திங்கள், நவம்பர் 11, 2019

பிஞ்சு (ெ)நஞ்சு


பிஞ்சு (ெ)ஞ்சு 

[வல்லமை இதழின் 231-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
கனியமுதுக் குழந்தையென்றால்
கள்ளமில்லா புன் சிரிப்பும்
வெள்ளைத் தும்பைப்பூ மனதும்
கண்முன்னே நின்றதொரு காலமம்மா-அது
கனவாகப் போனதிந்த காலமம்மா

வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சில்
சூதானமாய் இருக்கச் சொல்லி
நஞ்சதனைக் கலந்திட்டோம்

வெம்பியிங்கு நிற்க வைத்தோம்
வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்

இன்ப துன்பமெல்லாமே
இரு நொடியில் மறந்துவிடும்
கள்ளமில்லா நெஞ்சதனில்
தந்திரத்தைப் புகுத்திவிட்டோம்
நம்பிக்கையின்மையை நிலைக்கவிட்டோம்

பஞ்சு போன்ற நெஞ்சதனை
போட்டி பல போடச் சொல்லி
ஊடகச் சோதியிலே
எரிபானையாக்கி விட்டோம்
ஏய்த்துப் பிழைப்பதைக் கற்க வைத்தோம்

அறிவு வளர்க்கும்
கல்வியதை கற்பிக்காமல்
வெற்று வெற்றியே குறிக்கோளாய்
முற்றிபோகச் செய்துவிட்டோம்
முளைக்குருத்தை முற்செடியாய் ஆக்கிவிட்டோம்

பெற்றோர் தம் பேராசையால்
பிஞ்சினிலே பழுத்து  
சுயநல ஆழ்துளையில் வீழ்ந்து
மறைந்ததுவே அவர்தம் குழந்தைத் தனம் - இதில்
வெற்று கொண்டாட்டமே மழலையர் தினம்


2 கருத்துகள்: