வியாழன், மே 24, 2012

வெள்ளைத் தாளில் கறுப்புப் பணம்


டந்த திங்கட்கிழமையன்று நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜீ நாடாளுமன்றத்தில் கறுப்புப் பணத்தைப் பற்றிய வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்தார். சி.பி.ஐ., நிதிஅமைச்சகம் (மத்திய நேர்முக வரி போர்டு) ஆகியவற்றின் தகவலடிப்படையில் 25 முதல் 75 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் சட்டத்திற்குப் புறம்பான வகையில்  சேர்த்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகார பூர்வமற்றத் தகவல்கள் கூறிகின்றன. இந்நிலையில், இந்த அறிக்கையில் கறுப்புப் பணத்தைத் தடுக்க அரசு தான் எடுத்துவரும், வரும் காலங்களில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை விரிவாக குறிப்பிட்டுள்ளது. சுமார் நூறு பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்க்கையின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

கறுப்புப் பண பதுக்கலில் உலகில் சீனா முதலிடத்திலும், ரஷ்யா இரணாடாமிடத்திலும் உள்ள நிலையில் இந்தியா 15-ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகார பூர்வமாக, சுமார் எத்தனைக் கோடிகள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கலாம் என்பதைக் கூறவில்லை. அதே சமயம், 2010-ஆம் ஆண்டு இறுதியில், ஸ்விஸ் நாட்டு வங்கியில் 9295 கோடி ரூபாய் (1945 ஸ்விஸ் ஃப்ரங்க்ஸ்) இருப்பதாகக் கூறியுள்ளது; 2006-ஆம் ஆண்டு இது 23373 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது, ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருந்த 15000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கடந்த 5 ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேறியுள்ளது.

அரசு, இந்த வெளியேற்றத்திற்கு காரணமாக கூறுவது என்னவென்றால், இந்த கருப்புப் பணம் ஹவாலா, ஏற்றுமதி மதிப்பில் திருத்தம் செய்தல், வரிச் சலுகை உள்ள நேரடி வெளிநாட்டு முதலீடுகள், இந்திய நிறுவனங்களின் உலக முதலீடுகளின் வருமானம், இந்திய பங்குகளின் பகுதி முதலீடுகள் ஆகியவ்ற்றின் மூலம் இந்தியாவிற்குள் வந்திருக்கலாம் என்பது தான்.  ஆனால், இந்த பணம் கடந்த ஆண்டுகளில் பல்வேறு இயக்கங்களால்ம், எதிர் கட்சிகளினாலும் ஏன் பல்வேறு தளங்களில் (பத்திரிகைகள், வலை பதிவுகள், முகநூல் போன்றவை) சர்ச்சைக்கு உள்ளாகியிருந்ததால், அங்கிருந்து அதிகம் அறியப்படாத, வெளியிட வேண்டிய நிர்பந்தம் இல்லாத, கேமன், விர்ஜின் தீவுகள் அல்லது வரி குறைவான மொரீஷியஸ், சிங்கபூர் போன்றவற்றிர்கும் கடத்தப் பட்டிருக்கலாம்.

அரசு இந்த நிலையை சீர் செய்ய கீழ் கண்ட சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்திருப்பதாக கூறுகிறது:

1.            லோக்பால் ;
2.            நீதித்துறைப் பொறுப்பு மசோதா;
3.            புகார் / குறைத் தீர்வு மசோதா;
4.            விசில் ப்லோயர் (சாட்சிகள் பாதுகாப்பு) மசோதா
5.            பொது கொள்முதல் மசோதா

இவற்றில் லோக்பாலின் நிலை நாம் அறிந்ததே. பலவருடங்களாக மசோதாவாகவே இருக்கிறது. மற்றவை இன்னமும் நடைமுறைப் படுத்தப் படவில்லை.

இதைத் தவிர சர்வதேச அளவில் இது தொடர்பானத்  தகவல் பரிமாற்றத்தில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகள் இது தொடர்பாக ஸ்விஸ் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. இந்தியாவும் ஸ்விஸ் மற்றும் லக்ஸம்பெர்க் நாட்டுடன் இது போன்ற ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. மேலும், கேமன் தீவுகள், வர்ஜின் தீவுகள் போன்ற 75 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால், ஒப்பந்தங்களின் பிரிவுகள் (ஷரத்துகள்) நமக்குச் சாதகமாக இல்லை என்பது தான் எதிர்கட்சியின் முக்கியக் குற்றச்சாட்டு.

மேலும், அரசு நிலமை சீரடைய எட்டு யோசனைகளை முன் வைத்துள்ளது. அவை…
1.    நிதி மோசடி வழக்குகளுக்கு தனி நீதி மன்றங்கள் (Fast Track Courts);
2.    குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்
3.    வங்கி பற்று/கடன் மூலம் வணிகம் செய்வதை ஊக்குவித்தல்
4.    கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர வரி சலுகைகள் தருதல்
5.    லோக்பால் லோகாயுக்தா போன்றவற்றை துரிதப்படுத்துதல்
6.    நில பதிவிற்கு நாடு முழுதும் ஒரு பொது தரவுத்தளம் (data-base) ஏற்படுத்துதல்
7. நிலப்பதிவு மற்றும் அசையா சொத்துகளின் நடவடிக்கைகளை கணிணி மயமாக்குதல்
8.    தங்க வைப்புத் திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு தகுந்த வரிச் சலுகைகள் தருதல்

மேலும் கறுப்புப் பணம் உருவாகுவதைத் தடுக்க கீழ் கண்டவற்றையும் அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது…
  • நேர்முக வரியில் சீரமைப்பு [இது எந்த அளவு இருக்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில் Direct Tax Code-க்கான பரிந்துரைகளே இன்னமும் கிடப்பில் இருக்கிறது. வரிவிதிப்பு அட்டவணை, பணவீக்கத்திற்கு ஏற்ப திருத்தப்படுவதில்லை; உதாரணத்திற்கு 2011-12-ஆம் ஆண்டு 500000 ரூபாய் வரையான வருமானத்திற்கு வரி 10%. இதற்கு முந்தைய ஆண்டும் 500000 ரூபாய் வரையான் வருமானத்திற்கு வரி அதே 10 சதம் தான். ஆனால், இந்த ஒரு வருடத்தில் பண வீக்கத்தினால் அதன் மதிப்பு குறைந்தது கணக்கில் கொள்ளப்படவில்லை].
  • பொருளாதாரச் சீர்திருத்தம்
  • ரியல் எஸ்டேட் விவகாரத்தில் சீர்திருத்தம்
மேலும் இது பற்றி நிதிமந்திரி கருத்துத் தெரிவிக்கையில், கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரங்கள் நிபுணர்குழுவின் பரிசீலணையில் இருப்பதால் தற்பொழுது பெயர் பட்டியல் வெளியிட முடியாது என்றும், இதன் விவரங்கள் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும், ஸ்விசர்லாந்து நாட்டுடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி அந்த வங்கியில் சேமித்துள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்பட முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஆக, பெயர் பட்டியல் கூட இல்லாத இந்த காகித அறிக்கை வெறும் வெற்றுக் கூற்றாகத்தான் முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக