும் கோபியரும் நடத்திய  ராசலீலைகளை அடிப்படையாகக் கொண்ட நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துவர். மதுராவின் க்ருஷ்ணர் கோவிலை மையமாகக் கொண்டு இந்த உற்சவங்கள் நடைபெறும்.

2.                  வ்ருந்தாவன் (ப்ருந்தாவனம்)
வ்ருந்தாவனத்தில் பங்கே-பிஹாரி ஆலயத்தில் இந்த உற்சவங்கள் கொண்டாடப்படும். வ்ருந்தாவனும் மதுராவும் இரட்டை நகரங்கள். எனவே, மதுராவின் கொண்டாட்டங்களில் இடம் பெறும் கலைஞர்கள் இங்கேயும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விப்பர்.

3.                  பர்ஸானா
உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த ஊர் ராதை பிறந்த ஊர். ராதையைக் காண வந்த கிருஷ்ணர் அவள் மீது விளையாட்டாக வண்ணக்கலவைச் சேர்த்த நீரை விளையாட்டாக வீசி/ஊற்றி மகிழ்ந்து விளையாட தன் கையில் இருந்த மத்தால் ராதை கிருஷ்ணரை அடித்ததாகத் தொன்மக் கதைக் கூறுகிறார்கள். இதன் காரணமாக இன்றும் நந்தகிராமத்திலிருந்து ஆண்கள் இந்த ஹோலி தினத்தன்று இந்த கிராமத்திற்கு வர இங்கிருக்கும் பெண்கள் அவ்வாறு இங்கு வரும் ஆண்களை சிறுகுச்சியால் அடித்து விளையாடுவது வழக்கம். இதை லாட்டி-கி-ஹோலி என்று அழைப்பர்.

4.                  வ்ரஜ கிராமம்
வ்ரஜ் கிராமத்தில் கோவர்த்தன மலையை ஒட்டிய குலால் குந்த் என்ற ஏரிக்கரைப் பகுதியில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண லீலை நடனங்கள் இப்பகுதியில் மிகவும் பிரபலம்.

5.                  புர்ணிலா
மேற்கு வங்கத்தின் புர்ணிலா மாவட்டத்திலும் இந்த ரங்பஞ்சமி நாற்பது நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இச்சமயத்தில் வங்கத்தின் கிராமியக் கலைகளான சாஹூ, தர்பாரி, ஜுமூர், நட்வா போன்ற நடங்கள் இச்சமயத்தில் ஆடப்பட்டு மக்களை மகிழ்விக்கின்றன.

6.                  சாந்தி நிகேதனம்
சாந்திநிகேதனைப் பொறுத்தவரை இந்த ரங்பஞ்சமி விழா இதன் நிறுவனர் கவிஞர் ரவீந்த்ரநாத் தாகூர் காலத்தில் அவராலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று வரைத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வசந்தகாலக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக விஷ்வபாரதி பல்கலைக் கழக மாணாக்கர்களால் நடத்தப்படும் இக்கொண்டாட்டங்கள் இந்த ஹோலியன்று நிறைவு பெறும். பல்வண்ண ஆடைகளைக் கொண்டு இதைக் கண்டு களிக்கவரும் ஆர்வலர்களை பரவசப்படுத்தும்.
 
வெறும் வண்ணம் பூசி மகிழ்வதைத் தாண்டிக் கலைஞர்களை ஊக்குவித்துக் கலையை வளர்க்கும் இவற்றையும் ஊடகங்கள் காட்சிப் படுத்தினால் நல்லது.

திங்கள், மார்ச் 25, 2013

சஞ்சய் தத் – பொது மன்னிப்பு?


முன்னாபாய்-2 (லகே ரஹோ முன்னாபாய்) படத்தில் மற்றவர்கள் தவறு செய்யும் பொழுது அவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ செய்யாமல் அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து ’காந்திகிரி’ செய்து மன்னிப்பார்.

1993-ஆம் ஆண்டு முறையான அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு வழக்கு நடத்தப்பட்டு வந்தது. சென்ற வாரம் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சஞ்சய்தத்-இற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பு வழங்கியது.  ஏற்கனவே 1½ ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதால் மீதமுள்ள 3½ ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இந்நிலையில் சில திரை நட்சத்திரங்களும், அவர் ஆதரவாளர்களும்  ’முன்னாபாய்’  வேடமிட்டு நடித்த சஞ்சய் தத்துக்குப் பொது மன்னிப்புக் கொடுத்து தண்டனையிலிருந்து விலக்கு வழங்கி விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு நடிகர்கள் (அஜய்தேவ்கன், சத்ருகன் சின்ஹா, ரஜினிகாந்த் போன்றவர்கள்), காங்கிரஸ் கட்சியின் திக் விஜய்சிங், ஸமாஜ்வாதி கட்சியின் ஜெயாபச்சன், இந்திய ப்ரெஸ் கவுன்சிலின் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஆகியோரும் இதில் அடக்கம்.

