செயல்வீரர்
[வல்லமை இதழின் 276-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
உறுமீனைக் கண்டறிந்து
இலக்கு நோக்கிப் பாய்ந்து
வான் நோக்கி மீண்டெழுந்து
இரை தேடும் பறவையென
காலமதைத் தானறிந்து
கனியும்வகைத் தெளிந்து
காரியங்கள் செய்திடுவார்
திறன் வாய்ந்தோர் செயல்வீரர்!
கொட்டும் மழைப் பொய்ததென
வெட்டியாய் நேரம் கடத்திடாமல்
கால்வாய் வெட்டி கழனி திருத்தி
நிலம் கொழிக்க வழி செய்வார்
பட்டினியால் வாடினாலும்
விதைநெல்லைச் சேர்த்துவைத்து
வருங்காலச் சந்ததிக்கு
வாழ வழிச் செய்த்திடுவார்!
எதிர்காலம் கனவென்று
எதிர்வாதம் செய்துவிட்டு
நிகழ்காலம் வீணாக்கும் – வெற்று
வேதாந்தம் விட்டுவிட்டு
வருங்கால வெற்றிக்குத்
திட்டங்கள் தீட்டிவைத்து
முயலாமை தனை விழுங்கி
முன்னேற்றப் பாதையிலே
சிறகடித்துப் பறந்திடுவர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக