வியாழன், ஆகஸ்ட் 01, 2013

தெலுங்கு ஆனா(ல்)?ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தெலுங்கானா பகுதிகளைப் பிரித்துத் தனி மாநிலமாக அறிவிக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தின் 10 மாவட்டங்களை (அடிலாபாத், நிஜாமாபாத், கரீம் நகர், மேடக், வராங்கல், ரங்காரெட்டி, மஹபூப் நகர், நால்கொந்தா, கம்மம், ஹைதராபாத்) தனியாகப் பிரித்து ’தெலுங்கானா’ மாநிலமாக அறிவிக்கப்பட உள்ளது. மீதமுள்ள 13 ஆந்திரபிரதேசத்தின் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய ராயலசீமா பகுதிகளும், கடலோர ஆந்திரமும் ’சீமாந்திரா’ என்ற பெயரில் வழங்கப்படும்.

சென்ற சென்சஸ் நிலவரப்படி, தெலுங்கானா பகுதியின் மக்கள் தொகை 3 1/2 கோடிகள். பிற ஆந்திரப் பகுதிகளின் மக்கள் தொகை சுமார் 5 கோடிகள்.

1948 ஆம் ஆண்டு நிஜாம் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட்தும் ‘தெலுங்கானா’ பகுதிகள் ஹைதாராபாத் மாகாணமாகவே இயங்கி வந்தது. 1950-களின் மொழிவாரி மாநிலக் கோரிக்கையைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு ஆந்திர, ராயலசீமா பகுதிகள் சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து ஹைதராபாத்-உடன் இணைக்கப்பட்டு ஆந்திரபிரதேசமாக உருமாறியது.

1969-இல் தான் முதல் முதலாக தெலுங்கானா பகுதிகளை தனியாக பிரிக்க்க் கோரிக்கை எழுப்பப் பட்டது. அதை எழுப்பியவர்கள் தெலுங்கானா பிரஜா சமிதி அமைப்பை மதன் மோகன் என்பவர் உருவாக்கினார். அதில் முன்னாள் தமிழக ஆளுனர் சென்னாரெட்டி முக்கிய உறுப்பினராக இருந்தார். 1969-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இவர்கள் 1971-ஆம் ஆண்டு தேர்தலில் 14 மக்களவை உறுப்பினர்களையும் பெற்றனர். உடனே இந்திராகாந்தி இந்த அமைப்புடன் ஒரு ஆறு அம்ச திட்டத்துடன் உடன்படிக்கைச் செய்து கொண்டு 1972-ஆம் ஆண்டில் தெ.பி.ச.-யை காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட வைத்தார். சென்னாரெட்டியை 1974-ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தின் ஆளுநராக நியமித்தார். இவ்வாறு, தெலுங்கானா போராட்டத்தை இந்திரா நீர்த்துப் போக வைத்தாலும் அது நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு 2001-ஆம் ஆண்டு சந்த்ரசேகர ராவ் ’தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை உறுவாக்கி மீண்டும் தெலுங்கானா பிரச்சனையை முன் கொண்டுவந்தார்.

இதற்குக் காரணமாக இவர்கள் கூறுபவை…

ஆந்திரபிரதேசத்தின் கனிமவளம் நிறைந்த பகுதி தெலுங்கானா (இந்திய கனிம வளங்களின் 20% தெலுங்கானா பகுதிகளிலேயே உள்ளது). அதே நேரம் ஆந்திரத்தின் 11 பின் தங்கிய மாவட்டங்களில் 7 தெலுங்கானாவில் உள்ளன (மீதமுள்ளவற்றில் 3 ஆந்திரவிலும் 1 ராயல்சீமாவிலும் உள்ளன)

கோதாவரி, க்ருஷ்ணா ஆகிய நதிகளின் நீர் பிடிப்பு பகுதிகளின் பெரும்பான்மையானவை தெலுங்கானா பகுதியிலேயே உள்ளது. ஆனால் ஆந்திராவின் வறண்ட பகுதிகளில் தெலுங்கானாவைச் சேர்ந்தவையே அதிகம். [இதற்குக் காரணம் இது பெரும்பாலும் மலைப்பகுதியை உள்ளடக்கியதாக இருப்பதனாலும் தான் என்றாலும் அரசியலில் உண்மை நிலையை விட இது போன்ற புள்ளிவிவரங்கள் தான் வைக்கப்படும்].

இன்றைய நிலையில் வருமான வரி, கலால் தீர்வை ஆகியவற்றில் தெலுங்கானாவின் பங்கு 60%க்கும் அதிகம். ஆனால், இவை ஆந்திராவின் மற்ற பகுதிகளுக்கே அதிகம் செலவிடப்படுகின்றன என்பதும் தெலுங்கானா ஆதரவாளர்களின் வாதம்.

இதற்கெல்லாம் ஆதாரமாக அவர்கள் கருதுவது 1956-2001க்கு இடைப்பட்டக் காலத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாக இருந்தது மொத்தமாக ஐந்து வருடங்கள் கூட இல்லை. அதிலும் முதல்வராக இருந்த காலத்தில் ஊடகங்களால் அதிக அளவு விமர்சிக்கப்பட்டவர் அஞ்சையா. இவர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர். அதற்கு அப்போதைய வறட்சி நிலைமையை அவர் கையாண்ட விதம் என்றாலும் தெலுங்கானா ஆதரவாளர்களைப் பொறுத்தவரை ஊடகங்கள் பெரும்பாலும் பிற ஆந்திர பகுதிகளைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த்து என்பது தான்.

 தனி தெலுங்கானா கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் போராட்டமாகவும் வன்முறை கலவரமாகவும் திசை திரும்பியதுமே தனி மாநிலமாக பிரிப்பது தவிர்க்க முடியாதது என்பது புரிந்து போனது.

தெலுங்கானாவைத் தனியாக பிரிப்பதில் அனைத்துக் கட்சிகளுமே அரசியல் ஆதாயம் தான் தேடுகின்றன.

காங்கிரஸைப் பொறுத்தவரை பிரிவினால் தெலுங்கானா பகுதிகளில் தெ.ரா.ச. ஆதரவுடன் 17 உறுப்பினர்களைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறது. அதனால் தான் திக்விஜய் சிங் தெலுங்கானா உருப்பெற்றால் தெ.ரா.ச. தன் கட்சியைக் கலைத்து மீண்டும் காங்கிரஸில் இணைவதாகக் கூறியதை மீண்டும் மீண்டும் ஊடகங்களின் வாயிலாகக் கூறுகிறார். பிற ஆந்திர பகுதிகளைப் பொறுத்தவரை ஜகன்ரெட்டி காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளைக் கைப்பற்றினாலும் அவருடைய வாக்கு வங்கி (சிறுபான்மையினரை – ராயல் சீமாவில் இஸ்லாமியர்களையும் கடலோர ஆந்திரத்தில் கிருத்துவர்களையும் - அடிப்படையாகக் கொண்டது) என்பதால் பாஜக-உடன் கூட்டணி சேரமுடியாது; தெலுங்கு தேசம் கட்சியுடனும் கூட்டு சேர முடியாது (கருணாநிதி-ஜெயலலிதா போல் ஆந்திராவைப் பொறுத்தவரை சந்த்ரபாபு நாயுடுவும் ராஜசேகர ரெட்டியும்) என்பதால் இழுபறி சமயத்தில் அவரது கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாகவோ அல்லது குறைந்த பட்சம் தேசிய மு.முன்னணியை ஆதரிக்காமலோ இருப்பார்கள் என்பதுதான்.

பாஜாக-வைப் பொறுத்தவரை மேற்போக்காக தாங்கள் சிறு மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதை ஆதரிப்பவர்கள் என்று கூறினாலும்,  தெலுங்கானாவில் என்றுமே MIM  போன்ற இஸ்லாமிய கட்சிகள் தெலுங்கானாவில் வலுபெற்று இருப்பதால் அவற்றை எதிர்ப்தை வைத்தே சிறுபான்மையினருக்கு எதிரான வாக்குகளை தன் பக்கம் திருப்ப முடியும் என்று நம்புவது போல் தான் தெரிகிறது.

கம்யூனிஸ்ட்களில் இந்திய கம்யூனிஸ்ட் இந்த பிரிவினையை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு மே.வங்கத்தில் வாக்கு வங்கி இல்லை. இங்கு இந்தப் பிரிவினையால் மத்திய அரசில் இல்லாவிட்டாலும் சட்டமன்றத்தில் கனிசமான எண்ணிக்கையைப் பெற முடியும். மார்க்ஸிஸ்டைப் பொறுத்தவரை அவர்கள் இதனை எதிர்த்துதான் வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மொழிவாரி மாநிலப் பிரிவைத் தவிர மற்றவற்றை எதிர்ப்பதாகக் கூறினாலும் இது மேற்கு வங்கத்தின் கூர்காலாந்து கோரிக்கைக்கு வலுசேர்க்கும் என்பது தான் காரணம்.

தெலுங்கு தேசம் கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும்  சீமாந்திர பகுதிகளில் அவர்களின் செல்வாக்கு அதிகம். அதனால் அங்கு அடுத்தமுறை வாய்ப்பு கிட்டும் என்று நினைக்கிறார்கள். தெலுங்கானாவைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்காலம் சற்று கேள்விக் குறிதான் என்றாலும் பாஜக-உடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை குறிவைக்கத் திட்டமிடும் என்று தோன்றுகிறது.

தெலுங்கானா ராஷ்டிரய சமிதியைப் பொறுத்தவரை தெலுங்கானா மாவட்டத்தில் அவர்களின் செல்வாக்கு நிலை பெற்றுவிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் நினைப்பது போல் அவர்கள் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸுடன் இணைவார்கள் என்றுத் தோன்றவில்லை. மேலும், அவர்களுக்கு வலு சேர்க்க காங்கிரஸ் ஹைதராபாத்-ஐ 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகராக அறிவித்துள்ளது. இதை காரணமாக வைத்தே தனியாகத் தான் இயங்குவார்கள் என்றுத் தோன்றுகிறது.

கடைசியாக மக்கள்…
தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் தங்களின் வறுமை நிலைக்கு இது தீர்வு என்று நினைக்கிறார்கள். [10 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பின் தங்கியவை என்றாலும் இதற்குக் காரணம் வளர்ச்சிப்பணிகள் ஹைதராபாத், வராங்கல் பகுதிகளில் மட்டுமே இருப்பதும் மற்ற மாநிலங்களைப் போலவே வருமானம் பரவலாக அனைவரையும் சேராமல் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் சேர்வது தான் காரணம் என்றுத் தோன்றுகிறது. மேலும், பிற ஆந்திர மக்கள் தங்களின் வளங்களைச் சுரண்டுவது நிற்கும் என்று நினைக்கிறார்கள் [அதே நேரத்தில் ஹைதராபாத்-இன் இன்றைய வளர்ச்சிக்கு ஆந்திரத்தின் பிற பகுதி மக்களின் பங்கும் இருக்கிறது என்பதை சுலபமாக மறந்துவிடுகிறார்கள்].

பிற ஆந்திர பகுதி மக்கள் தாங்கள் கைவிடப் பட்டுள்ளதாகவே கருதுகிறார்கள். கடந்த 50 வருடங்களில் ஹைதராபாத்-இன் வளர்ச்சிக்கும் அங்கு தாங்கள் செய்துள்ள முதலீடும் தங்களுக்கு கிடைப்பதை எண்ணியே கவலை கொள்கிறார்கள். ஆந்திராவில் ஹைதராபாத் பகுதியைத் தவிர சிறந்தத் தொழில் நிறுவன்ங்களோ, கல்வி நிறுவணங்களோ இல்லை.  10 ஆண்டுகளுக்குள் ஒரு சிறந்த நகரை உருவாக்கி அதை தலைநகராக மாற்றினாலும் அதுவரை கல்வி, மருத்துவ வசதிகளுக்கு தெலுங்கானா பகுதியையே எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பதும் அவர்களின் கவலைக்குக் காரணம். பிற ஆந்திரப் பகுதிகளின் முக்கியத் தொழிலே விவசாயம். ஆனால், அதற்கான நீர்த் தேவைகளுக்கு தெலுங்கானாவையே எதிர்பார்க்க வேண்டியிருக்கும். கர்நாடகம் தமிழகத்திற்கு நீர் தர மறுப்பது போல் பிற்காலத்தில் ஆந்திராவிற்கு தெலுங்கானா நீர் தர மறுக்கும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது.

உடனடியாக தெலுங்கானா பகுதிகளின் வன்முறைக்குத் தீர்வு கண்டு விட்டாலும் இது நீண்ட காலத் தீர்வு தானா என்பது தெரியவில்லை!

9 கருத்துகள்:

 1. எனக்கு என்னவோ இதனால் பெரிய நன்மைகள் ஏதும் விளைந்து விடாதுஎன்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் ஆதாயம் கிடைக்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. வெத்தலை பாக்கு ஏதும் குடுத்தால் தான் வருவேன்... மற்றபடி எந்த தளத்திலும் என்னை பார்க்க முடியாது.... நன்றி திருப்பதி... sorry.... வேங்கட ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றிகள் தனபாலன்!

   (ஏன் இந்த திடீர் முடிவு!)

   நீக்கு
 3. நல்ல அலசல் சீனு. எதிலும் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள்.... உண்மை!

  பதிலளிநீக்கு
 4. செரிக்கும் மனசிலாயி சாரே! ஒருவழியாக சண்டை போட்டு தெலுங்கானா வாங்கியாச்சு. இனி அடுத்த சண்டை ஹைதாராபாத்துக்கா! நடக்கட்டும்! நடக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 5. முக்கியமாக ஒரு திருத்தம் கூற வேண்டும். தெலுங்கானா கோரிக்கை 1969இல்தான் முதலில் எழுந்தது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது தவறு. அப்போது தெலுங்கானா என்ற கோரிக்கை இல்லை என்றாலும், தெலுங்கானா மாவட்டங்களை உள்ளடக்கிய தனி ஹைதராபாத் மாநிலம் தேவை என்ற கோரிக்கை 1950வாக்கிலேயே எழுந்துவிட்டது. நேரு பிரதமராக இருந்தபோது மாநில சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு, பல்வேறு விஷயங்களில் ஒன்றாக, ஆந்திரத்தை தனி மாநிலமாக ஆக்குவதே சரி என்று 1955இல் அறிக்கை அளித்தது. ஆனால் அதன்படி செய்யப்படவில்லை. இதுகுறித்து பேஸ்புக்கில் நான் ஒரு வாரத்திற்கு முன் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் தகவல் பகிர்விற்கும் நன்றிகள் ஷாஜஹான்!

   சென்ற வாரம் ஆணிகள் சற்று அதிகம் இருந்ததால் இன்று தான் முகநூலில் நீங்கள் எழுதியதைப் படித்து மேலதிகத் தகவல்களை அறிய முடிந்தது. நன்றிகள்!

   நீக்கு