சஞ்சய் தத்திற்கு ஆதரவாக அவர்கள் தரும் காரணங்கள் இவை…

·        சம்பவம் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் மனரீதியாக ஏற்கனவே தண்டனைப் பெற்றுவிட்டார்;
·        அவர் தீவிரவாதச் செயலுக்காகக் கைது செய்யப்படாதமை;
·        மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லாதமை;
·        அவர் தவறு செய்தவர் தான்; ஆனால் அதை ஏற்று மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர் நல்ல  குடும்பத்தைச் சேர்ந்தவர்;
·        சிறு வயதில் விளைவுகளை எண்ணாமல் செய்த சிறு தவறு.
·        1993-இன் நிலைமையில் அவர் தன் குடும்பத்தினரைக் காத்துக் கொள்ளவே ஆயுதம் வைத்திருந்தார். (அச்சமயத்தில் தீவிரவாதிகளும், கிரிமினல்களும் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களை அச்சுறுத்திப் பணம் பறித்தனர்; டி-சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் மரணம் இதன் காரணமாகவே நிகழ்ந்தது. அவருக்கு அப்பொழுது இரண்டு சிறு குழந்தைகள் இருந்தன).

இப்பொழுது இவ்வழக்கின் உண்மைகளைப் (இவை அரசு தரப்பில் குற்றமாகச் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை சஞ்சய் தத்தாலும் ஏற்கப்பட்டவை) பார்ப்போம்…

·       மூன்று அனுமதிக்கப்பட்ட  ஆயுதங்கள் வைத்திருந்தும் அனீஸ் இப்ராஹிமைத் (இவர் தாவூத் இப்ராஹிமின் சகோதரர்) தொடர்பு கொண்டு ஆயுதம் பெற்றது. இதில் ஏகே 56 ரக துப்பாக்கிகளும், கைக்கண்ணி வெடிகளும் அடக்கம்;
·       தன் பாலி ஹில் வீட்டில் பாபா மூஸா சௌஹான், சமீர் ஹிங்கோரா ஆகியோரால் மன்சூர் அஹமத் கார் மூலம் ஆயுதம் கொண்டு வரப்பட்டு அதை வைத்திருந்தார். அவர் வீட்டிற்கு ஆயுதம் வரும் முன்னர் அந்த ஆயுதம் ஜைபுன் நிஸா காஜி என்ற மூதாட்டியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. (காஜி உட்பட இந்த நான்கு பேரும் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்; ஆனால் சஞ்சயோ ஆயுதச் சட்டத்தின் படிக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைப் பெற்றுள்ளார்)

இதிலிருந்து நமக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன…

·        சஞ்சயின் குற்றத்தில் தொடர்புள்ள நால்வர் தடா குற்றத்தில் கைது செய்யப்பட்ட போது சஞ்சய் மட்டும் தடாவில் கைது செய்யப்படாது ஏன்? மற்ற மூவரை விட்டுவிடலாம் ஏனென்றால் அவர்கல் ஆயுதம் கடத்தியவர்கள்; ஆனால், அந்த பெண்மணி காஜி கிட்டத்தட்ட சஞ்சய் செய்த அதே குற்றம் (சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது) தான் செய்துள்ளார்; ஆனால், அவர் மீது மட்டும் தடா பாய்ந்துள்ளது. இதற்குக் காரணம் அவர் இஸ்லாமியர் என்பதா அல்லது சஞ்சய் தத் போல திரை நட்சத்திரமாகவும், திரைக் கதாநாயக-நாயகி மற்றும் அரசியல்வாதியின் வாரிசு அல்ல என்பதுமா?
·        20 வருடங்கள் ஆகிவிட்டது என்பதற்காக மன்னிப்பு என்றால் இதைப் போன்று 20 வருடங்கள் ஆகிவிட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளையும் திரும்பப் பெற்று விடலாமா?
·        தற்காப்பிற்காக என்றால் கைக்கண்ணிவெடி வைத்திருந்த காரணம் என்ன?
·        தற்காப்பிற்காக ஒரு திரையுலக, அரசியல் வாதியின் வாரிசுக்கே போலிஸ் மீது நம்பிக்கை இல்லாமல் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருக்க வேண்டியிருக்கும் என்றால் சாதாரணமானவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக என்னவெல்லாம் செய்யலாம்.

முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் மகன் / தற்போதைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் என்பதால் காங்கிரஸ் அரசியல்வாதிகளும், தற்போது சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தந்தவர் என்பதால் அக்கட்சி உறுப்பினர்களும், திரையுலகைச் சேர்ந்தவர் என்பதால் அத்துறையைச் சேர்ந்தவர்களும் சஞ்சய் தத்திற்குப் பொது மன்னிப்பு வழங்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இதே தவறுகளை சாதாரணமானவர்கள் செய்திருந்தால் அவர்களை மன்னிக்கவோ/மன்னிக்கச் சொல்லி எடுத்துக் கூறவோ அல்லது செய்ததாகச் சித்தரிக்கப்பட்டவர்களை விடுவிக்கவோ யாரும் இருப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.

