வெள்ளி, டிசம்பர் 28, 2012

திருவாதிரை



இன்று ஆருத்ரா (திருவாதிரை) தரிசனம்; இதற்கு முதல் நாள் மாலை ஆருத்ரா அபிஷேகம் என சிவாலயங்களில் சிவபெருமானுக்கு நீராட்டுதல் நடைபெறும். இது மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்றுக் கொண்டாடப் படுகிறது

நட்சத்திரங்களில் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாகக் கூறப்படுவது ஆர்த்ரா என்ற ஆதிரை நட்சத்திரம். அதனால் தான் இது திரு என்ற அடைமொழியுடன் வழங்கப்படுகிறது.

சாதாரணமாக இரவில் மிகுந்த ஜொலிப்புடம் ஒளிரும் நட்சத்திரங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை இந்த ஆதிரை நட்சத்திரம் பெறுகிறது. [27 நட்சத்திரங்களில் ஸ்வாதி நட்சத்திரம் மட்டுமே இதைவிட அதிக ஒளிரும் தன்மைக் கொண்டது].

இது சிவப்பான நிறத்தில் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் முக்கிய நட்சத்திரக் கூட்டங்களாகக் குறிப்பிடப்படுவதில் ’ஓரியன்’ என்ற நட்சத்திரக் கூட்டத்தின் தோள் பகுதியில் இந்த ஆதிரை நட்சத்திரம் இருப்பதாகக் குறிக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் பீட்டல்க்யூஸ் (Betelgeuse). பெயரைப் போலவே வெற்றிலைச் சிவப்பு நிறத்தில் இருக்கும் நட்சத்திரம். [ஓரியன் நட்சத்திரக் கூட்டம் ரிஷபத்திற்கும் மிதுனத்திற்கும் இடையில் இருக்கும் கூட்டம். இதன் முக்கிய நட்சத்திரங்கள் ரிஷபத்திலும் மிதுனத்திலும் விரவி இருப்பதால் இது தனி ராசியாகக் குறிக்கப்படுவதில்லை.]

க்ரேக்கத் தொன்மங்களில் இந்த ஓரியன் ஒரு வேட்டைக்காரன். அவன் தோள் பகுதியாகக் கூறப்படுவது இந்த பீட்டல்க்யூஸ். [போர் கடவுளாகச் செவ்வாய் கூறப்படுவதால் அதற்கு நிகரான வேட்டுவனாக இந்த ஓரியன் கூறப்பட்டது என்று கூறுகின்றனர்].

இந்திய ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஆதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை / ஆட்சி தெய்வம் ‘ருத்ரன்’; தேவகணங்களில், இவர் புயல் தேவதையாகக் கருதப்படுபவர். சிவபெருமானுக்கு ருத்ரன் என்ற பெயரும் உண்டு.

மேற்கத்தியக் கணக்கில் டிசம்பர்-23 ஆம் தேதியின் இரவுதான் வருடத்தின்  நீண்ட இரவாகக் குறிக்கப்படும். ஆனால் நம் இந்தியக் கணக்குகளில் மார்க்ழி மாதம் திருவாதிரை நட்சத்திர இரவுதான் வருடத்தின் நீண்ட இரவாகக் கூறப்படுகிறது.

திருவாதிரை தரிசனம் என்றவுடன் அனைவரும் அறிந்தது தில்லையில் இறைவன் நடத்திய ஆனந்த நடனம்.

ஒருமுறை விஷ்ணு, சேஷ சயனத்தில் (பாம்பணையில் துயிலும்) இருக்கும் பொழுது திடீரென அவரைத் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு அவர் எடையைத் தாங்க முடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென அவர் பகவான் விஷ்ணுவை வினவ, விஷ்ணு தன் மனதில் சிவபெருமானை எண்ணியதையும் அவர் விஷ்ணுவின் மனதையே மேடையாக்கி அதில் நடனம் புரிந்ததாகவும் (இதற்கு அஜபா நடனம் என்று பெயர்) கூறினார். சேஷனோ தான் அக்காட்சியைக் காணவில்லையே என்று வருந்தினார். விஷ்ணு அவருக்கு சிவ நடனத்தைக் காண்பித்து அருள விரும்பினார்.

அதே நேரத்தில் பூவுலகில் ’கோனிகா’ என்ற யோகினி கல்வி கேள்விகளில் சிறந்த மகனைப் பெற விரும்பி நீர்நிலையில் நின்று தவமிருந்தாள். அவள், தன் உள்ளங்கைகளில் நீரெடுத்து இறைவனை எண்ணி நீரை அர்ப்பணிக்க விழையும் பொழுது அவள் கரங்களில் சேஷன் குழந்தையாக விழுந்தார். ’பத்’ என்றால் விழுதல்; ‘அஞ்சலி என்றால் சமர்பித்தல். நீரைச் சமர்பிக்கும் பொழுது கைகளில் விழுந்ததால் அதையே (பதஞ்சலி) அக்குழந்தைக்குப் பெயராகச் சூட்டினாள். பின்னாளில் இலக்கண, யோக நூல்கள் பலவற்றை இயற்றிய பதஞ்சலி முனிவர்தான் அவர்.

சிவபெருமானை த்யானித்து அவரிடம் நாட்டியக் கலையைக் கற்க தில்லையம்பதி வந்தடைந்தார் பதஞ்சலி. அங்கு மற்றொரு சிவபக்தரும் இருந்தார்; அவர் வ்யக்ரபாதர். இறைவனுக்குப் பூக்கள் பறிக்க பூந்தோட்டங்களுக்கு வேகமாகச் சென்று வர புலிகள் போல பாதமும், தேனிக்கள் தேனெடுக்காதப் பூக்களை கண்டுபிடிக்க வண்டுகளைப் போன்ற கண்களும் வேண்டிப் பெற்றவர் அவர். அதனாலேயே அவர் வ்யக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) என்றழைக்கப்பட்டார். தில்லையை அடுத்த அனந்தீஸ்வரத்தில் பதஞ்சலியும் திருப்புலீஸ்வரத்தில் வ்யக்ரபாதரும் தங்கியிருந்து இடையிலிருந்தக் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தை வழிபட்டுவந்தனர். ஆனால், அவர்களுக்குச் சோதனையாக அவ்வனத்தின் காவல் தேவதை காளிகா தேவி சிவபெருமான் அவர்களுக்கு அருளுவதைத் தடுத்தாள். பின்னர், அவளுக்கும் சிவபெருமானுக்கும் நடனப்போட்டி நடத்தில் அதில் வெற்றி பெருபவரின் முடிவை ஏற்கத் தீர்மானிக்கப்பட்டது. [அப்பொழுது சிவபெருமான் ஆடிய நடம் ஊர்த்வத் தாண்டவம் எனப்படும்]. போட்டியின் இடையில் சிவபெருமானின் காதணி கீழே விழ அதை அவர் காலால் நடனமாடிக் கொண்டே எடுத்துத் தன் காதில் அணிந்தார். பெண்ணான காளி தேவியோ அது போல் செய்ய நாணம் கொண்டு நடனத்தை நிறுத்தி சிவபெருமான் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொண்டாள். தான் சிவனின் பாகம் என்பதையும் உணர்ந்து அவருடன் சிவகாம சுந்தரியாகக் கலந்தாள். உமையொருபாகனாக சிவபெருமான் இருவருக்கும் தன் ஆனந்த நடனத்தைக் காட்சி தந்தருளினார். பதஞ்சலி பரத சூத்திரத்தை சிவபெருமானிடமிருந்துப் பெற்றார். இந்த நாளே திருவாதிரை தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது

ஆனந்தம் என்றால் களி; சிவபெருமானுடன் அன்னையும் கூடியதால் திருவாதிரை தினத்தன்று சிவபெருமானுக்குக் களியும் கூட்டும்  படைக்கும் வழக்கம் உண்டாகியிருக்கக் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக