அஸாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஸாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 06, 2012

மதக்கலவரம் Vs. இனக்கலவரம்

அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

60 உயிர்களைக் காவு கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து போக்கிடம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.

அஸாமின் கொக்ரஜார் பகுதியில், அனைத்து அஸாம் சிறுபான்மையினர் மாணவர் யூனியன் தலைவரும் அனைத்து போடோ சிறுபான்மையினர் மாணவர் யூனியன் தலைவரும் போடோ தீவிரவாத அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட பதட்டம் துவங்கியது. அதைப் பற்றி உளவுத் துறை மத்திய அரசுக்கு ஜூலை 7 ஆம் தேதியே தகவல் அனுப்பியது. ஆனால், மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி இதில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்கத் தேவையான நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மெல்ல மெல்ல பதட்டம் அதிகரித்தது. மெல்ல மெல்ல அதிகரித்தப் பதட்டம் 15-20 நாட்களில் மேலும் மேலும் வளர்ந்து மாவட்டம் முழுவதும் பரவி கலவரமாக உருமாறியது. போடோக்கள் அதிகமான கோக்ரஜார் மாவட்டத்தில் முஸ்லீம்கள் தாக்கப்பட அடுத்த முஸ்லீம்கள் அதிகம் வாழும் மாவட்டமான சிரங்க்-இல் போடோக்கள் தாக்கப்பட கலவரம் துருபி, பக்ஸா, உதல்கிரி, பர்பேடா, கோலாபாரா ஆகிய இடங்களுக்குப் பரவியது.  போடோலாந்து பகுதியில் உள்ள 400-க்கும் அதிகமான கிராமங்கள் கலவரங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

போடோக்களைப் பொறுத்தவரை, பங்களாதேஷ்-இல் இருந்து வரும் அகதிகள் மாநிலம் முழுதும் பரவி அவர்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வளைப்பதாகவும் அதற்கு அஸாமின் முஸ்லீம்கள் உதவுவகிறார்கள் என்பதுதான். முஸ்லீம்களைப் பொறுத்தவரை போடோக்கள் இந்திய முஸ்லீம்களான தம் நிலம் மற்றும் உடமைகளை அபகரிக்கத்தான் போடோக்கள் இந்த கலவரங்களை நடத்துவதாகக் கருதுகின்றனர்.

அஸாம் மாநில காங்கிரஸும், மத்திய அரசும் தவறிழைக்கும்  போடோக்களையும் சரி, முஸ்லீம்களையும் சரி, தண்டிக்கத் தயங்குகின்றன. காரணம், யாரைத் தண்டித்தாலும் அவர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்களின்  உயிர், லட்சக்கணக்கானவர்கள் வீடு உடமைகள் இழந்து தவித்த பின்னர் முதல்வர் மத்திய படைகளை அழைத்தார். பிரதமர் மன்மோகன் சிங்-ஐப் பொறுத்தவரை அவர் அஸாமின் ராஜ்ய சபை உறுப்பினர். அவர் ஜூலை 27-ஆம் தேதி கலவரம் நடந்த பகுதிகளைச் சென்று பார்த்தார். 300 கோடியை நிவாரணமாக அறிவித்தார். ஆனால், நிலைமை இன்னமும் அடங்கிய்தாகத் தெரியவில்லை.

இத்தனை நடந்த பின்னும் காங்கிரஸும், பாஜக-வும் (அஸாம் கனபரிஷத் ‘தேசிய ஜனநாயக கூட்டணி’யில் அங்கம் வகிக்கிறது) இதை எப்படி தீர்ப்பது என்பதை கவனிக்காமல் இது ‘மதக் கலவரமா’ இல்லை ‘இனக் கலவரமா’ என்று ஆராய்ச்சி செய்து வருகின்றன.

பாஜக-வைப் பொறுத்தவரை இதை ’மதக்கலவரம்’ என்று கூறுவதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் மதக்கலவரங்கள் நிகழ்கின்றன; அதனால், காங்கிரஸ் குஜராத்-இல் மோடியைக் குற்றம் சாட்டினால் இவர்கள் இதைக் காட்டலாம். மேலும், காங்கிரஸ் எப்பொழுதும் மதக் கலவரத்தை அடக்குவதில் சுணக்கம் காட்டும் என்று எதிர் தாக்குதல் நட்த்தலாம் என்று கணக்குப் போடுகிறது. காங்கிரஸோ இதை இனக் கலவரம் என்று காட்டிவிட்டால் பாஜக-வின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கலாம். மேலும், போடோ தீவிரவாதிகளைக் குற்றம் சாட்டித் தங்கள் ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள்.

பிரதமர் வந்து என்ன? நிவாரணங்களை அறிவித்தும் என்ன? மக்கள் இன்னமும் முகாம்களில் தான் வசிக்கின்றனர். அங்கும் நிலைமை ஒன்றும் சரியில்லை. அகதிகள் முகாம் நிரம்பி வழிந்து கழிவுகள் வெளியேற்ற வழியில்லாமல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். போதாக் குறைக்கு மழை, வெள்ளம் வேறு.  வெளியிலும் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இன்னும் பல இடங்களில் கலவரங்கள் அடங்கியதாகத் தெரியவில்லை. அவர்கள் எப்படி போனால் என்ன?

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இது  ‘மதக் கலவரமா’ இல்லை ‘இனக் கலவரமா’ என்று கண்டுபிடிப்பது தான் முக்கியம். நம் பட்டிமன்றத் தலைவர்கள் யாரையாவது அனுப்பி தான் இதற்குத் தீர்வுகாண வேண்டும்.