வெள்ளி, மார்ச் 22, 2013

உலக நீர் நாள்இன்று உலக நீர் நாள்…

1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் 22 ஆம் நாள் உலக நீர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

’நீரின்றி அமையாது உலகு’ என்பது திருவள்ளுவர் வாக்கு.

உலகின் 79 சதவிகிதப் பரப்பு நீரால் அமைந்தது தான் என்றாலும் அதில் ஒரு சதவிகிதம் தான் குடிநீராகப் பயன்படுத்த முடியும். நாளும் வளர்ந்து வரும் மக்கள் தொகையில் இன்று நன்னீர் கிடைப்பது மிகவும் அரிதாகி வருகிறது.

உலகின் தண்ணீர் தட்டுப்பாட்டிற்குக் காரணமாகக் கீழ்க் கண்டவைக் குறிப்பிடப்படுகின்றன…

மக்கள் தொகை பெருக்கம்;
மரங்கள்/காடுகளை அழிப்பு;
மழை நீரை வீணாகுதல்;
சுற்றுச்சூழல் மாசுபாடு;
அதிதீவிரத் தொழில் மயம்

இதைக் கருத்தில் கொண்டு 2010 ஆம் ஆண்டு ஐநா-வில் கொண்டுவரப்பட்டத் தீர்மானத்தின் படி சுத்தமானத் தண்ணீரும் சுகாதாரமானக் கழிவு வடிகாலும் மனித உரிமையின் ஒரு அங்கமாக அங்கீரிக்கப்பட வேண்டும் என்பது அதை அவர்களுக்கு அளிப்பது அரசின் கடமை என்றும் ஏற்கப்பட்டது. இந்தியாவும் இந்தத் தீர்மானத்தை ஏற்று கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்று.
ஆனால், 2012 ஆம் ஆண்டு மத்தில், இந்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கையை அறிவித்தது. இதில் இரண்டு அம்சங்கல் உள்ளன, அவை...

முதலாவதாக, அனைத்து நீராதாரங்களும் பொதுச் சொத்தாகக் கருதப்படும். அடிப்படை மனிதத் தேவைகளுக்கும், ஆறுகள் வற்றாமல் தக்கவைக்கவும் போதுமான நீர் அளவு நிர்ணயிக்கப்பட்டு, மீதி தண்ணீர் அரசின் கட்டுப்பாட்டில் வரும். இந்த மீதமுள்ள நீரை அரசு, விலைக்கு விற்று பொருள் ஈட்டக்கூடிய ஒரு சரக்காகக் கருதப்படும்.
அடுத்து, மக்களுக்கு குடி நீர், பாசன நீர் விநியோகிக்கும் வேலையை அரசு தன் பொறுப்பிலிருந்து விடுவித்து அதை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது.

சென்ற தசாப்தங்களில் கேரளாவில் கோக்கோகோலா நிறுவனத்திற்கு பொது மக்களுக்கான நீராதாரத்தில் உரிமையளிக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்து நடந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அதைக் கண்டித்தது. ஆனால், இந்தக் கொள்கையின் படி சட்டரீதியாக அந்த உரிமையை அரசு தனியாருக்கு தாரைவார்க்க முடியும்.

இதன் முதல் படியாக சென்ற ஆண்டு தில்லி நீர் குழு (Delhi Jal Board) அரசு-தனியார் பங்களிப்பில் (Public Private Partnership) 24 மணிநேரமும் நீர் விநியோகம் என்ற திட்டத்தை அறிவித்தது. இதன்படி மின் விநியோகத்தைப் போல தனியாரை நீர் விநியோகத்தில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு மெல்ல மற்ற மாநிலங்களுக்கும் இத்திட்டத்தை செயல் படுத்த முனையலாம்.
இத்திட்டதிற்கு எதிரான போராட்டங்களையும் கருத்தரங்கினையும் ’நீர் ஜனநாயக மக்கள் முன்னணி’ என்ற அமைப்பு நடத்த உள்ளது. போல்வியாவைச் சேர்ந்த பப்பல்லோ சோலன் இந்த கருத்தரங்கில் கலந்து உரையாற்ற உள்ளார். 2010-இல் ஐநா தண்ணீரை மக்களின் அடிப்படை உரிமையாக அறிவித்ததில் முக்கிய பங்காற்றியவர், போல்வியாவின் ஐநா தூதரான இந்த சோலன். போல்வியாவில் தண்ணீர் இவ்வாறு தனியார் மயமாக ஆக்க முற்பட்டபோது அங்கு போராட்டம் நடத்திச் சட்டத் திருத்தம் நடத்த போரடியும் உள்ளார். தன் அனுபவத்தை இந்த கருத்தரங்கில் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்ல மெல்ல, இனி நாம் குடிக்கும் நீருக்கும்  பன்னாட்டு நிறுவனம் நிலை நிர்ணயிக்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது!